Header Ads Widget

Responsive Advertisement

தமிழே நீ


தமிழே நீ

சொல்லிலே

காவியமாய் இருக்கிறாய்!

கல்லிலே

சிற்பமாய்

வாழ்கிறாய்!

வில்லிலே

வீரமாய்

பிறக்கிறாய்!

பாலிலே

முப்பாலாய்ச்

சுவைக்கிறாய்!

நிலத்திலே நானிலமாய்த்

திகழ்கிறாய்!

கலத்திலே

யாப்பருங்கலமாய்

வீற்றிருக்கிறாய்!

அலங்காரத்திலே

தண்டியலங்காரமாய்

அழகுகாட்டுகிறாய்!

அணியிலே

தேம்பாவணியாய்

வாடாமல் இருக்கிறாய்!

மணியிலே சீவகசிந்தாமணியாய்

ஒளிவீசுகிறாய்!

இசையில்

சிலப்பதிகாரமாய்

கொஞ்சுகிறாய்!

இனிமையில்

நறுந்தேனை விஞ்சுகிறாய்!

கனியிலே முக்கனியாய்ச் சுவைக்கிறாய்!

மலையிலே

பொதிகையாய் நிற்கிறாய்!

அலையிலே

கவிதையாய்ப்

பெருகுகிறாய்!

பெண்களிடம்

நால்குணமாய்

உறைந்திருக்கிறாய்!

ஆண்களிடம்

புறமுதுகு காட்டாத

வீரமாய் நிறைந்திருக்கிறாய்!

குழந்தைகளிடம்

யாழாய் குழலாய்

இனித்திருக்கிறாய்!

விரல்களிலே

ஓவியமாய் வெளிப்படுகிறாய்!

நாதசுரத்திலே

மனதை உருக்கும்

இசையாய்ப் பிறக்கிறாய்!

அணியும் உடையிலே

வேட்டியாய் சேலையாய் வலம்வருகிறாய்!

உணவிலே

அரிசிச் சோறாய்

வயிற்றை நிறைக்கிறாய்!

காதலிலே

விழியோரம்தங்கி

ஓய்வெடுத்துக்

கொள்கிறாய்!

மறுகணமே நாணத்தால் காதலுக்குச் சுவையூட்டுகிறாய்!

திருமணத்தில்

நலுங்குப் பாட்டாக

மணக்கிறாய்!

குழந்தைப்பேறு காலத்திலே

தாலாட்டாய்ப் பிள்ளைகளை வளர்க்கிறாய்!

காளையர்கள் கையிலே

வேலாய் சிலம்பாய்

சுழல்கிறாய்!

கன்னியர்கள்

கரங்களிலே

கோலமாய் இழைகிறாய்!

முதியோர்கள் நாவிலே

பழமொழிகளாய்ப்

பிறக்கிறாய்!

உழவிலே

நடவுப்பாட்டாய்

ஏற்றப்பாட்டாய்

வாழ்கிறாய்!

ஆடற்கலையிலே

பரதமாய்ச் சதங்கையொலிக்கிறாய்!

பூவிலே

தொண்ணூற்றாறாய்

மலர்கிறாய்!

எண்களிலே

எல்லையாய் நிற்கிறாய்!

இறுதியில் உயிர்நீங்கிய பின்னும் ஒப்பாரியாய் உடன்வருகிறாய்!

மொழிகளிலே

அன்னையாய்த் திகழ்கிறாய்!

இவ்வாறாய்

உயிரிலும் ஊணிலும் கலந்திருக்கும்

தமிழே உன்னை

என் உயிரென்றேன்!

இதுசரிதானே என்கண்ணே!


த.ஹேமாவதி

கோளூர்