Now Online

Thursday, 28 May 2020

சதுரங்கம்ஆணுக்குக் கவசமாக  இருப்பவள் பெண்ணென்றும் 
ஆணின்றிப் பெண்ணுக்கு  மதிப்பெதுவும் இல்லையென்றும்
சமத்துவத்தைச் சொல்லிவிட்டுச் சரித்திரத்தில் இடம் பிடித்து
சதிகார வலை அறுக்கும் விதம் சொன்னது சதுரங்கம்.

பாதுகாக்கும் காவலர்கள் பலவிதமாய் இருந்தாலும்
இன்னார்க்கு இதுவென்ற நெறிமுறைகள் சொன்னாலும்
அவரவர்கள் அவரவர்தம் நிலை அறிந்து செயல்பட்டால்
அனைவருக்கும் பாதுகாப்பு என்று சொன்ன சதுரங்கம்.

சதுரத்தின் அங்கமாகும் சதிவிலக்கும் சங்கமாகும் 
சதிவலையில் சிக்கிவிட்டால் உயிருக்கே
பங்கமாகும் 
அனைத்துக்கும் முதன்மையாக இருப்பதுவோ வியூகமாகும்
முன் யோசனை  முக்கியம் எனக் கற்பித்த சதுரங்கம்.

காலாளும் கால் நொடியில் பாராளும் மன்னனுக்குப் 
பரிதாப நிலை தந்து எமனாவான் என்பதையும் 
எதிரி வரும் நேரத்தில் காவலனாய்ப் பாதுகாத்து 
படைத்தலைவன் செயல் செய்வான் என்று சொல்லும் சதுரங்கம். 

பாரதத்தின் விளையாட்டாய் பார் வியக்கும் விளையாட்டாய்
கல்வியை விளையாட்டுடன் கற்பிக்கும் விளையாட்டாய்
சதிமுறிக்கும் மதி அளிக்கும் விளையாட்டாய் அவனியிலே 
மூளைக்கு வேலையாக சதுரங்கம் அவனியிலே.

*கிராத்தூரான்.*

இன்பம் துன்பம்.நடந்து செல்லும் பாதை முழுதும்
கல்லும் முள்ளுமாய் 
துன்பம் கொடுக்கும் முட்களாய்
நிறைந்திருந்த போதும் 
நம்பிக்கை எனும் காலணி மட்டுமே
முன்னேற்ற பாதையில் .....
நடத்திச்செல்கிறது இன்பம்
எனும் பலவழிப் பாதை!
சூரியன் குத்திக்கிழித்த
துன்பம் தந்த வேனலின்
அனுபவம் மட்டுமே நிலவின்
குளுமையை அறியும்
இன்பத்தின் அகராதியை
இன்னமும் தேடியபடியே
இருந்திருப்போம் நாம்.....!
கொள்ளை நோயின்
கொடூரமுக நர்த்தனத்துன்பம்
தெரிந்தோ தெரியாமலோ
அனுமதிக்கப்பட்டதாலேயே....,
உறவுச்சங்கிலிகள் 
தூரத்து சாரலாய் இணைந்து
தூவானமாய் இன்பம் தந்திருக்குமோ?
சிட்டுக்குருவிகளை கொன்றொழித்து
சிங்காரவீடமைத்து 
இன்பம் கண்டோம் !இதோ.....
எரிமலையாய் வெடித்துக் கிளம்பும்
வெட்டுக்கிளிகளுக் ஆரத்தி
எடுத்து அழைக்க ஆயத்தமாய்
நின்றே ——துன்பத்தையும்
ஏற்றேயாகும் கட்டாயத்துக்குள்
நம்மை நாமே ஆட்படுத்தத்தான்
நரக(ல்)வாழ்வை வரமாய்
கொண்டோமா !                        சிந்திக்க நமக்கு
இன்னமும் நேரமுண்டு....!
சிந்திப்போமா?
🌹🌹வத்சலா🌹🌹

தெய்வ தரிசனம்


ஏனிந்த சோதனை எதற்கிந்த வேதனை
என்ன குறை வைத்தேன் நான்
எழில் உருவே என்கின்றேன்
என்ன பாவம் செய்தேன் நான்
எனக்கேட்டு நிற்கின்றேன்
எட்டிப் பார்த்த கண்ணீரால் கண் இமையை நனைக்கின்றேன்
என் இறைவா என் இறைவா என வேண்டித் தொழுகின்றேன்.

அருகில் நிற்போர் தெரியவில்லை
ஆரத்தி தெரிகிறது
கருவறையில் தெரிந்த ஒளி எதிரொளியாய் ஒளிர்கிறது
கண்ணுக்குள் நுழைந்த ஒளி இதயத்துள் நிறைகிறது 
கண்டேன் நான் கண் நிறைய மனம் நிறைந்து மகிழ்கிறது.

கருணைமிகு கண்களும் புரிதல் சொன்ன புன்னகையும் 
யாமிருக்கக் கவலையேன் என்று கேட்கும் தோரணையும்
உள்ளத்தைக் குளிரவைத்து அமைதி தந்த நறுமணமும்
கண் இமைக்க முடியாமல் கவர்ந்திழுத்த பேரெழிலும்
கனிவுடனே பரிவுடனே பதில்கள் பல தந்தது.

மலர் தாங்கும் சிலை போன்று உன் துயரைத் தாங்குகின்றேன்
மறந்து நீ சென்றாலும் நின்றவாறே தொடர்கின்றேன்
உளம் உருகி நீ நிற்க உனக்குள்ளே அமர்கின்றேன் 
உனைக்காக்கும் என் பொறுப்பை உவப்புடனே செய்கின்றேன்.

சொல்லாமல் சொன்னதெல்லாம் ஒரு நொடியில் உணர்ந்தேன் நான்
அறியாமை இருளகன்று அவன் கனிவில் குழைந்தேன் நான்
யான் பெற்ற இப்பேறை உலகு பெற விழைந்தேன் நான்
என் இறைவா என் இறைவா என்றவாறே நகர்ந்தேன் நான்.

எனைக் காக்கும் இறையருளின் 
கருணையிலே நனைந்தேன் நான்
கவலைகளை மறந்தேன் நான்.

*கிராத்தூரான்*

அறியா பருவம்அரும்பாய்ப் பிறந்து மொட்டென குவிந்து
.......அழகாய் மலர்ந்து சிறுவர் சிறுமியாய்க்

கரும்பாய் மொழிந்து கள்ள மின்றி
.....கலந்தே கூடி கவலை அறியா

குருத்துகள் போலே இருந்த காலம்
......கதறி னாலும் மீண்டும் வருமோ?

திரும்ப வராத மழலைப் பருவம்
......திகட்டா மலரும் நினைவுக ளாகும்!
(1)

கடிக்க கடிக்க கன்னல் இனிக்கும்!
.....குழவிப் பருவம்  நினைக்க இனிக்கும்!

அடியும் திட்டும் வாங்கி னாலும்
......அடமாய் வெளியில் சேர்ந்து ஆடுவோம்!

அடித்த மாங்காய்  மண்ணில் வீழ
.......அன்பாய்க் கடித்துப் பங்கு போடுவோம்!

படிக்க பள்ளி செல்லும் போதில்
......பட்டாம் பூச்சியாய் மகிழ்ந்து செல்வோம்!
(2)

மண்ணில் சொர்க்கம் எதுவெனில் எவர்க்கும்
.....மறக்க வொண்ணா மழலைப் பருவமே!

கண்ணில் கண்ட காட்சி யாவும்
......கருத்தாய் நெஞ்சில் பதிவது போல

எண்ணிலா நினைவுகள் பசுமை யாக
.....எவர்க்கும் உண்டெனில் மழலைப் பருவமே! 

வண்ணம் கலைந்த வாடிய மலராய்
.....வற்றிய முதுமை 
இதனை உணர்த்துமே!
(3)

த.ஹேமாவதி
கோளூர்

மௌனித்தல்... அத்தனை எளிதல்ல..!உனக்குப்
பிடித்தவர்களிடம்
ஓரிரு நாட்கள்
மௌனமாயிருந்து பார்...

உலகம் சூன்யமாய்த் தெரியும்,
சிட்டுக்குருவியின் கொஞ்சலும்
பேரிரைச்சலாய்க் கேட்கும்.

பக்கத்தில் பேசிக்
கொண்டிருப்பவர்களை
'கொஞ்சம் சும்மா இரேன்' என்று
கடிந்து கொள்ளத் தோன்றும்.

நான்காவது பாட்டுக்குமேல்
இளையராஜாவையே கொஞ்சம்
தள்ளி வைப்பாய்...

பிடித்தவர்கள்
உன்னிடம் மௌனிக்கட்டும்...
பிரபஞ்சமே அமைதியாய்
உணர்வாய்...

யார்பேச்சும்
செவிகளில் விழாது...
தியான நிலையிலேயே
இருப்பாய்...
உன் பெயர் சொல்லி
அழைத்தாலும்
யாரோவென கடந்து போவாய்...

சாலையில்
ஹாரன் ஒலி எழுப்பி
வாகனத்தை நிறுத்தி
திட்டிச் செல்பவனை
காரணம் புரியாமல்
கடந்து வருவாய்....

*மௌனித்தல்...*
*அத்தனை எளிதானதல்ல...!*

முதல் காதல்


காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை!

- நா. முத்துக்குமார்

முகில் வரைந்த ஓவியம்எப்படித்தான் வருகிறதோ இப்படிப் பல  சிந்தனைகள்
எங்கே உருப்பெறுகிறதோ செயல்வடிவாய்ச் சிந்தனைகள்
இயற்கையை, இறைவனை, நினைத்ததை, பார்த்ததை
கண்முன்னே கொண்டுவரும் முகில் வரையும் ஓவியங்கள்.

உள்ளுக்குள் இருப்பது கண்ணுக்குத் தெரிகிறதா?
கண்ணுக்குத் தெரிவது உள்ளே உருப்பெறுகிறதா? 
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக இருக்கிறதா?
பாலமாக இருந்து முகில் குளிர்வித்து மகிழ்கிறதா?

உருவங்கள் உருவாகக் காற்று துணை புரிகிறதா?
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு இணைகிறதா?
அறியவேண்டும் என்பதனால் கேள்விகள் பிறக்கிறதா? 
கேள்வியே இங்கு பதிலாகத் தெரிகிறதா?

மனதுக்கு இதமாக, மகிழ்விக்கும் விதமாக
கண்ணுக்கு விருந்தாக, கவலைக்கு மருந்தாக
உள்ளத்தின் உருவாக, எண்ணத்தின் கருவாக
தெரிகிறது இயல்பாக முகில் வரையும் ஓவியங்கள்.

கல்லுக்குள் கடவுள் போல், புல்லுக்குள் உயிரைப் போல்
தெரிந்தவற்குத் தெரிகிறது முகில் வரையும் ஓவியங்கள்
தெரிவித்து மறைகிறது முகில் வரையும் ஓவியங்கள்
புரியாதவர் கண்களுக்கோ.....
வெறும் முகிலாக ஓவியங்கள்.

*கிராத்தூரான்*

முதல் மரியாதைஏன் வந்தே, எதுக்கு வந்தே
சாவதற்கா வெளியே வந்தே
இன்னும் இன்னும் எத்தனையோ
கேள்விகளால் துளைத்தார்கள் 
விதவிதமாய் வகைவகையாய்த் 
தண்டனையும் அளித்தார்கள்
தங்களது கோபத்தை அலைந்தவர் 
மேல் திணித்தார்கள் 
கடமையிலே கருத்துடனே செயல்பட்ட காவலர்கள்
சில நாட்கள் முன்பு வரை சீருடையில் காவலர்கள்.

மெல்லக் கொல்லும் விஷமருந்த வரிசையிலே நிற்கிறார்கள்
வசைபாடி, நடனமாடி நடுரோட்டில் குதிக்கிறார்கள்
கேள்விகளே கேட்பதில்லை, பதிலும் எதிர்பார்ப்பதில்லை
வரிசையில் நிற்கச் சொல்லுகையில்
மரியாதை குறைவதில்லை 
நிதியளிக்கும் மதுப்பிரியர் என்பதையும் மறப்பதில்லை
கடமைக்காய் கால்கடுக்க மனதிற்குள் மலைவெடிக்க
காவலுக்காய் நிற்கிறார்கள் கவலையோடு காவலர்கள்.

ஓரமாக நில்லுங்கள் நாற்காலியில் அமருங்கள்
குடைபிடித்து நில்லுங்கள், வட்டத்துள் நில்லுங்கள்
சொல்லுகின்ற காவலரை ஏளனமாய்ப் பார்க்கிறார்கள்
நக்கல் செய்து சிரிக்கிறார்கள்
நிதியளிக்கும் வள்ளல்கள்
போனவாரம் எடுத்துச் சென்ற வண்டியெங்கே கேட்கிறார்கள்
முதல்மரியாதை பெறும் தமிழகத்தின் முதல் மக்கள்.

கடந்த சில நாட்கள் வரை குடிகாரன் என்ற பெயரில்
கிண்டலாக அழைக்கப்பட்ட
இன்றைய மதுப்பிரியர்கள்.

*கிராத்தூரான்*

கண்ணீர் கேள்விகள்(10 ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்விகளும் ஆசிரியர்களின் திகைப்பும்) 

ஒன்றாம் தேதி தேர்வு என்று சொல்கிறீர்களே ஐயா
எப்படி நாங்கள் எழுதுவது சொல்லுங்கள் ஐயா?
ஊரடங்கில் ஊர் உலகம் முடங்கியே கிடக்க
நாங்கள் செய்த பாவம் என்ன சொல்லுங்கள் ஐயா?

வெளியில் வந்தால் தொற்றுவரும் சொன்னார்கள் ஐயா
தேர்வுகளை அன்று தள்ளி வைத்தார்கள் ஐயா
கொரோனாப் பரவல் அன்றோ சிறிது கூட இல்லை
கொரோனா பரவாத இடம் இன்று இல்லை.

பத்தாம் வகுப்பு என்று சொன்னால் தொற்றாதா கொரோனா?
பொதுத்தேர்வு என்று சொன்னால் ஒதுங்கிடுமா கொரோனா?
பயத்தினாலே மனம் வைத்துப் படிக்க முடியவில்லை
படிக்கின்ற எதுவுமே மனதில் பதிவதில்லை.

ஒன்றாக வரும் நேரம் பாதுகாப்பாய் உணர்வோம் 
தறுதலைகள் எதிர்வந்தால் ஒன்றாக எதிர்ப்போம்
ஒண்டியாக வரச்சொன்னால் என்னதான் செய்வோம்
உங்களுடைய மகளைப் போல் கேட்கின்றேன் ஐயா.

மாணவர்கள் பலபேர்கள் வருவார்களே ஐயா
தனித்தனியாய் அனைவருமே இருப்பார்களா ஐயா?
சந்தித்தால் பேசாமல் செல்வார்களா ஐயா?
ஒருவர் நோய் பலருக்கும் பரவாதா ஐயா?

எங்கிருந்தோ வருவார்கள் ஆசிரியர்கள் அறைக்குள் 
தேர்வுத்தாள் தருவார்கள், கையொப்பம் கேட்பார்கள்
நோய்த்தொற்று அப்போது பரவாதா ஐயா?
எழுதுமுன்னே எங்கள் மனம் தளராதா ஐயா?

உங்களுடைய பிள்ளை என்றால் அனுப்புவீர்களா ஐயா?
பொது இடத்தில் ஒன்று சேர விடுவீர்களா ஐயா?
எங்களுடைய உயிருக்கு மதிப்பில்லையா ஐயா?
மரியாதை குறையாமல் கேட்கின்றேன் ஐயா?

உயிர் போன பின்னாலே தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால்
போன உயிர் திரும்பி வந்து சேருமா ஐயா?
சான்றிதழை மட்டும் வைத்து எங்களது பெற்றோர்கள்
சாகும் வரை செத்துச் செத்து வாழவேண்டுமா ஐயா?

மாணவர்கள், பெற்றோர்கள் கேள்விகளால் துளைத்துவிட 
பதில்சொல்லத் தெரியாமல் தவிக்கிறார்கள் ஆசிரியர்கள்.
புண்பட்ட இதயத்தோடு இரத்தக் கண்ணீர் வடித்தவாறே
பரிதவிக்கும் மாணவரைப்  பரிதாபமாய்ப் பார்க்கிறார்கள்.

யார் செய்த பாவமிது மௌனமாகக் கேட்கிறார்கள்.

*கிராத்தூரான்.*

குடும்பமே அச்சாணிஉலகமொரு தேரென்றால் குடும்பமே அதன் அச்சாணி!
சின்னஞ்சிறு குடும்பங்களின்
வலிமையால்தான்
உலகமாம் தேரின் ஓட்டம் அழகாகிறது!
குடும்பத்தின் அச்சாணி கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான பிணைப்பு!
தலையில் சூடும் பூவின்காம்பின்
பாரம் தாங்குவாளா இவள் என்று துடிக்கும் கணவனும்
இறைவா என்நலத்தையும் இவருக்கே சேர்த்துக் கொடுத்துவிடு!என்று இறைஞ்சும் மனைவியும் இருக்கும் வீட்டில் அன்பின் பிணைப்பு அதிகமாக இருக்கும்! வலுவான அன்பிலே பிறக்கும் குழந்தைகள் அறிவோடு திகழ்வார்கள்!
நாரால் தொடுத்த அழகிய பூமாலையாய்க் குடும்பம் திகழும்!
குடும்பத்தின் உறவுகளிடையே இருக்கும் பிணைப்பு உடையாமல் காப்பது கணவன்மனைவியரின்
தலையாயக் கடமையாகும்!
பிணைப்பு உடைந்தால் அந்தோ! வீடுகள் துண்டாகும்!
வீடுகள் துண்டானால் நாடுகள் துண்டாகும்!
நாடுகள் துண்டானால் உலகத்தின் அச்சாணி முறியும்!
முறிந்தால் உலகத்தேர் எவ்வாறு ஓடும்?
ஆதலின் குடும்பத்தை வலுவாக்குவோம்!அன்பென்ற ஆயுதத்தால்!

த.ஹேமாவதி
கோளூர்

மாற்றங்கள்நினைப்பது ஒன்றாக நடப்பது மற்றொன்றாக 
மாறிவிட மனதினிலே வருகிறது மாற்றங்கள்.
போற்றுவதும் தூற்றுவதும் போட்டி போட்டு நடக்கையிலே
பார்த்து நிற்போர் பார்வையிலோ பலவிதமாய் மாற்றங்கள்.

எதை ஏற்றுக் கொள்வது எதை விட்டுச் செல்வது 
எதுவுமே புரியாமல் மனதில் தடுமாற்றங்கள்.
மாற்றங்கள் மயங்க வைக்க தடுமாற்றம் அதிகரிக்க 
கடைசியிலே நிலைப்பதுவோ பலவித ஏமாற்றங்கள்.

மாற்றங்கள் வந்துவிட்டால் ஏற்றம் தான் இனி என்றும் 
கூற்றுவனே வந்தாலும் அதில் இல்லை மாற்றம் ஒன்றும்
என்று எண்ணி நின்றவரோ ஏமாற்றம் சந்தித்தால்
எள்ளி நகையாடிடுவார் தங்களது நிந்திப்பால்.

மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கின்ற வேளையிலும் 
மாற்று உண்டு என்று மனம் தேற்றுவதும் சான்றாக.
தோற்றுப் போன பின்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது 
காற்று போன திக்கினிலே பார்த்து நிற்பார் ஒற்றையாக.

மனதுக்குள் மாற்றங்கள், மனிதருக்குள் மாற்றங்கள்
புனிதரென்று காட்டி நிற்கத் தோற்றத்தில் மாற்றங்கள்
மனிதரென்று காட்டி நிற்க மறைக்கப்படும் மாற்றங்கள்
நன்மை தான் பயக்குமென்றால்....
நன்மை தான் பயக்குமென்றால்....
நடை பெறட்டும் மாற்றங்கள்.

*கிராத்தூரான்*

அகர வரிசையாய் அம்பேத்கர்# அடக்குமுறைக்கு ஆட்பட்ட சமூகத்தில் சிப்பிக்குள் முத்தாய்!

# ஆதிக்க சமுகத்தினருக்கு எதிராக ஆத்திரம் கொள்ளாமல் ஆர்பரிக்கும் அறிவாற்றலாய்!

# இடஒதுக்கீடு என்னும் சமத்துவத்தை சமரசமில்லாமல் வித்திட்டவராய்!

# ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என தொடங்கும் குறளுக்கு இலக்கணமாய்!

# உரிமை போராடங்களில் வெற்றி திருமகனாக வலம் வந்தவராய்!

#  ஊக்கமுடைமையின் அடையாளமாக உச்சம் தொட்டவராய்!

#  எக்காலத்திலும் இந்தியாவின் தவிர்கயியலாத ஆளுமையாய்!

#  ஏளனங்கள், அவமானங்களை புறம்தள்ளி முனைவர், பாரிஸ்டர் பட்டங்களை பெற்றவராய்!

#  ஐ-தலைவன், தந்தை. ஆம் தன்னிகரற்ற தலைவனாக, இந்திய அரசியலமைப்பின் தந்தையாக, தன்னை பரினமித்தவராய்!

# ஒப்பற்ற இந்திய அரசியலமைப்பால் ஒற்றுமையில் வேற்றுமையைக் களைந்தவராய்!

#  ஓங்கி, உயர்ந்த புகழின் உச்சத்திலும் அடக்கம், அமைதி, அகிம்சை, வழி நின்றவராய்!

#  ஔவை என்ற தமிழ்மகளும் தலை வணங்குவாள், உன் வாழ்நாள் சாதனையை கண்டவராய்!

#  ஃ -தமிழில் ஆயுத எழுத்து, தனிநிலையாம். ஆம் உலக தலைவர்களுள் தனிநிலையாய்,ஆயுத எழுத்தாய் அம்பேத்கர்!

 **அம்பேத்கர்,* 
 *சாதித்த தலைவர்!* 
 *சாதிய தலைவரல்ல* . 

 *_புரிதலுக்குட்பட்டு
_அறிவோம்
_அம்பேத்காரியம்

இவண்
புரிதலுக்காக, 
சொ.சத்தியன்

Monday, 11 May 2020

கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; 'கிருமி ஞானம்'. வைரமுத்து கவிதை''கொரோனா விடுமுறை
கொண்டாட்டமல்ல;
'கிருமி ஞானம்'.

கன்னத்திலறைந்து
காலம் சொல்லும் பாடம்!
ஊற்றிவைத்த கலத்தில்
உருவம் கொள்ளும் தண்ணீரைப்போல்
அடங்கிக் கிடப்போம்
அரசாங்க கர்ப்பத்தில்
இது கட்டாய சுகம்
மற்றும் விடுதலைச் சிறை

மரணம் வாசலுக்கு வந்து
அழைப்பு மணி அடிக்கும் வரைக்கும்
காது கேட்பதில்லை மனிதர் யார்க்கும்

ஓசைகளின் நுண்மம் புரிவதே
இந்த ஊரடங்கில்தான்

இந்தியப் பறவைகள்
தத்தம் தாய்மொழியில் பேசுவது
எத்துனை அழகு!

நீர்க்குழாயின் வடிசொட்டோசை
நிசப்தத்தில் கல்லெறிவது
என்னவொரு சங்கீதம்!

தரையில் விழுந்துடையும்
குழந்தையின் சிரிப்பொலிதானே
மாயமாளவ கெளளையின் மாதா பிதா!

மழையிற் சிறந்த மழை
குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!

இன்றுதான் நம்வீட்டில்
ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்

வாங்குவாரற்று
நமக்கே சொந்தமாகிப் போயின
விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்

இதுவரை உறவுகளைத்தானே...
இப்போதுதான்
கைகளை மட்டுமே கழுவுகிறோம்

பாம்பு கடித்துச் செத்தவனைவிட
செருப்புக் கடித்துச் செத்தவன் அதிகம்
புலியடித்து இறந்தவனைவிட
கிலியடித்து இறந்தவனதிகம்

அச்சத்திலிருந்து
அறிவு தயாரிப்போம்
குப்பையிலிருந்து மின்சாரம்போல்.

கொரில்லா யுத்தம்
செய்கிறது கொரோனா
நாமும் சற்றே
மறைந்து சமர்செய்வோம்
மரண பயத்திலிருந்து
மருந்து தயாரிப்போம்

உலகப் போரின்
உயிர்களை விடவும்
உழவர்குடியின்
தற்கொலை விடவும்
காதல் தோல்வியின்
சாவினை விடவும்
கொரோனா சாவு குறைவுதான்

நம்புங்கள்!
விஞ்ஞானத்தின் சுட்டுவிரலுக்கும்
கட்டை விரலுக்கும் மத்தியில்
இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும்

பூமியின் உயரங்களில்
ஏறிநின்று கூவுவோம்

சூரியனில் இரையுண்டு
பூமிவந்து முட்டையிடும்
புதுயுகப் பறவைகள் நாமென்று

எரிமலையில் உலைகூட்டி
நட்சத்திரங்கள் பொங்கி உண்ணும்
பூதங்கள் நாமென்று

ஊழி முடிவிலும்
காற்று உறைந்துறு காலத்திலும்
சுவாசிக்க மிச்சமிருக்கப் போவது
கரப்பான் பூச்சியும்
மனிதப் பூச்சியுமென்று.

மனிதர் மரிக்கலாம்
மனிதகுலம் மரிக்காது

பாதிக்கப்பட்டோர் யாரும்
பாவிகள் அல்லர்
எல்லா நோய்க்கும் முதல் மருந்து
பாசாங்கில்லாத பாசம்தான்.

மாண்டவரை விடுங்கள்
பசித்தோர் முகம் பாருங்கள்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
வாழும் மனிதருக்கெல்லாம்

பசித்த செவிகளுக்கு -
சொற்கள் புரியாது
சோறு புரியும்!''

Sunday, 10 May 2020

கொரோனா ஆரம்பம் முதல் இறுதிவரை வைரமுத்து கவிதைதூணிலுமிருக்கும்

துரும்பிலுமிருக்கும்

ஞாலமளந்த ஞானிகளும்

​​​ சொல்பழுத்த கவிகளும்

​​​ சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்

​​​கொரோனா சொன்னதும்

​​​குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.
​​​
​​​உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்

​​​இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு

​​​நுரையீரல்தான் நொறுக்குத் தீனி

​​அகிலத்தை வியாபித்திருக்கும்

இந்தத்

​​​தட்டுக்கெட்ட கிருமியின்

​​​ஒட்டுமொத்த எடையே

​​​ஒன்றரை கிராம்தான்

​​​இந்த ஒன்றரை கிராம்

​​​உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்​

​​​உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!

​​​சாலைகள் போயின வெறிச்சோடி

​​​போக்குவரத்து நெரிசல்

​​​மூச்சுக் குழாய்களில்.

​​​தூணிலுமிருப்பது

​​​ துரும்பிலுமிருப்பது

​​​ கடவுளா? கரோனாவா?

​​​இந்த சர்வதேச சர்வாதிகாரியை

​​​வைவதா? வாழ்த்துவதா?

​​​தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த

​​​நெல்லிக்காய் மனிதர்கள் இன்று

​​​நேர்கோட்டு வரிசையில்

​​​சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை

​​​இன்று வட்டத்துக்குள்

உண்ட பிறகும் கைகழுவாத பலர்

இன்று

​​​உண்ணு முன்னே

புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை

​​​ இன்றுதான்

​​​ முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது

மாதமெல்லாம் சூதகமான

​​​கங்கை மங்கை

​​​அழுக்குத் தீரக் குளித்து

​​​அலைக் கூந்தல் உலர்த்தி

​​​நுரைப்பூக்கள் சூடிக்

​​​கண்சிமிட்டுகின்றாள்​

​​​ கண்ணாடி ஆடைகட்டி.

​​​குஜராத்திக் கிழவனின்

​​​அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு

​​​கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!

ஆனாலும்

அடித்தட்டு மக்களின்

அடிவயிற்றிலடிப்பதால்

இது முதலாளித்துவக் கிருமி.

மலையின்

தலையிலெரிந்த நெருப்பைத்

திரியில் அமர்த்திய

திறமுடையோன் மாந்தன்

இதையும் நேர்மறை செய்வான்.

நோயென்பது

பயிலாத ஒன்றைப்

பயிற்றும் கலை.

குருதிகொட்டும் போர்

குடல் உண்ணும் பசி

நொய்யச் செய்யும் நோய்

உய்யச் செய்யும் மரணம்

என்ற நான்கும்தான்

காலத்தை முன்னெடுத்தோடும்

சரித்திரச் சக்கரங்கள்

பிடிபடாதென்று தெரிந்தும்

யுகம் யுகமாய்

இரவைப் பகல் துரத்துகிறது

பகலை இரவு துரத்துகிறது

ஆனால்

விஞ்ஞானத் துரத்தல்

வெற்றி தொடாமல் விடாது

மனித மூளையின்

திறக்காத பக்கத்திலிருந்து

கொரோனாவைக் கொல்லும்

அமுதம்

கொட்டப் போகிறது

கொரோனா மறைந்துபோகும்

பூமிக்கு வந்துபோனதொரு சம்பவமாகும்

ஆனால்,

அது

கன்னமறைந்து சொன்ன

கற்பிதங்கள் மறவாது

இயற்கை சொடுக்கிய

எச்சரிக்கை மறவாது

ஏ சர்வதேச சமூகமே!

ஆண்டுக்கு ஒருதிங்கள்

ஊரடங்கு அனுசரி

கதவடைப்பைக் கட்டாயமாக்கு

துவைத்துக் காயட்டும் ஆகாயம்

கழியட்டும் காற்றின் கருங்கறை

குளித்து முடிக்கட்டும் மானுடம்

முதுகழுக்கு மட்டுமல்ல

மூளையழுக்குத் தீரவும்.

கொரோனாவும் கொரில்லாவும் வைரமுத்து கவிதை

கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம்.

கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம் கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை

மரணம் வாசலுக்கு வந்து அழைப்பு மணி அடிக்கும் வரைக்கும் காது கேட்பதில்லை மனிதர் யார்க்கும்

ஓசைகளின் நுண்மம் புரிவதே இந்த ஊரடங்கில்தான்

இந்தியப் பறவைகள் தத்தம் தாய்மொழியில் பேசுவது எத்துனை அழகு! நீர்க்குழாயின் வடிசொட்டோசை நிசப்தத்தில் கல்லெறிவது என்னவொரு சங்கீதம்!

தரையில் விழுந்துடையும் குழந்தையின் சிரிப்பொலிதானே மாயமாளவ கெளளையின் மாதா பிதா!

மழையிற் சிறந்த மழை குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!

இன்றுதான் நம்வீட்டில் ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்

வாங்குவாரற்று நமக்கே சொந்தமாகிப் போயின விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்

இதுவரை உறவுகளைத்தானே... இப்போதுதான் கைகளை மட்டுமே கழுவுகிறோம்

பாம்பு கடித்துச் செத்தவனைவிட செருப்புக் கடித்துச் செத்தவன் அதிகம் புலியடித்து இறந்தவனைவிட கிலியடித்து இறந்தவனதிகம்

அச்சத்திலிருந்து அறிவு தயாரிப்போம் குப்பையிலிருந்து மின்சாரம்போல். கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா நாமும் சற்றே மறைந்து சமர்செய்வோம்

மரண பயத்திலிருந்து மருந்து தயாரிப்போம்

உலகப் போரின் உயிர்களை விடவும் உழவர்குடியின் தற்கொலை விடவும் காதல் தோல்வியின் சாவினை விடவும் கொரோனா சாவு குறைவுதான்

நம்புங்கள்! விஞ்ஞானத்தின் சுட்டுவிரலுக்கும் கட்டை விரலுக்கும் மத்தியில் இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும்

பூமியின் உயரங்களில் ஏறிநின்று கூவுவோம்

சூரியனில் இரையுண்டு பூமிவந்து முட்டையிடும் புதுயுகப் பறவைகள் நாமென்று

எரிமலையில் உலைகூட்டி நட்சத்திரங்கள் பொங்கி உண்ணும் பூதங்கள் நாமென்று

ஊழி முடிவிலும் காற்று உறைந்துறு காலத்திலும் சுவாசிக்க மிச்சமிருக்கப் போவது கரப்பான் பூச்சியும் மனிதப் பூச்சியுமென்று.

மனிதர் மரிக்கலாம் மனிதகுலம் மரிக்காது

பாதிக்கப்பட்டோர் யாரும் பாவிகள் அல்லர் எல்லா நோய்க்கும் முதல் மருந்து பாசாங்கில்லாத பாசம்தான்.

மாண்டவரை விடுங்கள் பசித்தோர் முகம் பாருங்கள்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் வாழும் மனிதருக்கெல்லாம்

பசித்த செவிகளுக்கு - சொற்கள் புரியாது சோறு புரியும்!

அன்னையர் தினம்*


அன்னை என்றால் அன்பு, தியாகம், கருணை இப்படி ஆயிரம் வார்த்தைகளுக்கு வடிவம் தருபவளாக அம்மாக்கள் அனைவருமே இருக்கின்றோம் இரு குழந்தைளுக்கு தாய் என்ற முறையில் என்னையும் சேர்த்து. இதில் தாய்மையில் பிழைகண்ட சில அன்னையரும் உண்டு. அதற்கு அவர்தம் வாரிசே சாட்சி. ஆம் அன்னையர் தம் பிள்ளை வளர்ப்பினை அருமையாய் செய்து விட்டால் அங்கேறாது இங்கே அளப்பரிய குற்றம். சிறைச்சாலைகள் சிறிதாவது இங்கே குறைந்திருக்கும். அன்னையர் தினம் கொண்டாடுவதில் தவறும் இல்லை. அன்னையின் அன்பினை நான் அவமதிக்கவும் இல்லை. உலகில் உள்ளஉயிர்களில் அன்னையர் மட்டுமே அதிக வலி தாங்கி புது உயிர்களை பூமிக்கு கொணர்கின்றனர். அப்படியென்றால் அதன் மதிப்பை உணர்ந்து மாண்புடன் வளர்ப்பது அவள் பொறுப்பல்லவா? அது போகட்டும், அன்னைக்கு மட்டுமே அதிகம் தெரியும் ஓர் உயிரின் மதிப்பு அதை பிரசவிப்பள் அவள் என்பதால், அப்படியிருக்க அடுத்த வீட்டுப் பெண் தன் பிள்ளைக்கு மனைவியாகும் போது எங்கு செல்கின்றது உங்கள் அன்பு? பாசமும் நேசமும் பகிரப்படுவதில்லையே அவர்களிடம்? எங்கே சென்றது தாய்மை? இனியாவது சிந்தித்து திருந்தட்டும் இப்படிப்பட்டவர்கள். தான் பெறதாத குழந்தையை தனதாக பாவித்து அனாதை, ஆதரவற்றோக்கு அன்னையாய் வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாக்களுக்கும் அவர் வழியில் செயலாற்றும் அனைவருக்கும் வாழ்த்து சொல்வோம் நம் அம்மாவுக்கு சொல்வதோடு சேர்த்துஅன்னையர் தின வாழ்த்தினை.
செ. வினிட்டா கரோலின்

அன்னையே!உயிர்த் தந்து
உருத் தந்து
உலகைக் காட்டி
உவகை ஊட்டியவள் நீ!

உற்றவனையும்
பெற்றவனையும்
உலகு போற்றிட
உயர்த்திய உத்தமி நீ!

ஆன்றோனுக்கும்
சான்றோனுக்கும்
அறிஞனுக்கும்
அரிச்சுவடி நீ!

விதையில்
விருட்சம் போல
மானிடத் துளியில்
மாக்கடல் நீ!

ஆணில் பாதியென்ற
அகந்தை
அழித்தவளல்ல
அவனியே நீ!

ஆணையும்
பெண்ணையும்
அகத்தே கொண்ட
பேரண்டம் நீ!

அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

தோழமையுடன்...
*🙏🏻த.தாஸ்🙏🏻*

அன்னைக்குத் தாலாட்டு


கண்ணுறங்கு என் தாயே கவலையின்றிக் கண்ணுறங்கு
கருணை உள்ளம் கொண்டவளே
களைப்பின்றிக் கண்ணுறங்கு.

பத்து மாதம் சுமந்த போதும்
வலி பொறுத்துப் பெற்றபோதும்
பட்ட துயர் எலாம் மறந்து
பத்திரமாய் நீ உறங்கு.

பள்ளிக் கூடம் அனுப்பி விட்டு வரும் நேரம் எதிர்பார்த்து
விழிநட்டுக் காத்திருந்த வலி மறந்து கண்ணுறங்கு.

வேலை தேடி வெளியூரில் உனைப்பிரிந்து சென்றதையும்
புதுவாழ்வு என்ற பேரில் புருஷனுடன் சென்றதையும்
நினைத்து நினைத்துக் கலங்காமல் 
நிம்மதியாய் நீ உறங்கு.

வேளைக்கு உண்பானோ பசியாலே தவிப்பாளோ  
எனைப் போன்று எவரேனும் நல் உணவு அளிப்பாரோ
என்கின்ற கவலையெல்லாம் ஓரம் கட்டி நீ உறங்கு. 

தலைவலிக்குத் தைலமிட்டுத் தலைமாட்டில் இருந்தது போல் 
காய்ச்சலன்றுக் கஞ்சி தந்து கண்விழித்துப் பார்த்தது போல்
யார் பார்ப்பார் எனக் கலங்கி வருந்தாமல் கண்ணுறங்கு.

கால்மாட்டில் இருக்கின்றேன் கால் பிடித்து விடுகின்றேன்
காலையில் நீ எழுந்த பின்னே அன்னையே நான் செல்கின்றேன்
அமைதியுடன் கண்ணுறங்கு என் தாயே கண்ணுறங்கு.

உனை மறந்து நொடிப்பொழுதும் எனை நினைக்கும் என் தாயே
மெல்லிதயம் கொண்டவளே 
கவலையின்றிக் கண்ணுறங்கு.

*கிராத்தூரான்*

🌹Dedicated to all mothers.🌹

கூவும் குயிலே சேதி என்ன?


கூவும் குயிலே.....
சேதி என்ன சொல்வாய் நீ
கண்டுவந்த சேதியையும், கொண்டுவந்த சேதியையும்
விரைவாகச் சொல்லிவிடு விருப்பமுடன் கேட்கின்றேன்.

எத்தனை தூரம் தான் சென்று வந்தாய் நீ
எத்தனை மனிதர்களைப் பார்த்து வந்தாய் நீ
எத்தனை பேரிடம் பேசி வந்தாய் நீ
என்னென்ன சேதிகள் கொண்டு வந்தாய் நீ.

யாருமே பார்க்காமல் கிளைகளுக்குள் மறைந்திருந்து
என்னென்ன பார்த்தாய் சொல்லு நீ குயிலே
பார்த்ததை வெளிப்படுத்த அழகான உன்னிசையில்
இனிமையாய்ச் சொல்லிப் புரியவை குயிலே.

ஊரடங்கை மதிக்காது ஊர்சுற்ற வந்தவரை
காவலர்கள் துரத்துவதைப் பார்த்தாயா சொல் குயிலே
வீட்டுக்கும் தெரியாமல் ஊருக்கும் தெரியாமல்
தோப்பிலிருந்த காதலரைப் பார்த்தாயா பூங்குயிலே.

வீட்டுக்குள் அமராமல் விளையாட வந்தவரும்
தோப்புக்குள் அமர்ந்தவாறே காதல் செய்து மகிழ்ந்தவரும்
பறக்கும் கேமராவைக் கண்டதும் பயந்தோடுவதைப்
பார்த்து நீ இரசித்ததைப் பகிர்வாயா மாங்குயிலே.

கூவும் குயிலே......
சேதி என்ன சொல்வாய் நீ.
கண்டுவந்த சேதியையும், கொண்டுவந்த சேதியையும்
விரைவாகச் சொல்லிவிடு விருப்பமுடன் கேட்கின்றேன்.

*கிராத்தூரான்*

Thursday, 7 May 2020

மதியை வென்ற மதுமதிகெட்டுப் போனவர்கள் மது தேடி அலைகின்றார்
மது இல்லை என்றாலோ மனம் கலங்கி நிற்கின்றார்
மது கண்ணில் பட்டவுடன் மதிமயங்கி விடுகின்றார்
கதிகெட்டுப் போகும் என்ற நிதர்சனத்தை மறக்கின்றார்.

அடிமையாக மாறுகின்றார் அதை உணர மறுக்கின்றார்
தனிமையை மறப்பதற்கு அது மருந்து என்கின்றார் 
தன்னிலையை மறந்துவிட்டு தவறுசெய்ய விழைகின்றார் 
தலைகால் புரியாது தறிகெட்டு அலைகின்றார்.

சட்டத்தின் துணை கொண்டு திட்டங்கள் பல போட்டு
மதுக்கடையைத் திறந்து விட்டு மக்களுக்காய் என்கின்றார்
மக்கிப் போன மனம் படைத்தோர் வெட்கமே இல்லாமல் சொர்க்கமது என்று சொல்லி மட்டையாகப் படுக்கின்றார்.

குடி குடியைக் கெடுக்குமென்று சொல்லியே கொடுக்கின்றார்
குடி கெட்டுப் போனாலும் தடை செய்ய மறுக்கின்றார்
அடிபட்டு விழுந்தாலும் மிதிபட்டுத் தளர்ந்தாலும் 
விதியென்று சொல்லிவிட்டுக்  குடிமக்கள் தொடர்கின்றார்.

தடைக்காலம் மதுக்கடையை மறக்கவைக்கும் என நினைத்தால்
மறப்பதற்கு முன்னாலே திறக்கவேண்டும் என்கின்றார்
நிதிநிலையைச் சீராக்க மதுக்கடைதான் வழி என்று
மதியிழக்க வைக்கின்றார்
மதிப்பிழந்து நிற்கின்றார்.

மதியிழக்க வைத்தவர்கள்
மதிப்பிழந்து நிற்கின்றார். 

*கிராத்தூரான்*

கற்பனைக்கும் அப்பால்

            
உலைவைத்து பொங்கிட
கால்பணமும் கையிலில்லை!
சிறுவாட்டு பணமெல்லாம்
போன திசை தெரியவில்லை! 
புது வருசம் வந்திட்டாலும்
புதுமையாக ஏதும் வரவில்லை!
எப்போதும் நமக்கு சகாயம்....
நம்கைதான்  மாற்றமில்லை!               
ஆண்டவனைக்கும்பிட்டு தூங்கி
அவனையே நினைத்தெழுந்ததிலும்
ஆகாசம்வரை அளக்க போதுமில்லை!
வானத்து இடிகூட சொல்லிவிட்டு 
தரையிறங்கும் வேளைதனில்.....
வீசும் காற்றைக்கலங்கடித்தே
வந்ததே கொள்ளை நோய்!
கை கழுவு ,முகக்கவசமிடு,
இடைவெளிக்களிக்காதே
இடைவேளை என்றார்கள்!
வீட்டிலிரு இல்லையெனில்
காட்டிலிருப்பாய் என்றார்கள்!
கைதட்ட தீபமேற்றச்சொல்லி.....
குறளிவித்தையெல்லாங்காட்டி
குரங்காய் நமை ஆடவிட்டார்கள்!
இன்று தீரும் நாளை தீரும்
என்றிருந்த நம் எண்ணத்தை
என்றும் தீரா தீயிலிட்டார்கள்!
மதுக்கடைகளை திறக்க
ஆணை பெற்று விட்டார்கள்!
மனிதர்களைக் காப்பது
முக்கியமில்லையாம்!
மதுப்பிரியரைக் காவாக்கால்
வீழ்ந்திடுமாம் பொருளாதாரம்....
நாற்பத்தைந்து நாள் விரதமெல்லாம்
நாசமாய்ப்போனதிங்கே!
இனிமேல் கோரோனாவே,
ஆதிக்கம் செலுத்தியிங்கே,
எமை வாரிக்கொண்டுபோனாலும்.....
நன்மையாகுமிங்கே எனும்
கூக்குரலே தேசிய கீதமாய்
இனி ஒலிக்கும்எங்கெங்குமே!

வத்சலா

மாதுவை விட்டு மது


இத்தனைநாள் என்னுடனே இல்லத்திலிருந்தான்!
அத்தனை பணியிலும் துணையாகி நின்றான்!
சமைக்கையில் காய்கறிகள் வெட்டித்தந்தான்!
வெட்டுகையில் என்பக்கம் ஒட்டியமர்ந்தான்!
துவைக்கையில் கைகள் நோகுமென்று தானே அலசிப் பிழிந்தும் தந்தான்!என்மனதிலும் காதலைப் பிழிந்து ஊற்றினான்!
தலைவாருகையில் பக்கத்தே வந்தமர்ந்து பூச்சூட்டி விடுவதாக கொஞ்சலுடன் கெஞ்சுவான்!அவன்கொஞ்சுமொழி
கேட்பதை நீட்டிக்க நானும் காலந்தாழ்த்தியே சரியென்பேன்!
சாப்பிடும் வேளையிலோ தன்கையால் எனக்கு ஊட்டிவிட்டு
மகிழ்வான்!
ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைக்கு மனதுள்ளே நன்றிசொல்லி மகிழ்வேன்!
இத்தனைநாள் மதுவை மறந்து மாதுஎன்னுடன் ஓன்றியிருந்தவன் இதோ இன்றுகாலையில் வீட்டைவிட்டுப் போனவன் இன்னமும் இல்லந்திரும்பவில்லை!
என்மனதின் கவலையும் ஓயவில்லை! நேற்றிலிருந்தே ஒரே பரபரப்பு அவனுள்ளிருந்ததை
நானறிவேன்!காரணம் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு!
மாதுவாம் மனைவியை விட்டுவிட்டு இனி மதுவோடு மீண்டும் இணைந்தானோ?மதுவுண்ட மயக்கத்தில் எங்கு
வீழ்ந்து கிடக்கின்றானோ?

த.ஹேமாவதி
கோளூர்

ஏன் மறுக்கிறாய்?அரசு சொன்ன 144 ஐ
ஏற்றுக் கொள்ளும் நீ
ஏன் நான் சொன்ன
143 ஐ மட்டும்
ஏற்றுக் கொள்ள
மறுக்கிறாய்..??

Tuesday, 5 May 2020

நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?கிருமிகள் உட்செல்லாமல்
முகக்கவசம் அணிந்திருந்து 
எலுமிச்சை இஞ்சி போட்டுக் 
கொதிக்கவைத்த நீர் அருந்தி
எண்ணெயும் காரமும் 
அளவுக்கு மிஞ்சாது 
சுவை பார்த்து உண்ணாமல்
தேவைக்கு உண்கின்றேன்.

பால் சேர்க்காத் தேனீரில்
எலுமிச்சைச் சாறு விட்டு
சர்க்கரை சேர்க்காமல்
பதிலுக்குத் தேன் சேர்த்து
பார்த்துப் பார்த்து நான் பருகி 
பசித்த வேளை நான் உண்டு
சுக்கு, மிளகு, கிராம்பு போட்டுக்
கொதித்த நீரும் அருந்துகின்றேன்.

அதிக நேரம் விழிக்காது 
நேரத்தோடு நான் உறங்கி
அதிகாலை கண்விழித்து 
உடற்பயிற்சி பல செய்து
உடலுக்கும் மனதிற்கும் 
சரியாக ஓய்வளித்து
புத்தகங்கள் பல படித்து
புத்தூக்கம் பெறுகின்றேன்.

இத்தனையும் பார்ப்பவர்கள்
ஏளனமாய்க் கேட்கிறார்கள் 
ஏன் இத்தனைக் கட்டுப்பாடு
இறப்பதற்கு பயமா என்று.
இல்லையடி என்னவளே 
எனக்காகச் செய்யவில்லை
நான் இறக்காமல் இருக்க
இதை எதையும் செய்யவில்லை.

எனக்குள்ளே இருக்கின்ற 
உனக்காகச் செய்கின்றேன்
உன்னுடைய நலன் காக்க 
இவை அனைத்தும் செய்கின்றேன்
உனக்காக வாழ்கின்ற
நான் இதோ கேட்கின்றேன்
நீ இங்கு சுகமே.
நான் அங்கு சுகமா?

சொல்லடீ நீ என்னவளே

நீ இங்கு சுகமே.
நான் அங்கு சுகமா? 

*கிராத்தூரான்

Monday, 4 May 2020

தாலி


(கொரோனா  அறையில் பணிபுரியும் செவிலியரின் கண்ணீர்.) 

என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
நீ அன்று என் கழுத்தில்
தாலி கட்டும் வேளையிலே
உயிருடன் நான் இருக்கும் வரை
ஒரு நாளும் ஒரு பொழுதும்
அதைக் கழற்றும் வேளைமட்டும் 
வரக்கூடா தென நினைத்தேன்
வரவே கூடா தெனநினைத்தேன்.

என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
தாலியாம் இவ்வுலோகத்தில்
கொரோனாத் தொற்று ஏற்பட்டால்
இருபத்து நான்கு மணி நேரம் இருக்குமென்று சொல்கிறார்கள்
நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் பாதிக்கும்
அதனால் அதைக் கழற்றவேண்டும் 
என்று கழற்ற வைக்கிறார்கள்.

என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
உயிர் காக்கும் வேலையிலே 
உணர்வுக்கு மதிப்பேது 
உயிருக்கு உணர்வூட்டும்
தாலிக்கு இடமேது
உடலோடு உறவாடி உன் இருப்பைக் காட்டி நிற்கும்
தாலியைக் கழற்றிவிட்டால் 
என் உடம்பில் உயிரேது. 

என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
செவிலி வேலை செய்கின்றேன்
கடமையையும் உணர்கின்றேன் 
கடமையைச் செய்துவிட்டுத் தனியறையில் தவிக்கின்றேன் 
இறைமுன்னால் நின்றவாறே
தாலியை நான் கழற்றுகின்றேன்
என் உயிராம் என் கணவன்
கையில் தந்து செல்கின்றேன்
என் உயிரை என் உயிரின்
கையில் தந்து செல்கின்றேன்.

என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
கொரோனா அறைக்குள்ளே சென்றபோது கலங்கவில்லை
தனியறையில் தனிமையாக இருந்தபோதும் கலங்கவில்லை
தாலியின்றி இருப்பதனை 
நினைக்கக் கூட முடியவில்லை
தாலியைக் கழற்றையிலே
நானாக நானில்லை
நானாக நானில்லை.

*கிராத்தூரான்

Sunday, 3 May 2020

காதல் கடிதம் எழுதினேன் பேனா மையும் தீர்ந்தது.


உன்னை வருணிக்க வார்த்தைகள் தேடினேன்
கண்டு கொண்ட வார்த்தைகளை வரிசையில் எழுதினேன்
காதல் கடிதமாய் பலமுறை எழுதினேன்
பேனா மை தீர்ந்ததால் பேனாவை மூடினேன்.

கடிதம் எழுதத் துவங்கும் முன் பேனாவில் மை உண்டா?
வார்த்தையாய் வடிப்பதற்கு காகிதம் இருப்புண்டா?
என்று கூடப் பார்க்காத உனக்கெதற்குக் காதல்
என்று நீ கேட்பதென் காதிலே விழுகிறது.

வகை வகையாய்த் தொகை தொகையாய் 
வார்த்தைகள் எழுதினாலும்
உன்னழகை வருணிக்க வார்த்தைகளால் முடியவில்லை
உன்னழகின் பூரணத்தைச் சொல்லாத காரணத்தால்
முழுமையற்ற கடிதத்தை நான் முடிக்க முடியவில்லை.

உன் அழகைச் சொல்வதற்காய், என் அன்பைப் பகிர்வதற்காய்
நான் முனையும் வேளையிலே வேறெதுவும் நினைவிலில்லை
இன்னும் ஏன் சொல்கின்றேன்
என் குறையைச் சொல்கின்றேன்
உன்னுடைய நினைவு வந்தால் 
நானாக நானில்லை.

கற்பனையில் காவியத்தை வடிப்பதாகச் சொல்வாய் நீ
காவியம் தான் வடிக்கின்றேன்  கற்பனையில் அல்ல மட்டும்.
காவியமாய் வடித்தால் தான்
என் கடிதம் முடிவு பெறும்
பேனா மை வாங்கி வந்தால் என் மனது நிறைவு பெறும்.

காதல் கடிதம் எழுதினேன், பேனா மையும் தீர்ந்தது
பேனா மை தீர்ந்தபோது அது காவியம் எனத் தெரிந்தது.

*கிராத்தூரான்.*

புல்லாங்குழல்

                              இயற்கையின் அற்புதபடைப்பு நீ!
இன்னிசை வழங்கும் வள்ளல் !
வள்ளுவனின் வாய்மொழியை
வாழ்வாதாரமாய் கொண்ட
வித்தகனாய் ஆனதினாலே....
முத்தமிழில் ஒன்று உன்னை
தத்தெடுக்கொண்டதே!
இன்னாசெய்தாரை ஒறுத்தாய்!
ஆம் தீக்கொண்டு உனைச்
சுட்டவரை, துளையிட்டவரை,
விட்டுக்கொடுக்காது அவர் வாழ
வழி செய்தாய் மனங்குளிர!
அதேபோல் காட்டிடை சுழலும் 
வண்டிங்கள் உனைத் துளைப்பதை
வரவேற்றாய் மௌனமாய்!
மழலையர் குறும்புகள் வலிதந்தாலும்
ரசித்தே அரவணைக்கும் தாயாக நீ!
காற்றுவந்து உன் காயம் தடவ...
கானத்தால் நன்றி சொல்கிறாய்!
காத்திருந்து பறவை கூட்டை சேர
நித்திரைப் போர்வையை 
அவைகளுக்கு உன் கானத்தால்
நிறைவாய்த் தருகின்றாய்!.
பூவும் காயும் மரத்தோடு 
கண்ணுறங்கலாம் -ஆனால்
காடே கண்ணுறங்கும் அதிசயத்தை
உன்னால்தானே கண்டேன்!
ஆகவேதான் உன்னைத்தன்
ஆலிங்கனத் தொடுகையில்
வைத்தான் போலும் இந்த
வையம் அளந்த பெருமாளும்!
உன்னில் எழும் ஓசைகொண்டே
ஈர்த்தான் கோபியரை வரும் நாளும்!
ஆரவாரமாய் முழங்கும்
அத்துனை இசைப்பான்களாலும்
அளிக்கமுடியாத உச்சத்தை....
நீ மட்டும் அள்ளித்தருவது
உனைப்படைத்த இறைவன்
மட்டுமே அறிந்த இரகசியமே!
மேடைகளில் நீ எழுப்பும் 
மேன்மையுறு கீத அலாரிப்புகள்....
ஓடையாய் துவங்கி கடலாக
நடைபயில எழுமே ஒருஆர்ப்பரிப்பு!
அதில் சுகத்தோடு சோகமும் 
கலந்ததே வாழ்வெனும் ஒரு 
தத்துவ அர்ப்பணிப்பு!
*வாழ்வே வரம் அடுத்தவர் நலம்தேடி
வாழ்தலே என்றும் சுகம்* எனும்...
சூட்சும் அறிய புல்லாங்குழலே..!
சூரியன் உள்ளளவும் உன்
வாழ்வே என்றும் நிதரிசனம்!

🌹🌹வத்சலா🌹🌹

போராட்டம்


மனிதா........!
நித்திரையின் போது வரும்
இன்பங்களும் துன்பங்களும்
நீ கண்விழித்தவுடன்
கலைந்து விடும்!
உன்னைக் காயப்படுத்தியவரை
நீ மன்னித்து விடு-ஆனால்
காயங்களின் தழும்புகளை
தவறியும் மறந்துவிடாதே!
இறந்தகாலத்தை நினைத்தே!
நிகழ்காலத்தை வெம்பவிடாதே!
எதிர்காலத்தைக் காண
உன் சாம்பல் கூட மிஞ்சாதே!
முள் நிறைந்த செடியில்தான்
அழகிய ரோஜா பூக்கிறது!
உன்னைச் சுற்றியிருப்போர்
உறுத்தும் முட்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்....!
நீ மட்டும் அவர் நடுவே
நிர்மலப்பூவாய் முகம் மலர்த்தி...
அகத்தில் போராட்டத்தை
ஆகுதியாக்க வேள்விச்சாலை 
அமைத்து பொறுமையாய்க்
காத்துக்கொண்டிரு.....
உலகமே உன்னை ஏற்றும்!
விடாமுயற்சியின் 
மறுவுருவம் நீயென போற்றும்! 
எதிர்காலம் உன்காலடி தேடும்!

வத்சலா

இல்லறமென்ற பயணத்திலே


ஆழ்கடலென்பது நம்பிறவி!
அதில் பயணம்செய்பவர்
கணவன்மனைவி!
இல்லறமென்பதே இருவரின் பயணம்!
படகும்துடுப்பும் அவ்விருவர்!
துடுப்புதான் இன்றி படகுசெல்லுமோ?
படகுஇன்றி துடுப்புதான் இயங்குமோ?
இரண்டும் சமபங்காய் ஒத்துழைத்தாலன்றோ
அமைதியாய் ஆனந்தமாய் இல்லறம் நகரும்!
சிலரது இல்லறம் வெறும் படகும்துடுப்புமாய் வெறுமையாய்ச் செல்ல
சிலரது இல்லறமோ
குழந்தைகள் என்ற செல்வத்தைச் சுமந்து செல்லும் படகும்துடுப்புமாய்!
படகின் கோபதாபங்கள் துடுப்பின் மீதும் துடுப்பின் கோபதாபங்கள் படகின்மீதும் காட்டலாம்!
பாசம் உள்ள இடத்தில்தானே கோபத்தையும் காட்ட இயலும்!
இங்குதான் கவனம் மிகமிகத் தேவை!
உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது!
நொறுங்கிய மனது மீண்டும் ஒருங்கமையாது!
அதிலும் குழந்தைகள் வெறும் பொம்மைகளல்ல!
குழந்தைகள் இல்லாமல் ஏங்குவோர் பலரிருக்க உள்ளோர்க்கு பொறுப்புகள் மிகத்தேவை!
குழந்தைகள் படகில் பயணிக்கையில் துடுப்பும் படகும் மோதினாலென்னவாகும்?
குழந்தைகள் பிறக்கும்வரைதான்
நான் நீ ஏன்ற நிலைகள்!
பிறந்தபின்னே எங்கும் எதற்கும் எவ்விடத்தும் *நாம்* 
என்பதே கணவன்மனைவியின் பாதை!
இதை மறந்தால் இல்லறம் எங்ஙனம் நல்லறமாகும்?
கணவர்களே மனைவியரே கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்!
ஈருடல்ஓருயிர் ஆனபின்னே காற்றும் உங்கள் இருவரிடையே புகுந்திட அனுமதிக்காதீர்கள்!
சிறுஉளிதானே என்றிருந்தால் மாபெரும் மலையே சாயுமன்றோ?
குழந்தைகள் முன்னே குரலை உயர்த்தாதீர்கள்!
குழந்தைகள் முன்னே ஒருவரையொருவர்
குறை கூறாதீர்கள்!
ஏனெனில்  இங்கு யாரும் முழுமனிதர்களில்லை!
கணவன் யார்?மனைவியின் சரிபாதி!
மனைவி யார்?
கணவனின் சரிபாதி! பாதியும் பாதியும் இணைந்தால்தானே
முழுமையாகும்!
இதயமிரண்டும் கலந்தால்தானே இல்லறம் இனிக்கும்!
சொற்களுடன்  அன்பைக் கலவுங்கள்!சினத்தையல்ல!
சொற்களுடன் அமைதியைக் கூட்டுங்கள்!
சத்தத்தையல்ல!
முடிவாக ஒன்று
கணவனிடம் தோற்கும் மனைவியும்
மனைவியிடம் தோற்றுப்போகும் கணவனுமேதான்
உண்மையில் வெற்றி பெற்றவர்களாவார்கள்!

த.ஹேமாவதி
கோளூர்

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS