இயற்கையின் அற்புதபடைப்பு நீ!
இன்னிசை வழங்கும் வள்ளல் !
வள்ளுவனின் வாய்மொழியை
வாழ்வாதாரமாய் கொண்ட
வித்தகனாய் ஆனதினாலே....
முத்தமிழில் ஒன்று உன்னை
தத்தெடுக்கொண்டதே!
இன்னாசெய்தாரை ஒறுத்தாய்!
ஆம் தீக்கொண்டு உனைச்
சுட்டவரை, துளையிட்டவரை,
விட்டுக்கொடுக்காது அவர் வாழ
வழி செய்தாய் மனங்குளிர!
அதேபோல் காட்டிடை சுழலும்
வண்டிங்கள் உனைத் துளைப்பதை
வரவேற்றாய் மௌனமாய்!
மழலையர் குறும்புகள் வலிதந்தாலும்
ரசித்தே அரவணைக்கும் தாயாக நீ!
காற்றுவந்து உன் காயம் தடவ...
கானத்தால் நன்றி சொல்கிறாய்!
காத்திருந்து பறவை கூட்டை சேர
நித்திரைப் போர்வையை
அவைகளுக்கு உன் கானத்தால்
நிறைவாய்த் தருகின்றாய்!.
பூவும் காயும் மரத்தோடு
கண்ணுறங்கலாம் -ஆனால்
காடே கண்ணுறங்கும் அதிசயத்தை
உன்னால்தானே கண்டேன்!
ஆகவேதான் உன்னைத்தன்
ஆலிங்கனத் தொடுகையில்
வைத்தான் போலும் இந்த
வையம் அளந்த பெருமாளும்!
உன்னில் எழும் ஓசைகொண்டே
ஈர்த்தான் கோபியரை வரும் நாளும்!
ஆரவாரமாய் முழங்கும்
அத்துனை இசைப்பான்களாலும்
அளிக்கமுடியாத உச்சத்தை....
நீ மட்டும் அள்ளித்தருவது
உனைப்படைத்த இறைவன்
மட்டுமே அறிந்த இரகசியமே!
மேடைகளில் நீ எழுப்பும்
மேன்மையுறு கீத அலாரிப்புகள்....
ஓடையாய் துவங்கி கடலாக
நடைபயில எழுமே ஒருஆர்ப்பரிப்பு!
அதில் சுகத்தோடு சோகமும்
கலந்ததே வாழ்வெனும் ஒரு
தத்துவ அர்ப்பணிப்பு!
*வாழ்வே வரம் அடுத்தவர் நலம்தேடி
வாழ்தலே என்றும் சுகம்* எனும்...
சூட்சும் அறிய புல்லாங்குழலே..!
சூரியன் உள்ளளவும் உன்
வாழ்வே என்றும் நிதரிசனம்!
🌹🌹வத்சலா🌹🌹