கிருமிகள் உட்செல்லாமல்
முகக்கவசம் அணிந்திருந்து
எலுமிச்சை இஞ்சி போட்டுக்
கொதிக்கவைத்த நீர் அருந்தி
எண்ணெயும் காரமும்
அளவுக்கு மிஞ்சாது
சுவை பார்த்து உண்ணாமல்
தேவைக்கு உண்கின்றேன்.
பால் சேர்க்காத் தேனீரில்
எலுமிச்சைச் சாறு விட்டு
சர்க்கரை சேர்க்காமல்
பதிலுக்குத் தேன் சேர்த்து
பார்த்துப் பார்த்து நான் பருகி
பசித்த வேளை நான் உண்டு
சுக்கு, மிளகு, கிராம்பு போட்டுக்
கொதித்த நீரும் அருந்துகின்றேன்.
அதிக நேரம் விழிக்காது
நேரத்தோடு நான் உறங்கி
அதிகாலை கண்விழித்து
உடற்பயிற்சி பல செய்து
உடலுக்கும் மனதிற்கும்
சரியாக ஓய்வளித்து
புத்தகங்கள் பல படித்து
புத்தூக்கம் பெறுகின்றேன்.
இத்தனையும் பார்ப்பவர்கள்
ஏளனமாய்க் கேட்கிறார்கள்
ஏன் இத்தனைக் கட்டுப்பாடு
இறப்பதற்கு பயமா என்று.
இல்லையடி என்னவளே
எனக்காகச் செய்யவில்லை
நான் இறக்காமல் இருக்க
இதை எதையும் செய்யவில்லை.
எனக்குள்ளே இருக்கின்ற
உனக்காகச் செய்கின்றேன்
உன்னுடைய நலன் காக்க
இவை அனைத்தும் செய்கின்றேன்
உனக்காக வாழ்கின்ற
நான் இதோ கேட்கின்றேன்
நீ இங்கு சுகமே.
நான் அங்கு சுகமா?
சொல்லடீ நீ என்னவளே
நீ இங்கு சுகமே.
நான் அங்கு சுகமா?
*கிராத்தூரான்