ஆணுக்குக் கவசமாக இருப்பவள் பெண்ணென்றும்
ஆணின்றிப் பெண்ணுக்கு மதிப்பெதுவும் இல்லையென்றும்
சமத்துவத்தைச் சொல்லிவிட்டுச் சரித்திரத்தில் இடம் பிடித்து
சதிகார வலை அறுக்கும் விதம் சொன்னது சதுரங்கம்.
பாதுகாக்கும் காவலர்கள் பலவிதமாய் இருந்தாலும்
இன்னார்க்கு இதுவென்ற நெறிமுறைகள் சொன்னாலும்
அவரவர்கள் அவரவர்தம் நிலை அறிந்து செயல்பட்டால்
அனைவருக்கும் பாதுகாப்பு என்று சொன்ன சதுரங்கம்.
சதுரத்தின் அங்கமாகும் சதிவிலக்கும் சங்கமாகும்
சதிவலையில் சிக்கிவிட்டால் உயிருக்கே
பங்கமாகும்
அனைத்துக்கும் முதன்மையாக இருப்பதுவோ வியூகமாகும்
முன் யோசனை முக்கியம் எனக் கற்பித்த சதுரங்கம்.
காலாளும் கால் நொடியில் பாராளும் மன்னனுக்குப்
பரிதாப நிலை தந்து எமனாவான் என்பதையும்
எதிரி வரும் நேரத்தில் காவலனாய்ப் பாதுகாத்து
படைத்தலைவன் செயல் செய்வான் என்று சொல்லும் சதுரங்கம்.
பாரதத்தின் விளையாட்டாய் பார் வியக்கும் விளையாட்டாய்
கல்வியை விளையாட்டுடன் கற்பிக்கும் விளையாட்டாய்
சதிமுறிக்கும் மதி அளிக்கும் விளையாட்டாய் அவனியிலே
மூளைக்கு வேலையாக சதுரங்கம் அவனியிலே.
*கிராத்தூரான்.*