Now Online

Saturday, 21 September 2019

இனியத் தமிழ் பயணம்


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழோடு மூச்சு நிற்கும் வரை பயணிப்பது எத்தனை இன்பம்

உலகில் உள்ள மொழிகளிலே அதிக எழுத்துகள் கொண்டது  தமிழ் மொழி

உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் ஆணிவேராய் பக்கபலமாய் இருப்பது தமிழ்

தமிழின் முதல் எழுத்து அகரம்
தமிழின் சிறப்பு ழகரம்
மற்றமொழிகளுக்கெல்லாம் தமிழே சிகரம்

தமிழராய் பிறப்பதற்கே நான் அருந்தவமே செய்திருக்கிறேன்
தமிழோடு பயணிக்க நான் புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும்

தமிழில் சிறியோரையும் பெரியோரையும் அழைக்க வெவ்வேறு சொல் உண்டே
மற்ற எம் மொழியிலும் இது உண்டோ?

தமிழ் அமிழ்தோ
தேனோ கற்கண்டோ முக்கனியோ
ருசித்தவருக்குத் தான் தெரியும் தமிழின் தனிச் சுவை

தமிழோடு பயணித்தால் சுகவாழ்வாகும்
சுமையும் கூட சுகமாகும்

சுந்தரத் தமிழை சுவாசிப்போம்
அழகுத் தமிழை ஆராதிப்போம்
கன்னித்தமிழை கறைபடாமல் காப்போம்
இனிய தமிழை இவ்வுலகம் முழுதும் பரப்புவோம்

தி.பத்மாசினி சுந்தரராமன்


பொறியாளர்பேரண்டப் பிரபஞ்சத்தில்
அணு முதலாய் .
முடிவிலதாய்..
துகள் முதலாய் நேரிணிலே ..
வகைசெய்யும் ..இறை பெரிதே ..
பொறியாளர் ...

சிறுமலர் முதலாய் ...
கனி அதுவாய் ..
சுவை நிறையாய்...
வடிவெனவாய் ..
சூழ்ந்த மணம் நிகர்த்ததுவாய் ..
என் இறைவா ..
நீ அதுவாய் ...பொறியாளர் ...

பேராழி.. உயிர் முதலாய் ..
பெருங்காற்றின்..
இயங்கலதுவாய் ..
எரிமலையாய் ..
தழல் அதுவாய் ..
அதிர்வது வாய் ..
நிசப்தம் அதின் பேரொலியாய் ..
இறைவா நீ ...பொறியாளர் ...

மலை தந்தாய் ..
நதி தந்தாய் ..
மேடு செய்தாய் ...
சமன் செய்தாய ..
பல வகையாய் ..
உயிர் தந்தாய் ...
உயர்வான உயிரானாய் ..
யாருமானாய் ..
நானுமானாய் ..
இறைவா நீ ..பொறியாளர் ..

காட்சியானாய்..
களமும் ஆனாய் ..
தொண்டுமானாய் ..
இடையே நின்று ..
ஆடல்  செய்தாய் ..
கருணை கொண்டாய் ..
காத்து நின்றாய் ...
இறைவா... நீ பொறியாளர்

அன்பு சொன்னாய் ..
சிலுவை கொண்டாய் ..
கண்ணன் ஆனாய் ..
கீதை சொன்னாய் ...
இஸ்லாத்தின் ..
இயல்பும் ஆனாய் ...
பௌத்தம் ஆனாய் ..
மெய்யறிவுமானாய் ..
யாவும் ஆனாய்...
இறைவா நீ.... பொறியாளர்

சிந்தை தந்தாய் ..
வார்த்தை தந்தாய் ..
நிலமும்போல பொறுமை
என்றாய் ...வடிவாக
சிலையாக ...சிந்தையிலே
எனைக்கொள் என்றாய் ...
என் நிலை அதுவும் ...
நீ தனி அறிவாய்...
அர்ப்பணிபபோ.. உன்னிடமே ...
பற்றற்றான் பற்றே
எமைத்தாங்கி நிற்கும் ...
இறைவா நீ பொறியாளர் ...

              தெய்வானை,
                  மீஞ்சூர்.


மனிதனும் தெய்வமாகலாம்விபத்தொன்று நடக்கிறது
விரைபவர்கள் நிற்கவில்லை,
உயிரொன்று துடிக்கிறது
உதவி செய்ய யாருமில்லை,
பார்த்து நின்ற பலரும்கூட
படம்பிடிக்கும் மும்முரத்தில்,
ஓர் ஊர்தி வந்து நிற்க
ஒருவர் இறங்கி ஓடுகின்றார்,
துடிக்கின்ற அவ்வுயிரை தோளினிலே சுமக்கின்றார்,
உதவி தேடி நிற்காமல் ஊர்தியிலே விரைகின்றார்,
உதிரத்தைக் கொடுத்தந்த உயிரைக் காப்பாற்று கின்றார்,
உயிர் பிழைத்த அவ்வுள்ளம் உறவுக்குச் சொல்கிறது
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.

ஒரு பாட்டி கை நீட்டி உணவுக்காய் நிற்கையிலே
உதவும் உள்ளம் அற்றவர்கள் பார்க்காமல் செல்கின்றார்,
பசிதாங்க முடியாமல் அப்பாட்டி விழுந்தபோதும்
ஏன் என்று பார்க்காமல் எல்லோரும் செல்கின்றார்,
ஒருவர் மட்டும் ஓடிவந்து மயக்கத்தைத் தெளியவைத்து
உணவளித்து தன்னுடனே அழைத்துக் கொண்டு செல்கின்றார்,
தன்னைப்போல் பல பேரை பாட்டியங்கு காண்கின்றார்,
மகிழ்ந்து பார்த்த அப்பாட்டி மனதினிலே சொல்கின்றார்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.

ஆம்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்
மனிதனாக வாழ்ந்திடில்.

*சுலீ. அனில் குமார்.*


தந்தை பெரியார்


திராவிட தீச்சுடர் தந்தை பெரியார்


நாத்திகம் பேசியவரே
நாசூக்காய் நடப்பபவரே
நாட்டை பண்படுத்த வந்தவரே

தம் கொள்கையிலிருந்து மாறாதவரே
மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிப்பவரே
மதி நிரம்பப் பெற்றவரே

திராவிடர்களின் எழுச்சியே
தியாகச் சுடரே
தீண்டாமையை ஒழித்தவரே

பெண்ணுரிமை காக்க வந்தவரே
பெண்ணுக்கும் சம உரிமை தந்தவரே
பெண்கல்வியை போற்றியவரே

கருப்புச்சட்டை அணிந்தவரே
கள்ளுண்ணாமையை வற்புறுத்தியவரே
கழகத்தை திராவிட கழகத்தை தோற்று வித்ததவரே

அரசியல் வித்ததகரே
முதலமைச்சர்கள் பலரை உருவாக்கியவரே
எப்பதவிக்கும் ஆசைப்படாதவரே

அறிவுப் பெருத்தவரே
ஆக்கம் பல செய்தவரே
இன்றும் அனைவர் மனதிலும் வாழ்பவரே

சமூக சீர்திருத்தம் செய்தவரே
திருமணத்திலும் சீர்திருத்தம் ஆற்யவரே
எழுத்திலும் சீர்திருத்தப் புரட்சி கண்டவரே

இன்றும் உம் தடியும் கண்ணாடியும்
யாரையோ அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது

நீர் மறைந்தாலும்
உம் சிந்தையாலும் எழுத்தாலும்
மமக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்

தி.பத்மாசினி சுந்தரராமன்


கோடுகள்கோடுகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை!

கோடுகள் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்தவை!

கோடுகள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடம் போதிப்பவை!

கோடுகள்தாம் எத்தனை வகைகளாக உள்ளன!

நேர்க்கோடுகள்
சாய்கோடுகள்
வட்டக்கோடுகள்
சிக்கல்கோடுகள்
சுருள்கோடுகள்
நெளிந்தக்கோடுகள்
புள்ளிக்கோடுகள்
துண்டுக்கோடுகள்
ஒவ்வொன்றும் ஒருபாடம் நமக்கு!

நேர்க்கோடுகள் நம்மை நேர்வழியில் நடக்கச் சொல்லும்!,

சாய்கோடுகள் விட்டுக்கொடுத்து வாழச்சொல்லும்!

நீர்த்தடாகத்தில் கல்லெறிந்தால் தோன்றும் வட்டக்கோடுகள் நமது நட்புவட்டத்தைப் பெருக்கச் சொல்லும்!

இணைந்தே இருந்தாலும் பிரிந்தே இருக்கும்  பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும்
ரயில் தண்டவாளங்கள் என்ற இணைகோடுகள் கணவன்  மனைவி
எப்படி இருக்கவேண்டுமெனச்
சொல்லும்!

விண்ணிலிருந்து வழியும் மழைக்கோடுகள் பிறருக்கு உதவிவாழ் எனச்சொல்லும்!

முதியவர் முகத்தின் சுருக்கக்கோடுகள்
அனுபவத்தைக் கற்றுத் தரும்!,

உள்ளங்கையில் உள்ள
ரேகைக்கோடுகள்
கைரேகை சோதிடர்களின் பசியைத் தீர்க்கும்!

அறுவைசிகிச்சையின்
தழும்புக்கோடுகள்
வலியின் நினைவை ஞாபகப்படுத்தும்!

போரில் ஏற்பட்ட தழும்புக்கோடுகள்
வீரத்தை உணர்த்தும்!

சுருண்ட கோடுகள் கேசத்திற்கு அழகூட்டும்
இலைகளின் நடுவே நரம்புக்கோடுகள் பசுமையை உணர்த்தும்!

கருவறைக்குள் சுருண்ட கோடாம் தொப்புள்கொடி உயிரினை வளர்க்கும்!

ஆசிரியர் விரல்கள் பிடிக்கும் சுண்ணக்கட்டி என்ற துண்டுக்கோடு
வருங்கால பாரதத்தை உருவாக்கும்!

தையலில் உருவாகும் விட்டுவிட்டுச் செல்லும் துண்டுக்கோடுகள்
உயிரினும் பெரிதான மானங் காக்கும்!

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே
போகலாம்.ஏனெனில்
கோடுகள் ஒரு முடிவுறா கணம்!

த.ஹேமாவதி
கோளூர்


கதம்பம்என் அப்பன் முருகனுக்கு முல்லைப்பூ மாலைகட்டி
கழுத்தினிலே போட்டுவிட்டால் முத்தமிட்டு அது மகிழும்.

செவ்வரளிப் பூவெடுத்து சீராக அதைத் தொடுத்து
தலையினிலே சுற்றிவிட்டால் கிரீடம் தலைகுனியும்.

மதுரை மரிக்கொழுந்தால் மனதார  பூஜை செய்தால்
மணம் கமழும், மனம் மகிழும், கண் நிறையும், மனம் நிறையும்.

சாமந்திப் பூ தொடுத்து சாந்தி வேண்டி அணிவித்தால்
சாந்தத்தால் மனம் குளிரும்,
அகம் மலரும், முகம் மலரும்.

ஒரே பூவில் மாலை கோர்க்கப்
போதாமல் நான் தவிக்க
தோட்டத்துப் பூவெல்லாம்  கண்சிமிட்டி அழைத்ததென்னை.

பல பூக்கள் ஒன்று சேர பல நிறத்தால் அழகு கூட
கதம்ப மாலை தொடுத்து நானும் கடம்பனுக்கு சார்த்தி நின்றேன்.

ஒரு பூவோ ஓரழகு பலபூவோ தனியழகு
அழகுக்கு அழகுசேர அழகனவன் கேட்டு நின்றான்...
அழகனவன் கேட்டு நின்றான்
கண்டுகொண்டாயா....
கண்டுகொண்டாயா
ஒற்றுமையின் பேரழகை.

*சுலீ. அனில் குமார்*


மழையின் மாட்சிதேன்கூடாய் முகில்கள் மாறியதென்ன!
தேனென மழைதான் மண்ணிலே வீழ்வதென்ன!
தேன்சிந்தும் வானுக்கு நன்றிசொல்ல தாவரங்கள் தலையாட்டி மகிழ்வதென்ன!
புத்தம்புது காட்சியாக உலகம் மாறுவதென்ன!
நீர்நிலைகள் மேனியெல்லாம் செழித்தே சுழித்தாடுவதென்ன!
மழைத்துளிகள் தீண்டுகையில் தேகம் சிலிர்ப்பதென்ன!
அச்சிலிர்ப்பாலே இதயங்கள் களிப்புறுவதென்ன!
மழைநீரில் தலைநீராடி புதுமெருகுக் கூடிய
தாவரங்கள் மழைக்காற்றோடு கைகோத்து ஆடுவதென்ன!
ஆனந்தமிகுதியால் பூப்பூவாய்ச் சிரிப்பதென்ன!
மழைமுகங் கண்ட உழவர்கள் ஆனந்தக் கூத்தாடுவதென்ன!
பசும்புல்லும் மழைநீரில் நீந்திமகிழ்வதென்ன!
தேனாக மழையது வழியவழிய சில்லென்ற குளிர்த்தென்றல்  எங்கும் நிறைவதென்ன!
ஆகா!
எல்லாமே மழையின் அற்புதமே! வான்சிந்தும் மழையின் மாட்சியே!

த.ஹேமாவதி
கோளூர்


மல்லிகைமல்லிகை,,, அந்த கண்ணன் மயங்கும்
மொட்டான மலரல்லவோ,,,

என் தோட்டத்தில் பல பூக்களில்
உன் போல் வாசம், யார் தந்ததோ!

மல்லிகை,,,
அந்த கண்ணன்
மயங்கும்
மொட்டான மலரல்லவோ!

ஓர் நாரிலே,,,
பல பூக்களாம்,,,
சேர்ந்திங்குதான்
தந்த மாலையல்லவோ!

என் நாடகம் உன் போலத்தான்
என் வாழ்விலே
நீ,
வாசம் தந்தது,,,

நீயும் வரத்தான்,,,
என்
கண்ணன் வரத்தான்,,
சொன்னாலும் தெரியாது உந்தன் மகிமை!

மல்லிகை,,, அந்த
கண்ணன் மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!

தேராயிரம்,,,,
என் ஊர் கோலத்தில்,,,,
இங்கு,
வேறு யாரு தான்
என்னை
பெண் பார்த்தது,,,

என் கண்ணன் மட்டும் தான்,,,
அவன்,
இல்லம் சொர்க்கம் தான்,,,
அதை
சொல்லாமல் நானே
தலையில்,
சூடிக் கொண்டது,,,

மல்லிகை,,, அந்த
கண்ணன்
மயங்கும்
மொட்டான
மலரல்லவோ!

பாலா,,,


நான் ஏன் பிறந்தேன்?வேளைக்கு உண்கிறேன்
உறங்கியும்  எழுகிறேன்
வேலைக்குச் செல்கிறேன்
வேதனை பொறுக்கிறேன்
என்றாலும் நானொரு கேள்வியைக் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கடனாய் வாங்கி பின் தவணையில் அடைக்கிறேன்
கடமைகள் பலவற்றை கடனுக்காய் செய்கிறேன்
அனைத்தையும் செய்தபின் என்னை நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

உறவுகள் புடைசூழ ஊரினில் வாழவும்
நட்புகள் பலருடன் நாள் சில கழிக்கவும்
நானும் தான் நினைக்கிறேன்
நாளும் தான் விழைகிறேன்
முடியாது போகையில் கேள்வி நான் கேட்கிறேன்
நான் ஏன் பிறந்தேன்?

கவலையோடு வாழ்க்கையை வாழ்வோரைக் காண்கையில்
கருணைக்காய் ஏங்கியே நிற்போரைப் பார்க்கையில்
கையேந்தி பிச்சைக்காய் செல்வோரைக் காண்கையில்
பல நேரம் கேட்டு நான் இருக்கிறேன் என்னையே
நான் ஏன் பிறந்தேன்?

படிக்காத மாணவரைப் படிக்கவைக்கும் வேளையில்
படித்தவன் வெற்றிபெற்று மகிழ்ச்சியோடு வருகையில்
ஏழைப் பெற்றோர்கள் சந்தோஷம் பார்க்கையில்
உணர்ந்து கொண்டேன் அறிந்து கொண்டேன் என் கேள்விக்கான பதிலை
'நான் ஏன் பிறந்தேன்?'

*சுலீ. அனில் குமார்


காணவில்லை

*சொர்க்கத்தின்
வெளியை
இன்னுங்கூடக்
காணவில்லை...

இன்றளவும் திறக்கப்படாத பூங்கதவுகள்....!

*பொன்.இரவீந்திரன்


Wednesday, 11 September 2019

கர்வங்கொள்கிறேனடி

நீ பேரழகிதான்...!
ஆயினும்
கர்வங்கொள்கிறேனடி 
உன்னை விடக்
கோடீசுவரன் நான் 
அன்பால்....!


*பொன்.இரவீந்திரன்*

மனம்.... மணம்..

வெந்து தணியும் 
காடாய்க்கிடக்கிறது
மனம்....!
எங்கிருந்தோ
மழை மணத்தைச்
சுமந்து புறப்படுகின்றன
உந்தன் விழிகள்...!

*பொன்.இரவீந்திரன்*

Monday, 9 September 2019

துளிர்த்தெழும் நினைவுகள்

எஞ்சிய மதுத்துளிகளில்
துளிர்த்தெழும்
உந்தன் நினைவுகளைச்
சுட்டுப்பொசுக்கப்
பற்ற வைத்த சிகரெட் 
அணைகிறதடி
காதலால் வழிந்த கண்ணீரால்

*பொன்.இரவீந்திரன்*

Featured post

இனியத் தமிழ் பயணம்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழோடு மூச்சு நிற்கும் வரை பயணிப்பது எத்தனை இன்பம் உலகில் உள்ள மொழிகளிலே அதிக எழுத்துகள் கொண...

POPULAR POSTS