Header Ads Widget

Responsive Advertisement

கூவும் குயிலே சேதி என்ன?


கூவும் குயிலே.....
சேதி என்ன சொல்வாய் நீ
கண்டுவந்த சேதியையும், கொண்டுவந்த சேதியையும்
விரைவாகச் சொல்லிவிடு விருப்பமுடன் கேட்கின்றேன்.

எத்தனை தூரம் தான் சென்று வந்தாய் நீ
எத்தனை மனிதர்களைப் பார்த்து வந்தாய் நீ
எத்தனை பேரிடம் பேசி வந்தாய் நீ
என்னென்ன சேதிகள் கொண்டு வந்தாய் நீ.

யாருமே பார்க்காமல் கிளைகளுக்குள் மறைந்திருந்து
என்னென்ன பார்த்தாய் சொல்லு நீ குயிலே
பார்த்ததை வெளிப்படுத்த அழகான உன்னிசையில்
இனிமையாய்ச் சொல்லிப் புரியவை குயிலே.

ஊரடங்கை மதிக்காது ஊர்சுற்ற வந்தவரை
காவலர்கள் துரத்துவதைப் பார்த்தாயா சொல் குயிலே
வீட்டுக்கும் தெரியாமல் ஊருக்கும் தெரியாமல்
தோப்பிலிருந்த காதலரைப் பார்த்தாயா பூங்குயிலே.

வீட்டுக்குள் அமராமல் விளையாட வந்தவரும்
தோப்புக்குள் அமர்ந்தவாறே காதல் செய்து மகிழ்ந்தவரும்
பறக்கும் கேமராவைக் கண்டதும் பயந்தோடுவதைப்
பார்த்து நீ இரசித்ததைப் பகிர்வாயா மாங்குயிலே.

கூவும் குயிலே......
சேதி என்ன சொல்வாய் நீ.
கண்டுவந்த சேதியையும், கொண்டுவந்த சேதியையும்
விரைவாகச் சொல்லிவிடு விருப்பமுடன் கேட்கின்றேன்.

*கிராத்தூரான்*