இத்தனைநாள் என்னுடனே இல்லத்திலிருந்தான்!
அத்தனை பணியிலும் துணையாகி நின்றான்!
சமைக்கையில் காய்கறிகள் வெட்டித்தந்தான்!
வெட்டுகையில் என்பக்கம் ஒட்டியமர்ந்தான்!
துவைக்கையில் கைகள் நோகுமென்று தானே அலசிப் பிழிந்தும் தந்தான்!என்மனதிலும் காதலைப் பிழிந்து ஊற்றினான்!
தலைவாருகையில் பக்கத்தே வந்தமர்ந்து பூச்சூட்டி விடுவதாக கொஞ்சலுடன் கெஞ்சுவான்!அவன்கொஞ்சுமொழி
கேட்பதை நீட்டிக்க நானும் காலந்தாழ்த்தியே சரியென்பேன்!
சாப்பிடும் வேளையிலோ தன்கையால் எனக்கு ஊட்டிவிட்டு
மகிழ்வான்!
ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைக்கு மனதுள்ளே நன்றிசொல்லி மகிழ்வேன்!
இத்தனைநாள் மதுவை மறந்து மாதுஎன்னுடன் ஓன்றியிருந்தவன் இதோ இன்றுகாலையில் வீட்டைவிட்டுப் போனவன் இன்னமும் இல்லந்திரும்பவில்லை!
என்மனதின் கவலையும் ஓயவில்லை! நேற்றிலிருந்தே ஒரே பரபரப்பு அவனுள்ளிருந்ததை
நானறிவேன்!காரணம் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு!
மாதுவாம் மனைவியை விட்டுவிட்டு இனி மதுவோடு மீண்டும் இணைந்தானோ?மதுவுண்ட மயக்கத்தில் எங்கு
வீழ்ந்து கிடக்கின்றானோ?
த.ஹேமாவதி
கோளூர்