ஏனிந்த சோதனை எதற்கிந்த வேதனை
என்ன குறை வைத்தேன் நான்
எழில் உருவே என்கின்றேன்
என்ன பாவம் செய்தேன் நான்
எனக்கேட்டு நிற்கின்றேன்
எட்டிப் பார்த்த கண்ணீரால் கண் இமையை நனைக்கின்றேன்
என் இறைவா என் இறைவா என வேண்டித் தொழுகின்றேன்.
அருகில் நிற்போர் தெரியவில்லை
ஆரத்தி தெரிகிறது
கருவறையில் தெரிந்த ஒளி எதிரொளியாய் ஒளிர்கிறது
கண்ணுக்குள் நுழைந்த ஒளி இதயத்துள் நிறைகிறது
கண்டேன் நான் கண் நிறைய மனம் நிறைந்து மகிழ்கிறது.
கருணைமிகு கண்களும் புரிதல் சொன்ன புன்னகையும்
யாமிருக்கக் கவலையேன் என்று கேட்கும் தோரணையும்
உள்ளத்தைக் குளிரவைத்து அமைதி தந்த நறுமணமும்
கண் இமைக்க முடியாமல் கவர்ந்திழுத்த பேரெழிலும்
கனிவுடனே பரிவுடனே பதில்கள் பல தந்தது.
மலர் தாங்கும் சிலை போன்று உன் துயரைத் தாங்குகின்றேன்
மறந்து நீ சென்றாலும் நின்றவாறே தொடர்கின்றேன்
உளம் உருகி நீ நிற்க உனக்குள்ளே அமர்கின்றேன்
உனைக்காக்கும் என் பொறுப்பை உவப்புடனே செய்கின்றேன்.
சொல்லாமல் சொன்னதெல்லாம் ஒரு நொடியில் உணர்ந்தேன் நான்
அறியாமை இருளகன்று அவன் கனிவில் குழைந்தேன் நான்
யான் பெற்ற இப்பேறை உலகு பெற விழைந்தேன் நான்
என் இறைவா என் இறைவா என்றவாறே நகர்ந்தேன் நான்.
எனைக் காக்கும் இறையருளின்
கருணையிலே நனைந்தேன் நான்
கவலைகளை மறந்தேன் நான்.
*கிராத்தூரான்*