அரும்பாய்ப் பிறந்து மொட்டென குவிந்து
.......அழகாய் மலர்ந்து சிறுவர் சிறுமியாய்க்
கரும்பாய் மொழிந்து கள்ள மின்றி
.....கலந்தே கூடி கவலை அறியா
குருத்துகள் போலே இருந்த காலம்
......கதறி னாலும் மீண்டும் வருமோ?
திரும்ப வராத மழலைப் பருவம்
......திகட்டா மலரும் நினைவுக ளாகும்!
(1)
கடிக்க கடிக்க கன்னல் இனிக்கும்!
.....குழவிப் பருவம் நினைக்க இனிக்கும்!
அடியும் திட்டும் வாங்கி னாலும்
......அடமாய் வெளியில் சேர்ந்து ஆடுவோம்!
அடித்த மாங்காய் மண்ணில் வீழ
.......அன்பாய்க் கடித்துப் பங்கு போடுவோம்!
படிக்க பள்ளி செல்லும் போதில்
......பட்டாம் பூச்சியாய் மகிழ்ந்து செல்வோம்!
(2)
மண்ணில் சொர்க்கம் எதுவெனில் எவர்க்கும்
.....மறக்க வொண்ணா மழலைப் பருவமே!
கண்ணில் கண்ட காட்சி யாவும்
......கருத்தாய் நெஞ்சில் பதிவது போல
எண்ணிலா நினைவுகள் பசுமை யாக
.....எவர்க்கும் உண்டெனில் மழலைப் பருவமே!
வண்ணம் கலைந்த வாடிய மலராய்
.....வற்றிய முதுமை
இதனை உணர்த்துமே!
(3)
த.ஹேமாவதி
கோளூர்