Header Ads Widget

Responsive Advertisement

சுகம் - 4


முக்கடலும் வந்து ஒன்றாய்ச் சேர்ந்து

முத்தமிழை நம் நினைவில் கொணர்ந்து

தாய் தவம் புரியும் குமரிக்கரையில்

ஆதவன் உதிப்பதை மறைவதைக்கண்டு

கடல்நீரில் குளித்து மகிழ்வது சுகமே.


கதிரவன் அளித்த ஒளியினை ஏற்று

இரவினில் அதனை அள்ளியே அளித்து

கவிஞர்கள் கவிதையின் கருவாய் இருந்து

கொடைவள்ளல் தானென்று  பெருமையுடன் சிரிக்கும்

நிலவவள் அழகினில் மயங்குதல் சுகமே.


வெண்ணிலா அழகினை வெகுவாக இரசித்து 

பெண் நிலா அவளையும் அதனுடன் இணைத்து

உயர்ந்தது எதுவென கேள்வியைத் தொடுத்து

வெட்கத்தால் அவள் முகம் கைகளால் மறைத்து

விரல்களை விரித்தவள் பார்ப்பது சுகமே.


இணைகளின் காதலை வாழ்த்தவே நினைத்து

இதமான இசையுடன் தழுவியே சென்று

இருவரின் இடையினில் நயமாய்ப் புகுந்து

மிதமான குளிர்ச்சியை அளித்திடும் தென்றலின்

சுகமான தாலாட்டில் சிலிர்த்தலும் சுகமே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*