நிலா
இலக்கியத்தில் நீ இல்லாத இடமே இல்லை
கவிஞர்களுக்கு கருப்பொருளாகின்றாய்
காதலர்களுக்கு காவலாகின்றாய்
குழந்தைகளுக்கு வேடிக்கைப் பொருளாகின்றாய்
திருடர்களுக்கு திகிலாகின்றாய்
மின்விளக்கே இல்லா ஊர்களுக்கு ஒளி விளக்காகின்றாய்
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் காரணமாகின்றாய்
ஆராய்ச்சியாளர்களுக்கு அதிசயமாகின்றாய்
விஞ்ஞானிகளுக்கு விந்தையாகின்றாய்
தொடமுடியா தூரத்தில் நீயிருந்தாலும்
எங்களுக்கு உம்மை தொட்டுப் பார்க்க ஆசை
நிஜத்தில் தொட முடியவில்லையென்றாலும்
நிழலால் தொட்டுப் பார்க்கின்றோம் உம்மை தண்ணீரிலே
நீயும் சூரியனும் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரோ
காணாமலே நட்பு பூண்டு
சூரியனார் தன்னால் உன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்
தி.பத்மாசினி சுந்தரராமன்