உள்ளுக்குள் குளிர்ச்சியாய்
கண்கவர் காட்சியாய்,
காட்சியே மகிழ்ச்சியாய்,
கவர்ச்சியாய் நகைக்கடை.
செய் கூலியோ இல்லை சேதாரம் தேவையில்லை
கல்லுக்கு விலையுமில்லை
கலக்கலான வாசகங்கள்.
தங்கத்தை வாங்கிவிட்டால்
வெள்ளியோ இலவசம்
வெள்ளியே வாங்கிவிட்டால்
எவர்சில்வர் பரிசாக.
கட்டு கட்டாய் பணம் கொடுத்து
பொட்டுத் தங்கம் வாங்கிவிட்டு
பரிசுக்காய் வரிசையிலே காத்து நிற்கும் இடமாக.
விலைகேட்டுக் கொதிக்கின்ற உள்ளத்தைக் குளிர்விக்க
குளிர்பானம் கோப்பையிலே எப்போதும் தயாராக .
ஏமாற்றப் படுகின்றோம் என்பதனை அறிந்தாலும்
ஏமாற எல்லோரும் கூடுகின்ற கடையாக.
கடை என்ற பெயர் வைத்து
அடுக்கு மாடி பல கட்டி
களை கட்டி நிற்கின்ற கட்டிடமே சாட்சியாக
வரியென்று சொன்னாலும்
தரமின்றிப் போனாலும்
குறையாமல் மனிதர்கள்
நிறைந்து நிற்கும் தளமாக.
நாளும் வளர்ந்து நிற்கும் இடமாக எந்நாளும் நகைக்கடை.
*சுலீ. அனில் குமார்*