Header Ads Widget

Responsive Advertisement

கற்பனைக்கும் அப்பால்

            
உலைவைத்து பொங்கிட
கால்பணமும் கையிலில்லை!
சிறுவாட்டு பணமெல்லாம்
போன திசை தெரியவில்லை! 
புது வருசம் வந்திட்டாலும்
புதுமையாக ஏதும் வரவில்லை!
எப்போதும் நமக்கு சகாயம்....
நம்கைதான்  மாற்றமில்லை!               
ஆண்டவனைக்கும்பிட்டு தூங்கி
அவனையே நினைத்தெழுந்ததிலும்
ஆகாசம்வரை அளக்க போதுமில்லை!
வானத்து இடிகூட சொல்லிவிட்டு 
தரையிறங்கும் வேளைதனில்.....
வீசும் காற்றைக்கலங்கடித்தே
வந்ததே கொள்ளை நோய்!
கை கழுவு ,முகக்கவசமிடு,
இடைவெளிக்களிக்காதே
இடைவேளை என்றார்கள்!
வீட்டிலிரு இல்லையெனில்
காட்டிலிருப்பாய் என்றார்கள்!
கைதட்ட தீபமேற்றச்சொல்லி.....
குறளிவித்தையெல்லாங்காட்டி
குரங்காய் நமை ஆடவிட்டார்கள்!
இன்று தீரும் நாளை தீரும்
என்றிருந்த நம் எண்ணத்தை
என்றும் தீரா தீயிலிட்டார்கள்!
மதுக்கடைகளை திறக்க
ஆணை பெற்று விட்டார்கள்!
மனிதர்களைக் காப்பது
முக்கியமில்லையாம்!
மதுப்பிரியரைக் காவாக்கால்
வீழ்ந்திடுமாம் பொருளாதாரம்....
நாற்பத்தைந்து நாள் விரதமெல்லாம்
நாசமாய்ப்போனதிங்கே!
இனிமேல் கோரோனாவே,
ஆதிக்கம் செலுத்தியிங்கே,
எமை வாரிக்கொண்டுபோனாலும்.....
நன்மையாகுமிங்கே எனும்
கூக்குரலே தேசிய கீதமாய்
இனி ஒலிக்கும்எங்கெங்குமே!

வத்சலா