Header Ads Widget

Responsive Advertisement

முகில் வரைந்த ஓவியம்



எப்படித்தான் வருகிறதோ இப்படிப் பல  சிந்தனைகள்
எங்கே உருப்பெறுகிறதோ செயல்வடிவாய்ச் சிந்தனைகள்
இயற்கையை, இறைவனை, நினைத்ததை, பார்த்ததை
கண்முன்னே கொண்டுவரும் முகில் வரையும் ஓவியங்கள்.

உள்ளுக்குள் இருப்பது கண்ணுக்குத் தெரிகிறதா?
கண்ணுக்குத் தெரிவது உள்ளே உருப்பெறுகிறதா? 
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக இருக்கிறதா?
பாலமாக இருந்து முகில் குளிர்வித்து மகிழ்கிறதா?

உருவங்கள் உருவாகக் காற்று துணை புரிகிறதா?
கதிரவனின் கிரணங்கள் காற்றோடு இணைகிறதா?
அறியவேண்டும் என்பதனால் கேள்விகள் பிறக்கிறதா? 
கேள்வியே இங்கு பதிலாகத் தெரிகிறதா?

மனதுக்கு இதமாக, மகிழ்விக்கும் விதமாக
கண்ணுக்கு விருந்தாக, கவலைக்கு மருந்தாக
உள்ளத்தின் உருவாக, எண்ணத்தின் கருவாக
தெரிகிறது இயல்பாக முகில் வரையும் ஓவியங்கள்.

கல்லுக்குள் கடவுள் போல், புல்லுக்குள் உயிரைப் போல்
தெரிந்தவற்குத் தெரிகிறது முகில் வரையும் ஓவியங்கள்
தெரிவித்து மறைகிறது முகில் வரையும் ஓவியங்கள்
புரியாதவர் கண்களுக்கோ.....
வெறும் முகிலாக ஓவியங்கள்.

*கிராத்தூரான்*