உன்னை வருணிக்க வார்த்தைகள் தேடினேன்
கண்டு கொண்ட வார்த்தைகளை வரிசையில் எழுதினேன்
காதல் கடிதமாய் பலமுறை எழுதினேன்
பேனா மை தீர்ந்ததால் பேனாவை மூடினேன்.
கடிதம் எழுதத் துவங்கும் முன் பேனாவில் மை உண்டா?
வார்த்தையாய் வடிப்பதற்கு காகிதம் இருப்புண்டா?
என்று கூடப் பார்க்காத உனக்கெதற்குக் காதல்
என்று நீ கேட்பதென் காதிலே விழுகிறது.
வகை வகையாய்த் தொகை தொகையாய்
வார்த்தைகள் எழுதினாலும்
உன்னழகை வருணிக்க வார்த்தைகளால் முடியவில்லை
உன்னழகின் பூரணத்தைச் சொல்லாத காரணத்தால்
முழுமையற்ற கடிதத்தை நான் முடிக்க முடியவில்லை.
உன் அழகைச் சொல்வதற்காய், என் அன்பைப் பகிர்வதற்காய்
நான் முனையும் வேளையிலே வேறெதுவும் நினைவிலில்லை
இன்னும் ஏன் சொல்கின்றேன்
என் குறையைச் சொல்கின்றேன்
உன்னுடைய நினைவு வந்தால்
நானாக நானில்லை.
கற்பனையில் காவியத்தை வடிப்பதாகச் சொல்வாய் நீ
காவியம் தான் வடிக்கின்றேன் கற்பனையில் அல்ல மட்டும்.
காவியமாய் வடித்தால் தான்
என் கடிதம் முடிவு பெறும்
பேனா மை வாங்கி வந்தால் என் மனது நிறைவு பெறும்.
காதல் கடிதம் எழுதினேன், பேனா மையும் தீர்ந்தது
பேனா மை தீர்ந்தபோது அது காவியம் எனத் தெரிந்தது.
*கிராத்தூரான்.*