மதிகெட்டுப் போனவர்கள் மது தேடி அலைகின்றார்
மது இல்லை என்றாலோ மனம் கலங்கி நிற்கின்றார்
மது கண்ணில் பட்டவுடன் மதிமயங்கி விடுகின்றார்
கதிகெட்டுப் போகும் என்ற நிதர்சனத்தை மறக்கின்றார்.
அடிமையாக மாறுகின்றார் அதை உணர மறுக்கின்றார்
தனிமையை மறப்பதற்கு அது மருந்து என்கின்றார்
தன்னிலையை மறந்துவிட்டு தவறுசெய்ய விழைகின்றார்
தலைகால் புரியாது தறிகெட்டு அலைகின்றார்.
சட்டத்தின் துணை கொண்டு திட்டங்கள் பல போட்டு
மதுக்கடையைத் திறந்து விட்டு மக்களுக்காய் என்கின்றார்
மக்கிப் போன மனம் படைத்தோர் வெட்கமே இல்லாமல் சொர்க்கமது என்று சொல்லி மட்டையாகப் படுக்கின்றார்.
குடி குடியைக் கெடுக்குமென்று சொல்லியே கொடுக்கின்றார்
குடி கெட்டுப் போனாலும் தடை செய்ய மறுக்கின்றார்
அடிபட்டு விழுந்தாலும் மிதிபட்டுத் தளர்ந்தாலும்
விதியென்று சொல்லிவிட்டுக் குடிமக்கள் தொடர்கின்றார்.
தடைக்காலம் மதுக்கடையை மறக்கவைக்கும் என நினைத்தால்
மறப்பதற்கு முன்னாலே திறக்கவேண்டும் என்கின்றார்
நிதிநிலையைச் சீராக்க மதுக்கடைதான் வழி என்று
மதியிழக்க வைக்கின்றார்
மதிப்பிழந்து நிற்கின்றார்.
மதியிழக்க வைத்தவர்கள்
மதிப்பிழந்து நிற்கின்றார்.
*கிராத்தூரான்*