Now Online

Sunday, 23 June 2019

சாரலில் நனைந்தேன்!பலநாள்கள்
விளக்கெரியாமல்
இருண்டிருந்த வீட்டில் திடீரென விளக்கேற்றி வெளிச்சத்தை உண்டாக்கியதைப் போல

நட்டு வளர்த்த மரம்
பன்னெடுங்காலமாய்ப்
பூக்காமல் காய்க்காமல் வெற்றுமரமாயிருந்து
திடீரென கிளைகள்தோறும் பூப்பூவாய்ப் பூத்துக் காய்த்துக் கனிகளாய்த் தொங்கியதைப் போல்

வறண்டநிலத்தில்
கிணறுதோண்ட
பலநாளாய்த் தோண்டதோண்ட
நீர்முகமே காணாது
தவித்தவேளையில்
திடீரென சுழித்தப்படி நீரானதுப் பொங்கியதைப் போல்

கோடானுகோடி மயிலிறகுகள் விண்ணின்று மண்மீதில் வீழ்தல்போல்

நேற்று பெய்தச் சாரலிலே நான் நனைந்தேன்!
தேனுண்ட வண்டினமாய் நானானேன்!
சாரலின் குளுமையிலே உள்ளம் பூரித்தேன்!
சாரலில் நனையவைத்த அந்தவானுக்கு நன்றிகளைச் சொல்லி மகிழ்ந்தேன்!

த.ஹேமாவதி
கோளூர்

பேதைகளாய்....

உருண்டோடும்
உலகத்தில் 
மிரண்டோடும்
மனிதர்கள்..

உழைக்கும் வயதில்
மலைக்கும் செயலில்
இளைய சமூகமே
இன்பத்தை இலவசமாக
பெறுவதில்
ஆனந்த கொள்வதில்
ஆவலாய்..

ஆசைகளைக் குறிக்கோளாக்குவதை
குறுக்குபுத்தியில்
முயலும்
குணவான்களே
குறுகிய காலத்தில்
ஏதும்நடப்பதில்லை
என்று ஏதுமறியா
பேதைகளாய்
மனிதர்கள்கூட்டம்..

நல்ல உலகம்
நாளை மலரும்
நல்ல சிந்தனை இன்றே
உதித்தால்
மதிப்பும் மாண்பும்
உங்களின் இருப்பிடம்..

வாழும் மனிதா
வாழ்க்கை வரையறைக்குள்தான்
என்று உணர்வாய்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


கவிஞர்கள் சங்கமம்நிலா

இலக்கியத்தில் நீ இல்லாத இடமே இல்லை
கவிஞர்களுக்கு கருப்பொருளாகின்றாய்
காதலர்களுக்கு காவலாகின்றாய்
குழந்தைகளுக்கு வேடிக்கைப் பொருளாகின்றாய்
திருடர்களுக்கு திகிலாகின்றாய்
மின்விளக்கே இல்லா ஊர்களுக்கு ஒளி விளக்காகின்றாய்
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் காரணமாகின்றாய்
ஆராய்ச்சியாளர்களுக்கு அதிசயமாகின்றாய்
விஞ்ஞானிகளுக்கு விந்தையாகின்றாய்
தொடமுடியா தூரத்தில் நீயிருந்தாலும்
எங்களுக்கு உம்மை  தொட்டுப் பார்க்க ஆசை
நிஜத்தில் தொட முடியவில்லையென்றாலும்
நிழலால் தொட்டுப் பார்க்கின்றோம் உம்மை தண்ணீரிலே

நீயும் சூரியனும் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரோ
காணாமலே நட்பு பூண்டு 
சூரியனார் தன்னால் உன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்

தி.பத்மாசினி சுந்தரராமன்

நகைக்கடைஉள்ளுக்குள் குளிர்ச்சியாய்
கண்கவர் காட்சியாய்,
காட்சியே மகிழ்ச்சியாய்,
கவர்ச்சியாய் நகைக்கடை.

செய் கூலியோ இல்லை சேதாரம் தேவையில்லை
கல்லுக்கு விலையுமில்லை
கலக்கலான வாசகங்கள்.

தங்கத்தை வாங்கிவிட்டால்
வெள்ளியோ இலவசம்
வெள்ளியே வாங்கிவிட்டால்
எவர்சில்வர் பரிசாக.

கட்டு கட்டாய் பணம் கொடுத்து 
பொட்டுத் தங்கம் வாங்கிவிட்டு
பரிசுக்காய் வரிசையிலே காத்து நிற்கும் இடமாக.

விலைகேட்டுக் கொதிக்கின்ற உள்ளத்தைக் குளிர்விக்க
குளிர்பானம் கோப்பையிலே எப்போதும் தயாராக .

ஏமாற்றப் படுகின்றோம் என்பதனை அறிந்தாலும்
ஏமாற எல்லோரும் கூடுகின்ற கடையாக.

கடை என்ற பெயர் வைத்து
அடுக்கு மாடி பல கட்டி
களை கட்டி நிற்கின்ற கட்டிடமே சாட்சியாக

வரியென்று சொன்னாலும்
தரமின்றிப் போனாலும்
குறையாமல் மனிதர்கள்
நிறைந்து நிற்கும் தளமாக.

நாளும் வளர்ந்து நிற்கும் இடமாக எந்நாளும் நகைக்கடை.

*சுலீ. அனில் குமார்*

பூக்காத பெண்மைபூக்காத பெண்மையா 
நான்
புலராத ஆண்மையா....?

அம்மையின் பாலினமா
 நான் 
அப்பனின் பாலினமா....?

குருதியில் குதித்தோடும்
இரட்டை ஹார்மோனால்
குறுகி  குறுகி சருகாகிறேன்

பெண்மை அருகே விலக்கம்
நான் 
பெண்ணாகிய ஆண்....

ஆண்மை அருகே  தருக்கம்
நான்
ஆணாகிய பெண்......

வீதியில் உலா வரும் 
விந்தையான 
பொம்மை நான்...

வியப்பின் உச்சத்தில்

கவர்ச்சி அற்று கவர்ச்சியாக
வலம் வரும் 
கந்தர்வ பொம்மை நான்....

பெண்மையின் மென்மையில்
பேதலிக்கும் பேதை நான்...

ஆண்மையின் நீட்சியில்
அடங்கி கிடக்கும் சிகண்டி நான்....

பூ பிடிக்கும் 
புடவை பிடிக்கும்

உதட்டு சாயம் பிடிக்கும்
ஒப்பனை பிடிக்கும்

ஒய்யார நடை பிடிக்கும்
ஒலிக்கும் கொலுசு பிடிக்கும்

ஒயிலாக பாட பிடிக்கும்
ஓங்கி சிரிக்க பிடிக்கும்

பிடித்ததெல்லாம்  பிடிக்கவில்லை
பெண்பிள்ளை நானில்லை....

சாடி சாடி ஓடி ஓடி 
ஒடுங்கி ஒடுங்கி
ஒதுக்கி ஒதுக்கி
பதுங்கி பதுங்கி

நீயுமற்று நானுமற்று
நிம்மதியற்று நிலமையற்று...

அரிதாரம் பூசாமல்
அச்சாரம் பிசகாமல்
அவனியிலே  வாழ வேண்டும்

வெறுமை யற்று...... சிறுமையற்று...........
வேதனையற்று....
வேடிக்கையற்று....

அர்த்தநாரீயா.... நான்
அகிலத்தின் சுயமா நான்
இருமையின் ஒருமையா நான்
ஈர்ப்பின் விலகலா நான்

வித்தின் விருச்சமா நான்
விந்தின் விந்தையா நான்
உணர்வின் பிழம்பா நான்
உன்மத்த விளைவா நான்

சுற்றத்தோடு சூழ வேண்டும்
நட்போடு மகிழ வேண்டும்
நாளோடு வாழ வேண்டும்
பொழுதோடு பயில வேண்டும்

நானே நானாக
நானின்றி நானாக....
                                    தாமரை ரவி

தொன்மைத் தமிழ்அகத்தியர் ஆய்ந்தளித்த அரிச்சுவடி தனை எடுத்து
தொல்காப்பியர் உவந்தளித்த இலக்கணத்தை வழிக்கொண்டு 
திருவள்ளுவர் திருக்குறளின் பெருமைதனைத் தனதாக்கி
குகைகளில், கற்களில், சிலைகளில், ஏட்டினில்
தீட்டிய சரித்திரம் காட்டி நிற்கும் தனிமொழி.

கல்தோன்றி மண்தோன்றாக்  காலமென்ற கதை தவிர்த்து
கண்தோன்றி செவிதோன்றி கைதோன்றி வாய் தோன்றி
பேசவும் எழுதவும் மனிதன் அறிந்த நாள் தொட்டு
கண்பட்டு, கைபட்டு,உளிபட்டு பண்பட்டு 
பண்பாடு தனைக் காத்துப் பண்புணர்த்தும் தொன்மை மொழி.
 
முக்கனியின் இன்சுவையும் முத்தமிழில் கலக்கவிட்டு
எக்கனியின் சுவை இதற்கு ஈடு என்ற கேள்வி கேட்டு
உடனிருந்தோர் உண்டு என்றால் காட்டு என்ற சவால் விட்டு 
செம்மொழியாய் ஒளிரும் மொழி தொன்மை பறைசாற்றும் மொழி
சொற்சுவையும் பொருட்சுவையும் வியக்கவைக்கும் வித்தைமொழி
தொன்மைத் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி.

*சுலீ. அனில் குமார்*

தூறிவிட்டுபோ

விதைகளெல்லாம்
கதை சொல்ல
ஆரம்பித்தன
விதைப்பவன் வீட்டில்
வெறும் விளையாட்டு
பொருளாய்
தன்வினை செய்ய
விண்முனை எதிர்ப்பார்க்கும்
விதைகளுக்கு தூவிவிடும் தூறலாவது தூவிவிட்டுபோ
சோர்ந்து கிடக்கும் விதைகளை 
கை சேர்த்து அள்ளி
விதைகளுக்கு வாழ்வளிக்கும் 
விவசாயிக்காக
கொஞ்சம்
தூறலாவது தூறிவிட்டுபோ..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


எங்கள் குடும்பம்இரவெல்லாம் கண்விழித்து... இதமான தென்றல் வீசி... பால் போன்ற ஒளியை பொழிந்து ...பக்குவமாய் பிழை ஏதும் ..அண்டாது 
சுற்றிச் சுற்றியே வந்து ..
 காத்தாள்....... நிலவு... அன்னை!
🌝

அன்னையின் அணைப்பினில் கண்ணயர்ந்து... ஆயிரம் சேட்டைகள் புரிந்து...
தன்னைத்தான் சுற்றிக்கொண்டு ...
 குறும்பாய் உறங்கிடும் ... பூமி ....குழந்தை...!
 🌏

அதிகாலையில் புத்தொளி வீசி... அதிசீக்கிரம் எழு... என எழுப்பி ...பூக்களை புது மணங்களைத் தந்து ..புதுச் செயல் தினம் செய்திடச் செய்து  சுறுசுறுவென தன்னைச் சுற்றவும்  செய்தான்.....   சூரியன் தந்தை ...
🌞

மூவரும் நேரெதிர்  நிற்க விதம்விதமாய்க்... கிரணங்கள் தோன்றும் ..பின் அமைதிக் காய் சற்றே விலகியும் செல்லும் ...

யுகம்  யுகம் யுகமாய் ..இப்படி நடப்பது எல்லாம் அண்டை வீடுகள் அறியும்...
ஒன்பது கோள்கள் ...

இரவும் பகலும் வந்தாலும்.. மழையும் புயலும் வந்தாலும் ..
என்றாலும் என்றென்றும் வாழும் இது எங்கள் சூரிய குடும்பம் ....☀

                      தெய்வானை .
மீஞ்சூர் .
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

தொலைநோக்குகங்கை இங்கே வரவேண்டும் குமரிக்கடலைத் தொடவேண்டும்
சொன்னார் ஒருவர் அந்நாளில்
அது தான் தேவை இந்நாளில்.

பள்ளிக்கூடம் திறந்திடுவோம் 
இலவசக்கல்வி அளித்திடுவோம்
நடத்திக்காட்டினார் அன்றொருவர்
நாடே வியந்து பார்த்ததன்று.

மழைநீர் தனையே சேகரிப்போம் 
நிலத்தடி நீரை உயர்த்திடுவோம்
ஆணை இட்டார் ஒருவரன்று 
தொடர்ந்திருந்தால்... சரித்திரம் இன்று.

பசியால் இறப்பைத் தடுத்திட வேண்டும்
நூறு நாள் வேலை கொடுத்திட வேண்டும்
அடிப்படைக் கூலி கிடைத்திட வேண்டும்
துவங்கிய திட்டம் நூறு நாள் வேலை.

திட்டம் அனைத்தும் தொலைநோக்காக
தீட்டினார் பலரும் தொலைநோக்கோடு
நடக்கிறது அனைத்தும் விளையாட்டாக
நடைமுறையில் வெறும் கேலிக்கூத்தாக.

ஒருசிலர் இருப்பார் தொலைநோக்கோடு
பலர் இங்கு இன்றும் தொல்லை நோக்கோடு
சேவையென்று சொல்வார் சில நோக்கோடு
அது தானே என்றும் வெட்கக்கேடு.

பூமியின் வளங்களை அழித்தாகி விட்டது
வாழ முடியா நிலை வந்து விட்டது
சந்திரனைச் செவ்வாயை நினைத்தாகி விட்டது
தொலைநோக்கு தொலைவை நோக்கியாகி விட்டது.

*சுலீ. அனில் குமார்*

நியாயம்தானா?சென்னை
உன்னை என்னசெய்தது?
சொல் வானமே!
எங்களின் வங்கக்கடலைப்
பகலெல்லாம்
முகர்ந்து முகர்ந்து
வயிறு முட்டமுட்டக் குடித்ததெல்லாம்
என்னசெய்தாய்?
காற்றோடு பகையாகிப் போனாயோ?
இல்லை சென்னையைப் பகையாகக் கருதிவிட்டாயோ?
பிறகெதற்கு ஓரவஞ்சனையும்
கருமித்தனமும்
சின்னஞ்சிறு குண்டூசியின் குத்தும் முனைகள் போல
தேகத்தின் மீது லேசாகத் தூறுகிறாயே!
நல்ல மழையாகப் பொழியலாகாதா?
சென்னைவாசிகளின்
அத்தனை விழிகளும் நீவரும்வழி மீதே!
திறந்த பாத்திரங்களாய் நாங்கள் காத்திருக்க வானமே நீயேன் இன்னமும் மூடிய பாத்திரமாகவே இருக்கிறாய்!
கொட்டு கொட்டு
மாமழையாய்க் கொட்டு!
சொட்டுச் சொட்டாய்ச் சொட்டாமல் கட்டுக்கடங்காமல் கொட்டு!
காத்திருக்கிறோம் நாங்கள்!

த.ஹே
கோளூர்

Thursday, 20 June 2019

குறையுமா கனம்?

கனத்துக்

கொண்டுதான்

போகிறது..


கண்ணீரும்

தண்ணீரும்..


வெளியில்

சொல்ல முடியா

வேதனைகளையும்

வெயிலால் 

தாங்கமுடியா

வறட்சியையும்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.


வெள்ளை தேவதையார் யாரோ சொன்னாக நானும் நம்பல,,,
வேறாளு என்றே தான் நானும் பார்த்தது,,,,
உனக்குள்ளே 
பத்திரமா? இருந்தது ,
நானும் 
உத்திரமா?
தெரியாமல் போனதே,,,
தெரியாதே
சத்தியமா,,,

வாய் விட்டு சொன்னாலே வந்திடுவேன் 
நான் தானே,,,
தாய் மாமன் மகளென்று சொன்னாலென்ன குற்றமா?
கெளரவத்தில் 
நீ வாழ,,,,
வறுமையிலே 
நான் வாட
சொந்தங்கள் 
மாறி
போனதே
கெளரவம், சொர்க்கத்தை 
தேடி ஓடுதே,,,

நீ சென்ற பாதையில் ,
நடந்து 
நான் 
பார்க்கிறேன்,
உன் 
காலடிச்சுவடு
வைரமாய் 
ஆனதே,,,
தள்ளியே 
நின்று நானும் காணவே,
வறுமையிங்கு காரணம் 
ஆனதே,,,

இந்த நிலை எனக்கு நீயும் தந்ததோ?
எந்த நாள் பார்ப்பேன் இனியும் 
வெள்ளை தேவயை,,, 
நீ,
வந்த நாள் 
முதலும் 
எனக்கும் 
இது போல் எண்ணத் தோணலையே,,,

ஈரேழு ஜென்மம் எல்லாம்
நீயே வேண்டும்,,,
இருபத்தேழு நட்சத்திரமும் சேர்ந்தே வேண்டும்,,,
யார் என்ன சொன்னால் 
என்ன?
நீ 
இங்கு 
வருவாய் 
கண்ணே,,,
புவியேழும் பூத்தவளாய் நிற்பாய் 
கண் முன், வெள்ளைத்
தேவதையாய்
என்றும் 
என் முன்,,,,

பாலா

வாழ்க்கை

கலங்கமில்லா வாழ்க்கை யாருக்கும்
அமைவதில்லை..

கலங்காமல்
கண்ணீர்த்துளிகள்
வெளிவருவதில்லை..

கலங்கியப்பின்
வாழ்வின் அதர்த்தம்
விளங்காமல்
இருந்ததில்லை..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.


மனிதம் தொலைத்த மாண்புகள்திண்ணைகள் இன்றில்லை..!
திருடர்கள்
வந்தமரக்கூடும்..பயம்🤷‍♀

உபசரிப்புகள்
இன்றில்லை!
உபத்திரவங்கள்
ஆகிவிடுமோ...பயம்🤷‍♀

பாராட்டுதல்கள்
இன்றில்லை!!
கண்பட்டதாய்
கதைசொல்லி..
பின்பழிக்கக்கூடும்..பயம்..🤷‍♀

வழிப்போக்கர் அருந்த
 நீர்தர தயக்கம்..!
தனிமை அறிந்து
தகாதது ஆகிவிடுமோ..பயம்🤷‍♀

நிலைசொல்லி
மனம்தேறும்
நிலையில்லஇன்று.!
.போகவிட்டு
பின் இகழக்கூடும்...பயம்
🤷‍♀

அடிபட்டுக்கிடந்தாலும்
உதவிட..மனமில்லை..!
ஊர்ஊராய் அலையவிடக்கூடும்........பயம்...🤷‍♀

வலிப்பு வந்ததால்
முதலுதவி செய்ய....
தூரத்துப்பார்வைக்கு
கொலைமுயற்சி....!
கைது....உதவிசெய்யக்கூட
பயம்...🤷‍♀

சொந்தக்கருத்தை
மனம்திறந்து
சொல்லமுடிவதில்லை...!
எந்த கருத்தை எப்படி
திசைதிருப்புவரோ...பயம்
🤷‍♀

துணிந்து செயல்கள்
முன்னெடுத்துச்
செய்யமுடிவதில்லை..!
எந்த அம்பு..எப்போது
எப்படி..பாயுமோ...பயம்🤷‍♀

அச்சமில்லை....!
அச்சமில்லை...!
அச்சமில்லை.....!
என்றானே ...பாரதி...
அன்று..!

அச்சம் தவிர ஏதும்
மிச்சமில்லை..!
மிச்சமில்லை..!
மிச்சமில்லை....இன்று..!
🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀
       .......தெய்வானை.
                     மீஞ்சூர்.

காய்ச்சல்

நான் மிக
ரகசியமாக
வைத்துக் கொள்ளுகிறேன்

தெரிந்தால் 
என்னை விட்டு
போகுமா என்ன

நலம் விசாரிப்பது
நீ
எனத் தெரிந்தால்

காய்ச்சல்..!


 நீ 
எப்படி
இருக்கிறாய்
என்று மட்டும்
கேளடி என் கண்மணி

தலை வலி
எப்படி இருக்கிறது
என்று கேட்காதே
குதூகலமாகிவிடுகிறது

தலைவலிக்கு..

_ வெள்ளத்துரை

குருவிக் கூடுஅருவிக் கரையில் ஓர் குருவிக் கூடு
அருமையாய் குருவி கட்டிய கூடு
சிறிதாய் அழகாய் இருந்த ஒரு கூடு
சிறு குருவிக் குடும்பத்திற்களவான வீடு.

அருகிலோர் மாளிகை ஆடம்பர மாளிகை
அலங்காரப் பதுமை போல்
தெரிந்ததம் மாளிகை
ஆர்ப்பாட்டம் காட்டவே கட்டிய மாளிகை
ஆளோ அரவமோ இல்லாத மாளிகை.

குருவியின் கூடதோ சொன்னதொரு பாடம்
எதற்கென்று தெரியாமல் கட்டுகிறாய் மாடம்
ஏன் தான் தேவை உனக்கிந்த வேடம்
போதாதோ உனக்கும் சிறிதாய் ஒரு கூடம்.

எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும்,
எதிர் வந்து நிற்போர்கள் இகழாமல் வேண்டும்,
உண்ணவும் உறங்கவும் இடமதில் வேண்டும்,
இவையன்றிக் கூட்டினில் வேறென்ன வேண்டும்.

இதைத்தானே மனிதன் உணர்ந்திட வேண்டும்.

*சுலீ. அனில் குமார்* 
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

காதல்

கை வளையல்களில்
புதுவித டிசைன்களை
தேடினாள்!
பல மணித்துளிகளாய்..!
நெற்றிப்பொட்டு
பளிச்சென இருக்க
அலசினாள்
சில நாழிகைகளாய்!
காதணியும் கழுத்தணியும்
அணிந்து பார்த்து
வாங்கினாள்
அரை நாட்களாய்!
புது ரக சேலையை
தேர்வு செய்ய
கடைகளில்
தேடினாள், நாள் முழுக்க..
காலம் பூரா
வாழப்போகும்
ஆண் மகனை மட்டும்
பார்த்த நொடியில்
தேர்ந்தெடுத்தாள்
காதல் என்ற பெயரில்!
————————-
மல்லிகா ராம்

கதறல்நான்கு பக்கம் மோதுகின்ற நீரெங்கே?
காற்றோடு தழுவி நீர்வரையும் கோலங்கள் எங்கே?
நிரம்பிய நீருக்குள் துள்ளி விளையாடிய கயல்களெல்லாம் எங்கே?
கயல்களைக் கொத்திடவே ஒற்றைக்காலில் தவங்கிடக்கும் நெட்டைக் கொக்குகளெங்கே?
நீர்மீது படர்ந்திருந்ந வட்டவட்ட தாமரை
இலைகளெங்கே?மலர்களெங்கே?
அம்மலர்களில் தேன்பருக வருகின்ற வண்டினங்கள் எங்கே?
நீருக்குள் மூழ்கி நீச்சலடிக்க வருகின்ற சிறுவர்களெங்கே?
விடியலிலே என்னிடத்தில் நீராடவருகின்ற பெண்களெங்கே?
அப்பெண்களோடு வருகின்ற குழந்தைகளெங்கே?
வேறுபக்கம் தனியாகக் குளியல்போட வருகின்ற ஆண்களெங்கே?
துணிதுவைக்கும் மாந்தரெங்கே?
நான்குபக்கங்களிலும்
காற்றுவாங்க வருகின்ற கூட்டமெங்கே?
என்னோடு கலந்துறவாடிடவே
தவழ்ந்து வரும் தென்றலெங்கே?
எங்கே?எங்கே?எங்கே?
நீரென்ற ஒன்றில்லாத காரணத்தால் நானின்று வாடிவிட்டேன்!
வற்றிவிட்டேன்!,
வறண்ட பள்ளமாகி விட்டேன்!
இனி நானென்று நிரம்புவேன் மறுபடியும் நீராலே!
வானமே பொழியாதா?
என்மேனி நனையாதா?
குளம் நான் நிரம்புவேனா?
கதறுகிறேன்.........நானே!

த.ஹே
கோளூர்

கூழாங்கற்கள்வாழ்க்கைப் பாடம்
உணர்த்திப் போகும்
உண்மைகள்..
கூழாங்கற்கள் ...

காலச்சக்கர நகர்த்தல்களில்
கரடுமுரடான
 பக்கங்கள் 

பண்பட்டு
அனுபவ அடிகள் தந்த அழகு உருவம் ....

                தெய்வானை.
                    மீஞ்சூர் .

கானல்நீராய்...

தாகம்தீர்க்க
காகம் தவியாய்
தவித்த தருணங்களில்
குவித்து வைத்திருந்த கல்குவியலும் கைவிட்டது.

மோகம்தீர்க்கும் மனிதனிடம்
தாகம் தீர்க்க
தண்ணீர்கேட்டது 
காகம்..
யாகம் வளர்த்து
மழையை வரவேற்க
கடவுளிடம் வேண்டுகோள் விடுத்தோம் கடவுளும்
கைவிட்டது மனிதர்களை..

காகம்  எச்சமிட்ட
விதைகளையெல்லாம்
துச்சமாய் நீ
எண்ணினாய்
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
மரங்கள்
மழையும் கானல்நீராய்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


நிமிர்ந்து நில்எளியோர்க்கு உதவிட நினைத்திருப்பாய் நீ
ஏமாளி என்றவர் பழித்திருப்பார் உனை
மனம் தளராமல் நீ தொடர்ந்திடு நட்பே
உன் செயல் உன் குணம் நிமிர்ந்து நில் நட்பே.

பெருமையாய்ச் சொல்லி நீ பெருமைப் பட்டிருப்பாய்
அருமை தெரியாதவர் பரிகசித்து நிற்பார்
தளர்ந்து விடாமல் நீ தொடர்ந்திடு நட்பே தடைகளைத் தாண்டி நீ
நிமிர்ந்து நில் நட்பே.

திறமையைக் காட்டி நீ உயர்ந்து நின்றிருப்பாய்
பொறாமை பிடித்தவர் இகழ்ந்து கொண்டிருப்பார்
இகழ்ச்சியைப் புகழ்ச்சியாய் நினைத்திடு நட்பே
உடைந்து போகாமல் நீ நிமிர்ந்து நில் நட்பே.

கடமையைச் செய்வதில் திடம் கொண்டிருப்பாய்
மடையனென்று சில பேர்
சான்றிதழ் அளிப்பார்
விடை சொல்லி நிற்காமல் நடைபோடு நட்பே
விழுந்துவிடாமல் நீ 
நிமிர்ந்து நில் நட்பே.

உரிமைக்காகவே குரல் கொடுத்திருப்பாய்
உணர்வைப் பழித்தவர் 
புண்படுத்தி இருப்பார்
பண்பட்டதாய் நீ நினைத்திடு நட்பே
சினத்தை விடுத்து நீ
நிமிர்ந்து நில் நட்பே.

முகமன் கூறி நீ வாழ்த்தியிருப்பாய்
பகைமை வைத்தவர் தூற்றியிருப்பார்
கவலையை விடுத்து நீ நிமிர்ந்து நில் நட்பே
நேர்கொண்ட பார்வையுடன்
தொடர்ந்து செல் நட்பே.

மனத்தை உறுதியாய் வைத்திடு நட்பே
உன் செயல் சரியென்று நம்பிடு நட்பே
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
கவனத்தில் கொள்ளாமல் விரைந்திடு நட்பே
தடுமாற்றம் இன்றி நீ நிமிர்ந்து நில் நட்பே.

*சுலீ. அனில் குமார்.*

மழையே வாமண்குளிர
விண்அதிர
மழைவேண்டும்!
கண்குளிர
மண்செழிக்க
மழைவேண்டும்!
பொன்மணியாய்
நெல்விளைய மழைவேண்டும்!
தேன்சுரக்கும் பூத்தேடி ஏங்கும்
வண்டினங்கள் மகிழ செடிகள்
செழித்து வளர்ந்து
பூக்கள் மலர்ந்திட
மழை வேண்டும்!
தவிக்கும் மக்கள்
தாகம் தணித்திட
மழைவேண்டும்!
எரியும் கதிரில்
சருகாய் உலரும்
மரத்தின் கிளைகள்
துளிர்த்து வளர்ந்திட
மழைவேண்டும்!
வற்றிய நீர்நிலை
ஊற்றெடுத்துப் பொங்கிடவே
கனத்தமழை கட்டாயம் வேண்டும்

த.ஹே
கோளூர்

முயன்று பார்க்கலாமா..?மண்பானைத் தண்ணீரை இனிமேல்..  மனம் விரும்பி குடிக்கலாமா?  

வெயில் உடல்படக் கைவீசி....கொஞ்சம் வியர்க்க நடக்கலாமா?

பிள்ளைக் காலம் போல்  பேசி பேசிச்... சிரிக்கலாமா ?

மாலைக் காற்றில் மணலில்...   கை போட்டு நடக்கலாமா?

வளர்ந்து விட்டால் தான்  என்ன ? .. விளையாடிப் பார்க்கலாமா? 

கழுதை வந்தால்தான் என்ன? கொஞ்சம் பாடிப் பார்க்கலாமா?

 மின்மினி விண்மீன்கள் அழகைக்... கண்டு ரசிக்கலாமா?

விரும்பும் கதைகள் பேசி.. மனம் விட்டுச்.... சிரிக்கலாமா?

இரவுதோறும்இசை கேட்டு..   மனம்  கனிந்து உருக லாமா ?

அகவை  கடந்தால் தான்  என்ன?.. வீட்டில் முடங்கி கிடக்கலாமா?
 
புதிய எண்ணங்கள் கொண்டு ...கொஞ்சம் புரிந்து வாழலாமா?

💃💃💃💃💃💃💃💃
                தெய்வானை,
                  மீஞ்சூர் .

Saturday, 15 June 2019

மடையை உடை

திசையறியா
பட்டாம்பூச்சிகளாய்ப்
படபடக்கிறோம்
நீயும் நானும் 

ஞாயிற்றுக்கிழமைகளின்
சிலந்திகளாய்
மாட்டிக்கொண்டபடி

ஆகச்சிறிய
உயிருக்கும்
ஆகச்சிறந்த 
வாழ்க்கை  இருக்கிறதடி

தடையாயிருக்கும்
மடையை உடைத்தால்
இல்லம் சிரிக்கும் 
நிறைந்த விளைச்சல்

*பொன்.இரவீந்திரன்*

விதவையின் வாழ்வு..


துடுப்பில்லா
படகைப் போல்
எவ்விடம் சென்று
சேருமென அறியா..

பாதுகாப்பில்லா
பயணத்தில்
தனிப்பயணி
தவிப்புகளோடு
நகரும் வாழ்க்கை பேருந்தில்..

தஞ்சம் புகும் 
உறவுகள் 
சில
வஞ்சம் தீர்க்கும்
மிருகங்கள் 
பல..

வாழவே மறுத்து
பல நாள்களை
வெறுத்து ஒதுக்கிய
வஞ்சியின் 
வாழ்வு 
காய்ச்ச மரம் கல்லடிபடும்
என்பதை விட
சொல்லடி படும்..

உண்மையோடு வாழ்வதை 
ஊருக்கு
உரக்க சொல்ல மனமிருந்தும்
நம்பிக்கையில்லா
உலகில்
தன் வாழ்வை மறக்கவும் மரிக்கவும் துணிந்துவிட்ட
மாங்கல்யம் இல்லா
மங்கை
தம்கையென
பிடித்திழுக்காமல்
தங்கையென
தாங்கிப்பிடியுங்கள்..

புண்ணியம்
பிறவிப் பயனடைவீர்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.


Friday, 14 June 2019

நூலாம்படை

செல்லரித்து
நூலாம்படை
அப்பிக்கிடக்கிறது
நீயற்ற
எந்தன் காலம்

*பொன்.இரவீந்திரன்*

கோபம்

வெறுப்புடன்
குதிரையில்
அமர்ந்திருக்கிறான்
அய்யனார் 
குதிரையெடுப்புக்கு
நீ வராத கோபத்தில்

*பொன்.இரவீந்திரன்*

நீரூற்றுவாயா?

நீ வந்து 
நீரூற்றா
எந்தன் தோட்டமெங்கும்
பூத்திருக்கின்றன
நெருஞ்சி மலர்கள்

*பொன்.இரவீந்திரன்*

மறந்து விட்டோம்
கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும்
கோள்களை ஆராயும் நாம்
நம் அருகில் இருக்கும்
மனித மனங்களை ஆராய மறந்து விட்டோம்

தனிக் குடும்பத்தை விரும்பி
கூட்டுக் குடும்பங்களை மறந்து ம்
விட்டோம் தொலைத்தும் விட்டோம்


அயல் நாட்டு மோகத்தை விரும்பி
நம் பண்பாடு நாகரீகங்களை மறந்து விட்டோம்

ஆங்கிலம் பேசும் ஆசையினால்
தமிழ் மொழியை மறந்தும் விட்டோம்
தமிழை  வளர்க்காமல் விட்டு விட்டோம்

நம் நீராகர உணவை மறந்துவிட்டு
பீட்சா பர்கருக்கு மாறி  விட்டோம்
உடலில் நோயையும் சேர்த்துவிட்டோம்


சாதி சாதியென்று
ஒருரோடொருவர் சண்டை போட்டு
நாம் மனித சாதி 
என்பதை மறந்து விட்டோம்

அயல் நாட்டு அறிவியல் அறிஞர்களையும்
இலக்கியவாதிகளையும் புகழும்
 நாம் நம்மூரில்  இருப்பவர்களை மறந்துவிட்டோம்

சமூக சேவை செய்ய ஓடும் நாம்
கண்ணெதிரே இருக்கும் பெற்றோருக்குக
சேவை செய்ய மறந்து விட்டோம்


கல்லுக்கும் கட் அவுட்டுக்கூம்
பால் ஊற்றும் நாம்
அழுகின்ற அநாதை குழந்தைக்கு
பால் ஊற்ற மறந்து விட்டோம்

மறந்தவைகளை ஞாபகப்படுத்தி
மறக்காமல் இருப்போம்
இனி மறந்தவைகளை


தி.பத்மாசினி

முள்கிரீடம்

முள்
தேடிக்கொண்டிருக்கிறேன் எனது
வெள்ளைக்கல் மூக்குத்தியை
அவன் வருவதற்குள் 
கிடைத்து விட வேண்டுமே!
தணலில் நிற்கும் தவிப்பு
தினமும் இதுவே என் பிழைப்பு!
கிழமைகளின் பெயர் 
மாறினும் அது கணிப்பில் ஓர் நாள்!
கிழமைக்கொரு பெயரில்
மாறிமாறி எனைக்கொல்ல ஒரு ஆள்!
நாள்பார்த்து கோள்பார்த்து.......
நல்லவேளையில் விழுந்த தாலி
புரியவைத்தது அதுவோர் முள்வேலி!
அரக்கத்தனமான அவன் ஆளுமை!
புரியவைத்தநிஜம் அவன் முள்படுக்கை!
அவனில்லா நேரங்களில் கண்ணீரால்
மருந்திடும் மாமியின் ஆதங்கத்தில்....
உறங்கும் முள்மேல்விழுந்த இச்சேலை!
இயற்கைக்கு வஞ்சனை இல்லை........
இனிதாக வளர்ந்தது வயிற்றுப் பிள்ளை
சேதி சொன்னதும் அவன் வாயினின்று
புறப்பட்டசொல்லோ முள் சாட்டை!
“இது எவனோடு செய்த கள்ளச்சேட்டை”
ஏவிய வார்த்தை முற்றுப்பெறும்முன்
ஏகினாள் மாமியும் இடுகாட்டை!
கண்ணீர் தடம் மறையவில்லை......
என்னுள் சொல் வந்து முள்ளாகி
கிழித்த குருதியும் காயவில்லை! 
உற்றாருறவும்இல்லத்திருக்கையிலே
உள்வெறிகொண்டேயெனை
முள்படுக்கையில் புரட்டினான்!
உண்மைகண்ட எனைதாயழைத்தாள் 
மருத்துவமனைக்கு உடலை சீராக்க;
தானே கொண்டுசென்று கூட்டிவந்தான்
தளிரைக்கொன்று உயிரைச்சேறாக்கி
நீர்க்குழியாய் தோன்றி முள்ளால்
உடைத்தெறியப்பட்ட உருவமிலா
உயிர்க்கெல்லாம் என் கருவறையே
கல்லறையாக்கப்பட்டது —அவனாலே
எல்லை தாண்டி தப்பியோடவலுவில்ல!
வேலிதாண்டும் வெள்ளாடாய் மாற
                       உயிருக்கும்வலுவில்லை 
மனம்மட்டும் அனுக்கணதும் முட்களால்
கீறப்பட்டு வடுவேறி பாறையாய் கனத்தேக்கிடந்தது......!
முள்ளிள் ஒலி அருகில்கேட்டது!
“எவனையடி கட்டிலடியில் தேடுகிறாய்”?
அதோ கிடைத்துவிட்டது!!! பளப்பளப்பாய் என் மூக்குத்தி
வெட்டரிவாள் அரவணைப்பினில்!
வேவமெடுத்தது கைகள்........
“ஆமாம்டா சுத்தமான ஆம்பிள்ளையை!”
என்ற என்குரலுடன் இயைந்து
வெளிவந்த அரிவாள் தாகம் தீர
குடித்தது அவன் உயிர்நிலை குருதியை!
முடங்கியமர்ந்தவனை கண்கள்
நோக்க .......!
வெற்றிகரமாய் ஏறியது என் மூக்கில்.....
வெள்ளைக்கல் மூக்குத்தி !முள்கிரீடம்
தனையுடைத்த தானைத்தலைவனாய்!

🌹🌹வத்சலா🌹🌹

சுமங்கலிஆகாய மங்கை எப்போதும் சுமங்கலிதான்

ஞாயிற்றின் மஞ்சளை முகத்தில் பூசி

ஞாயிற்றின் கதிர்களை பட்டையாய் இட்டு

நிலவென்னும் பொட்டை வைத்து

எப்போதும் மங்களமாய் காட்சி அளிக்கிறாள்

நட்சத்திரங்கள் அவள் சிரிப்பில் பூத்த மலர்கள்

கோள்களெல்லாம் அவளின் செல்லப் பிள்ளைகள்

மேகங்கள் அவளின் பேரப் பிள்ளைகள்

பேரப் பிள்ளைகளை கண்ட மகிழ்ச்சியில்

ஆனந்தக் கண்ணீரை மழையாய் பொழிகிறாள் 

வான்மகள்


தி.பத்மாசினி

என்நிலாவே..

ஆயிரம் உறவுகள் இருந்தும்
யாருமே இல்லாதது போல்
உணர்கிறேன் 
நிலவே நீ வானில் இல்லாத
பொழுதுகளிலெல்லாம்!
தேவைக்காக மட்டுமே
பேசும் உறவுகளை விட......
என்னிடம் பேசுவதையே
உன் தேவையென
நினைக்கும் நிலவே உன்
மௌனம் ஒன்று போதும்..
என்னை மரணம் வரை
கொண்டுபோகும்!
நீயற்ற நேரமெல்லாம்.....,.
நீரற்றகடல்போல்
வானும் வறண்டே தோணும்!
கருமேகந்தனைக் 
கலைத்து வெளியே
நீ வரும் நேரம்.........
தாரகைகள் வான்மீதில்
தங்கப்பொடித்தூவும்!
இத்தனையும்.......... தெரிந்திருந்தும் ஏன்
இந்தகண்ணாமூச்சியாட்டம்
மௌனம் கலைத்து 
வெளியே வா என்நிலவே.....
வண்ணத்துப்பூச்சியாட்டம்!
!!!இரவு வணக்கம் இனிய இதயங்களுக்கு!!!
🌹வத்சலா🌹

வார்த்தைகள்

தூக்கத்தில் உளறிக்கொட்டிய
வார்த்தைகளெல்லாம்
விழித்ததும்
பக்கத்தில் கிடந்தன
எழுந்து போக மனமில்லாமல்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.


நட்புநீரின்றி இவ்வுலகில்லை
அவ்வாறே
நண்பா நீயின்றி
என்வாழ்வில்லை!
விழியாலே என்மனம் உணர்வாய்! எனக்கு புரியும்வண்ணம்
விழியாலே உறவாடி
ஆயிரம் யானைபலத்தைத் தருவாய்!
சோர்ந்திருக்கும் நேரமெல்லாம் ஆடிப் பெருக்காய்
ஆறுதல்மொழி பேசிமகிழ்ச்சியை பூக்கவைப்பாய்!
தாங்குவாயோ தாங்கமாட்டாயோ என்றெல்லாம் பாராது என் அத்தனை மனப்பாங்களையும் இறக்கி வைப்பேன் உந்தன்மீது!
நீயோ புன்னகைத்தவாறே சுமைதாங்கியாகி
எனக்கு இளைப்பாறுதல் தந்து பிறகு அச்சுமைகளிலிருந்து
பூரணவிடுதலையும் தருவாய்!
கனத்த நெஞ்சோடு உன்னிடம் வரும்போதெல்லாம் தோளிரண்டில் தலைசாய்த்து உன்கைகளால் வருடுவாய்!
ஆஹா அவ்வருடலின் இதத்தை உன்னையன்றி வேறுயார் எனக்குத் தருவார்!
நண்பா உன்நட்பின்றி இம்மண்ணில் நானேது?

த.ஹேமாவதி
கோளூர்

வீதி உலா

வான வீதியில்
நிலவுத்தலைவன்
வீதி உலா
நட்சத்திரம் மேகங்கள் பருவ மங்கைகளாய்
மலைத்துபோய்
ரசித்தபடியே..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.

அன்னையே தமிழே


🌷🌷🌷🌷🌷🌷🌷

அன்னையே
தமிழே
ஆருயிர் துணையே
போற்றி🌷

அகிலம்பெற்ற
அரும்பெரும்
கொடையே
போற்றி🌷

முன்னிலும்
முன்னதாய்
மூத்தமொழி
போற்றி🌷

செம்மையில் 
செம்மையாய்
செம்மொழி
போற்றி🌷

துள்ளிடும்
இளமையில்
துளிர்தமிழ்
போற்றி🌷

உலகெலாம்
வாழ்ந்திடும்
வளர்தமிழ்
போற்றி🌷

உயர்சிந்தனை
தந்திடும்
எழில்மொழி
போற்றி🌷

தேன்தமிழ்
கைவர
வாழ்த்துவாய்
போற்றி🌷

பணிந்துணை
வணங்கினேன்
உந்தன்தாள்
போற்றி போற்றி🌷

🌷🌷🌷🌷🌷🌷

                        பாரதிப்ரியா
                       தெய்வானை
                            மீஞ்சூர்

முள்முள்ளிலே கால் வைத்து முடிந்தவரை மிதித்து விட்டு காலிலே முள் குத்தியது என்பார்
பழியை முள்மீது போட்டே திரிவார்.

சொல்லிலே முள் வைத்து
பொல்லாததைச் சொல்லிவைத்து
முள்ளாகக் குத்தியது என்பார்
அந்தப் பழியையும் முள்மீதே வைப்பார்.

பாதுகாப்பாய் முள் கொண்ட மலர் பறிக்க முயன்றுவிட்டு
முள் செய்யும் கடமையை வெறுப்பார்
தவறு முள் மீது என்றே பழிப்பார்.

ஒதுங்கியே இருந்தாலும்
அமைதியாய்க் கடந்தாலும்
கடமையைச் செய்தாலும் பழிப்பார்
பழிப்பவர் இழித்துப் பேசியே மகிழ்வர்.

வள் ளென்று விழுந்தாலும்
பிடுங்கியே எறிந்தாலும்
கவலையே கொள்ளாமல் தொடர்வார்
நல்லோர்
முள்ளாகக் கடமையைச் செய்வார்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


Thursday, 13 June 2019

பழைய புத்தகம்யார் வைத்திருப்பார்கள் புதிது போல் புத்தகத்தை?
யார் தான் கொடுப்பார்கள்
குறைந்த விலையில் புத்தகத்தை?
தேடியே நடப்பதும் அரைவிலைக்காய் அலைவதும்
வாடிக்கையாய் இருந்தது அன்று
சொன்னால்
வேடிக்கையாய் தெரியும் இன்று.

புதிது போல் வைத்திருந்தால் பாதி விலை கிடைத்துவிடும்,
மீதி ரூபாய் கொடுத்தாலோ
அடுத்த புக்கும் கிடைத்துவிடும்,
அட்டை போட்டு பாதுகாப்பார் புத்தகத்தை அந்நாளில்
புத்தகத்தின் மதிப்பறிந்த பிள்ளைகளும் அந்நாளில்.

புதிது புதிதாய்ப் புத்தகங்கள் இலவசமாய் இந்நாளில்,
'விலையில்லாப் புத்தகங்கள்'
பெயர் மாற்றம் புதிதாக,
விலையில்லாப் புத்தகம் தன் விலை கெடுத்து விட்டதாலே
காகிதமாய் பறக்குதிங்கே
புத்தகங்கள் காற்றினிலே.

விலை கொடுத்து வாங்கியதால் விலைமதிக்க முடியாததாய் தெரிந்தன புத்தகங்கள் அனைவருக்கும் அன்று.
விலையில்லாப் புத்தகமோ
தன் விலையிழந்து குப்பையாக குப்பை மேட்டின் அங்கமாக இன்று,
மாணவர்கள் விளையாடும் பொருளாக இன்று.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


தெருவாசல்தெருவாசல் தன்னையே திருவாசலாய் நினைத்து
ஒருகுடும்பம் போலவே
இருந்த நாட்கள் நினைவினில்.

தொலைக்காட்சி முன்னமர்ந்து தொப்பையைப் பெருக்காமல்
கதை பேசி விளையாடிக்
களித்ததும் நினைவினில்.

அழவைக்கும் தொடர்களின்
அவலத்தில் மூழ்காமல்
நட்புடனும் உறவுடனும் நலம் பகிர்ந்ததும் நினைவினில்.

என்வீட்டில் இச்சமையல்
உன்வீட்டில் எச்சமையல்
சமையலைப் பகிர்ந்துண்டு
மகிழ்ந்ததும் நினைவினில்.

வாசலின் முன்னாலே
சுவர் வந்து நின்றது,
திண்ணையும் வராந்தாவும்
காணாமல் போனது.

திறந்திருந்த மனம் அது போல் மூடித்தான் போனது
தெருவாசல் மறைந்துபோய்
கதவு மூடிக்கொண்டது.

உறவுகளும் நட்புகளும் ஒதுங்கியே நின்றது
ஒற்றுமையில் வேற்றுமையே
வாழ்க்கையாய் ஆனது.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


கிடைத்துவிட்டதுஉடல் வியர்த்து கண் நிறைந்து தேடுகின்றாள் அவள்
மண்கிளறி கல்நீக்கி தேடுகின்றாள் அவள்
சென்று வந்த பாதையிலே ஓடுகின்றாள் அவள்
தேடிக்களைத்ததால் தளர்ந்து விட்டாள் அவள்.

பார்த்து நின்ற மக்களிலே கேட்கின்றார் சிலர்
தொலைத்துவிட்டுத் தேடுகின்ற பொருளதனின் பெயர்
கழுத்திலே அணிந்திருந்த சங்கிலியைச் சொல்கின்றாள் 
அவளுடன் சேர்ந்தவாறே தேடுகின்றார் பலர்.

இரண்டு பவன் சங்கிலியைக் காணவில்லை, ஒருவர்
நான்குபவன் சங்கிலியாம் சொன்னார் மற்றொருவர்
பவன் விற்கும் விலைதன்னில் இது என்ன கொடுமை
இழந்ததன் விலை தேடினர்
ஒருவருக் கொருவர்.

அனைவரையும் திரும்பவைத்து வந்தது ஓர் சத்தம்
'கிடைத்துவிட்டது' என்ற மாணவியின் சத்தம்
கிடைத்த பொருளைக் கண்டவரோ திகைத்தே தான் போனார்
பத்துரூபாய்ச் சங்கிலியைப் பார்த்து கோபமானார்.

இறப்பதற்கு முன் எந்தன் தாய் தந்த சங்கிலி
இருப்பதாய் நினைப்பதற்காய் எனக்களித்த சங்கிலி
தனிமையைத் தவிர்ப்பதற்கு எனக்குதவும் சங்கிலி
தாயிருப்பை எந்நாளும் எனக்குணர்த்தும் சங்கிலி.

சொன்னவாறே நன்றி சொல்லிக் கிளம்பிவிட்டாள் அவள்
கிடைத்து விட்ட பொருளதனின் மதிப்பறிந்த அவள்
பதில் கேட்டுக் கிளம்பிவிட்டார்
நின்றவர் பலர்
கிடைத்து விட்ட பதிலதனின்
உணர்வுணர்ந்த பலர்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


பொம்மலாட்டம்நான்கு பேர் ஒருபுறம் ஆட்டுவிக்க
நான்கு பேர் மறுபுறம் இசைதொடுக்க
ஒருவர் கதைதனை ஒப்புவிக்க
பொம்மைகள் மாந்தராய் ஆடிநிற்க
பலபேர் கூடிநின்று ஊக்குவிக்க
சரித்திரமும் புராணமும் கதைகளாக
கருத்துகேட்கப் பலபேர் காத்திருக்க
சமூக அவலங்கள் காட்சியாக
தோல்பாவை மரப்பாவை பொம்மலாட்டம்
தமிழினத்தின் குரலானது பொம்மலாட்டம்.

எங்கிருந்தோ யார்யாரோ ஆட்டிவைக்க
பலனுக்காய் பலபேர்கள் ஆடிநிற்க
உதவிக்காய் சிலபேர்கள் கூடிநிற்க
உரிமைக்காய் ஊரார்கள் குரல்கொடுக்க
அவர்களை எடுபிடிகள் பழித்து நிற்க
ஒரு நாளுக்காய் அனைவருமே காத்திருக்க
சரித்திரத்தை தெரிந்தவர்கள் தவித்து நிற்க
நடக்கிறது இன்றும் பொம்மலாட்டம்
ஒன்றுமட்டும் அன்றில் நின்று வேறுபட்டு
பாத்திரங்கள் பொம்மையல்ல மனிதர் மட்டும்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


Saturday, 8 June 2019

அனுபவம்

மாயமாகும் வாழ்க்கைக்குள்

காயம் மட்டுமே

உனக்கான

அனுபவத்தைக்

கற்றுத்தரும்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.பாவலர் சங்கமம்வெண்மேகத்தின் வெண்மைநீலவானமதிலே

ஆங்காங்கே 

சிறு சிறு மலைக் குன்றுகளாயும்

கோலமிட்டு வைத்தாற் போலவும் அழகாய் காட்சி அளிக்கும் வெண் மேகமே

வேகமாக எங்கே செல்கின்றீர்கள் 

யாரைக் கண்டு பயந்து ஓடுகின்றீர்கள்

பூமியிலிருந்து வரும் நச்சுப் புகை தான் காரணமோ


 சிலநேரம் ஆகாய மங்கைக்கு அழகாய் வகிடெடுக்கின்றாய்

 சூரியனோடும் சந்திரனோடும் கண்ணாமூச்சியும் ஆடுகின்றாய்


ஓ... வெண்மேகமே நீ என்ன மந்திரவாதியா இல்லை

கண்கட்டும் வித்தைக்காரனா

உம்மைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் காட்சியளிக்கின்றாய்

கற்பனை வளத்தைத் தூண்டியும்  விடுகின்றாய்

கவிஞர்களுக்கு கருப் பொருளும் ஆகின்றாய்


நீயும் காற்றும் ஒன்றோ

இருவரையும் கையால் பிடிக்க முடியவில்லையே


நிறம் மாறாமல் உருமாறும் வெண்மேகமே

போகிற போக்கில் 

மக்களுக்கு உருமாறினாலும் தன் தன்மை மாறா நிலையை சொல்லிவிட்டுச் செல்


தி.பத்மாசினி சுந்தரராமன்

Friday, 7 June 2019

தெருக்குழாய்

தனிமையில் 

தெருக்குழாயடி

தண்ணீரில்லாமல்

சண்டை 

சச்சரவுமின்றி

மௌனமாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.பிறை கண்ட பிரசவம்🌛


முப்பது நாளில் ஒருசுகப்பிரசவம்

முடியுமா மூத்தோன் துணையின்றி 

மயக்கமில்லை மசக்கையில்லை

சோர்வுமில்லை களைப்புமில்லை

பிறை கண்ட நாளில் உறுதிப்பாடு

குறையில்லாமனதே கர்ப்பக்கூடு

நாள்முழுக்க இறைதுதியே மனதோடு 

உமிழ்நீர்சுரப்பியிடும் கட்டுப்பாடு 

முறைதவறாது அல்லாவை துதிபாடு

முடித்துத்தருவான்நோன்பைஆசியோடு ஏழ்மையிலும் கொடுமை பசிப்பிணி

உன்பசி அடக்கியதை உணர்ந்திடு நீ

நோன்பு என்பது பிறர் காண அல்ல

தாய் சுமக்கும் கருபோன்ற ரகசியமே

அடுத்தவரை குறைபேசும் நேரம் மறந்து

அல்லாவின்வழிமுறைகள்பயின்றோது

இறையருளால் மார்க்கம் தவறாது

மாசற்ற மனக்குழந்தையைபெற்றெடு

முப்பது நாளில் இறையருளாம்

ரமலானைப் சுகபிரசவத்தில் பெற்றிடு

நோன்பின் மாண்பினை உணர்த்திடும்

நல்முத்தாம் ரமலான் வாழ்த்துக்கள்


🌙வத்சலா 🌙

துப்புக்கேடுசமுத்திரம் அடக்கியாண்டு

கங்கையைக் கொண்டுவந்து

சரித்திரம் படைத்தவர் சரித்திரம் தெரிய வில்லை.


இமயத்தில் கல்லெடுத்து

இங்கு வந்து கோவில் கட்டி

திறமையைக் காட்டியவர் 

வரலாறு தெரிய வில்லை.


கல்லில்லா ஊரிலே கற்கோவில் கட்டி

சொல்லில்லா வியப்பினை

உலகுக்குக் காட்டியோன்

கல்லறை எங்கென்று தெரிய விழைய வில்லை.


அங்கே அது உண்டு

அதில் இந்தச் சிறப்புண்டு 

என்றெல்லாம் கதைவிடுவார்

நம் சிறப்பை மறந்திடுவார்


முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பதும்

வெளிநாட்டு மோகத்தில் 

தாய்நாட்டை மறப்பதும்

நம்மவரின் சாதனையை பறைசாற்ற மறுப்பதும்

துப்புக்கேடன்றி வேறென்ன சொல்வீர்.

  

*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

காதலிக்கிறேன்.....


                               நிறம் மாறினாலும் அளவில் சுருங்காத வானம்!

சுட்டெரித்தாலும் இரவில் காணாமல் போகும் ஞாயிறு!

பிறைபிறையாய்த் தேய்ந்தாலும் மீண்டும் வளர்கின்ற திங்கள்!

மிகநீண்ட தூரத்தில் இருந்தாலும் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் நட்சத்திரங்கள்!

எண்ணம்போல் சுதந்தரமாய் விண்ணில் ஊர்வலமாய்ப் போகும் மேகக்கூட்டங்கள்!

பகல்முழுக்க

மின்விளக்கு ஒளிர்திரையாய்

இரவெல்லாம்

மெழுகுவர்த்தி ஒளிர்திரையாய்

சிலசமயம் வறண்டபாலைவனமாய்

சிலசமயம் கொட்டும்மழையால் 

குளிர்சோலையாய்

மொத்தத்தில்

*வானமே*

உன்னை நான் காதலிக்கிறேன்!


த.ஹேமாவதி

கோளூர்

பிரியமுடன் மரங்கள்..


மனிதர்களை

நம்பி

அறம் வளர்த்த

மரங்கள்

மனித 

மனங்களையும்

வளர்க்க 

ஆவலாய்..


இப்படிக்கு


மரங்களுள்

மனிதர்களாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.ஆகாயமும் ஆழியும்அகன்ற ஆகாயமும் நீலநிறம்!

அந்த ஆழ்கடலும் நீலநிறம்!

ஆகாயம் இருப்பது மேலே

ஆழ்கடல் இருப்பதோ கீழே!

வானத்தின் எல்லையை அறிந்தவர் யார்?

அந்த கடலின் ஆழத்தை அறிந்தவர் யார்?

வானத்தைத் தொட்டவரும் இல்லை!கடலின் அடிமடியைத் தொட்டவரும் இல்லை!

விண்மீன்கள் வானத்தில் கொட்டிக்கிடக்க

துள்ளும்மீன்கள் கடலிலே நிரம்பியிருக்கும்!

ஆகாயவிமானங்கள்

வானவீதியிலே பறக்க

கப்பல்கள்தான் கடல்வழியில் பயணிக்கும்!

நிலவும் கதிரும் வானின் செல்வங்களென்றால்

முத்தும் சங்கும் கடலின் செல்வங்கள்!

கடல்நீர்த்துளிகளைத்

தானம்தரும்!

பெற்றுக்கொண்ட வானமோ அவற்றை மழையாகத் திருப்பித் தரும்! 

சினந்தால் இடியோசை எழுப்பி 

பேய்மழைக் கொட்டும் வானம்!

சினந்தால் ஆழிப்பேரலையாய்ப்

பொங்கி ஊருக்குள் வந்து நாசப்படுத்தும் கடல்!

காற்றோடு உறவாடி

முகில்களை அங்குமிங்கும் ஓடவைப்பது வானம்!

காற்றோடு உறவாடி அலைகளை உண்டாக்கி கரைத்தொட வாஞ்சையாய் ஓடிவருவது கடலாகும்!

உலகமே கூடினாலும் வானத்தை மூடமுடியாது!

அதுபோலவே கடல்நீரையும் இனிப்பாக்க முடியாது!


த.ஹே

கோளூர்

நிம்மதி

தீமையின் 

பிடியில்

இருப்பதைவிட

வாய்மையின்

வசிப்பில்

வாழ்ந்துவிடு

நிம்மதியோடு...


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..Wednesday, 5 June 2019

விதை

விதை  

கதைசொல்ல

சதை அதை கேட்க

மனம் பதைக்க

தினம் உழைக்க புறப்பட்டான்.


விதையினால்

விழித்துக்கொண்டான்

விவசாயி..


விதையில்

உருவானது

சதை..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி

Tuesday, 4 June 2019

நெகிழி இல்லாத தேசம்

கைநாட்டுகையெழுத்துப் போட தெரியாதவர்களின் கையெழுத் தானது கைநாட்டு.


எழுதவும் படிக்கவும் கற்காதவர்களின் அடையாளச் சின்னமாய் கைநாட்டு.


கிராமத்து மக்களை நகரத்து மாந்தர்கள் அழைத்திருந்த வார்த்தை கைநாட்டு.


அவர் இவர் என்றன்றி பலபேரும் ஆகின்றார்

பல நேரங்களில் கைநாட்டு.


பொல்லாதவர்களின் பூர்வீகம் கண்டிட காவல் நிலையத்துக் கைநாட்டு.


இல்லாதவர்கள் தம்  இல்லாமை மறைத்திட

அடகு வைப்பதில் கைநாட்டு.


பரிதாப வாழ்க்கையின் பரிகாசமாய் இன்று 

பலபேர் வைக்கின்ற கைநாட்டு.


பதவியை இழக்கவும் பதவியில் அமரவும்

பலருக்கு உதவியாய் கைநாட்டு.


எல்லாம் அறிந்தவர் என்றே நினைப்பவர் பதிவாளர் அலுவலகத்தில் கைநாட்டு.


ஏமாந்த மக்களின் ஏமாற்ற அடையாளம் வாக்குச் சாவடிக் கைநாட்டு.


என்நாட்டு மக்கள் இனி எதுசெய்ய வேண்டுகிலும்

ஆதாரமாய் வேண்டும் கைநாட்டு.


கல்லாதவர் மட்டும் கைநாட்டு என்றன்றி

எல்லாவரும் இன்று கைநாட்டு.


எல்லா இடத்திலும் கைநாட்டு. 


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

எதிர்பார்ப்பு

மரமே நீ மனிதனிடம் மன்றாடாதே

மழையிடம்

கேள்

மழை உன்னிடம்

பேசும்

உங்களின் இருவரின்

உறவுதான்

உலகில் பிறக்கும் 

உயிர்கள்

அவர்களே

மனிதர்கள்..


மனிதர்கள் தன்னை காக்க பிறந்தவர்கள் சுயநலம் மிக்கவர்கள்

மழையும் மரமும்

மண்ணை காக்க பிறந்தது

பொதுநலம் 

நிறைந்தது.


யாரிடமும் எதையும்

எதிர்ப்பார்க்காதவர்கள்

இவ்வுலகின்

உண்மையானவர்கள்

அவை

மழையும் மரமும்

மட்டுமே..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்புதிய ஆண்டு

புதிய பழைய மாணவர்கள்

புதிய புத்தகங்கள்

புதிய கால அட்டவணைபழையன மறப்போம்

புதியதை நினைப்போம்

புதுமைகள் செய்வோம்

கல்வியை அழகுற கற்பிப்போம்

மாணவர்களை கலக்கமின்றி படிக்கச் சொல்வோம்


மாணவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்து

நல்ல நண்பனாய்

சிறந்த ஆசானாய்

நல்லதொரு வழிகாட்டியாய் இருந்து

தேர்ச்சி விகிதத்தை கிள்ளிக் குவிக்காமல்

அள்ளிக் குவிப்போம்


சென்ற ஆண்டைக் காட்டிலும் 

இந்த ஆண்டு அனைவருக்கும்

அமைதியாகவும் ஆசீர்வாதமாகவும்

சந்தோஷமாகவும் 

நல்ல தேர்ச்சி விகிதமும் கிடைக்க வாழ்த்துகள்தி.பத்மாசினி

தமிழ் உழவன்தொல்காப்பியம் வரை

தமிழை ஆழ உழுதவன் நீ!


தமிழ்நிலத்தில்

சோர்விலாது உழுது

உன் சிந்தனைவளத்தை

மும்மாரியெனப் பொழிந்து 

உன் தமிழார்வத்தை

உரமாக்கி

மொழிப்பற்றை காவல்வேலியாக்கி

மாடுகட்டிப் போரடித்தால் மாளா தென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை போல

கட்டுக்கடங்காத விளைச்சல் செய்தாய்!

அதன் விளைவாய் எங்களுக்கு எத்தனை எத்தனை

கவிதைகள் உரைகள் கட்டுரைகள் பாட்டுகள் கதைகள் நாடகங்கள் மேடைப்பேச்சுகள் கிடைத்தன!

சங்கத்தமிழ் இலக்கியங்களை உனது உரையென்ற 

படிக்கட்டுகள் வழியே மக்களைக்

கொண்டுசென்று சேர்ந்துவைத்தாய்!

அஞ்சுகத்தின் அருமைந்தனாய்ப் பிறந்து

தமிழன்னையின் மடியினிலே தவழ்ந்து வளர்ந்து

தமிழென்ற வயலை வளமாக்கி விளைவித்தப் படைப்புகளால் உலகையே வென்று என்றென்றும் மக்கள் மனங்களில் வாழும் தமிழ் உழவனே!

நீ பிறந்த இந்நாளில் உம்மைப் போற்றி வணங்குகிறேன்!


த.ஹேமாவதி

கோளூர்

மரம் அது வரம்கருவறைகள் மோதிக்கொண்டன!

தங்களுக்குள் உயர்ந்தவர் யாரென்று?

தெய்வம் என்னுள் உள்ளது என்று

கோயிலின் கருவறை கொக்கரித்தது!

நானின்றி பிறப்பேது? என்று பெண்ணின் கருவறை பீற்றியது!

மண்ணின் கருவறை அமைதியாய்ச் சொன்னது

மரங்களின் வேர்கள் என்னுள்!

வேரின்றி மரமேது?

மரமின்றி இலையேது பூவேது கனியேது விதையேது

கோயில் கட்டுவதற்கு மரக்கட்டையேது?தேரேது? வீடேது?

வீடின்றி ஆணேது?பெண்ணேது?

பெண்ணின் கருவறைதானேது?

கோயிலின் கருவறையும்

பெண்ணின் கருவறையும்

வெட்கித் தலைகுனிந்தன!

மண்ணின் கருவறை மேலும் தொடர்ந்தது!

வரம்நாடி யாரும் வனம்தேடிச் செல்லாதீர்!

உடல் வருந்த உண்ணாது தவத்தைச் செய்யாதீர்!

மரம் நடுங்கள் என்னுள் மரம் நடுங்கள்!

நீங்கள் கேட்கும் வரம்யாவும் மரம்தரும்!

சுவாசிக்க சுத்தமான காற்று!

வெயிலுக்கு இதமான நிழல்!

பறவைகட்குப் புகலிடம்!

இலை பூ காய் கனி

பலவும் தரும்!நச்சுவாயுவை தான் உட்கொண்டு நல்லவாயுவை உங்களுக்குத் தரும்!

தான் உறிஞ்சும் நீரை மழையாக்கி மண்ணில் பொழியவைக்கும்!

மரங்கள் யாவும் என்குழந்தைகள்!

முதிர்ந்தாலும் வீழ்ந்து கட்டையாகி உம்மோடு வாழும்! 

தொட்டிலில் தவழ்ந்து நாற்காலியில் அமர்ந்து மேசையில் எழுதி

கட்டிலில் வாழ்ந்து

சவப்பெட்டியில் அடங்கும்வரை

மரம் உம்மோடு பயணிக்கும்!

இப்போது சொல்லுங்கள்!

என்கருவறையில் வளர்ந்து தலைநிமிர்ந்து நிற்கும் மரம் உங்களுக்கு வரம்தானே?


த.ஹேமாவதி

கோளூர்

அலமாரிஅறை அறையாய் பிரித்து வைத்து

அதனுள்ளே நினைவை வைத்து

பத்திரமாய்ப் பூட்டி வைத்தேன் உள்ளமெனும் அலமாரி.


சோகத்தை அடியில் வைத்து அதன் அருகில் காதல் வைத்து

திறக்காத பூட்டெடுத்து இரண்டையுமே பூட்டி வைத்தேன்.


ஓர் அறையில் பாசம் வைத்து

மறு அறையில் மகிழ்ச்சி வைத்து

கண்ணாடி மூடி போட்டுக் 

காணுமாறு நிறைத்து வைத்தேன்.


பாசமது குறைந்தால் தான்

மகிழ்ச்சியது தொலைந்தால் தான்

காதலதை, சோகமதை வெளியெடுக்கும் விதத்தில் வைத்தேன்.


பூட்டிவைத்த பொருளதுவோ

பத்திரமாய் உள்ளிருக்க

பாசமுடன் மகிழ்ச்சி பொங்கி அலமாரி நிறைந்திருக்க

துள்ளிக் குதிக்கிறது உள்ளமெனும் அலமாரி

என் உள்ளமெனும் அலமாரி.


*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

கடவுள்

கடவுளெல்லாம்

குழந்தைகளைத்தேடி

கற்பகிரகத்திலிருந்து

வெளியில்

வருகிறதாம்.


என்னைவிட

நீயே

கடவுளின் 

காட்சியாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.காணவில்லைதென்றலுமே புயலாகுது 

மன்னவா,,,

தேகம் கூட பகையாகுது

என்னவா,,,

இரவில்,

நிலவும் 

புறம் பேசுவதை

சொல்லவா,,,

இப்படியே என் வாழ்வு 

செல்லவா

உலகில் நான் 

ஏன் பிறந்தேன்? இப்படியே என் வாழ்வு 

செல்லவா,,,


பிடித்த மீனை 

விட்ட கதை சொல்லவா

உன்னை பிரியத்திலே மங்கையிவள் அள்ளவா,,,

தொடுத்த பூவை தலையிலே நீ 

சூட்ட வா,,,,

தொடுத்த பூவை தலையிலே நீ 

சூட்ட வா,,,

உன்னை கண்களுந்தான் காணவில்லை

மாயவா,,,


நினைக்கும் 

போது 

நீயுமிங்கு மன்னவா,,,

நெருங்கி வந்து கதைகள் பேசி மகிழ வா,,,,

கணக்கு போட்டு நான் இனியும் வாழவா?

கடந்த நாளை மனதில் 

வைத்து பேசவா,,,

நான், 

கடந்த நாளை மனதில் 

வைத்து பேசவா,,,


தென்றல் 

போல 

நான் இப்போ மாறவா,

உன் திசை 

நோக்கி

சிறகடித்து பறக்கவா,,,

உலகெல்லாம் சுற்றியுன்னை தேடவா?

தேடி,

உரிமையோடு 

உன்னோடு

சேரவா!


வரும் 

வழியை 

பார்த்து 

நானும் 

நிற்கவா,,,?

தபால் 

வருமென்று

ஏக்கத்திலே

என் அவா,,,

தினம்,

பிரிவென்ற உறவினிலே 

நிற்கவா,,,?

என்னை,

ஏன் 

படைத்தாய்

நான் வணங்கும்

இறைவா,,,,!

தினம்

சிரித்து

நீயும் 

பார்க்காதே மறைவா!


பாலா,,,

ஆசிரியர்

வரம்பெற்ற வாரிசுகளை உருவாக்க

தரம்பெற்ற ஆசிரியராய்

உயர்வோம்

இவ்வுலக நன்மைக்காக..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS