Header Ads Widget

Responsive Advertisement

முள்கிரீடம்

முள்
தேடிக்கொண்டிருக்கிறேன் எனது
வெள்ளைக்கல் மூக்குத்தியை
அவன் வருவதற்குள் 
கிடைத்து விட வேண்டுமே!
தணலில் நிற்கும் தவிப்பு
தினமும் இதுவே என் பிழைப்பு!
கிழமைகளின் பெயர் 
மாறினும் அது கணிப்பில் ஓர் நாள்!
கிழமைக்கொரு பெயரில்
மாறிமாறி எனைக்கொல்ல ஒரு ஆள்!
நாள்பார்த்து கோள்பார்த்து.......
நல்லவேளையில் விழுந்த தாலி
புரியவைத்தது அதுவோர் முள்வேலி!
அரக்கத்தனமான அவன் ஆளுமை!
புரியவைத்தநிஜம் அவன் முள்படுக்கை!
அவனில்லா நேரங்களில் கண்ணீரால்
மருந்திடும் மாமியின் ஆதங்கத்தில்....
உறங்கும் முள்மேல்விழுந்த இச்சேலை!
இயற்கைக்கு வஞ்சனை இல்லை........
இனிதாக வளர்ந்தது வயிற்றுப் பிள்ளை
சேதி சொன்னதும் அவன் வாயினின்று
புறப்பட்டசொல்லோ முள் சாட்டை!
“இது எவனோடு செய்த கள்ளச்சேட்டை”
ஏவிய வார்த்தை முற்றுப்பெறும்முன்
ஏகினாள் மாமியும் இடுகாட்டை!
கண்ணீர் தடம் மறையவில்லை......
என்னுள் சொல் வந்து முள்ளாகி
கிழித்த குருதியும் காயவில்லை! 
உற்றாருறவும்இல்லத்திருக்கையிலே
உள்வெறிகொண்டேயெனை
முள்படுக்கையில் புரட்டினான்!
உண்மைகண்ட எனைதாயழைத்தாள் 
மருத்துவமனைக்கு உடலை சீராக்க;
தானே கொண்டுசென்று கூட்டிவந்தான்
தளிரைக்கொன்று உயிரைச்சேறாக்கி
நீர்க்குழியாய் தோன்றி முள்ளால்
உடைத்தெறியப்பட்ட உருவமிலா
உயிர்க்கெல்லாம் என் கருவறையே
கல்லறையாக்கப்பட்டது —அவனாலே
எல்லை தாண்டி தப்பியோடவலுவில்ல!
வேலிதாண்டும் வெள்ளாடாய் மாற
                       உயிருக்கும்வலுவில்லை 
மனம்மட்டும் அனுக்கணதும் முட்களால்
கீறப்பட்டு வடுவேறி பாறையாய் கனத்தேக்கிடந்தது......!
முள்ளிள் ஒலி அருகில்கேட்டது!
“எவனையடி கட்டிலடியில் தேடுகிறாய்”?
அதோ கிடைத்துவிட்டது!!! பளப்பளப்பாய் என் மூக்குத்தி
வெட்டரிவாள் அரவணைப்பினில்!
வேவமெடுத்தது கைகள்........
“ஆமாம்டா சுத்தமான ஆம்பிள்ளையை!”
என்ற என்குரலுடன் இயைந்து
வெளிவந்த அரிவாள் தாகம் தீர
குடித்தது அவன் உயிர்நிலை குருதியை!
முடங்கியமர்ந்தவனை கண்கள்
நோக்க .......!
வெற்றிகரமாய் ஏறியது என் மூக்கில்.....
வெள்ளைக்கல் மூக்குத்தி !முள்கிரீடம்
தனையுடைத்த தானைத்தலைவனாய்!

🌹🌹வத்சலா🌹🌹