Now Online

Thursday, 28 February 2019

வீடு


ஓடி உழைத்தவர் வாடிக் களைத்தபின் நாடிச்செல்லும் இடம் வீடு.


பெண்டு பிள்ளையுடன் உண்டு மகிழவும் 

கண்டு களிக்கவும் வீடு.


மூத்தோர் இருந்திடில் முத்தான வாழ்க்கையை தப்பாமல் அளித்திடும் வீடு.


கூட்டாக அனைவரும் கூடி மகிழ்ந்திடில் கோவிலாகும் அந்த வீடு.


எலிவளை என்றாலும் தனிவளை என்றால் 

அதிசுகம் அளிப்பது வீடு.


எல்லையில்லா இன்பம் என்றும் அளித்திடும் பல்கலை தான் நல்லவீடு.


கோபமும் தாபமும் இன்பமும் துன்பமும் 

கூடிநிற்கும் இடம் வீடு.


குற்றம் மறந்திடில் சுற்றம் தழைத்திடும் 

பூந்தோட்டம் தான் நல்லவீடு.


நினைவுகள் பலதையும் நினைவுபடுத்தியே நிற்பது தான் பலர் வீடு.


கனவுகள் கண்டதை நனவாக்கிப் பார்த்திட 

பணமாக மாறிடும் வீடு.


பலர் கனவாக இன்றும் வீடு.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

கடிவாளம்

மென்மையான நாவில் வன்மையான சொற்கள் பிறக்கும்போது நாகாக்க என்ற வள்ளுவனின் கடிவாளம் பூட்டுவோம்!

தீயவற்றைக் காணும்போதும்

பேசும்போதும்

கேட்கும்போதும்

காந்திமகானின் மூன்று குரங்குபொம்மைகள்

என்ற கடிவாளங்களைப் பூட்டிக்கொள்வோம்!

 மதுவென்ற போதையின் பாதையிலே செல்ல துடிக்கின்ற கால்களுக்கு மனக்கட்டுப்பாடு என்ற கடிவாளம் பூட்டுவோம்!

இயற்கையைச் சீரழிக்கும் செயல்களைச் செய்பவரைப் பார்த்தால் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் என்ற இரட்டைக்கடிவாளத்தைப் பூட்டுவோம்!

நாளைய நம் வாரிசுகள் நலமாய் வாழ

இப்போதே நீர்வளம் காத்திட குடிநீர்சிக்கனம் என்ற பொறுப்பான கடிவாளம் பூட்டுவோம்!


த.ஹேமாவதி

கோளூர்

ஆடும் வரை ஆட்டம்

ஆடும் வரை ஆட்டம்

நீ ஆடு

ஆடிக்கொண்டேயிரு


ஆடும் வரைதான் 

ஆட்டம்


ஆடுகளாய்

மக்கள்


*பொன்.இரவீந்திரன்*

அபினந்தன் வர்தமான்


வாழ்த்தப்படுபவன், போற்றப்படுபவன், புகழப்படுபவன், 

எத்தனை அர்த்தங்கள்,

அத்தனையும் சத்தியங்கள்.


தெரிந்து தான் வைத்தார்களா உனக்கு இந்தப் பெயரை?

புரிந்து தான் வைத்தார்களா உனக்கு இந்தப் பெயரை?


கொடூரமான படையின் நடுவிலே கூட

அடி பணியாத வீரம்.

எதிரியிடம் சிக்கியது தெரிந்தும் கூட

துணிந்து பேசும் தீரம்.

சித்திரவதையின் இடையிலே கூட 

நெஞ்சு நிமிர்த்தும் தைரியம்.

மாவீரன் பகத்சிங்கை பார்க்கிறேன் உன் வாக்கினில்,

வீரபாண்டிய கட்டபொம்மனை நினைக்கிறேன் இந்த வேளையில்,

அஞ்சாநெஞ்சன் வாஞ்சியை காண்கிறேன் உன் கண்களில்.


மீண்டுவா எங்கள் வீரமே,

மீண்டும் வா எங்கள் தீரனே

காத்திருக்கிறது தேசம் உனக்காக,

வேண்டிநிற்கிறது தேசம் உனக்காக.

அஞ்சாத நெஞ்சனைப் பார்க்காத வரையில் துஞ்சாது எங்கள் நெஞ்சம்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

Wednesday, 27 February 2019

ஓடுவது நேரமா, கடப்பது நாமா!

"வாலிப வயதிற்கு"


தடைகளும் தேவை தடுமாற்றம் குறைய, 


நிறுத்தமும் வேண்டும் நிதானம்கொள்ள.


எதிரிகளும் வேண்டும் ஏனைய பலம் பெற.


பழிசொல்லும் வேண்டும் பண்போடு வாழ.


வேகமும் வேண்டும் விவேகமாய் செயல்பட.


எளிதில் முடிவதல்ல எதுவும், 

பெருமைதான் பொக்கிஷம், எடுத்த எல்லையை எட்டும் வரை.


ஓடுவது நேரமா, கடப்பது நாமா!

காலை மாசிலா வணக்கம்


மாசிலா நீர் அமுதாகும்!

மாசிலா நிலம் 

சொர்க்கமாகும்!

மாசிலா காற்று

உயிர்சக்தியாகும்!

மாசிலா ஆகாயம்

நல்லமழையாகும்!

மாசிலா தழல்

ஆக்கசக்தியாகும்!

இயற்கையே

இப்படியெனில்

மனிதா கேள்!

மனத்துக்கண் நீ

மாசிலன் எனில் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவாய்!

என வள்ளுவர் இயம்புகிறார்!

தீய எண்ணங்களைக் களைந்து எவ்வொரு மாசும் இல்லாத மனதோடு இருந்தால்

அகம் ஒளிரும்!

அதன் தொடர்ச்சியாய் முகம் ஒளிரும்!அதனோடு சேர்ந்து

சொல்லும் சொற்கள் குளிரும்!

கரங்கள் நல்லதே செய்யும்!

இந்த நிலையில் நீ மற்றவர்க்கு சொல்லும் வணக்கம் ஆகிடுமே

*மாசிலா வணக்கம்*

இவ்வணக்கத்தால் உனது நல்லெண்ணம் மற்றவர்க்கும் கடந்துப் போகும்!

கடவுச்சீட்டாய் வணக்கம் நல்லதைக் கடக்கும்!

அனைவருக்கும் இனிய *காலை மாசிலா வணக்கம்*


த.ஹேமாவதி

கோளூர்

தரிசு நிலம்

வளர்ப்பு முறை

சரியென்றால்

வளரும் 

பயிரும்

சரியாய் வளரும்

சரியில்லையானால்

தரிசு நிலமாய்

பயன்படாமல்

கிடக்கும்..


தலைமுறை

சரியான 

ஒழுக்கம்

இல்லையென்றால்

வரும் தலைமுறையும்

தரிக்கெட்டுதிரியும்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

சுகம் - 4


முக்கடலும் வந்து ஒன்றாய்ச் சேர்ந்து

முத்தமிழை நம் நினைவில் கொணர்ந்து

தாய் தவம் புரியும் குமரிக்கரையில்

ஆதவன் உதிப்பதை மறைவதைக்கண்டு

கடல்நீரில் குளித்து மகிழ்வது சுகமே.


கதிரவன் அளித்த ஒளியினை ஏற்று

இரவினில் அதனை அள்ளியே அளித்து

கவிஞர்கள் கவிதையின் கருவாய் இருந்து

கொடைவள்ளல் தானென்று  பெருமையுடன் சிரிக்கும்

நிலவவள் அழகினில் மயங்குதல் சுகமே.


வெண்ணிலா அழகினை வெகுவாக இரசித்து 

பெண் நிலா அவளையும் அதனுடன் இணைத்து

உயர்ந்தது எதுவென கேள்வியைத் தொடுத்து

வெட்கத்தால் அவள் முகம் கைகளால் மறைத்து

விரல்களை விரித்தவள் பார்ப்பது சுகமே.


இணைகளின் காதலை வாழ்த்தவே நினைத்து

இதமான இசையுடன் தழுவியே சென்று

இருவரின் இடையினில் நயமாய்ப் புகுந்து

மிதமான குளிர்ச்சியை அளித்திடும் தென்றலின்

சுகமான தாலாட்டில் சிலிர்த்தலும் சுகமே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

விழுதுகள்


ஓர் மரம் விழுந்து விழுந்து விழுதுகளை உருவாக்குவது

தன்னை காக்க அல்ல 

தன் கிளைகளை தாங்கிப் பிடிக்கவே

அதுபோல் பெற்றோரும் தம் பிள்ளைகளை விழுதுகளாய் உருவாக்குவது

தன்னைக் காக்க அல்ல

இந்த நாட்டை தாங்கிப் பிடிக்கவும்

உடன் பிறந்தோரை தாங்கிப் பிடிக்கவும்

உண்மையை தாங்கிப் பிடிக்கவும்

நேர்மையை தாங்கி பிடிக்கவும்

அன்பை தாங்கி பிடிக்கவும்

தள்ளாத வயதில் தடுமாறும் முதியோர்களை தாங்கிப் பிடிக்கவும்

வறுமையில் வாடுவோரின் வாட்டம் போக்கவும்

அனிதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டவுமே 

தம் பிள்ளைகளை  விழுதுகளாய் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்


தி.பத்மாசினி

Tuesday, 26 February 2019

எல்லாம் கடந்து போ

ஆக மொத்தம்

அவன் எதிரி

எதிரியேதான்

அப்படித்தான் 

ஆக்கப்பட்டிருக்கிறான்

அவன்


நதி மூலம் 

ரிஷி மூலம் 

அறியாது

கடந்து போ


இவற்றையும்

இவர்களையும் 

கடந்து போ

போ

போ

எல்லாம் கடந்து போ


*பொன்.இரவீந்திரன்*

அழகு எது? பேரழகு எது?தனிமனித ஒழுக்கமே அழகு.
தனிமனித ஒழுக்கத்தை பத்துபேர்
போற்றினால் பேரழகு.

தனிமனித ஒழுக்கமின்றி
தடம்பெயர்ந்தால் அவமானம்.
தனிமனிதஒழுக்கமின்றி
தடம்பெயர்ந்தோரை
புகழ்ந்தேற்றுவோருக்கு பேரவமானம்.

நன்மைக்குத்  துதிபாடு
நன்மையே விளையும்.
தீமைக்குத் துதிபாடினால்
திருப்பி திருப்பி அடிக்கும்.

குற்றம் செய்வோரைவிட
குற்றம் செய்வது தெரிந்தும்
புகழ்ந்தேற்றுவோரே
கொடூரமான குற்றவாளிகள் ஆவர்.
தீமைக்குத் தூபமிடும் துதிபாடுவோராலே
உலகம் தீமையானதாக மாறுகிறது.

குற்றம்குறைகளைச் சுட்டிக்காட்டும்
மனிதர் எவரோ
தப்பிற்குத் துணைபோகமாட்டார்.

குற்றங்குறையெனத் தெரிந்தும்
கண்டும்காணாததைப்போல
செல்வோரிடம்
எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அழகும் பேரழகும்
தனிமனித ஒழுக்கமே
நிர்ணயம் செய்கிறது.
அக அழகுதானென
அழகேயென ஆராதிப்பது அழகல்ல.

தனிமனித ஒழுக்கத்திற்கு
எதிராக நடப்பின்
சந்ததியினரையே சபித்திடும்.

அறம்
பொருள்
இன்பநெறிகளின்படி
அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்தால்
பேரழகு எனும்
மணிமகுடம் தானாகவே வரும்.

இப்போது உரைக்கிறேன்.
அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
பேரழகே உன்னை நேசிக்கிறேன்.

இவண்
என்றும் தமிழோடு
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1


நான் நீ காதல் -சங்கரி


     பார்த்த பொழுது
மனதில் பட்டாம்பூச்சி
சில்லென்று உணர்வு
ஏதோ செய்யும்

வார்த்தை தந்தியடிக்கும்

அருகில் இருந்தால்
ஆரவாரம் செய்யும்
மனது
பிரியும் போது
ஊமையாய் அழும்

பார்வையில் பாசம்
தொடுதலில் நேசம்
பற்றலில் நெகிழ்வு
மனது மட்டுமே
அறியும் உறவு
நம் காதல்


தோழமைநட்பு நந்தவனத்தின்
வேர் அன்பு
மனங்களின் சங்கமம்
சுமைதாங்கியாய்
வருத்தத்தில் துயர்
துடைக்கும் ஒரு விரல்
என்னை மீட்டெடுக்கும்
ஆறுதலாய் தலை  கோதும் தாய்
மடி சாய்க்கும் அன்னையாய்
கை பிடித்து
மவுனமாய் உன் மனம்
தரும் ஆறுதல்
என்னை ஆளுகின்ற
தோழமையே
பிறவி தோறும்
தொடர வேண்டும்.அம்பை சங்கரி


நீ....நான்.....காதல். - ஹேமாவதி


நீ

நான் யார்

என்பதையே

மறக்கச் செய்தவள்!


நான்

உன்னையே

சுற்றிவர நினைப்பவன்


காதல்

நம்மை வீழ்த்திய 

போர்க்களம்!

உன் விழிவாளிடம்

நான் தோற்பதும்

என்னை உன்

காலின்பெருவிரலால்

மணலில்  காவியமெழுதி வெல்வதும்

நம் காதலில் இருவருமே தோற்பதில் வெற்றி

காண்பதில் மகிழ்வெய்துவோம்!


த.ஹேமாவதி

கோளூர்

Monday, 25 February 2019

நீ.. நான்..காதல் அனில் குமார்நீ நீயாக நின்று

நான் நானாக நின்று

உன் கண்ணில் நான் எனைப் பார்த்து

என் மனதில் நீ உனை உணர்ந்து 

காதல் அதை நாமாக மாற்றி

நீ நானாக மாறி 

நான் நீயாக அன்று

நின்றதை நினைக்கின்றேன் இன்று.


நீ நீங்களாக அங்கே

நான் நாங்களாக இங்கே

சில நினைவு நீங்கலாக இன்றும்

பல நினைவு மங்கலாக என்றும்

நம் காதல் மட்டும் உயிரோடு எங்கும்

நினைவலையின் அதிர்வலையாய் இன்றும்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*


தூய மனமும், தொடரும் குணமும்,,,,


மணக்கும் என்பார் மணக்காது,,,

மணக்காது என்பார் மணந்து விடும்,,,

துவைக்கும் என்பார் துவைக்காது, துவைக்காது என்பார் 

துவைத்து விடும்,,,,


நிரந்தரமான வார்த்தைகள் இங்கே வருவது யார் கண்டார்,,,,

அது, 

தன் நிலைக்கு ஏற்ற வகையில்

வருவது 

தன் 

மனத்தினால் 

தான் என்றார்,,,,


கேட்டது 

ஒன்று, 

கிடைத்தது 

ஒன்று

கிடைத்ததில்

ஒன்றும் 

இல்லை, கேள்விகள் 

ஆயிரம் 

கேட்டிட 

மனமும்

இருந்தும்

கேட்கவில்லை,,,


கேள்வியின்

பதிலை 

ஏற்றுக் கொண்டால் பிரிவினை ஏதுமில்லை,,,

கேட்பவர் 

உள்ளம் 

கொண்டவர்

உறவிலும், 

என்றும்

நிரந்தரத்

தோல்வி 

இல்லை,,,


ஆவது பாதி,

போவது மீதி,

இருப்பது பாதி என்றார்,,,

பாதியில் பாதியாய் 

இருந்து விட

பாவம் 

மறையும் 

என்றார்,,, 

அவரவர்

சாபமும் 

குறையும் 

என்றார்,,,


சேவைகள் 

ஆயிரம் இருந்தாலும் தேடிடு வாசல் என்றார்,,,

அந்த தேவனை நாடி சென்றதுமே

வாசனை கோடி தந்தான்,,,,,

மணக்கும் வாசனை தேடித்

தந்தான்,,,


கந்தையான உடலுடன்

செல்ல 

கவலைகள் கலைந்து 

விட்டான் ,,,,

அங்கே

மந்திரம் கேட்க மனத்தினில் அழுக்கை துவைத்தும் 

தந்து விட்டான்,

இறைவன்

துவைத்தும் தந்து விட்டான்,,,,


மணத்தை பெற்றவன்

மணந்து 

விட்டான்,,,

குணத்தைக் 

கண்டவன்

துவைத்து 

கொன்டான்,,,

இருப்பதில்

ஒருவன் 

இருந்து 

விட்டால்,,,

இரண்டில்,

விதிப்படி

ஒன்றை 

கற்றுக்

கொள்வான்,,,,,


பாலா

தமிழே நீ


தமிழே நீ

சொல்லிலே

காவியமாய் இருக்கிறாய்!

கல்லிலே

சிற்பமாய்

வாழ்கிறாய்!

வில்லிலே

வீரமாய்

பிறக்கிறாய்!

பாலிலே

முப்பாலாய்ச்

சுவைக்கிறாய்!

நிலத்திலே நானிலமாய்த்

திகழ்கிறாய்!

கலத்திலே

யாப்பருங்கலமாய்

வீற்றிருக்கிறாய்!

அலங்காரத்திலே

தண்டியலங்காரமாய்

அழகுகாட்டுகிறாய்!

அணியிலே

தேம்பாவணியாய்

வாடாமல் இருக்கிறாய்!

மணியிலே சீவகசிந்தாமணியாய்

ஒளிவீசுகிறாய்!

இசையில்

சிலப்பதிகாரமாய்

கொஞ்சுகிறாய்!

இனிமையில்

நறுந்தேனை விஞ்சுகிறாய்!

கனியிலே முக்கனியாய்ச் சுவைக்கிறாய்!

மலையிலே

பொதிகையாய் நிற்கிறாய்!

அலையிலே

கவிதையாய்ப்

பெருகுகிறாய்!

பெண்களிடம்

நால்குணமாய்

உறைந்திருக்கிறாய்!

ஆண்களிடம்

புறமுதுகு காட்டாத

வீரமாய் நிறைந்திருக்கிறாய்!

குழந்தைகளிடம்

யாழாய் குழலாய்

இனித்திருக்கிறாய்!

விரல்களிலே

ஓவியமாய் வெளிப்படுகிறாய்!

நாதசுரத்திலே

மனதை உருக்கும்

இசையாய்ப் பிறக்கிறாய்!

அணியும் உடையிலே

வேட்டியாய் சேலையாய் வலம்வருகிறாய்!

உணவிலே

அரிசிச் சோறாய்

வயிற்றை நிறைக்கிறாய்!

காதலிலே

விழியோரம்தங்கி

ஓய்வெடுத்துக்

கொள்கிறாய்!

மறுகணமே நாணத்தால் காதலுக்குச் சுவையூட்டுகிறாய்!

திருமணத்தில்

நலுங்குப் பாட்டாக

மணக்கிறாய்!

குழந்தைப்பேறு காலத்திலே

தாலாட்டாய்ப் பிள்ளைகளை வளர்க்கிறாய்!

காளையர்கள் கையிலே

வேலாய் சிலம்பாய்

சுழல்கிறாய்!

கன்னியர்கள்

கரங்களிலே

கோலமாய் இழைகிறாய்!

முதியோர்கள் நாவிலே

பழமொழிகளாய்ப்

பிறக்கிறாய்!

உழவிலே

நடவுப்பாட்டாய்

ஏற்றப்பாட்டாய்

வாழ்கிறாய்!

ஆடற்கலையிலே

பரதமாய்ச் சதங்கையொலிக்கிறாய்!

பூவிலே

தொண்ணூற்றாறாய்

மலர்கிறாய்!

எண்களிலே

எல்லையாய் நிற்கிறாய்!

இறுதியில் உயிர்நீங்கிய பின்னும் ஒப்பாரியாய் உடன்வருகிறாய்!

மொழிகளிலே

அன்னையாய்த் திகழ்கிறாய்!

இவ்வாறாய்

உயிரிலும் ஊணிலும் கலந்திருக்கும்

தமிழே உன்னை

என் உயிரென்றேன்!

இதுசரிதானே என்கண்ணே!


த.ஹேமாவதி

கோளூர்

நேர்வழியே நிரந்தரம்.நிரந்தரம் என்பது பொய்யடா

பல நிகழ்வில் கண்டது நானடா,,,

தலை முதல் 

கால் வரை 

நான் என்பார்,

தரணியில் என் போல் யார் என்பார்,,,

பலர்

உரிமையை, சிறுமையில் மறந்திடுவார்,,,

உலகம் தெரியா உத்தமராய்,,,,

தம்பி!

கனவிலும் நினைத்திடு மானிடத்தை,,.

அது நிறைத்திடும் உந்தன் 

வெற்றிடத்தை,,,

நினைவில் வைத்துக் கொள்ளடா,,,

தம்பி,

என்றும்

நேர்வழியில்

நீ, 

செல்லடா,,,,


பாலா


வீடு - வத்சலா

🏠 🏠


தெருவுக்கே

அடையாளம் அந்த வீடு!

நீட்டோட்டு வீடென்பர்

திசைகாட்டும் கருவியாய்

திட்டமாய் அமைந்த வீடு !

சமயம்புரத்தம்மன கோவிலா

நீட்டோட்டுவீட்டுக்கு

                        மேற்கால!

தபாலாபிஸா நீட்டோட்டு

            வீட்டுக்குதெக்கால!

பெரியங்காடியா நீட்டோட்டு

           வீட்டுக்குகெழக்கால!

முருகன்டாக்கீஸாநீட்டோட்

       வீட்டுக்கு வடக்கால

என அனைந்துக்கும் மத்தியி

அமைந்த அழகான வீடு

ஆறபடி ஏறினால் ஆளுயரக்

தேக்குக்கதவு வெண்கல

யாளி கைப்பிடியுடன்

கனமாய்க் கனக்கும்!

கதவுக்கு உட்புறம் பித்தளை

நாதாங்கி இருவடசங்கிலி

நாவசைத்து ஒளிரும்!

திரை விரியும்காட்சியாய்....

புத்துலகம் தெரியும் 

நடுவாகமிகநீண்டதாழ்வாரம்

இருமருங்கிலும் நவ நவமாய்

பிரிவீடுகள் மனத்தளவில்

பிரிவினையில்லா வீடுகள்!

தமிழோடு தெலுங்கு, உருது,

மலையாளம,கன்னடம்இந்தி

மராத்தி,ஆங்கிலம்,பஞ்சாபி

என நவமொழிச்சங்கமத்துட

நான்கு சமயம் சேர்ந்த

கூடல் மா வீடு அது!

வீட்டுக்குள்அடிதடி நடந்தது

இல்லை ஆனால் அடிக்கடி

திருவிழாச்சந்தடிகளால் சந்தோஷஅலையடிக்கும்!

யாருக்குமில்லைசிடுசிடுப்பு!

மூத்தோருக்கு உண்டு

                         வரவேற்பு!

யாதும்ஊரே யாவரும்கேளிர்

எனும் உண்மைக்குதாரணம்

பதினெட்டுப்படிகள் அங்கு

தூண்களாய் மாறிய அதிசய

அரங்கம் அவ்வீடு!

மாதம்பிறந்து பத்தாம் நாள்

மட்டுமே என் பாட்டி வீட்டுக்காரம்மாவாய்

வாடகைசேகரிக்க அவதாரமெடுப்பார்! 

மற்ற நேரத்தில் அவர்

ஜீவாம்மா தான்!

களைகட்டும் பொங்கல் !ஜொலிக்கும் தீபாவளிகள்!

நாவூறும் கிறிஸ்துமஸ்கள்!

மணமணக்கும் ரம்ஜான்கள்!

ஆண்டுவிழாக்கள்!

பிறந்த நாள் !மறைந்தநாள்!

என அனைத்தையும்

ஒருங்கே உணர்ந்த வீடு  !காற்று கரைத்தகற்சிலையா

காலம் கரைத்தது அந்த

                      உறவுகளை!!

அந்த வீடு என் தாயகம்!

அந்த வானே என் தாய்முகம்!

ஏனெனில் அதன் பெயரே

“குட்டி பாரதவிலாசம்”!!!!

இந்த எண்ணஅலைகளோடு

தேடிச்சென்றேன் வழியறியா

குழந்தையாய்திணறினேன்!

பாரதவிலாசம் அங்கே

விலாசம் மாறி நிற்க !ஆத்ம

விசாரத்துடன் கண்கலங்க 

நின்றேன் !நினைவுகள்

மட்டும் துணையாக !


🌹🌹வத்சலா🌹🌹

வீடு - ஹேமாவதி

ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக

உயிரினங்கள் நாடுவது வீடு!

ஓரறிவு தாவரங்களுக்கு

மண்ணே வீடு!

ஈரறிவு மீனினங்களுக்கு

நீரே வீடு!

மூவறிவு ஊர்வனவற்றுக்கு

மண்புற்றே வீடு!

நாலறிவு பறவைக்கு அவைகட்டும் கூடே வீடு!

ஐந்தறிவு விலங்குகட்கு காடுதான் பெரும்வீடு!

ஆறறிவு மனிதனுக்கு கல்லாலும் மண்ணாலும் விதவிதமாய் வீடு!

ஆனாலும் எவ்விதமாய் இருந்தாலும் வீடென்பது வீடாக இருக்கவேண்டுமெனில்

அங்குள்ளோர் மனங்களில் அன்பு தழைத்திருக்க வேண்டும்!


த.ஹேமாவதி

கோளூர்

வீடு _ பத்மாசினி


கல்லாலும் மண்ணாலும்

கட்டியது வீடாகாது

அது குட்டிச் சுவர்

நான்கு சுவர்களுக்குள் அன்பான ஒரு கூடு

அதைக் காப்பதோ தந்தையின் பாடு


அன்பு என்ற கல்லை அடுக்கி

நேசம் என்ற கலவை சேர்த்து

பாசம் என்ற நீரை ஊற்றி

கட்டும் வீடே சிறந்த வீடாகும்


வீட்டிற்கு வெள்ளையடித்தால் போதாது

மனதில் இருக்கும் தீய எண்ணங்களை விரட்டியடித்து

வந்தாரை இன்முகத்துடன் வரவேற்று

உபசரித்து ஊணும் அளித்து

தங்க இடமும் தந்து

காக்கும் நல்ல மனையாள் உள்ள வீடே 

சிறந்த வீடாகும்


தி.பத்மாசினி

மனிதா.. கொஞ்சம் மனிதம் தா..


உயிரோடு வாழும் மனிதப்பிறவிகளே, கொஞ்சம் செவிமடித்து கேளுங்களே..

வாழும் தருணம் மிகக்குறைவே சொற்ப காசுக்கும் சொற்ப வாழ்வுக்கும் வஞ்சனை செய்யாதே

அற்பமாய் ஆகிவிடும்

ஆயுளும் போய்விடும்..


மனித மனம் அன்பின் இருப்பிடம்

அதை ஆறா ரணமாய்

ஆக்கிவிடாதே..


அக்கரையும் இரக்கமும்

மனித குலத்தின் இரு அங்கம்

அதை ஈனச்செயலால்

அசிங்கமாக்காதே

வாழ்வை தொலைக்காதே

அடுத்தப்பிறவியில்

அக்கரையோடு வாழ்வதைவிட

இப்பிறவியில் இரக்கத்தோடு வாழ்

மனிதனே கொஞ்சம்

திருந்து

அதுதான் மனிதத்திற்கு

மருந்து..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

மெய்க்கும் பொய்க்குமிடையில்

அவனைப்

போலவேயிருக்கிறான்

அவனா

இல்லையா

சரியாய்த்தெரியவில்லை


அவனாகவோ

அவனல்லாத

வேறொருவனாகவோ

இருக்கலாம்


மெய்க்கும்

பொய்க்குமிடையில்

ஆல்கஹாலோடு

அடுத்தடுத்துப்

பற்றியெரிகிறது

வெண்குழல்


*பொன்.இரவீந்திரன்*

Saturday, 23 February 2019

புரிதல் இல்லா சமூகம்


                       

சிறிய பதவி முதல்
அதிகாரமாய்
ஆணவமாய்
மிரட்டி
பணம் பறிமுதல்
கடைநிலை முதல்
உயர்நிலை !!!!!


பணம் கட்டு கட்டாய்
நிலம் ஊர் ஊராய்
நாடு நாடாய்
அணிகலன் அறை அறையாய்

இன்னும் தீரவில்லை
ஆசை
தணியவில்லை அதிகார போதை


மனிதனுக்கு
அளவு உணவு
ஒரு தட்டில் உண்டு
ஒரு அறையில்
நம் வாழ்வு

அதற்கு மேல்?பணம் பதவி
உயிரெடுக்கும்
ஆயுதமாய்
மாறும்.!!!!

அளவான வளம்
சுற்றமோடு
மகிழ்வான
வாழ்வு
இதுவே
நிரந்தரம்


இப் புரிதல்
என்று
எப்போது
மலரும்
என் தாயகத்தில்.?அம்பை சங்கரி


கடவுச்சொல்லாய் உன் பெயர்

யாருமறியாவொரு கடவுச்சொல்லென

ஒளிந்திருக்கும் 

உன் பெயரைக் 

காலமறியும்


காலனின் மடியில்

நான் வீழ்கையில்

நீர் மாலையோடு

நீ வருகையில்

ஊருமறியும்


எவரறிந்தாலென்ன

அறியா விட்டாலென்ன


நீ

யாருடனோ

நான் 

யாருடனோ


*பொன்.இரவீந்திரன்*

மழலை


மனிதத் தோட்டத்தின் புத்தம்புது மலர்!

கவலையைப் போக்கிடும் இசைக்கருவி!

ஈரினங்கள் இணைந்து தீட்டிய

ஓரின ஓவியம்!

கால்கொண்டு நடக்கும் இன்பக்காவியம்!

கைகால் முளைத்த

தித்திக்கும் செங்கரும்பு!

மூழ்காமல் பெற்றெடுத்த வலம்புரிமுத்து!

வீட்டைக் கோயிலாக்க வந்த 

தெய்வக்கொழுந்து!

ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து முத்தமிட எண்ணவைக்கும்

தங்கநிலவு! 

கைகளேந்தி மகிழும் மலர்க்குவியல்!

மடியில் தவழும்

வானிலவு!


த.ஹேமாவதி

கோளூர்

சுகம் - 3

கொள்கை தான் உயிரென்ற பிம்பத்தை உயர்த்தி

கொள்ளை தான் கொள்கை என்ற எண்ணத்தை மறைத்து

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி

தகிடுதத்தம் புரிகின்ற தரங்கெட்ட அரசியலை கோபம் கொள்ளாமல் இரசிப்பதும் சுகமே.


வருவேன் நான் என்ற நம்பிக்கை கொடுத்து

வருவானா இவன் என்ற சந்தேகம் கொடுத்து

வந்தாலும் வரலாம் என்று எண்ணவும் வைத்து

வராமல் இருக்கவேண்டும் என்று நினைக்கவும் வைத்து

வந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்வதும் சுகமே.


இன்றைய நிலையை நேரினில் கண்டு

அன்றைய நிலையை நினைவினில் கொண்டு

தகுந்தவன் தானா என்று சந்தேகப் பட்டு

தகுதி என்ன இருக்கிறது என்று கேள்வியைக்கேட்டு

தகுதியை யார் பார்க்கிறார்கள் என்ற புரிதலும் சுகமே.


தனிமையாய் இருப்பதை சாதகமாய் எடுத்து

சோகங்கள் நிறைந்த திரைப்படம் பார்த்து

நாயகன் நிலையில் தன்னையும் வைத்து

தன்சோகம் தனையே அதனுடன் இணைத்து

தனிமையில் அழுது தீர்ப்பதும் சுகமே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

தனிமையே துணை

மாற்றுதினாளியும்

தனிமையும்


தாங்க முடியா வேதனையை

தங்க நகை புன்னகையால்

தவிர்த்ததுண்டு

பிறருக்குமட்டும்..


இன்பமாய்

தோற்றம் கொண்டு

துடிக்கிதே ஒவ்வொரு நாளையும் கண்டு

தனிமைதான் எனது துணையோயென

அழைத்தபோது

தனிமையும் தயங்கி நின்றது

தனிமை சில காலம்தான் 

இனிக்குமே 

நீ 

எப்போதும் 

என்னுடன் இருக்கிறாயேயென்று

என்னையும் நிராகரித்தது

தனிமை..


யாரை துணைக்கழைத்தாலும்

நம்மோடு 

இருப்தில்லை உயிரானவர்கள் ஒருபோதும் கடைசி வரை துணையாய் இருப்பதில்லை..


கடைசி வரையும்

சுவர்களும் என்னைத்தாங்கும்

ஊன்றுகோலும்

என் 

தனிமையைப்

போக்கவும்

என் 

வலியை நீக்கவும்

உயிற்ற ஜடமாக இருந்தாலும்

உயிரான என் 

உயிராய்

தாங்கும் உறவே 

உன் 

உள்ளத்தில்

ஊனமில்லை

அதனால் நானுனக்குப் பாரமில்லை

இனி எவரும் தேவையில்லை..


மாற்றுத்திறனாளியின்

வாழ்க்கைக்கு மறுபிறவி ஊன்றுகோலே

உறுதுணையாய்

இப்பிறவியில்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

புன்னகை

புன்னகைக்கும் பொன்னகைக்கும்

ஓரெழுத்தே வித்தியாசம்

அது தரும் ஆனந்தமோ ஆகாசம்


புன்னகையை

அடகு வைக்கவும் மமுடியாது

அடக்கி வைக்கவும் முடியாது

தன்னை உடையவரையும் எதிரில் இருப்போரையும் 

மகிழ்ச்சியில் ஆழ்த்தும்


கொள்ளையர்கள் திருட வந்தாலும்

தன்னை ஒளித்துக் கொண்டு

மீண்டும் வெளியே வரும்


முகம் என்னும் தேசத்தில்

நாம் புன்னகை என்னும்

வீட்டில் குடி இருந்தால்

பலரும் நம்மை நாடிடுவார்


புன்னகை என்றும் மலிவானது

மலிவாய் இருப்பதால் கிடைப்பது சுலபமல்ல

அதன் விலையோ சிறு அன்பு


புன்னகை

 எதிரியை அடக்கிவிடும்

பகைவனை காட்டிக் கொடுத்துவிடும்

பொல்லாங்கனை துரத்திவிடும்


மொட்டுக்கள் மலர மறந்தாலும்

மலர்கள் வாசம் வீச மறந்தாலும்

நாம் புன்னகை செய்ய மறக்காதிருப்போம்


தி.பத்மாசினி

மாறாத நினைவில்


அழகான 

நாளும், அதற்கேற்ற நினைவும்,,,,. புனிதமான பிறப்பில், புரிந்திட்ட 

நட்பாய்,,,

அமைவது 

அரிது,

அமைந்தவர்

அறிவார்,,,

ஒன்றோடு 

ஒன்று 

காணாத 

போதும்

கண்டு, 

சேர்ந்தது 

போல் 

பேசுகின்ற வார்த்தை என்னன்று சொல்ல? 

அதில்,

சூதுமில்லை

வாதுமில்லை

ஏதும், 

சிறு சூட்சமுமில்லை,,,,

முன்பொரு பிறவியில்

விடுபட்ட

வரிகள்,,, 

இன்று 

மனம் 

சேர்ந்திட்ட போது கண்

காணாமலும்,

மனம்

தூங்காமலும்

துரத்துகிறது,,,

மாறுபட்ட 

உடலை 

காண்!

இன்றும்

மாறத மனத்துடன் நாம்.,,,,,

உடல் மாறிப்போச்சு

நம் 

உள்ளம்

மாறாத 

போதும்,,,

அதனால் 

நித்தமும்

என் 

நினைவில்

நீ,

உன்

நினைவில்

நான்,,,,✍🏻


பாலா

நிறம் மாறும் மழை

மரம்

இலைகள்

கிளைகள்

பூக்கள்


எல்லாம் 

எல்லாம் அசைக்கும்காற்றின் இதழ்களில் 


மெல்லிய முத்தங்களைப்

பரிமாறியபடியே

மண்ணுள் மரித்து

நிறம் மாறும் மழை 


*பொன்.இரவீந்திரன்*

Friday, 22 February 2019

காலை முக நல்லிணக்க வணக்கம்

உன்முகம்

என்முகம்

அவன்முகம்

அவள்முகம்

அவர்கள் முகம்

என எத்தனை எத்தனை முகங்கள்!

மானிடப் பேராழியின் துளிகளாய் மனிதமுகங்கள்!

பழகிய முகங்கள்!

பழகாத முகங்கள்!

எந்தமுகமாயிருந்தாலும்

எம்முகம் கண்டாலும் புன்னகைப்போம்!

பாராமுகம் தவிர்ப்போம்!

விழிமுகத்தில் அன்பைக் காட்டி

விழிகாணும் முகத்திற்கு வணக்கம் நவில்வோம்!ஆம்

நாம் காணும் முகங்களுக்குப் பேதங்கள் இல்லாது

வணக்கம் சொல்வோம்! மன இறுக்கம் தவிர்ப்போம்!அன்பு நெருக்கம் வளர்ப்போம்!அனைவருக்கும் இனிய *காலை முகநல்லிணக்க வணக்கம்*


த.ஹேமாவதி

கோளூர்

தேர்வு
கற்றலின் வெளிப்பாடாய்
ஆழ்ந்த கற்றலின்
புரிதலாய்
தெளிவான கற்றலின்
தெரிவிப்பாய்

இயல்பாய்

ஒர்
மதிப்பீடு
தேர்வு

ஆரம்ப கல்வி அமர்களமாய்
அமைய
இயற்கை எழில்
கட்டமைப்பு
அடிப்படை வசதி
செயல்பாட்டு கல்வி
வகுப்புக்கு ஓர்
ஆசிரியர்
ஆய்வு மனப்பான்மை
விதைக்கும் கல்வி
தானே கற்றலை
தூண்டும் விதமாய்
கல்வி அமைய வேண்டும்.வருங்கால சிற்பிகளை
கனவுகளை
மலர செய்வதாய்

தேர்வு

மிரட்ட அல்ல!


Wednesday, 20 February 2019

அறியாத வயது - ஹேமாவதிஎல்லாம் அறிந்துவிட்டேன் என்றநிலை எப்போதும் எனக்கில்லை!

ஆனாலும் ஏதும் அறியாத வயதிலே

நானிருந்த நாட்களைத் திரும்பதிரும்ப நினைத்துப் பேரானந்தங் கொள்வேன்!

புத்தகத்தின் தாள்களுக்கிடையே

மயிலிறகை வைத்துவிட்டு குட்டியெப்போது போடும்?என எதிர்பார்த்ததும்

பொம்மையின் தலைமுடியில் வளரும் என்ற நம்பிக்கையில் தேங்காயெண்ணெய்த் தடவிவாரியதும்

கொக்குகள் பறப்பதைப் பார்த்தால் துள்ளிமகிழ்ந்து

கொக்கொக் பாலாடை பாடியதும்

ஆவென வாய்ப்பிளந்து

பாட்டி சொல்லும் பாலநாகம்மா கதையைக் கேட்டதும்

இரவு 12 மணிக்கு பேய்கள் நடமாடும்

என்றஞ்சியதும்

தாத்தாவிடம் மிட்டாய்வாங்க காசு கேட்டு வாங்கியதும்

தாமஸ்தாத்தா கடைக்கு ஓடிச்சென்றதும்

விழுந்த பல்லை யாருக்கும் தெரியாமல் மண்தோண்டிப் புதைத்து அது செடியாய் வளரும் எனநம்பியதும்

காட்டுக் களாக்காய்

வாங்கித் தின்கையில் அதன்விதையை நீளவாக்கில் பிளந்து பாஸா? பெயிலா? பார்த்ததும்

வீட்டிற்குப் புதியவர்கள் வந்தால் ஓடோடிச் சென்று அம்மாவின் முந்தானைக்குப் பின் நின்று கொண்டதும்

தப்பு செய்துவிட்டால் சாமி கண்ணை குத்திவிடும் என்றஞ்சியதும்

தீபாவளியின்போது

விடியலிலே எழுந்தால் நரகாசுரன் சாகும்போது அவன் ஓலமிடும் சத்தம் கேட்குமென என்அண்ணன் சொன்னதை நம்பியதும்

கடலுக்குள் சென்றால் நாகலோகம் இருக்குமென என்பாட்டி சொன்னதை நம்பி கடலுக்குள் செல்ல ஆசைபட்டதும்

தென்னையின் குரும்பைகளை உடைத்தால் உள்ளே குட்டியாக தேங்காயும் நீரும் இருக்குமென நம்பி ஏமாந்ததும்

இருட்டிலே பேய் ஒளிந்திருக்கும் என்றஞ்சி வீட்டுக்குள்ளே இருந்ததும்

மழைக்காலத்தில் இடிச்சத்தம் கேட்கையில் பீமனும் துரியோதனனும் சண்டையிடுகிறார்களென்று நம்பியதும்

பேசுகையில் திக்கியதால் தோழிகளின் கேலிகேட்டு மனம்வருந்தி கூழாங்கல்லை வாயில்போட்டுச் சப்பினால் திக்காமல் பேச்சுவரும் எனநம்பியதும்

என்அப்பாதான் உலகிலேயே  வலிமையான அழகான அறிவான  அப்பா என நினைத்துநினைத்து 

இறுமாந்ததும்

அப்பாவின் முதுகிலே சறுக்குமரம் ஆடியதும்

பெண்கள் புடவை கட்டிக்கொண்டால் குழந்தை பிறக்குமென்று நம்பியதும்

இறந்தவர்கள் யாவரும் சாமிகிட்டப் போவார்கள் எனக்கருதியதும்

இராத்திரியில் குழலூதினால் பாம்புவரும் என்றஞ்சியதும்

வட்டநிலா வானில் தெரிந்தால் அதனுள்ளே வடைசுடும் பாட்டியைப் பார்த்து இங்கிருந்தே பேசுவதும்

எல்லாமே இன்னும் எவ்வளவோ

சொல்லாதது எல்லாமே என்

அறியாத பருவத்தில் நானிருந்த நிலையாகும்!

என்வாழ்வின் பொற்காலம் இதுவே! மீண்டும் அறியாதப் பருவத்துள் சென்றிட ஏங்கும் மனதுடனே  என்றும்

இருக்கிறேன்!த.ஹேமாவதி

கோளூர்


அறியாத வயது -வத்சலாஅற்புதமாய் நாம் நினத்த 

                               பலவும்....

அற்பமாய் எண்ணப்பட்ட

                                   காலம்

கேலிக்கு சொல்லப்பட்ட

கதைகளை விழிவிரித்து

நம்பிய அறியாத வயது😯

பழத்தின் விதைகளை

விழுங்கினால் அது

வயிற்றில் வேர்பிடித்து

வாய்வழியே விருட்சமாய்

வளருமெனும் பயம்தரும்கத

தண்ணீர் குடிக்காதிருந்தால்

மரம்வளராதென நம்பி

மயங்கிவிழுந்த மாயக்கதை!

கட்டெறும்பைவைத்தரைக்க

கருஞ்சிவப்பாய் மருதாணி 

பிடிக்குமெனும் ஆச்சரியக்

                                   கதை!

கட்டெறும்பைதேடும் போது

சிற்றெறும்பால் கடிவாங்கிய

சிறப்புச்சின்னக்கதை!!

பாம்பைக்கொன்றால் அது

பத்துத்தலைமுறையையும்

பழிவாங்குமெனும் திகில்

                                   கதை!

புற்றுக்குப்பாலூற்றிபாம்புட சமாதான ஒப்பந்தம்போட்ட

உண்மைக்கதை!

ஒற்றைப்படையில் அண்டங்

                         காக்கையை

ஒருசேரப்பாராதுவிட்டால்

ஒச்சமாகும் பயணமென்றதம்

கல்லெறறிந்தாவது காகம்

விரட்டிய வீரக்கதை!

மல்லிகைப்பூ வாசத்திற்கு

மோகினிப்பேய்வரும் என்பதற்காய்

துணியில்பொதிந்து பாத்திரத்தை

அதில் கமத்திப்போட்ட கள்ளமற்ற

வெள்ளைமனசுக்கதை!

விளக்குமாறுகொண்டு

வீசியேகூட்டுகையில் சிதறிய..........

குச்சிகள் நம்மைவிட்டு

பிரியும் உறவுகள் எனும்

பாசக்கதையை நம்பி

பக்கத்துவீட்டுக்குச்சிகளை

செருகிவைத்த சின்னக்கதை?

ரயில்பயணங்களில் 

எதிர்செல்லும் மரங்களெல்லாம்

உறவுகைத்தேடியே ஓடுகின்றன

எனும் ஒற்றைக்கதையை நம்பி

கையசைத்து வழியனுப்பிய

உண்மைக்கதை!

உண்மையிலேயே அறியாத

வயதுக்கதைகள் எல்லாமே கதைகள் மட்டுமல்ல....

பெருங்காப்பிங்களே!

🌹🌹வத்சலா🌹🌹


சுகம் - 1


அன்பை முழுதும் நெஞ்சினுள் இருத்தி

அன்பே இல்லை என மனைவியிடம் வருத்தி

அன்பை உணர்ந்தவள் பொய்க்கோபம் தன்னை

அன்புடன் இரசிப்பது வாழ்வினில் சுகமே.


இல்லாத காதலியை இருப்பதாகக் காட்டி

சொல்லாத வார்த்தைகளை சொன்னதாகச் சொல்லி

பொல்லாத பிள்ளை இவனெனப் பிறரைச் 

சொல்ல வைத்துப் பார்ப்பதும் சுகமே.


உணர்ச்சியை வார்த்தையில் பிழம்பாய் புகுத்தி 

உள்ளத்து வேட்கையை கள்ளமின்றி உணர்த்தி

சொல்லில் மட்டும் தான் என்று தெரிந்தும் கூட

சொன்னதால் கிடைக்கும் அமைதியும் சுகமே.


படிக்காத உன்னைப் பிடிக்காதடா என்று 

அடிப்பது போல் கோபமாய் கையையும் நீட்டி

அடித்ததால் வலித்ததாய் அவன் நடித்துக்காட்டி

நடிக்காத நடிகனை நேரிலே கண்டு 

மகிழ்ச்சியை மனத்தினில் இரசிப்பதும் சுகமே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

காலை கடமை வணக்கம்


முள்ளில் இருந்தாலும் நான்

பூத்திடும் கடமையில் தவறமாட்டேன்!

நித்தமும் பூப்பேன்!

புன்னகை புரிவேன்!

விழிகளுக்கு நல்விருந்தாவேன்!

மனதிற்கு உற்சாகமூட்டுவேன்!

என்றது பூத்தரோசா!

நாமும் முள்ளாய்

எத்தனை இடர்கள்

குத்தினாலும்

பூத்தரோசாவாய்ப்

புன்னகை புரிந்தே கடமைகள் செய்வோம்!வாகைகள் சூடுவோம்!அனைவருக்கும் இனிய *காலை கடமை வணக்கம்*


த.ஹேமாவதி

கோளூர்

நரையின் நிறம்


ஒன்றும் அறியாத உள்ளம்,,, 

உலகம் தெரியாத உள்ளம்,,,

நினைக்கத் தெரியாத உள்ளம்,,

நினைவில் கொள்ளாத உள்ளம்,,,,

பழகிய போது கறுப்புகள் இருக்கும்,,, 

அதன்

புழக்கத்தில் கூட கறுப்புகள் இருக்கும்,

விலக்கத்தில் ஒருவன் கறுப்பறிந்தால்,,, அதன்

விளக்கம் கண்டு சுகம் பெறுவான்,,,,

உவமைக்கு வெண்மை முதன்மை என்பார்,,

பால் வண்ணம் பெற்றது இதனாலோ,,,

ஏழு நிறம் கலக்க வெண்மை என்பார்,,, 

ஏற்றமும் 

பெற்றது அதனாலோ,,,

கண்ணொளி மறைய, பேச்சொலி 

குறைய 

காரியம் முடியும் வேலையிலே,,,

மனிதன்,

ஓடியாடி ஒன்றுமில்லை

என்றே நினைக்கும் வேளையிலே,,,,

ஏதுமில்லா 

வாழ்வு என 

ஞானம் வரும் 

போதினிலே,, 

நாடகம் முடித்து,

நரை நிறம் கொடுத்து,

இறைவன்

முதியவன்

இவனென காட்டிடுவான்,

பூமியிலே!


சுப்பு

பதிலற்ற கேள்விகள்

நழுவிப்போயின

கொள்கைகள்

நட்டாற்றில்

மிதக்கின்றன 

கோரிக்கைகள்


காலத்தின் மடியில் 

கேளிக்கையாகின

பதிலற்ற

கேள்விகள்


*பொன்.இரவீந்திரன்*

Tuesday, 19 February 2019

பூக்களை பறித்துவிடுங்கள்மலர்ந்த பூக்களை பறித்துவிடுங்கள்
மொட்டுக்கள் மலர
பாதை கிடைக்கும்

மலர்ந்த பூக்களை பறித்து விடுங்கள்
வீணாய் மாள்வதை விட மங்கையின் குழலை மணக்கச் செய்யட்டும்

மலர்ந்த பூக்களை பறித்து விடுங்கள்
அவைகளுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்
இறைவனை அலங்கரிப்பதால்

மலர்ந்த பூக்களை பறித்து  சரமாகத் தொடுத்து
மணமக்களுக்குச் சூட்டுங்கள்
அவர்கள் வாழ்வு இனிமை பெற

மலர்ந்த பூக்களை ஒன்றாக சேருங்கள்
இறைவனடி சேர்பவர்க்கு துணையாகச் செல்ல


மலர்ந்த பூக்களை மாலையாக்குங்கள்
மங்கையின் கழுத்தை அலங்கரிக்க


மலர்ந்த பூக்களுக்கோ
வாசமும் வாழ்வும் ஓரிரு நாள்

மலர்ந்த முதியோரெல்லாம்
இளையோருக்கு வாய்ப்பளித்து
வளர வகை செய்வோம்


சில நாள் இருக்கும் பூக்களே
நல்லது செய்யின்

பலநாள் வாழும் மனித இனமே
ஏன் அல்லன செய்து வாழ்கின்றாய்
வீழ்கின்றாய்

தி.பத்மாசினி


உயிரில் கலந்த சொல்

விலக்குச்

சாலையிலிருந்து

பயணிக்கும்

சிற்றூரின்


ஒற்றையடிப்

பாதையாய்க்

கிடக்கிறதென்

வாழ்க்கை


தொலைதூரக்

குடிசையில்

ஒளிரும் 

சிம்னி விளக்காய்

நம்பிக்கையூட்டும் 


உயிரில்

கலந்த

உந்தன் 

மாமா

என்னும் சொல்


*பொன்.இரவீந்திரன்*

2025ல்


விவசாயம் தழைத்தோங்கும் தமிழகமாய்

பாரம்பரிய உணவு உண்டு நோயில்லா
கம்பீரமாய் வலம் வரும்
தமிழகமாய்


சாதிய பாகுபாடின்றி
ஆவணக் கொலைகள்
இல்லா
ஆணவத்துடன்
அனைவரையும்
ஆரவணைக்கும்
பாசக்கார
தமிழகமாய்

தன் மக்களை
கையேந்தும்
நிலையிலிருந்து மீட்டு
சுயமாய் வாழும்
வாழ்வியலை நோக்கி
நகரும்
தமிழகமாய்

மலர வேண்டும்.
அம்பை சங்கரி


முகவரியைத் தேடி _ஹேமாவதி


முகவரி இல்லா கடிதங்கள் உரியரிடம் போய் சேர்வதில்லை!

முகவரி இருந்தும்

சிலருக்குக் கடிதங்களே வருவதில்லை!

போகக் கூடாத முகவரிகள்!

போகவேண்டிய முகவரிகள்!

காணாமல்போன முகவரிகள்!

இல்லவே இல்லாத

முகவரிகள்!

தப்பான முகவரிகள்

என்று முகவரியில்தான் எத்தனை எத்தனை வகைகளுண்டு!

மனமே கேள்!

நம் வாழ்வும் ஒருகடிதமே!அதை

உரிய முகவரியில்

அனுப்பினால்தான்

முடிவில் இறையென்ற ஊரைச் சேரலாம்!

எளிதில் யாராலும் மறக்க முடியாத முகவரிஇது!

உலகின் எந்தமூலையில் இருந்தாலும் அனைவருக்கும் இது ஒன்றுதான் நிரந்தர முகவரி!

மாற்றமில்லாதது இது!நல்லவனாய் உன்னை மாற்றுவது இது!

மூன்றெழுத்தாலனது

இது!

அதுதான் *அன்பு* என்ற முகவரி!

அன்பென்ற இம்முகவரியைத் தேடிச் சென்றால்

வாழ்வில் எல்லாம் அடையலாம்!தெய்வமாகவும் ஆகலாம்! இறுதியில் இறையிடம் கலக்கலாம்! இந்த முகவரியை வெளியில் தேடுவதை நிறுத்தி உன்னுளிருந்தே தேடு!

உன்னுள்ளே அன்பைச் சுரந்து மற்றவர்க்கு வழங்கு!

பிறருக்கு நீ ஆகு அன்பின் முகவரியாய்!

இந்த அன்பொன்று மட்டுமே இருந்துவிட்டால் போதும் இந்த உலகையே வென்று விடலாம்!

உன்னுள் அன்பிருந்தால்தான்

உன்னால் பிறரின் அன்பைப் பெறமுடியும்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*

ராணுவ நண்பனே


உன் 

உடல் அளவு

உயரமும் மார்பளவும்

எனக்கிருந்திருந்தால்

நானும் வாய்ப்பு

பெற்றிருப்பேன்


உன்னோடு

உடல் சிதறி

இறப்பதற்கு


ஆம்


உனக்காவது

உன் 

சொந்த ஊரில்

மழையும்

வெயிலும்

ஒழுகும் ஒரு

ஓலைக் கூரை

சொந்தமாய்

இருந்திருக்கிறது


நான்

அது கூட

இல்லாதவனின்

பிள்ளை..

உனக்கு


வீர வணக்கம்

செய்வோர்க்கெல்லாம்

வீடு இருக்கிறது


புரட்சி

வணக்கம்

சொல்வோர்க்கும்

பொருள் இருக்கிறது


நம்பு


உடலளவில்

உன்னை விட

திடமாய்

 இருப்பவனுக்கும்

 தேசப்பற்று மட்டும்  

 இருக்கிறது...

வேண்டும் வேண்டும்

நீக்கமற அன்பு வேண்டும்

ஆக்கமுடன்

பண்பு வேண்டும்

பயமறியா

ஆளுமை வேண்டும்

பசியறியா

ஏழை வேண்டும்

பாதை தவறா

ஒழுக்கம் வேண்டும்

இதை விட

எல்லோரையும் 

மதிக்கும்

மாண்பு வேண்டும்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

முகவரி தேடி - அனில்குமார்


தொலைத்துவிட்ட முகவரியைப் பலதூரம் தேடிவிட்டு சலித்துப்போய் நிற்கின்ற  மரங்களின் வேர்கள்.


நீர்த்தடங்கள் எங்கே என ஓடி ஓடிப் பார்த்துவிட்டு நிலத்தடத்தில் அடைக்கலமாய் விண்ணின் மழைத்துளி.


பெற்றெடுத்த மகராசி விட்டுவிட்டுப் போனபின்னும் முகவரியைத் தேடி நிற்கும் அனாதைக் குழந்தைகள்.


வருகிறேன் என்று சொல்லி விட்டுச்சென்ற செல்லமகன்

முகவரியைத் தேடி நிற்கும்

முதியோர் இல்ல பெற்றோர்கள்.


உன் உயிராய் நான் இருப்பேன் என்று சொல்லி நம்பவைத்து 

விற்றவனின் முகவரியைத் தேடி நிற்கும் விலைமாதர்.


கற்றுக்கொடுப்பவரை மதிக்கின்ற சமூகத்தில் வாழ்வதற்கோர் முகவரியைத் தேடி நிற்கும் ஆசான்கள்.


மூலஸ்தானம் எதுவென்று முடிவுசெய்ய முடியாமல் குழம்பி நிற்கும் திருடப்பட்ட மூலவர் சிலைகள்.


அனைத்திற்கும் தீர்வுகாணும் சிறப்பானதோர் முகவரியைத் 

தேடுகின்றேன் நாடி நிற்கும் பலரோடு நானும்.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

காத்திருந்த காற்று


கோல மயில் தோகையாட

முகில்கள் களைந் தோட

வயலில் கதிர்கள் நடனமாட

இளந் தளிர்கள் ஊஞ்சலாட

இலைகள் கைதட்டி ஆர்ப்பரிக்க

மரங்கள் மகிழ்ந்து ஆட

பறவைகள் பறந்து ஓட

குயிலின் ஓசை கேட்க

விதைகள் இடம் பெயர

நீரோடை நிசப்தமாய் இருக்கும்

வரை காத்திருந்த காற்று

மனிதர்கள் செய்யும் தவற்றால்

மூர்க்க மாகி துள்ளி

எழுந்து புயலாக மாறி

அனைத்தையும் வாரி எடுத்துச் 

சென்று கொட்டியது கடலில்


தி.பத்மாசினி

Sunday, 17 February 2019

வீரவணக்கம்

அரிது அரிது.  இந்தியக் குடிமகனாய்ப் 

பிறத்தல் அரிது!

அதனினும் அரிது

தேசங் காக்க இராணுவ வீரனாய்

ஆவது அரிது!

அவ்வாறே ஆயினும் உன்னைப் போல்

வீரமரணம் அடைவது எத்துணை அரிது!

மாவீரன் சுப்ரமண்யன் இன்று நம்மிடையே இல்லை!

ஆனால் அவனது

வீரவுடம்பு அழிவின்றி என்றும் நம்மிடையே வரலாறாய் வாழும்!

சாவது திண்ணம் என்பதை அறிந்தும்

இராணுவம் சேர்வதே சீரிய எண்ணம் எனக்கொண்டு

சேர்ந்தாய்!இளம்வயதிலே

மூவண்ணக்கொடியால்

போர்த்தப் பட்டாய்!,

எங்கள் மனங்களைத் துயரத்திலும் விழிகளை கண்ணீரிலும் போர்த்திவிட்டு

பறந்து சென்றுவிட்டாய்!

இராணுவத்தில் உனக்கான இடம் நிரப்பப் படும்!

ஆனால் வீரனே

உன்குடும்பத்தில் உனக்கான இடத்தை வேறுயார் கொண்டு நிரப்ப முடியும்?...........................................................

கலங்கும் விழிகள்!

கனத்த இதயங்கள்!

மௌன கீதங்கள்

வெறுமை நாட்கள்!

வறண்ட எதிர்காலம்!

இவையே இனி

உன் குடும்பத்தில்!ஆனாலும் அத்தனையும் தாண்டி அவர்கள் உயர்ந்துவிட்டார்கள்!

உன்னை தேசங்காக்க தாரைவார்த்துக் கொடுத்ததனால்

மிகமிக உயர்ந்தே போனார்கள்!

மாவீரனே உன்னோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் எனது *வீரவணக்கம்!*

இராணுவ வீரர்களின் வீரத்தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!

இன்றைய காலை வணக்கம் அனைவருக்கும் *வீரவணக்கம்*


*த.ஹேமாவதி*

*கோளூர்*

ஏதுமறியாப் பிணங்கள்

அங்கிங்கெனாதபடி நன்றாகவே நிகழ்கிறது 

குளிர் காய்தல்


தொட்டு விடும் தூரத்தில்தான் 

எரிகின்றன

ஏதுமறியாப்

பிணங்கள்


*பொன்.இரவீந்திரன்*

அடையாளம்

ருவேளை

நீ

போரிட்டிருந்தால்

துப்பாக்கி குண்டுகளுக்குள்

உன்

மூச்சினை

மாலையாய்

சூட்டியிருப்பாய்....

ஆனால்

இன்றோ....

நாறுநாறாய் 

தசைகள் சிதறுண்டு...

இரத்தங்களால் 

பூமித்தாயின் மடியில்

கோலமிட்ட வீரனே..!

உன்

உதிரத்தில்

எங்கள் வாழ்க்கை ;

ஏ!இளைஞனே!

எப்படி ஆறுதல் சொல்ல

மனைவிக்கும் பிள்ளைக்கும்

பெற்றோர் உற்றோர்க்கும்;

உடலால் அழிந்தும்

உயிரில் கலந்த வீரனே!

உன்

உடல் எங்கே?

இறந்தால்

புதைக்கவோ

எரிக்கவோ

தானே செய்வோம்

எம் மரபில்;

நாற்பது நாயகர்களின்

உருவத்தை

எந்தெந்த உருவத்தில் பொருத்திப் பார்த்து கண்டறிய...;


அடையாளம் தெரியாமல்

உருக்குலைந்தாய்....


ஆனாலும்

வடுவாய் எங்கள் மனதில்

அடையாளமானாய்....


கண்ணீருடன்........

கரிசல் தங்கம்

மயானக்காண்டம்


கண்ணீர் உறைந்ததோ ?

                 அன்றி என்......

கண்ணீர்சுரப்பி கூட

காலாவதியாகிவிட்டதோ?!?

இதயமும் எனக்கு

இறந்தகாலமாகியதோ 

காட்சியாய் நான் கண்டதும்

காட்சிப்பிழையாய்ப் 

                         போகாதோ?

மழைநீர் சேர்வதால் நீர்க்

                            குளங்கள்

கண்டே பழகியகண்களின்று

குருதிக்குளம் கொப்பளிக்க

                           அஃதோர்

காட்சிப்பிழையாய் இருந்து 

இருக்கக்கூடாதாவென ஆன்மா கெஞ்சியது

ஆண்டவனுக்கும் கேட்கவி

                                வில்லை 

எனினும் ஆண்டவன் 

                           கேட்டான்

பார் என் மகளே வடிந்த

இரத்தத்தைக்குறித்த

உன்கருத்தைச்சொல்லென்

                                 றான்

உயிர்துடிக்கப்பார்த்தேன்

ஜாதிகளின் ஜதியில்லை

மதங்களின் மவுசு இல்லை

ஏழைப்பணக்காரன் எனும்

எக்களிப்புமில்லை

கருப்பு வெள்ளைதோலின்

கருநாகத்தீண்டல்களில்லை

சத்தமின்றி இரத்தம் சொன்ன சத்தியம்

“நாடுகாக்கும் வீரர் நாங்கள்

கைகொடுக்க தயாரா

                         நீங்கள்”!

😢வத்சலா😢

சிந்திய இரத்தம் இந்திய இரத்தம்


எல்லையில்லா பெருமையுடன் எல்லைகாக்கச் சென்றீர்கள்,

தொல்லையிலா வாழ்வதனை நாம் வாழ விழைந்தீர்கள்.


நாங்கள் இங்கு உறங்குதற்கு உறங்காமல் விழித்தீர்கள்,

நாங்கள் இங்கு வாழ்வதற்கு வாழாமல் வாழ்ந்தீர்கள்.


எம் தேசம் சிதறாமல்,

எம் மக்கள் பதறாமல், 

எம் பெண்கள் கதறாமல் இருப்பதற்காய் சிதறினீர்கள்.


அன்னை நாட்டைக் காக்கையிலே,

அணிவகுத்துச் செல்கையிலே, அன்னியனின் சூழ்ச்சியிலே

இரத்தத்தைச் சிந்தினீர்கள்.


நீ சிந்திய இரத்தம் 

அது இந்திய இரத்தம்,

அதை நினைக்கும் போதோ

கொதிக்கிறது இரத்தம்,

அது தூங்கவிடாமல் எமை வைக்கும் நித்தம்,

விரைவில் கேட்கும் அவன் அலறல் சத்தம்,

எமைத் தூங்க வைக்கும்.....

எமைத் தூங்க வைக்கும்

அந்த அலறல் சத்தம்.

 

*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

நாட்டை பாதுகாக்க...

நாட்டைப் பாதுகாக்க

நண்பா நீ 

புறப்பட்டாய்

நயவஞ்சகர்களின்

தீவினையால்

பாதுகாத்தவனின்

வாழ்வில்

எமனே ஏன்

நுழைந்தாய்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

அதிகாலை மழை


அதிகாலை மழை ஆனந்தமே

நெஞ்சில் ஊற்றெடுக்கும் பேரின்பமே

சோம்பல் கொஞ்சம் கூடிடுமே

கண்களும் கொஞ்சம் கெஞ்சிடுமே


சாலையெங்கும் சேற்றுச் சந்தனம்

செடிகளெல்லாம் மழைக்குச் செய்யும் வந்தனம்


அனைவரும் விரும்பி வேண்டிடுவார்

விடுமுறைக்காக ஏங்கிடுவார்

விடுமுறை கிடைத்தால் பெற்றோருக்கு திண்டாட்டம்

பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம்


அலுவலகம் செல்வோரோ முணங்கிய படியே செல்வாரே


பாதையோரக் கடைகளுக்கெல்லாம்

கவலை வந்து சூழ்ந்திடும்

மழை எப்போது நிற்குமென்று தோன்றிடும்


மழையும் நின்று போனதால்

வானம் வெளுத்துப் போனதே

வானம் வெளுத்துப் போனதால் 

தூக்கமும் கலைந்து போனதே


தி.பத்மாசினி

Friday, 15 February 2019

சாஸ்வதமல்ல


இருபது என்றார்கள்!
நாற்பது என்றார்கள்!!
இருப்பதை அள்ளிக்கொடுத்த எங்களின்
கண்ணீரைத்துடைக்குமா
நீங்கள் தரும் கணக்கு😭
வீட்டுக்கொரு மகனா?
தகப்பனா?கணவனா?
அண்ணனா?தம்பியா?
சித்தப்பனா?பெரியப்பனா?
மாமனா? மச்சானா? என
எத்தனை அவதாரங்களை
நாடுகாக்க மட்டுமே
நலமோடனுப்பிவைத்தோம்?
எங்கள்சொத்தெல்லாம்
மொத்தமாய் கொத்துக்
கொத்தாய் பிய்க்கப்பட்ட
கொடுமையைக் காணவா??
குங்குமம் எங்களுக்கு
சாஸவதமில்லை என்பதைத்
தெரிந்தே ஏற்றோம்—அது
உணர்வைக்கொன்று
உயிரைத்தின்னும் கயவரே
உங்களுக்குத்தெரியுமா?
உறவுப்பிணைப்புகளின்......
உன்னதமும்உதாரத்துவமும்
அழிக்கவேமுடியாத்தென்று?
நேரில்போரிட முடியாத
நம்பிக்கை துரோகிகளே...
நரித்தனம் செய்தே வென்றுவிட்டோமெனும்
நீங்கள் எல்லோரும்
சுவாசம் கொண்டிருப்பினும்
மரணித்தவர்களே!
ஒரே தாயின் வயிற்றில்தான்
பிறந்தோம் இருந்தும்.....
பாசமெனும் தாய்ப்பால்
உங்களுக்கு மட்டும்
எப்போது விஷமானது.......!
குங்குமத்தை சாட்சிவைத்து
எம் உறவுகளை போர்முனை
                      க்கனுப்பிய.....
எம் குலப்பெண்கள் தீர்க்க
சுமங்கலிகளே!!!
இத்தகுதியை அழிக்க நீவீர்
முயன்றுதான் பாருங்களேன்!
மூர்ச்சித்துப்போகும் உங்கள்
மூச்சுக்காற்றும்!!!
வெட்ட வெட்டத்துளிர்க்கும்
மூங்கில்மரங்கள் நாங்கள்
வேரடி மண்பிடித்து
நூறடி திருப்பித்தருவோம்??
துணிந்து வருகிறது எமது
அடுத்தத் தலைமுறை!!!
சத்தமின்றிச்சாக நீங்கள்
                          தயாரா?காரணம் ஒவ்வொருமுறை
                                  யும்....
எம் வீரர்கள் புதைக்கப்படு
                       வதில்லை...
விதைக்கவேபடுகிறார்கள்!!
ஏனெனில்”இமயங்கள்
இறப்பதில்லை”!!!
🌹🌹வத்சலா🌹🌹


காதல் கையொப்பமிட்டதே!

காதல் காதலைக் கண்டதும்
காதல் மேல் காதல்கொண்டு
காதல் பரிமாறி!
காதலால் கசிந்து உருகி!
வெள்ளமெனக் காதல் நதியோட !அதில் காதல்
படகேறி காதல் கதைபேசி
காதல் சங்கமிக்க !விண்மீன்களும் காதல்
கையொப்பமிட்டதே!
{காதல் (சொல்)பின்வரு நிறையணி}

🌹🌹வத்சலா🌹🌹


அவள் அதி "காரம்"

கண்டித்தால் கண்ணதிகாரம் (முறைப்பு)

கரம் உயர்த்தினால் கையதிகாரம்

காலமெல்லாம் காலதிகாரம்

எங்கே என்
சொல்லதிகாரம் (புலம்பல்)

என்றுமே செல்லாதே
என் சேதமடைந்த சிற்றதிகாரம்

அவள் அதி "காரம்"


நேசிக்கத்தொடங்கி விட்டேன்..

என் எழுத்துகளை
நேசிக்க
தொடங்கியுடன்
என்னையே
நேசிக்கத்தொடங்கி
விட்டேன்..

எல்லாருடைய மனதிலும்
எழுத்தாய்
பதிந்திருப்பதால்
அழிவில்லா
அன்பை
பெற்றுவிட்டேன்
என்பதாலே
எழுத்தையும்
எழுத்தின்
மீது
அதீத
அன்பையும்
செலுத்தலானேன்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


காதல்


அகிலத்தின் மீது ஆண்டவன் கொண்ட காதலின் வெளிப்பாடே இயற்கை வளம் நிறைந்த இப்பூமி. அன்னையும் தந்தையும்  கொண்ட காதலால்
அவனியில் நாம் அவதரித்தோம். பிறந்த நாள்முதல் இதுவரை நாமும் பலவற்றின் மீது காதல் கொண்டுள்ளோம். அன்னை தந்தை மீது, உடன் பிறந்தோர் மீது, நண்பர்கள், நலம் விரும்பிகள், உறவுகள், சுற்றத்தார் என ஓயாமல் நாம் அனைவரிடமும் காதல் கொள்வது வாடிக்கையானது. மனிதரிடம் மட்டுமல்ல பார்க்கும் விலங்குகள், பாடிடும் பறவைகள், வாசனை வீசிடும் மலர்கள். பறந்திடும் பூச்சிகள் படித்திடும் கவிதைகள் ரசித்திடும் ஓவியங்கள்,ஒளிர்ந்திடும் சூரியன், நகர்ந்திடும் மேகங்கள், குளிர்ந்திடும் நிலவு, பொழிந்திடும் மழை என ஆனைத்தையும் காதல் செய்வது மானிட  இயல்பு. ஆண்டவன் மீது நாம் வைக்கும் பக்தியும் கூட காதலின் வடிவம்தான். இதில் தன் இணையைத் துணையை அதிகமாய் காதல் செய்கின்றோம்
கனிந்துருகுகின்றோம். காதலுணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதுவே வாழ்வில் தலையானது. காதலுணர்வினால் மட்டுமே இப்பூமி கவின் பெறுகிறது. ஆதலால் காதல் செய்வோம் வாழும் நாள்களை காவிய
மாக்குவோம்.

செ. வினிட்டா கரோலின்


ரௌத்திரம் பழகுகொள்கை முடிவு என்ற பேரில் கொள்ளை முடிவு எடுப்பவர்கள் எள்ளி நகையாடப்பட வேண்டுமென்று நினைத்தால்,

வாழ்வாதாரத்தை அழித்து வளங்களை எல்லாம் தொலைத்து தான் வாழ வழிகாண்பவர் ஒழியவேண்டுமென்றால்,

அன்னைபூமியின் செல்வத்தை
அன்னிய நாட்டவரிடத்தில்
பாதகாணிக்கை வைப்போர் பணியவேண்டுமென்றால்,

எளியோனின் கோவணத்தை ஏமாற்றி வாங்கி
வலியோனின் வயிற்றை நிரப்புவோர் தமையே
பதில் சொல்லவைக்க நீ விரும்புவாய் என்றால்,

கல்வியை வெறும் ஒரு கடைச்சரக்காக்கி
கற்போரை ஓட்டுபோடும் எந்திரமாக மாற்றி
களிப்புடனே அலைபவரை உணரவைக்க நினைத்தால்,

காமத்தைத் தங்கள் கண்ணிலே வைத்து
நியாயத்தைத் தமது சொல்லிலே வைத்து
பாவச்செயல் செய்பவர்கள் பரிகசிக்கப்பட்டு
கைகட்டி வாய்பொத்தி நிற்கவேண்டுமென்றால்,

விடியலில் எழுந்து நீ ரௌத்திரம் பழகு,
விழித்திருந்து நீ ரௌத்திரம் பழகு,
விடியும்வரை நீ ரௌத்திரம் பழகு.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*


சாய்ந்ததே இராணுவக் குலை

*
கஜா புயலில்
குலைகளுடன் வீழ்ந்த தென்னைகளைக் கண்டே பதறினோமே கதிகலங்கினோமே!
இன்றோ
இராணுவத்தில்
குலைசாய்ந்ததுபோல்
நாற்பத்துநான்கு வீரரை
இன்று பறிகொடுத்து நிற்கின்றோம்!
வீரமரணத்தில் தலைவனை இழந்த மனைவிகளுக்கு
என்ன ஆறுதல் தரப்போகிறோம்?
வீரமரணத்தால் தந்தையை இழந்த குழந்தைகளை
எப்படி சமாளிக்கப் போகிறோம்?
வன்முறைத் தாக்குதலால்
கண்மூடிய வீரர்கூட்டம்
இதற்கெல்லாம்
யாது காரணம்?
தேசங்காக்கப்
புறப்பட்ட சிங்கங்கள் இன்று
சவப்பெட்டிகளில்
திரும்பிவருகின்றன
தத்தம் சொந்தமண்ணுக்கு!
இருபத்தோர் குண்டுகள் முழங்க
இராணுவ மரியாதை!
மலர்வளையங்கள்
மூவண்ணக் கொடி போர்த்தல்
பொதுமக்கள் அஞ்சலி!
ஆனாலும் ஆறுமா மனம் தேறுமா
கண்கள் சும்மா இருக்குமா
இதயம் சமாதானமடையுமா
அடியற்ற மரம் சாய்ந்தால் கூட
நிமிர்த்திவைத்தால்
துளிர்க்குமே
இவர்களை இழந்து தவிக்கின்ற குடும்பங்களில்
மகிழ்ச்சி திரும்புமா?

த.ஹேமாவதி
கோளூர்


ஒரு பிடிச் சோறு


நேருக்கு நேர் நின்று போர்செய்யத் திராணியற்று,
கூலிகளை முட்டாள்களைப் பகடையாக மாற்றிவிட்டு,
கோழையாய், பேடியாய் சதிச்செயலில் ஈடுபட்டு,
தரம்கெட்டு நிற்கின்ற எதிரி நாட்டின் அடிமையே,
அடில் அகமது என்ற பேர் கொண்ட கோழையே,
எம் வீரர்களை மறைந்திருந்து கொலைசெய்த பதரே,
உன்முகத்தில் எறிகின்றேன் ஒரு பிடிச் சோறு.

உன் தாய் உனக்கு ஊட்டாத தன்மானச் சோறு,
தெருநாய் போன்ற நீ இன்னும் உண்ணாத சோறு,
வீரம் விளைந்த தமிழ்மண்ணில் விளைத்தெடுத்த சோறு,
உன்முகத்தில் காறியே உமிழ்ந்துவிட்டவாறு
எம்தேசம் உனக்களிக்கும் வாய்க்கரிசிச்சோறு,
கோழையென்று உனைச்சொல்லும் ஒருபிடிச் சோறு,
உன் முகத்தில் எறிகின்றேன்
ஒரு பிடிச் சோறு.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*

(44 CRPF வீரர்களைக் கொன்ற அடில் அகமது என்ற கோழைக்குக் கண்டனம்)


Featured post

கவிஞன்

கவிஞனென்றால் காதலையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!! அன்பையும் அரவணைப்பையும்..!!...

POPULAR POSTS