Header Ads Widget

Responsive Advertisement

பழைய புத்தகம்



யார் வைத்திருப்பார்கள் புதிது போல் புத்தகத்தை?
யார் தான் கொடுப்பார்கள்
குறைந்த விலையில் புத்தகத்தை?
தேடியே நடப்பதும் அரைவிலைக்காய் அலைவதும்
வாடிக்கையாய் இருந்தது அன்று
சொன்னால்
வேடிக்கையாய் தெரியும் இன்று.

புதிது போல் வைத்திருந்தால் பாதி விலை கிடைத்துவிடும்,
மீதி ரூபாய் கொடுத்தாலோ
அடுத்த புக்கும் கிடைத்துவிடும்,
அட்டை போட்டு பாதுகாப்பார் புத்தகத்தை அந்நாளில்
புத்தகத்தின் மதிப்பறிந்த பிள்ளைகளும் அந்நாளில்.

புதிது புதிதாய்ப் புத்தகங்கள் இலவசமாய் இந்நாளில்,
'விலையில்லாப் புத்தகங்கள்'
பெயர் மாற்றம் புதிதாக,
விலையில்லாப் புத்தகம் தன் விலை கெடுத்து விட்டதாலே
காகிதமாய் பறக்குதிங்கே
புத்தகங்கள் காற்றினிலே.

விலை கொடுத்து வாங்கியதால் விலைமதிக்க முடியாததாய் தெரிந்தன புத்தகங்கள் அனைவருக்கும் அன்று.
விலையில்லாப் புத்தகமோ
தன் விலையிழந்து குப்பையாக குப்பை மேட்டின் அங்கமாக இன்று,
மாணவர்கள் விளையாடும் பொருளாக இன்று.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*