கண்ணுறங்கு என் தாயே கவலையின்றிக் கண்ணுறங்கு
கருணை உள்ளம் கொண்டவளே
களைப்பின்றிக் கண்ணுறங்கு.
பத்து மாதம் சுமந்த போதும்
வலி பொறுத்துப் பெற்றபோதும்
பட்ட துயர் எலாம் மறந்து
பத்திரமாய் நீ உறங்கு.
பள்ளிக் கூடம் அனுப்பி விட்டு வரும் நேரம் எதிர்பார்த்து
விழிநட்டுக் காத்திருந்த வலி மறந்து கண்ணுறங்கு.
வேலை தேடி வெளியூரில் உனைப்பிரிந்து சென்றதையும்
புதுவாழ்வு என்ற பேரில் புருஷனுடன் சென்றதையும்
நினைத்து நினைத்துக் கலங்காமல்
நிம்மதியாய் நீ உறங்கு.
வேளைக்கு உண்பானோ பசியாலே தவிப்பாளோ
எனைப் போன்று எவரேனும் நல் உணவு அளிப்பாரோ
என்கின்ற கவலையெல்லாம் ஓரம் கட்டி நீ உறங்கு.
தலைவலிக்குத் தைலமிட்டுத் தலைமாட்டில் இருந்தது போல்
காய்ச்சலன்றுக் கஞ்சி தந்து கண்விழித்துப் பார்த்தது போல்
யார் பார்ப்பார் எனக் கலங்கி வருந்தாமல் கண்ணுறங்கு.
கால்மாட்டில் இருக்கின்றேன் கால் பிடித்து விடுகின்றேன்
காலையில் நீ எழுந்த பின்னே அன்னையே நான் செல்கின்றேன்
அமைதியுடன் கண்ணுறங்கு என் தாயே கண்ணுறங்கு.
உனை மறந்து நொடிப்பொழுதும் எனை நினைக்கும் என் தாயே
மெல்லிதயம் கொண்டவளே
கவலையின்றிக் கண்ணுறங்கு.
*கிராத்தூரான்*
🌹Dedicated to all mothers.🌹