மெல்ல நடக்கும் நத்தையே!
உம் நடை அழகு தத்தையே!
உம் பொறுமை எமக்கு விந்தையே!
அது சொல்லும் நூறு வித்தையே!
பொறுமை இருந்தால் சிகரம் தொடலாம்
முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்
நாம் நடந்து சென்றால் அது பாதையாகலாம்
தனித்து நின்றால் திறமை காட்டலாம்
என்பதை உணர்த்தும் பேசா மடந்தையே!
குட்டி வீட்டை முதுகில் சுமக்கும் குட்டி ராணியே!
யாருக்கு பயந்து எங்கே வீட்டோடு ஓடுகின்றாய்
உங்களுக்கும் எங்களைப் போல் தொல்லையோ!
தன் சுமையை தானே சுமக்க வேண்டும்
பிறருக்கு பாரமாயிருக்கலாகாது என்றுணர்ததும் பேதையே!
உங்களைப் போல் எங்கள் மனம் இல்லையே!
மெல்லுடல் கொண்ட மெல்லியலாளே!
நீயும் எங்களினம் தானோ!
யாரேனும் வந்தால் நாணத்தில் வீட்டிற்குள் ஒளிந்து கொள்கின்றாயே!
பல நூறு மைல் நடந்தாலும்
சோராது தளராது வெற்றி நடை போடும் வஞ்சியே!
அந்த ரகசியத்தை எங்களிடம் சொல்வாயோ அரிவையே!
தி.பத்மாசினி