பூக்காத பெண்மையா
நான்
புலராத ஆண்மையா....?
அம்மையின் பாலினமா
நான்
அப்பனின் பாலினமா....?
குருதியில் குதித்தோடும்
இரட்டை ஹார்மோனால்
குறுகி குறுகி சருகாகிறேன்
பெண்மை அருகே விலக்கம்
நான்
பெண்ணாகிய ஆண்....
ஆண்மை அருகே தருக்கம்
நான்
ஆணாகிய பெண்......
வீதியில் உலா வரும்
விந்தையான
பொம்மை நான்...
வியப்பின் உச்சத்தில்
கவர்ச்சி அற்று கவர்ச்சியாக
வலம் வரும்
கந்தர்வ பொம்மை நான்....
பெண்மையின் மென்மையில்
பேதலிக்கும் பேதை நான்...
ஆண்மையின் நீட்சியில்
அடங்கி கிடக்கும் சிகண்டி நான்....
பூ பிடிக்கும்
புடவை பிடிக்கும்
உதட்டு சாயம் பிடிக்கும்
ஒப்பனை பிடிக்கும்
ஒய்யார நடை பிடிக்கும்
ஒலிக்கும் கொலுசு பிடிக்கும்
ஒயிலாக பாட பிடிக்கும்
ஓங்கி சிரிக்க பிடிக்கும்
பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை
பெண்பிள்ளை நானில்லை....
சாடி சாடி ஓடி ஓடி
ஒடுங்கி ஒடுங்கி
ஒதுக்கி ஒதுக்கி
பதுங்கி பதுங்கி
நீயுமற்று நானுமற்று
நிம்மதியற்று நிலமையற்று...
அரிதாரம் பூசாமல்
அச்சாரம் பிசகாமல்
அவனியிலே வாழ வேண்டும்
வெறுமை யற்று...... சிறுமையற்று...........
வேதனையற்று....
வேடிக்கையற்று....
அர்த்தநாரீயா.... நான்
அகிலத்தின் சுயமா நான்
இருமையின் ஒருமையா நான்
ஈர்ப்பின் விலகலா நான்
வித்தின் விருச்சமா நான்
விந்தின் விந்தையா நான்
உணர்வின் பிழம்பா நான்
உன்மத்த விளைவா நான்
சுற்றத்தோடு சூழ வேண்டும்
நட்போடு மகிழ வேண்டும்
நாளோடு வாழ வேண்டும்
பொழுதோடு பயில வேண்டும்
நானே நானாக
நானின்றி நானாக....
தாமரை ரவி