(கொரோனா அறையில் பணிபுரியும் செவிலியரின் கண்ணீர்.)
என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
நீ அன்று என் கழுத்தில்
தாலி கட்டும் வேளையிலே
உயிருடன் நான் இருக்கும் வரை
ஒரு நாளும் ஒரு பொழுதும்
அதைக் கழற்றும் வேளைமட்டும்
வரக்கூடா தென நினைத்தேன்
வரவே கூடா தெனநினைத்தேன்.
என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
தாலியாம் இவ்வுலோகத்தில்
கொரோனாத் தொற்று ஏற்பட்டால்
இருபத்து நான்கு மணி நேரம் இருக்குமென்று சொல்கிறார்கள்
நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் பாதிக்கும்
அதனால் அதைக் கழற்றவேண்டும்
என்று கழற்ற வைக்கிறார்கள்.
என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
உயிர் காக்கும் வேலையிலே
உணர்வுக்கு மதிப்பேது
உயிருக்கு உணர்வூட்டும்
தாலிக்கு இடமேது
உடலோடு உறவாடி உன் இருப்பைக் காட்டி நிற்கும்
தாலியைக் கழற்றிவிட்டால்
என் உடம்பில் உயிரேது.
என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
செவிலி வேலை செய்கின்றேன்
கடமையையும் உணர்கின்றேன்
கடமையைச் செய்துவிட்டுத் தனியறையில் தவிக்கின்றேன்
இறைமுன்னால் நின்றவாறே
தாலியை நான் கழற்றுகின்றேன்
என் உயிராம் என் கணவன்
கையில் தந்து செல்கின்றேன்
என் உயிரை என் உயிரின்
கையில் தந்து செல்கின்றேன்.
என்ன செய்வேன் என் அத்தான்
எப்படிச் சொல்வேன் அத்தான்
கொரோனா அறைக்குள்ளே சென்றபோது கலங்கவில்லை
தனியறையில் தனிமையாக இருந்தபோதும் கலங்கவில்லை
தாலியின்றி இருப்பதனை
நினைக்கக் கூட முடியவில்லை
தாலியைக் கழற்றையிலே
நானாக நானில்லை
நானாக நானில்லை.
*கிராத்தூரான்