ஏன் வந்தே, எதுக்கு வந்தே
சாவதற்கா வெளியே வந்தே
இன்னும் இன்னும் எத்தனையோ
கேள்விகளால் துளைத்தார்கள்
விதவிதமாய் வகைவகையாய்த்
தண்டனையும் அளித்தார்கள்
தங்களது கோபத்தை அலைந்தவர்
மேல் திணித்தார்கள்
கடமையிலே கருத்துடனே செயல்பட்ட காவலர்கள்
சில நாட்கள் முன்பு வரை சீருடையில் காவலர்கள்.
மெல்லக் கொல்லும் விஷமருந்த வரிசையிலே நிற்கிறார்கள்
வசைபாடி, நடனமாடி நடுரோட்டில் குதிக்கிறார்கள்
கேள்விகளே கேட்பதில்லை, பதிலும் எதிர்பார்ப்பதில்லை
வரிசையில் நிற்கச் சொல்லுகையில்
மரியாதை குறைவதில்லை
நிதியளிக்கும் மதுப்பிரியர் என்பதையும் மறப்பதில்லை
கடமைக்காய் கால்கடுக்க மனதிற்குள் மலைவெடிக்க
காவலுக்காய் நிற்கிறார்கள் கவலையோடு காவலர்கள்.
ஓரமாக நில்லுங்கள் நாற்காலியில் அமருங்கள்
குடைபிடித்து நில்லுங்கள், வட்டத்துள் நில்லுங்கள்
சொல்லுகின்ற காவலரை ஏளனமாய்ப் பார்க்கிறார்கள்
நக்கல் செய்து சிரிக்கிறார்கள்
நிதியளிக்கும் வள்ளல்கள்
போனவாரம் எடுத்துச் சென்ற வண்டியெங்கே கேட்கிறார்கள்
முதல்மரியாதை பெறும் தமிழகத்தின் முதல் மக்கள்.
கடந்த சில நாட்கள் வரை குடிகாரன் என்ற பெயரில்
கிண்டலாக அழைக்கப்பட்ட
இன்றைய மதுப்பிரியர்கள்.
*கிராத்தூரான்*