Header Ads Widget

Responsive Advertisement

கண்ணீர் கேள்விகள்



(10 ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்விகளும் ஆசிரியர்களின் திகைப்பும்) 

ஒன்றாம் தேதி தேர்வு என்று சொல்கிறீர்களே ஐயா
எப்படி நாங்கள் எழுதுவது சொல்லுங்கள் ஐயா?
ஊரடங்கில் ஊர் உலகம் முடங்கியே கிடக்க
நாங்கள் செய்த பாவம் என்ன சொல்லுங்கள் ஐயா?

வெளியில் வந்தால் தொற்றுவரும் சொன்னார்கள் ஐயா
தேர்வுகளை அன்று தள்ளி வைத்தார்கள் ஐயா
கொரோனாப் பரவல் அன்றோ சிறிது கூட இல்லை
கொரோனா பரவாத இடம் இன்று இல்லை.

பத்தாம் வகுப்பு என்று சொன்னால் தொற்றாதா கொரோனா?
பொதுத்தேர்வு என்று சொன்னால் ஒதுங்கிடுமா கொரோனா?
பயத்தினாலே மனம் வைத்துப் படிக்க முடியவில்லை
படிக்கின்ற எதுவுமே மனதில் பதிவதில்லை.

ஒன்றாக வரும் நேரம் பாதுகாப்பாய் உணர்வோம் 
தறுதலைகள் எதிர்வந்தால் ஒன்றாக எதிர்ப்போம்
ஒண்டியாக வரச்சொன்னால் என்னதான் செய்வோம்
உங்களுடைய மகளைப் போல் கேட்கின்றேன் ஐயா.

மாணவர்கள் பலபேர்கள் வருவார்களே ஐயா
தனித்தனியாய் அனைவருமே இருப்பார்களா ஐயா?
சந்தித்தால் பேசாமல் செல்வார்களா ஐயா?
ஒருவர் நோய் பலருக்கும் பரவாதா ஐயா?

எங்கிருந்தோ வருவார்கள் ஆசிரியர்கள் அறைக்குள் 
தேர்வுத்தாள் தருவார்கள், கையொப்பம் கேட்பார்கள்
நோய்த்தொற்று அப்போது பரவாதா ஐயா?
எழுதுமுன்னே எங்கள் மனம் தளராதா ஐயா?

உங்களுடைய பிள்ளை என்றால் அனுப்புவீர்களா ஐயா?
பொது இடத்தில் ஒன்று சேர விடுவீர்களா ஐயா?
எங்களுடைய உயிருக்கு மதிப்பில்லையா ஐயா?
மரியாதை குறையாமல் கேட்கின்றேன் ஐயா?

உயிர் போன பின்னாலே தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால்
போன உயிர் திரும்பி வந்து சேருமா ஐயா?
சான்றிதழை மட்டும் வைத்து எங்களது பெற்றோர்கள்
சாகும் வரை செத்துச் செத்து வாழவேண்டுமா ஐயா?

மாணவர்கள், பெற்றோர்கள் கேள்விகளால் துளைத்துவிட 
பதில்சொல்லத் தெரியாமல் தவிக்கிறார்கள் ஆசிரியர்கள்.
புண்பட்ட இதயத்தோடு இரத்தக் கண்ணீர் வடித்தவாறே
பரிதவிக்கும் மாணவரைப்  பரிதாபமாய்ப் பார்க்கிறார்கள்.

யார் செய்த பாவமிது மௌனமாகக் கேட்கிறார்கள்.

*கிராத்தூரான்.*