அகத்தியர் ஆய்ந்தளித்த அரிச்சுவடி தனை எடுத்து
தொல்காப்பியர் உவந்தளித்த இலக்கணத்தை வழிக்கொண்டு
திருவள்ளுவர் திருக்குறளின் பெருமைதனைத் தனதாக்கி
குகைகளில், கற்களில், சிலைகளில், ஏட்டினில்
தீட்டிய சரித்திரம் காட்டி நிற்கும் தனிமொழி.
கல்தோன்றி மண்தோன்றாக் காலமென்ற கதை தவிர்த்து
கண்தோன்றி செவிதோன்றி கைதோன்றி வாய் தோன்றி
பேசவும் எழுதவும் மனிதன் அறிந்த நாள் தொட்டு
கண்பட்டு, கைபட்டு,உளிபட்டு பண்பட்டு
பண்பாடு தனைக் காத்துப் பண்புணர்த்தும் தொன்மை மொழி.
முக்கனியின் இன்சுவையும் முத்தமிழில் கலக்கவிட்டு
எக்கனியின் சுவை இதற்கு ஈடு என்ற கேள்வி கேட்டு
உடனிருந்தோர் உண்டு என்றால் காட்டு என்ற சவால் விட்டு
செம்மொழியாய் ஒளிரும் மொழி தொன்மை பறைசாற்றும் மொழி
சொற்சுவையும் பொருட்சுவையும் வியக்கவைக்கும் வித்தைமொழி
தொன்மைத் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி.
*சுலீ. அனில் குமார்*