ஆழ்கடலென்பது நம்பிறவி!
அதில் பயணம்செய்பவர்
கணவன்மனைவி!
இல்லறமென்பதே இருவரின் பயணம்!
படகும்துடுப்பும் அவ்விருவர்!
துடுப்புதான் இன்றி படகுசெல்லுமோ?
படகுஇன்றி துடுப்புதான் இயங்குமோ?
இரண்டும் சமபங்காய் ஒத்துழைத்தாலன்றோ
அமைதியாய் ஆனந்தமாய் இல்லறம் நகரும்!
சிலரது இல்லறம் வெறும் படகும்துடுப்புமாய் வெறுமையாய்ச் செல்ல
சிலரது இல்லறமோ
குழந்தைகள் என்ற செல்வத்தைச் சுமந்து செல்லும் படகும்துடுப்புமாய்!
படகின் கோபதாபங்கள் துடுப்பின் மீதும் துடுப்பின் கோபதாபங்கள் படகின்மீதும் காட்டலாம்!
பாசம் உள்ள இடத்தில்தானே கோபத்தையும் காட்ட இயலும்!
இங்குதான் கவனம் மிகமிகத் தேவை!
உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது!
நொறுங்கிய மனது மீண்டும் ஒருங்கமையாது!
அதிலும் குழந்தைகள் வெறும் பொம்மைகளல்ல!
குழந்தைகள் இல்லாமல் ஏங்குவோர் பலரிருக்க உள்ளோர்க்கு பொறுப்புகள் மிகத்தேவை!
குழந்தைகள் படகில் பயணிக்கையில் துடுப்பும் படகும் மோதினாலென்னவாகும்?
குழந்தைகள் பிறக்கும்வரைதான்
நான் நீ ஏன்ற நிலைகள்!
பிறந்தபின்னே எங்கும் எதற்கும் எவ்விடத்தும் *நாம்*
என்பதே கணவன்மனைவியின் பாதை!
இதை மறந்தால் இல்லறம் எங்ஙனம் நல்லறமாகும்?
கணவர்களே மனைவியரே கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்!
ஈருடல்ஓருயிர் ஆனபின்னே காற்றும் உங்கள் இருவரிடையே புகுந்திட அனுமதிக்காதீர்கள்!
சிறுஉளிதானே என்றிருந்தால் மாபெரும் மலையே சாயுமன்றோ?
குழந்தைகள் முன்னே குரலை உயர்த்தாதீர்கள்!
குழந்தைகள் முன்னே ஒருவரையொருவர்
குறை கூறாதீர்கள்!
ஏனெனில் இங்கு யாரும் முழுமனிதர்களில்லை!
கணவன் யார்?மனைவியின் சரிபாதி!
மனைவி யார்?
கணவனின் சரிபாதி! பாதியும் பாதியும் இணைந்தால்தானே
முழுமையாகும்!
இதயமிரண்டும் கலந்தால்தானே இல்லறம் இனிக்கும்!
சொற்களுடன் அன்பைக் கலவுங்கள்!சினத்தையல்ல!
சொற்களுடன் அமைதியைக் கூட்டுங்கள்!
சத்தத்தையல்ல!
முடிவாக ஒன்று
கணவனிடம் தோற்கும் மனைவியும்
மனைவியிடம் தோற்றுப்போகும் கணவனுமேதான்
உண்மையில் வெற்றி பெற்றவர்களாவார்கள்!
த.ஹேமாவதி
கோளூர்