Header Ads Widget

Responsive Advertisement

மாற்றங்கள்



நினைப்பது ஒன்றாக நடப்பது மற்றொன்றாக 
மாறிவிட மனதினிலே வருகிறது மாற்றங்கள்.
போற்றுவதும் தூற்றுவதும் போட்டி போட்டு நடக்கையிலே
பார்த்து நிற்போர் பார்வையிலோ பலவிதமாய் மாற்றங்கள்.

எதை ஏற்றுக் கொள்வது எதை விட்டுச் செல்வது 
எதுவுமே புரியாமல் மனதில் தடுமாற்றங்கள்.
மாற்றங்கள் மயங்க வைக்க தடுமாற்றம் அதிகரிக்க 
கடைசியிலே நிலைப்பதுவோ பலவித ஏமாற்றங்கள்.

மாற்றங்கள் வந்துவிட்டால் ஏற்றம் தான் இனி என்றும் 
கூற்றுவனே வந்தாலும் அதில் இல்லை மாற்றம் ஒன்றும்
என்று எண்ணி நின்றவரோ ஏமாற்றம் சந்தித்தால்
எள்ளி நகையாடிடுவார் தங்களது நிந்திப்பால்.

மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கின்ற வேளையிலும் 
மாற்று உண்டு என்று மனம் தேற்றுவதும் சான்றாக.
தோற்றுப் போன பின்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது 
காற்று போன திக்கினிலே பார்த்து நிற்பார் ஒற்றையாக.

மனதுக்குள் மாற்றங்கள், மனிதருக்குள் மாற்றங்கள்
புனிதரென்று காட்டி நிற்கத் தோற்றத்தில் மாற்றங்கள்
மனிதரென்று காட்டி நிற்க மறைக்கப்படும் மாற்றங்கள்
நன்மை தான் பயக்குமென்றால்....
நன்மை தான் பயக்குமென்றால்....
நடை பெறட்டும் மாற்றங்கள்.

*கிராத்தூரான்*