Now Online

Sunday, 21 July 2019

மன்னித்துவிடு


உன்வேலை நீ செய்தாய்

ஓயாமல் நீ பெய்தாய்

வெள்ளமாய் நீ பாய்ந்தாய்

கடலிலே நீ சேர்ந்தாய்

சேமிக்கும் எண்ணமில்லை சேமித்துப்பழக்கமில்லை

உனைப் பழித்து நின்றார்கள்

தன் தவறை மறந்தார்கள்

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு மழையே.


நீயின்றி உணவேது

நின் தயவின்றி வாழ்வேது

வெயிலின்றிப் பகலேது

பகலின்றி இரவேது

நின் தாக்கம் இல்லாமல் நீராவி தான் ஏது

நீர் ஆவியாகாமல் மேகமேது மழையேது

தெரிந்தாலும் புரியாமல்

உனைப் பழித்தார், திட்டிநின்றார்

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு வெயிலே.


நீயின்றி அசைவேது அசைவின்றி சுகமேது

நீ வீசவில்லை யென்றால்

உயிர்களுக்கு வாழ்வேது

கடலிலே உருவாகிக் கரையிலே நீ வந்தால்

உன்வழியைத் தடுப்பவர்கள்

உன்னையே தூற்றுவார்கள்

வெப்பத்தைத் தணித்தாலும் மழைகொண்டு வந்தாலும்

பழியெல்லாம் உனக்குத்தான் தப்பெல்லாம் உன்னிடம் தான்.

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு காற்றே.


பழி சுமத்த ஆள்வேண்டும்

தப்பிக்க வழிவேண்டும்

தவறுகளை மூடவேண்டும்

இயலாமையை மறைக்கவேண்டும்

குறை சொல்லிப் பழகிவிட்டோம்

நிறைகாணத் தவறிவிட்டோம்

எங்களின் இயல்பு அது

மன்னித்துவிடு இயற்கையே.

தவறு தான் தெரிகிறது 

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு இயற்கையே.


*சுலீ. அனில் குமார்.*

இனிய தென்றலே


 சில்லென அடிக்கும் காற்றே சிலிர்ப்பைத் தருகிறாய் நீ ...


மெல்லென மேனி தொட்டு இதம் தந்து போகிறாய் நீ ....


சட்டென அயர்ச்சி நீக்கி உற்சாகம் உலவ வைக்கிறாய் நீ ...


சுற்றிலும் தழுவிக்கொண்டு சுகம் தந்து செல்கிறாய் நீ ...


மாலை நேர கடற்கரையில் 

மகிழ்ச்சி பெற வைக்கிறாய் நீ ...


காதலர்க்கு இடையில் புகுந்து கலகமும் செய்கிறாய் நீ...


சோலை மலர்  சுகந்தம் எல்லாம் சுமந்து வந்து தருகிறாய் நீ..


மகிழ்ச்சியில் மனம் குளிர தென்றலாய் வருகிறாய் நீ ...


மாலை வரும் போதெல்லாம் கொஞ்சம் மறக்காமல் வந்து செல்லு ..


        தெய்வானை,

            மீஞ்சூர்.

களவொழுக்கம். -- பாலா


நீ வராமல் நானா? நிலவில்லாத வானா?

இனிப்பில்லாத தேனா?

இசையில்லாத பன்னா?


இங்கு,

ஊரெல்லாம் 

வந்து போக,,, 

உன்னைக் காணாது மனம் நொந்து போக,,,

தேரிழுத்த வடம் போல 

துவண்டு நானும் நிற்கின்றேன்,,,


என் மனம் யோசனை என்னிடம் 

சொல்ல,,,

உன் மனம் 

உந்தன் கண்ணிடம் மெள்ள,,,

உள்ளதை 

சொல்ல பாதமும் தேய,,, 

உள்ளங்கள் ரெண்டும் வெள்ளத்தில் 

பாய, .,,,,


உனக்கொரு சொந்தம் எனக்கொரு சொந்தம் ஊருக்குள் பேச,,,

மெளணத்தின் கண்கள் 

மாயத்தில் 

ஏனோ,,,?

நிமிர்ந்திட நினைத்தும் இன்னும் தயக்கத்தில் தானோ,,,!


ஆறுகள் எல்லாம் நீர் போகும் பாதை

நான் நின்ற வேளை யார் போகும் பாதை,,,

கடைகண் 

பார்க்க களவொழுக்கம் கண்டேன்,,,,

பேசிய பின் தான் நல்லொழுக்கம் என்றேன்,,,


வாய்மொழியாலே தாய் மொழி சிந்த

சேய் போல என்னை தாலாட்ட கேட்டேன்,,,

யார் கூட நானும் ஊர்கோலம் போக நீயில்லா நானும் நிலவில்லா வானே!

நில்லாமல் போனால் இந்நாளும் 

வீணே,,,


பாலா

நீர்க்குமிழி


ஓடி ஓடித்தான் உழைத்தார்

ஆடி ஆடித்தான் களித்தார்

வாரி வாரித்தான் சேர்த்தார்

நாடி வந்தவரையோ பழித்தார்.


தனம் பெருகிப் போனதால்

மனம் சுருங்கிப் போனது

பணம் பெருகிப் போனதால்

குணம் அருகிப் போனது.


அள்ளி அள்ளித் தின்றாலும்

அளவோடு தான் தீனி

ஒரு சாண் வயிற்றுக்கு மேல்

ஏது போணி.


மருத்துவமனை சென்றுவிடும் சேர்த்ததிலே பாதி

பங்கு போட்டுக் கொண்டு செலவார்

மக்களெல்லாம் மீதி.


இறுதியில் மிஞ்சுவதோ ஒருபிடிச்சாம்பல்

உணராது ஓடுவதோ மனிதர்களின் கும்பல்.


நீர்க்குமிழி தான் வாழ்க்கை

உணரவில்லை யாக்கை

நிலையின்மை புரியாததோ

என்றும் வேடிக்கை. 


*சுலீ. அனில் குமார்*

ஆற மறுக்கும் நெஞ்சம்


 ஆற மறுக்கிறது நெஞ்சம் ...

அணைய மறுக்கிறது ..

அது கொண்ட தீ ..

பிஞ்சுக்குழந்தைகள்.. கயவர் கைகளில் ..

அகப்பட்டு அழிந்திடும் நிலைமைகள் காண்கையில் ....


எங்கே தவறு ?

எது தவறு ?

நம் உறவினர் இவர் என்று நினைப்பது தவறா?

நம் அண்டை வீட்டினர் என்றே ..

நம்புவது பெரும் தவறா? 


இதற்கொரு தீர்வு என்ன?

இதற்கொரு தீர்வு என்ன?

எது செய்ய வேண்டும் நாம்? ..எது செய்ய வேண்டும் நாம் .?


இப்படி ஒரு குழந்தை இனியும் மடியலாமோ....?

இப்படி ஒரு தவறு.. இனியும் நடக்கலாமோ ?


மனம் பதைத்து நினைத்து  துடிக்கின்றதே ...

மனம்  மறக்கவும் மறக்கவும் .. மறுக்கின்றதே ...


            தெய்வானை,

                மீஞ்சூர்.

என் பாதைஆயிரம் பாதையிலே என் பாதையை யாரறிவார்,,, 

நான் போகின்ற பாதையிலே 

பல மூடல்கள் காண்கின்றேன்,,,,


பல தேடல்கள் இருந்து விட 

அந்த தேடலும் 

நினை

வில்லையே,,,,

கோடியில் நானொருவன் 

என் 

கோலத்தை யாரறிவா?


ஆற்றுக்கும் பாதையுண்டு, அனல், 

காற்றுக்கும் பாதையுண்டு, நேற்றுக்கும் பாதையுண்டு,,, இன்றுக்கும் பாதையுண்டு நாளைக்கு யாரறிவார் நானதை தேடுகிறேன்,,,,


ராமன், 

காட்டுக்கு பாதை கண்டா 

காலத்தை 

கழித்து வந்தான்,,,,

மனம் , போன போக்கினிலே

சூர்ப்பணகை 

கிளி போல வழியில் வந்தாள்,,,,


ராத்திரி போவதெல்லாம் யார் போட்ட பாதையிலே,,,

என் பாதை எதுவென்று நான் காண முடியலையே,,,

வெளிச்சமும் 

வந்து விட 

நானதை பார்க்கவில்லை,,,

விடிந்ததும் தெரிந்திடத்தான் கண்களை மூடவில்லை,,,,,


அந்த 

பாதையில் மேடு பள்ளம் கண்டு, பதைக்குது 

எந்தன் 

உள்ளம்,,, புறப்படும் வேலையிலே

போகுது 

நதியில் 

வெள்ளம்,,,,


என் பாதையில் ஆற்று வெள்ளம் எந்நாளும்

ஒடி வரும்,,,

திருப்பிப் பார்க்கையிலே புதுப்பாதை 

தேடி வரும்,,,,

என்னை

புதுப்பாதை தேடி வரும்,,,,

அது "என் பாதை" என பெயர் 

பெரும்,,,,


பாலா

களவொழுக்கம் -- அனில் குமார்


புன்னை மரம் சாட்சியாக

புன்னகையோ காட்சியாக

மன்னவனோ கைபிடிக்க 

மங்கையவள் நாணி நிற்க;


என்னவளே என்றவனை ஏறெடுத்துப் பார்த்தபின்னே

கண்ணாளா என்றவளின்

கால் விரலோ கோலமிட;


அனுமதி தான் என்று எண்ணி 

அணைக்கத் தான் முயன்றிடவே

தடையாக நின்றதங்கே தையலவள் வளைக்கரங்கள்.


முடியாத முயற்சியது முடிவல்ல என்றுணர

கடியாத கண்களினால்

காரணத்தைத் தேடி நிற்க;


மடியாத பண்பதனை மதித்து நின்ற மங்கையவள்

மணம் முடிக்கும் நாளுக்காய் காத்திருக்கும் நிலை விளக்க;


களவிலே கூட ஒழுக்கத்தைப் பேணி நின்ற

காதலதை நினைக்கையிலே கண்களிலே இருதுளிகள்.


'இந்தாம்மா பால்' என்ற குரல் கேட்டு நான் விழித்து

கனவா கண்டதெல்லாம் என்று நானும் விழி சுழற்ற;


கனவாக இருந்தாலும் களவொழுக்கம் கற்பித்த

கற்பு நெறி கண்டு நானும்

கனவுக்காய் மகிழ்கின்றேன்.


*சுலீ. அனில் குமார்.*

களவொழுக்கம்


 என்விழி பேசும் மௌனமொழியை விட

என் உதடுகள் பேசும்

சொல்மொழியைக்

கேட்க உனக்கெவ்வளவு ஆசையோ அதைவிடவும் பேராசை எனக்கும்தான் கண்ணா!

காதலிக்கிறேன் என செவ்வாயில் சொல்லுதிர்த்து உன்செவிகளிலே காணிக்கையாக்க ஆசைதான் இருக்கிறது!ஆனாலும் என்னசெய்வேன்!

என்விழிகளுக்குரிய 

தைரியம்

என்செம்பவள உதடுகளுக்கில்லையே

பெண்மைக்குரிய நாணம்வந்து தடுக்கிறதே!

ஆண்மகன் உன்னைக் கண்டாலே நாணம் வந்து தொற்றிக்கொள்ள

என்உதடுகளின் செம்பவளத்தை விழிகளேற்று தைரியமாய் மொழியாற்ற செம்பவளத்தையிழந்த

உதடுகளோ நிறத்தோடு தைரியமும் இழந்து நாணத்தைச் சுமந்து 

ஊமையாகிப் போயின!நாணத்தைத் தந்தவன் நீதானே!

பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவித்தால் எப்படி?

நீதந்த நாணத்தின் விளைவே என்னுதடுகளின் மௌனம்

இப்போதென்ன சொல்லப் போகிறாய்?


த.ஹேமாவதி

கோளூர்

கடைசி நிமிடங்கள்

கடைசி நிமிடங்கள்

வெற்றியோ

தோல்வியோ

தீர்மானிக்கின்ற

அற்புத தருணங்கள்.


தவறிவிட்டவர்களுக்கு

நிமிடங்களே

மரணங்களாய்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.


18-07-2019.

தொட்டில் பழக்கம்


தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் 

படித்தேன், எழுதினேன் பள்ளியில் அன்று.


எந்தப் பழக்கம் நினைத்து நான் பார்க்கிறேன்

எதுவும் நினைவில் வரவில்லை இன்று.


தாயற்ற பிள்ளையைப் பள்ளியில் பார்க்கையில்

மனத்தினில் அழுகிறேன் மௌனமாய் நானும்.


தந்தையின் பாசமே கிட்டாத குழந்தையைத் தவிப்போடு பார்க்கிறேன் பலநேரம் நானும்.


அரவணைக்க ஆளின்றி

விடுதியில் பிள்ளைகள்

பரிதாபப் படுகிறேன் பாசமுள்ள நானும்.


உணவுக்காய் சாய்பாபா கோயிலுக்குப் போகிறார்

உருகித்தான் போகிறேன் உணர்வுள்ள நானும்.


தொட்டிலில் தூங்கையில் இவ்வுணர்விருந்ததா?

என்னையே கேட்கிறேன் எதிர்பார்ப்பில் நானும்.


பெற்றோரின் அன்பினில் உற்றாரின் கனிவினில்

நினைத்திருப்பேனா 

இதையெல்லாம் நானும்

நினைத்திருப்பாரா?

நினைத்திருப்பாரா?

தொட்டிலில் எவரேனும்.


*சுலீ. அனில் குமார்.*

கடவுள் கொடுத்த வரம்

தாய் இரண்டு அக்காவுடன் பிறந்தவர்களுக்கு மட்டும்.அக்கா.


மாதா ஊட்டாத சோற்றையும்

ஊட்டி வளர்ப்பவள்.


அம்மாவின் செல்ல அதட்டல்களில் இருந்து

காப்பவள்.அக்காவுடன் பிறந்தவர்களுக்கு

எப்பொழுதுமே தெரிவதில்லை

அக்கா

இன்னொரு தாய் என்று.


அதுவும் அவளுக்குத்

தம்பியாய் பிறந்துவிட்டால்....

அப்பப்பா....


அவள் மூச்சு முடியும் வரை

தம்பி...தம்பி...தம்பிதான்..


சொல்லிக் கொடுப்பதில்

சோறூட்டி வளர்ப்பதில்

பள்ளிக்குக் கிளப்புவதில்...

தலைவாரி சீவுவதில்...

உடையணிந்து

விடுவதில்...

ஆடைகளைத் துவைப்பதில்...

இது தம்பிக்கு என எடுத்து வைப்பதில்...

எங்கிருந்தாலும் தம்பிக்காய் துடிப்பதில்...


மொத்தத்தில்

தன்னுடைய பிள்ளையாய் பார்ப்பதில்..

அக்கா என்றைக்கும் 

இன்னொரு தாய் தான்.


தாயல்ல...

இன்னொரு தாய் என 

நாம் கூறுவது தெரியாமலேயே

தன்னுடைய மூத்த பிள்ளை என

சொல்லித் திரியும்

சுயநலமில்லாத

உள்ளத்துக்குக் சொந்தமானவள் அக்கா.


அம்மாவின் ஒட்டு மொத்த அன்பையும்

கடவுள் இன்னொருவளுக்குக்

கொடுத்தானென்றால்

அவள் தான்

அக்கா...


அக்கா...

இன்னொரு தாயல்ல...

அவள்

பிறந்ததிலிருந்தே

தாய் தான்.
பல நேரங்களில் நினைத்ததுண்டு...

நமக்கு ஒரு அக்கா இல்லயே...

அக்கா இல்லாத

என்னைப் போன்றோருக்கு

அவள் என்றைக்குமே தாய் தான்.செம்மொழி.சிபிராம்.

மந்திரப்புன்னகைநிரந்தரமானது எதுவுமில்லை 

உன் நினைவுகள் எனக்கு போதவில்லை,,,

உன்னை

மறுதரம் பார்க்க முடியவில்லை

என்,

மனதினில் 

ஏனோ பெருங்கவலை,,,


ஆயிரம் கைகள் அனைத்தாலும் உன் புன்னகை

காணத் தேடிகிறேன்,,,

காகித ஓடத்தின் பயணத்திலே

நான் கரையைத் தேடி அலைகின்றேன்,,,


நீ,

போகின்ற வழியும் சொல்லவில்லை

போனது 

எனக்கும் தெரியவில்லை,,,

பாவி என் கண்களும் 

மேவிய 

புன்னகை பார்த்திடத்தானே துடிக்கின்றது,,,

அதை கேட்டு 

இரண்டும்

என்னை அடிக்கின்றது,,,


காலங்கள் 

கடந்து போனதம்மா,,,

தாடியும், 

நினைவும்  போட்டியில் 

தானாய்

வளர்ந்ததம்மா,,,

தேனான வாழ்வு

வீணாகிப் போக

தெம்மாங்கு பாடி ரோட்டினிலே,,,,

என் சோகமும் காலமும் வந்தது

அந்த 

பாட்டினிலே,,,


பாட்டை 

கேட்டவள் 

அவளும் 

பக்கத்திலே

பாவம்,

என் மாற்றத்தை காண முடியவில்லை,,, எனக்கும் கேட்க வழியுமில்லை,,,

நிலமையும் 

எனக்கோ சரியில்லை,,,

பையிலெடுத்த பணமொன்றை

என் 

கையில் வைத்து புன்னகைத்தாள்!

மந்திரப்

புன்னகையாய்!!


கல்லான அகலிகை , 

ராமன் 

காலடி பட்டு பெண்ணானாள்,,,

பாவம் , 

இவனோ அவள் மந்திரப் 

புன்னகை பட்டு  

கல்லானான்,,,,


இளகிய 

மனதும் 

கல்லாக 

இரு வழி கரைய நில்லாமல்

யாரென்று நானும் சொல்லாமல்

நடையை கட்டினேன் நில்லாமல்,,,

ஆக்கமும் கேடும் கண்ட 

என் கண்கள் தேடும் என்றென்றும்

அவள்

மந்திரப்புன்னகை பாடும்,,,,,


பாலா

நிலையாமை


காலத்தின் ஆட்டம் புரிந்தவர் எத்தனைபேர்?

கண்மூடி ஆட்டங்கள் போடுவோர் எத்தனைபேர்?

தானென்ற அகந்தை கூடாதெனத் தெரிந்தும் அகந்தைக்குள் ஆணவமாய் ஆடுவோர் எத்தனைபேர்?

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓர்இனம் என்றிருந்தும் சாதியென்றும் இனமென்றும் வட்டத்துள் நிற்பவர்கள் எத்தனைபேர்?

தனக்கு மற்றவரெல்லாம் அடிபணிந்து வாழவேண்டும் எனக் கொக்கரிப்பவர்கள்

எத்தனைபேர்?

இவர்கள் எல்லோரையும் பாடம்புகட்டவே நிலையாமை காத்திருக்கு!தோன்றி மறுகணமே மறையும் நீர்க்குமிழி போலத்தான் இந்த மனிதப் பிறவி என்றுணர்த்திடவே இருக்கிறது நிலையாமை!


த.ஹேமாவதி

கோளூர்

விழியின் மொழி


விழியின் மொழிக்கு

எழுத்தும் இல்லை

இலக்கணமும் இல்லை


வரிவடிவமும் இல்லை

ஒலி வடிவமும் இல்லை


விழியின் மொழி காதலர்களுக்கு

கொஞ்சும்மொழி

அன்பானவர்களுக்கோ ஆசை மொழி


எதிரிகளுக்கோ பகை மொழி

குழந்தைகளின் கனிமொழி


கள்வர்களுக்கோ காட்சி மொழி

காது கேளாதவர்களுக்கோ இன்ப மொழி


வாசகர்களின் பேசும் மொழி

வியாபாரிகளுக்கு விந்தை மொழி


விழியின் மொழியில்லா இலக்கியமே இல்லை

விழியின் மொழி அறியாதோர் யாருமில்லை


மொத்தத்தில் ஒலி மாசுபாடு ஏற்படுத்தாத மொழி


தி.பத்மாசினி சுந்தரராமன்

இருள் விலக

ஔிரும் உள்ளத்தை

இருள்கொண்டு

மூடாதே.


அறிவிற்கு அச்சாணி

ஒழுக்கமாம்

அதை

விட்டு ஓடாதே..


நல்லதைச்

சொல்லும்

தாய் தந்தைக்கு ஈடாய்

எதுவுமில்லை

இவ்வுலகில்.


இதை உணர்ந்தால்

இருள் விலகி

ஔிரும் 

நம் வாழ்வு..

விடை தருவீரா?


அசத்தியத்தை சத்தியமாக்க

உதவிய சிட்டுக்குருவிகளே!

அன்றாடம் நான் இறைத்திடும்

குருணி அரிசிக்காக

கூட்டங்கூட்டமாய் வருவீரே!

நான் பிறந்த மண்ணில் தொலைத்த

உம்மை இங்குதான் கண்டடைந்தேன்!

கருகமணிக்கண்கள் துருதுருத்து.....

கழுத்தசையும் வேகத்தில்

கால்மாற்றி வேலிதாவி நீங்கள்

ஆடிவந்த ஆட்டம் என்றும் என்

கருத்தை விட்டகலாது!

இன்றைக்கான் உம் சீரை 

இறைத்து விட்டு கிளம்பி விட்டேன்!

நாளைக்கு நீவீர் வந்தால்

எனைத்தேடியே அலைந்து

ஏமாந்து போவீரோ?

தேடித்தேடியே மனம்

சோர்ந்துதான் நிற்பீரோ?

என்னோடு உம்மையும் 

கூட்டிவர ஆவல் மிகவும் உண்டு!

கூடுகட்டி நீர் வாழ்ந்திட 

இங்கே வனமுமில்லை உமை.....

வாழவைக்க யார்க்கும் மனமுமில்லை!

சுதந்திரமாய் நீர் வாழ உமது இடம்

சத்தியமாய் ஈடு இணையில்லை!

மனம் தேற்றி அங்கேயே வாழுங்கள்!

தென்றல் வந்து எனது

தேகம் தொடும் நேரமெல்லாம்......

உம் நினைப்பு மட்டும் நெஞ்சத்தில்

உண்மையாய் வாழட்டும்!

விடை தருவீர்களா சிட்டுக்குருவிகளே?


🌹🌹வத்தலா🌹🌹

Saturday, 13 July 2019

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்


குழந்தைத் தொழிலாளிகளைத் தனியறையில் அடைத்து வைத்து

அரசுக்குத் தெரியாமல் வேலை வாங்கும் முதலாளி

அதிசயமாய் ஒரு நாளவ் வறைக்குள்ளே நுழைந்து விட்டு

காவல் காப்பவனைப் பார்த்து மெல்லச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


மரத்தையெல்லாம் வெட்டிவிட்டு

வெப்பம் தாங்க முடியாமல்

கதவு சன்னல் மூடிவிட்டு

குளிர் அறையில் தூங்கிவிட்டு

தம் மூச்சைத் தமைத் தாமே சுவாசிக்கும் நம் மக்கள்

விடிகாலை விழித்தவுடன் விரைவாகச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


வருவதற்கு யாருமின்றி

யாரோடும் உறவுமின்றி

மூச்சு முட்டக் கதவு பூட்டி உள்ளேயே இருப்பவர்கள்,

தள்ளாத வயதினிலே தனியாக இருப்பவர்கள்,

திருடர்களைப் பயந்தவாறே

காலத்தைக் கழிப்பவர்கள்,

அனைவருமே அலுப்புடனே 

அலறியபடி சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


உள்ளே வரும் வழியாய் கதவு வைத்த காலம் போய்

நம் காற்றை வெளியேற்றும் வழியாகக் கதவு இன்று.

சன்னலதைத் திறப்பதில்லை அதனாலே வைப்பதில்லை

பலருக்கு நகரத்தில் சன்னல் வைக்க இடமுமில்லை

அதனாலும் சொல்கின்றார்

அலுத்துப் போய்ச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


*சுலீ. அனில் குமார்.*

புதிய பாதைஆயிரம் பாதைகள் இருந்தாலும் அவனது பாதை என் பாதை,,,

சாத்திரம் ஆயிரம் சொல்லட்டுமே சரித்திரம் பலவும் கூறட்டுமே

விதியில் வந்ததில் என் பயணம்

பொது மதியில் மாற்றவும் முடியாது,,,


காரணம் பலவும் அதற்குண்டு,,,

கர்ம யோகமே துணை நின்று நடத்துவது தான் விதி என்று போகுது பாரு தினம் கண்டு,,,


"புதிய பாதை"

என்பதெல்லாம் பிறக்கும் போதே தெரிந்துவிடும்.ஞான வழியும் அவர்க்குண்டு

நல்லது நடக்கும் தினம் என்று ,,, வாயில் வருவது தான் நல் பாதை, அதுவே என்றும் "புதிய பாதை,,,,"


கர்ம வினையில் நானிருக்க

"புதிய பாதை" தொடுவதற்கு

சுயநலமின்றி ஆற்றிடனும் 

கர்ம யோக பலனாலே,,,

கிடைப்பது எல்லாம் சுகம் தானே

ஞான வழி 

அது தானே

அதுவே, 

எந்தன் 

"புதிய பாதை,,, "


பொதுநலம் மனம் வைத்து செய்கின்ற செயலெல்லாம் நிதம் முனிவர் செய்கின்ற வேள்விக்கு ஒப்பாகும்,,,

கர்ம வழி ஞான வழி இரண்டும் முரணல்ல,,,

நிர்மலமாய் மணமிருந்தால் நீயும் நானும் உணர்ந்திடலாம்,,,


எந்த வழி ஆனாலென்ன

எதுவந்து போனாலென்ன

வந்த வழி சொந்த வழி

வாழ்வும் அதிலே செல்லும் வழி!

"புதிய பாதை"

என்றாகி

சிறந்த வழியும்

உண்டாகி நல்ல வழியில் நம் பயணம் தொடர என்றும் 

"புதிய பாதை"


பாலா

தன்மானம்

மிகுந்த 

எதிர்ப்பார்ப்பு

களுக்கிடையில் கிடைத்த 

அவமானம்

என் 

வாழ்க்கைக்குக்

கிடைத்த 

சன்மானம்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..மனிதர்களின் நிலை..

வரைந்த ஓவியமாய்

வானம்

வறுமையுற்ற நிலையில்

பூமி 

இதில் கையேந்தி

பிச்சைகேட்கும் நிலையில்

மனிதர்கள்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..நிலா நாட்களில் ...


நிலா நாட்களில் ...தினமும் மாலைகளில் .... நாம் ஆடிக்களித்தது நினைவில்லையா ... 


கண்ணாமூச்சி ஆடினோம் ..

கரகரவென்று

சுற்றினோம் ....


 பூப்பறிக்கச் 

சென்றோம் ...

பாண்டியாட்டம் குதித்தோம் ..


மரக் குரங்காய்த் தாவினோம் ..

மரமெல்லாம் ஊஞ்சல் ஆடினோம் ...


கிட்டிப்புள் விளையாடினோம்...

கோலிக் குண்டுகள் அடித்தோம் ...


பம்பரம் போல சுற்றினோம் ..

பம்பரம் கூடச் சுற்றினோம் ...


கபடி ஆடக்

கூடினோம் ...

கல்லாங்காயும்

ஆடினோம்...


கூட்டாஞ்சோறு

ஆக்கியே ..

கூடி உண்டு 

மகிழ்ந்தோம்... 


சண்டைகள் இட்டுப் பிரிந்தோம்...

சமாதானமும் செய்துகொண்டோம்...


நம் இளமைக்கால இன்பங்களில்....

எதுதான் அறிவர் நம் பிள்ளைகளே ...


வீடு வந்தால் படி என்கிறோம்....

விடிந்தால் போதும் படி என்கிறோம் ....


பாடும் பறவை

கூட்டமே போல் ...

ஆடிக் களிக்கும் தும்பிகள் போல் ...


கூடிக் களித்து மகிழ வைப்போம் ....

வலிமை பெறும் வழி அது என்போம் ...


அறிந்துகொள்வோம் தோழர்களே ...

அவை  நம்  குழந்தையின் உரிமைகளே....

           

            தெய்வானை ,

                  மீஞ்சூர்.

நீர்க்குமிழி


கண்ட கனவும் முடியவில்லை,,,

விடிந்த பின்னும் தெரியவில்லை,,,

எந்த கனவை நான் சொல்ல,,,

வந்தவை யெல்லாம்

பெருந்தொல்லை,,,


கற்க கசடற கற்று வந்தேன்,,,

சொத்து பத்துக்களை விற்று வந்தேன்,,,

பிச்சை புகினும் கற்கே நன்றே

என்றே நானும் கற்று வந்தேன்,,,

அதிவீரராம பாண்டியன் அன்று சொன்னதை வாழ்வியலாயும் பெற்றும் 

வந்தேன்,,,


கற்றதை 

எல்லாம் 

எழுதி வைத்தேன்

வேலை வாய்ப்பு அலுவலகத்திலே,,,

மற்றதை 

எல்லாம் எழுதிவிட்டான் இறைவன் 

எந்தன் தலையினிலே,,,


கிடைக்கும் வரை காத்திருந்தேன் எல்லோர்க்கும் பொது நூலகத்திலே,,,

பொறுன்மை மாறா விதியெல்லாம் பொங்கி வர உள்ளத்திலே,,,


காத்திருப்பு

போதுமடா என்று சொல்லி நினைக்கையிலே,,,

கடவுள் போல வந்தது தான் உடலுழைப்பு  மனத்தினிலே,,,

 இல்லாததுண்மையிலே உண்மையிலே இருப்பதுவோ

இல்லாமல் போகாது

உலகத்திலே,,,

எடுத்தேன் உடல் உழைப்பை

கைகளிலே,,,

உடைத்தேன்

நீர்க்குமிழி 

போல்

கவலைகளை,,,


பாலா

தூர்

*மிகவும் கவர்ந்த கவிதை*


*தமிழ்க்களஞ்சியம், நல்ல கேண்மையர்கள்*


"வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒரு முறை

விசேஷமாக நடக்கும்.


ஆழ் நீருக்குள்

அப்பா முங்க முங்க

அதிசயங்கள் மேலே வரும்...

கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,

துருப்பிடித்தக் கட்டையோடு

உள் விழுந்த ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

எடுப்போம் நிறையவே! 


'சேறுடா சேறுடா' வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோஷம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?


படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.


இன்று வரை அம்மா

கதவுக்குப் பின்னிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.


கடைசி வரை அப்பாவும்

மறந்தே போனார்

மனசுக்குள் தூர் எடுக்க..!"


*-நா.முத்துக்குமார்.*

வணங்குகிறேன்தெளிவு பெற்ற மதியினாய் ....


தேர்ந்த அழகு சொல்கிறாய் ...


தீர்க்கமான 

செயலினாய்..


தீக்குள்அன்பு

விதைக்கிறாய் ..


சொல்லில் கரும்பு வளர்க்கிறாய் ..


சுற்றி மனிதம் 

ஈர்க்கிறாய் ..


உண்மை சொல்லிப் போகிறாய் ...


உணர்ந்தால் அன்பு கொள்கிறாய் ..


தமிழ் காதல் கொண்டு தகிக்கிறாய்...


அறியாமை கண்டு தவிக்கிறாய் ...


ஆற்றாமை கண்டால் வெறுக்கிறாய் ....


உன்மை கண்டால் வாழ்த்துகிறாய்...


உயர உயரப் 

பறக்கிறாய் .....


உற்சாகம் வந்தால்

துள்ளுகிறாய் ....


உயர்வு கொள்ளத் தூண்டுகிறாய் ....


அறியாமை களையத் தேடுகிறாய்....


பிழை கண்டால் கதவு மூடுகிறாய்...


பாரதிகண்ட மதியினாய்

பணிந்தே உன்னை வணங்குவேன் ....


          தெய்வானை,

               மீஞ்சூர்.

காகம்


கறுப்பு தான் நான்.....ஆனால் 


என் உள்ளம் என்றுமே வெள்ளை நிறம் தான்.

எனக்கென்று நான் அதிகம் சேர்ப்பதில்லை

பிறருக்குக் கொடுக்காமல் நான் எதுவும் உண்பதில்லை.


பிறருக்குத் தீங்கெதுவும் நினைத்ததில்லை

உணவுக்கன்றிப் பிறரிடம் நான் சென்றதும் இல்லை

எந்த உணவையும் எந்நாளும் பழித்ததில்லை

அதனால் உணவுக்குப் பஞ்சம் எனக்கு இருந்ததுமில்லை.


கறுப்பு தான் நான்.....


அதற்காகக் கவலை நான் பட்டதில்லை

எந்த சபையிலும் தலைகுனிந்து நடந்ததில்லை

வண்ணத்தில் குறையொன்றும் கண்டதில்லை

அதனால் எண்ணத்தில் குறையேதும் எனக்கு இல்லை.


கறுப்புதான் நான்.....


நான் கறுப்பென்று சொன்னதும் நீங்களேதான்

கறுப்பை வெறுப்பாகப் பார்ப்பதும் நீங்களே தான்

இழிவாகச் சொன்னாலும்

பழிபோட்டு நின்றாலும்

பேதங்கள் பார்க்காமல் இருப்பவன் நான்

ஏன் 

குயில் முட்டையைக் கூட அடை காப்பவன் நான்.


காக்கை குளித்தால் கொக்காகுமா? என்பீர்கள்.

நான் ஏன் கொக்காக மாறவேண்டும்?

என் அடையாளம் தன்னையே தொலைக்க வேண்டும்?

இடம் பார்த்து ஆள்பார்த்து மாற வேண்டும்

மனிதர் நடிப்பதைப் போல் ஏன் நான் நடிக்க வேண்டும்?


என்னை நானாக வாழவிடுங்கள்

என்னைப் பரிகசிப்பதை நீங்கள் விட்டு விடுங்கள்

கறுப்பென்று கேலி எனைச் செய்யாதீர்கள் முடிந்தால்..... என்னில் உள்ள நல்லவற்றைப் பின்பற்றுங்கள்.


*சுலீ. அனில் குமார்.*

விழியின் மொழி


விழியின் மொழிக்கு

எழுத்தும் இல்லை

இலக்கணமும் இல்லை


வரிவடிவமும் இல்லை

ஒலி வடிவமும் இல்லை


விழியின் மொழி காதலர்களுக்கு

கொஞ்சும்மொழி

அன்பானவர்களுக்கோ ஆசை மொழி


எதிரிகளுக்கோ பகை மொழி

குழந்தைகளின் கனிமொழி


கள்வர்களுக்கோ காட்சி மொழி

காது கேளாதவர்களுக்கோ இன்ப மொழி


வாசகர்களின் பேசும் மொழி

வியாபாரிகளுக்கு விந்தை மொழி


விழியின் மொழியில்லா இலக்கியமே இல்லை

விழியின் மொழி அறியாதோர் யாருமில்லை


மொத்தத்தில் ஒலி மாசுபாடு ஏற்படுத்தாத மொழி


தி.பத்மாசினி சுந்தரராமன்

சமையலறைக் கனவுகள்..

ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களில்  சுற்றிக் கொண்டிருந்தது  நினைவு ......

அடித்த விசில் சத்தம் அழைத்துவந்தது சமையலறைக்கு ....

கனவு கலைத்து அரிசி

களைந்தேன் .....

           

தெய்வானை , மீஞ்சூர்

Wednesday, 10 July 2019

மனமிருந்தால்


சாத்தியமே இல்லையென்று சத்தியமாய்ச் சொன்னார்கள்

மனமிருந்ததால் உயர்ந்ததன்று

பெருவுடையார் கோவில்.


மாமலையும் மடுவுமாக எடுத்துக் காட்டு சொன்னார்கள்

மனமிருந்ததால் மலர்ந்ததன்று

மராட்டிய சாம்ராஜ்யம்.


ஐந்து நூறு வீரரென்று ஏளனமாய்ப் பார்த்தார்கள்

மனமிருந்ததால் உதித்ததன்று

ஆங்கிலேயர் ஆட்சி.


கத்தியின்றி இரத்தமின்றி

யுத்தத்தின் திசைமாற்றி

மனமிருந்ததால் கிடைத்ததன்று பார் வியக்கும் சுதந்திரம்.


கனவிலும் முடியாதென்ற பதில் பெற்றார் காமராசர்

மனமிருந்ததால் மலைகளிடை வந்தது மாத்தூர் பாலம்,

மாத்தூர் தொட்டிப் பாலம்.


மனம் திறந்தால் தீர்வு உண்டு,

மனம் தளர்ந்தால் தோல்வி உண்டு,

மனமிருந்தால் வழியுமுண்டு

இதை உணர்ந்தால்...

இதை உணர்ந்தால் பெருமை உண்டு.


*சுலீ. அனில் குமார்*

அப்பா


அவர்தான்

அறிவைக் கொடுத்த இறைவன்.


நம்மை இத்தனை ஆண்டுகளாய்ச் சுமந்த இன்னொரு தாய்...


சுயநலமில்லாத சூரியன்.


வாழ்க்கையை அழகாய் வாழ்ந்து

காட்டிய முன்னுதாரணம்.


அன்பை வெளிக்காட்டிக்கொள்ளாத 

அறிவுக்கடல்.


தாயின் கண்ணீரைக் கண்ட நாம்

தந்தையின் கண்ணீரை ஒருபொழுதும் காண 

வாய்ப்பில்லை.

கண்ணீர் பிள்ளையின் எண்ணவோட்டத்தைப் பாதிக்கும் என 

உணர்ந்த மிகச்சிறந்த 

மன நல ஆளுநர்.


இறுதி வரை நம் பிள்ளை நம்மைச் சுமப்பான் என ஏங்கி,

இறுதிவரையும் நம்மைச் சுமந்தே

இறந்து போன சுமைதாங்கி.


வீரத்தைப் புகட்டுவதில்

தன்னிகரில்லாத

வீரன்.


என்னதான் 

பிள்ளையின் வயசு

அவரை எதிர்த்து நின்றாலும்....

எந்த நிலையிலும்

தம் பிள்ளையை வெறுத்திடாத

தாயின் மறு உருவம்.


தம் பிள்ளையை நேரில் 

திட்டித் தீர்த்தாலும் 

வெளியில் விட்டுக் கொடுக்காமல் பேசும் வகையில்

சுயநலக்காரர்.


தம் பிள்ளை

சிறியதாய் ஒரு நல்லதைச் செய்துவிட்டால்

அதை 

ஊர் முழுதும் சொல்லித் திரியும்

பைத்தியக்காரர்....


எப்படியெல்லாமோ

துன்பப்பட்டு 

துவழாது

துவண்டாலும் தெரியாது....

நமக்காகவே 

இறுதி வரை வாழ்ந்த 

அப்பாவின் 

தியாகம்...


அவர் போன பின்பே

புரிய வரும்.


ஆதலால்


தாயையும் தந்தையையும்

இருக்கும் பொழுதே வணங்குங்கள்.


இழந்த பின்பு அவரைப் 

புகழும் நாம் 

இருக்கும் பொழுதே புகழ்ந்தால்

இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள்

நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள்.


ஆதலால்


தாயையும் 

தந்தையையும்

தயவு செய்து

இழந்த பின்பு தேடாதீர்கள்.


செம்மொழி சிபிராம்.

வறட்சி

கண் என்னும் வானத்தில்

இமையென்னும்

மேகம் மூடியதால்

கண்ணீரெனும்

மழை பெய்தது..


இயற்கை எனும்

வானம்

வறட்சியாய்

நின்றதால்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..பெயர் மாற்றம்


வற்றிவிட்டாலும்

குளத்திற்கும்

ஆற்றுக்கும்

குளம் ஆறு என்றே பெயர்!

ஆனால் உயிர்நீங்கிவிட்டால் மனிதனின் பெயர் மாற்றம் பெறுகிறது

பிணம் என்று.


த.ஹே

வரலாற்றின் பக்கங்கள் ...பாடங்கள்


விண்ணுயர்ந்த மாடங்களும்... 

விரிந்து பரந்த சேனைகளும் ..


அள்ளிச் சேர்த்த செல்வங்களும் ...

குவிந்த வாழ்த்தும் கூட்டங்களும்..


எனக்கு நிகர் யார்?

என்ற அரசர்.. பேரரசர்களும் ..

பொன்னை மிஞ்சிய அழகுகளும் ...


மிஞ்சியிருப்பது மண்மேடு களாய் ..

மிஞ்சியிருப்பது 

மண்மேடு களாய் ..


சொல்லும் பாடம் ஒன்றே

இவ்வுலகு தங்கிச்செல்லும் கூடு ...


எல்லாம் அறிவோம் நாமே ……வாழ்வின் எல்லையை அறிவோம் நாமே ……

பின்னதற்கு ஆற்றாமை.. பின் தள்ளுவோம் இயலாமை ....


அகத்தினைஅன்பினால் நிரப்பி ..

புன்னகை முகத்தில் ஏந்தி..

அதன்அலைகளை  எங்கும் பரப்பி ..

எதிலும் இனிமை  நிறைத்து ...வாழ்வோம் இனிய வாழ்க்கை ...

இந்த நாளும் உண்மை...

இந்த நிமிடமும் உண்மை...

          

             எம் .தெய்வானை,

                   மீஞ்சூர்.

பள்ளிக்கூடம்


சாதி மத பேதமின்றி

மத நல்லிணக்கம் இங்கே ஆரம்பமாகிறது

ஏழையென்றும் பணக்காரனென்றும் பேதமின்றி ஒன்று கூடி நட்போடு நாளும் உறவாடும் கூடம் அது தான் பள்ளிக்கூடம்


மனதின் இருளைப் போக்க ஆன்மீககூடம் 


அறியாமை என்னும்இருளை அகற்ற பள்ளிக்கூடம்


எண்ணையும் எழுத்தையும் கற்பித்து

வாழ்வில் ஏற்றம் பெறத் தூண்டுவதும்

கல்வியென்னும் ஞானக்கண்ணை அளிப்பதும் பள்ளிக்கூடம்


 குதூகலத்திற்கும்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கும்

தன்னைத்தானே அறிந்து கொள்ளவும்

சமூகத்தில் பழகும் போக்கையும் கற்பிப்பதும் பள்ளிக்கூடம்


பள்ளியில்லை ஊரும்

ஆறில்லா ஊரும் நாறும்


பள்ளியைப் போற்றி 

படிப்பை ஏற்றி

படிப்பினையை கற்போம்தி.பத்மாசினி சுந்தரராமன்

பௌர்ணமி நிலவே!

மௌனத்தை இன்று 

உன் தாய்மொழியாகக் 

தத்தெடுத்னையோ!

பௌர்ணமி நிலவே?

திசைமாறிய காற்று

திருடிச் சென்ற 

வெண்மேகங்களின்

வருகைதனை எதிர்நோக்கி

காத்திருக்கின்றனையோ?

இல்லையெனில்........

நட்சத்திர சன்னல்கள்

தாழ்திறக்க வேண்டி

ஏங்குகின்றனையோ?

காவலுக்கு உடன் வந்த

கண்கவர் மின்மினிகள்.....

கையொப்பமிட்டுவிட்டு

கால்நாழிகை நகரந்திட

சோகத்தில் நின்றனையோ?

உன்வரவுக்காகவே

காத்திருக்கும்...........  நீ

சுமந்துவரும் கனவுக்காகவே

கண்களிங்கு ஏராளம்!!!!’

பாவம் ........ அவற்றை ஏமாற்றாதே!

மேகம் பிடிக்க நீயும் 

வேகம் காட்டாதே!    விடியல் வரை நகர்ந்து வா...

விந்தையான ஒரு

தருணத்தில் ....... 

உன்னை தேடியே வந்து

உறவாடிடும் 

நீ தேடிய மேகங்கள்!🌹🌹வத்சலா 🌹🌹


!

இறைந்து கிடக்கும் தடங்கள் ..மனப் பெருவெளி 

எங்கும் இறைந்து  கிடந்தன ..

காலப் பெருவெளியின் தடங்கள் ...


தடங்களில் சில தழும்புகளாய்.. சில  

அற்புத அனுபவப் பாடங்களாய் ....   


தினம் தினமும் சரி செய்கிறேன் ... வாழ்க்கைப் பக்கங்களை ..


எப்போது முடியும் 

கற்கும் பாடங்கள் ..?

ஏதோ ஒன்றில் பிழை.. எந்நாளும் .. என்னாலும்..


முற்றிலும் சரியாய்.. முடியாதா வாழ்க்கை ..

அனைத்தையும் கற்றுச் சிறக்காதா ..நாட்கள் ..


              தெய்வானை,

                  மீஞ்சூர்.

Monday, 8 July 2019

தாமரை


துள்ளி கயல் நீந்துகின்ற தடாக குளத்தினிலே

வெள்ளை முல்லைபூ போலே வளர்ந்திருக்கும் தாமரையே,,,,


கண்டுகொண்ட கலைமகளும் உன் மேலே தவம் புரிந்து 

கல்விக் 

கண்ணை கொடுத்ததினால்

சரஸ்வதி என்றானாள்,,,,


உன்னழகில் மயங்கி நின்று,

தன் செவ்வழகில் சரிபாதி,,,

தந்து விட்ட மலைமகளும் செல்வத்தோடு நின்று கொண்டாள்,,,,


ஒன்றிருக்க 

ஒன்று இல்லை என்று நம்மை

ஆள வைத்து

வீணாக மனிதினிலே சேர்த்து வைக்க முடியவில்லை,,,


வெண்தாமரை இருக்கையிலே செந்தாமரை மறைந்து விடும்,,,

செந்தாமரை மலர்ந்து விட

வெண்தாமரைக் கிடமேது,,,,,


சேர்ந்திருக்க காத்து நின்றேன்,,,

ஒருத்தி,

சேர வழியில்லை என்றாள்,,,

அவளிருக்க நானெதற்கு?

நானிருந்தால் அவளெதற்கு,,,?


இருவரும் இருந்து விட்டால்

இயங்கிடுமா

உலகம் என்றாள்,,,

பாதி வழி கடந்து விட்டேன்,,,

சேர்ந்து,

பார்க்க இன்னும் முடியலையே,,,


செல்வம், 

தேடி 

வருகையிலே

ஞானம் ஓடி மறையுதடி,,,

ஞானம் தேடி வருகையிலே

வந்த செல்வம் செல்லுதடி,,,,,


பாலா

பரிதிமாற்கலைஞர்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்

விளாத்திக்குளம் !

அங்கே 

கோவிந்தசிவனார்

லட்சுமி அம்மாள்

மகிழும் வண்ணம்

தவமகனாய்ப் பிறந்தவரைப் போற்றி வணங்குவோம்!

தமிழன்னை செய்தவத்தின் பயனே அம்மகன்!

மொட்டான மொழிதனை மலராக மலர்த்தியவன் தான்மலர்ந்து நெடுநாள் வாசம்வீசாமல்  இளம்பருவத்திலேயே

இம்மண்ணுலகைத் துறந்தவன்!

தனித்தமிழ் இயக்கம் கண்டு

தமிழுக்குப் புத்துணர்வூட்டியவன்

நாடகத்துறைக்கு மறுமலர்ச்சி தந்து

கலாவதியும் ரூபாவதியுமென இரட்டைச் சகோதரிகளைக் கொடுத்தவன்!

சூரியனை பரிதியாக்கி

நாராயணனை

மால்ஆக்கி

சாத்திரியை

கலைஞராக்கி தன்பெயரை

பரிதிமாற்கலைஞர்

என தனித்தமிழில்

மாற்றியவன்!

காலங்கள் புரண்டாலும் தமிழுள்ளவரைக்கும்

தன்பெயரால் நிலைத்து           வாழ்பவன்!


த.ஹே

கோளூர்

வாழாத வாழ்க்கை....

வயதொன்றைக்கடந்துவிட்டோமென்று

வாழ்க்கை

அழுகிறது மனிதனைப்பார்த்து..

கடந்தது காலம் மட்டுமல்ல

நீ வாழாத வாழ்க்கையும்தான்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..புன்னகை


காதல் சொன்ன ஓரே

கணத்தில் அவள்

முகமெங்கும் வியர்வை🌼

முத்து முத்தாய்

மொட்டு விட்டிருந்தது🥀

எனது வெள்ளைக் கைக்குட்டையை  எடுத்து 

நீட்டினேன்🌻

வியர்வை ஒற்றித் திரும்பத்

தந்தாள் அவள் முகத்துப்

புன்னகையெல்லாம்

குறைந்திருந்தது 🤔🤔

புரியாமல் கைக்குட்டையை 

விரித்தேன்🌸

விரிந்ததென் விழிகள் !

என்னே ஓர் ஆச்சரியம் !🌹

வெறும் கைக்குட்டைமுழுக்க🌷

வண்ணப் பூக்களாய்ப்

பூத்திருந்தது🌸

அவளின் மொத்தப்

புன்னகையும்💐

🌹🌹வத்சலா🌹🌹

கற்றுக் கொள்கிறேன்


தூரத்துக் காற்றில் 

மிதந்து வந்த 

குயிலின் குரல் ....


கற்றுக் கொடுக்கிறது எல்லா உணர்வுகளையும் இனிமையாய் 

உரைப்பது  எப்படி 

என்று ...


                தெய்வானை,

                      மீஞ்சூர்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நலம்; நலமறிய ஆவல்.


புன்னகையால் உனை உணர்த்திப் புது உறவாய் ஆனவளே(னே),

கண்ணசைவால் எனைக்கவர்ந்து காதல் மழை பொழிந்தவளே(னே), 

சொல்லழகால் மனம் திறந்து சொக்கிப் போக விட்டவளே(னே),

நடையழகில் உடையழகில் கிறங்கி நிற்க வைத்தவளே(னே),

காதலென்றால் என்னவென்று கதை கதையாய்ச் சொன்னவளே(னே),

மகிழ்ந்திருந்த நேரமெல்லாம் மகிழ்ச்சியிலே இணைந்தவளே(னே),

கலங்கி நின்ற நேரமெல்லாம் கண்ணீரைத் துடைத்தவளே(னே),உன் அழகால், உன் சிரிப்பால் மதிமயங்கச் செய்தவளே(னே),

மயங்கி நின்ற வேளையிலே மறந்துவிட்டுச் சென்றவளே(னே),

மறக்கவில்லை என அறிந்து

உறக்கமின்றித் துடித்தவளே(னே),

தயக்கமின்றி உள்மனதை உணர்த்திவிட்டுப் போனவளே(னே),

என் நலமறியும் விருப்பமதை நெஞ்சினிலே சுமப்பவளே(னே),

நலம்; நலமறிய ஆவல்,

நலம்; நலமறிய ஆவல்.


*சுலீ. அனில் குமார்.*

செந்நாவே


வாயென்ற கோட்டைக்குள் மகாராணி நீயே!

நோயென்ற

தாக்கத்தைக் காட்டும் கண்ணாடியும் நீயே!

சுழன்றாடி எழுத்துகளை உச்சரித்துச் சொல்லோவியம் தீட்டுவதும் நீயே!

ஆறுவித சுவைகளைப் பக்குவமாய் உணர்வதற்கு 

உகந்த ஆய்வுமேடையும் நீயே!

இனிப்பென்றால் நுனியிலே கொண்டாட்டம் உனக்கு!

கசப்பென்றாலோ அடிப்புறமாய்த் தள்ளுவதில் கில்லாடி நீ!

காரமென்றால் நடுப்பகுதியில் துள்ளாட்டம் போடுவாய்!

புளிப்பென்றாலோ துவர்ப்பென்றாலோ உவர்ப்பென்றாலோ முகஞ்சுளியாது பக்கங்களில் வைத்துக் கொண்டாடும் உனக்கு மெய்யும் பேசத்தெரியும் பொய்யும் பேசத்தெரியும்

பிறரைப் புகழவும் தெரியும் அதேபோல் இகழவும் தெரியும்

செந்நாவே பெருமைகொள்!

நீ செந்நாப்போதாரின் செந்நாவிலும் *நாகாக்க* எனக் குறள்வடிவம் பெற்றாய்!

மொழிகளுக்கெல்லாம்

தொட்டிலும் நீயே!

கட்டிலும் நீயே!,

தொட்டில் தாலாட்டும் கட்டில் காதற்மொழிப் பேச்சும்

தாலே நீயின்றி ஏது?

மொழிவளர்கருவியே

உணர்வை வெளிப்படுத்தும் வழியே!

வாள்முனையைக் காட்டிலும் பேசும் நாமுனைக்கு ஈடேது?

சுவைதனில் நாவே எங்ஙனம் நீ இனிப்பை விரும்புகிறாயோ அங்ஙனமே நீ பேசும்போதும் கசப்புமொழி விடுத்து இனிக்கும்சொல் பேசு!,


த.ஹே

கோளூர்

நன்றிகடன்....

கூடவே வருவதில்லை

எவரும்

கூடி  வாழ்ந்த பொழுது 

வாடவிடாமல்

வாழ்வளித்தவர்களை

நோக விடாமல்

வாழ்வளிப்பதே

நாம் வாழும் காலங்களில்

நாம் செய்யும் நன்றிகடன்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


சில நேரங்களில் சில மனிதர்கள்


ஊருக்கே உபதேசம் சொல்லி நிற்பார் அவர்

தனக்கொன்று வரும் நேரம் தளர்ந்து நிற்பார்.


எல்லாம் அறிந்தவராய்த் தனைச் சொல்லுவார் சிலர்

நாலும் அறிந்தவரைப் புறம் சொல்லுவார்.


கடவுளே இல்லையென்று கதையளப்பார்

அந்த கதைக்குள்ளும் கடவுளை நினைத்து நிற்பார்.


பெண்ணியம் பேணவே பிறவியென்பார் எனில்

கண்ணியம் காக்கவோ தவறி நிற்பார்.


புண்ணியம் புவியினில் பிறந்ததென்பார் ஆனால்

ஏனிந்தப் பிறவியென்றும் கேட்டு நிற்பார்.


பிறருக்காய் வாழ்வதே வாழ்க்கையென்பார்

பிறர் வாழ்க்கையைச் சுரண்டியே வாழ்ந்திருப்பார்.


கனவுகள் கண்டதில் மகிழ்ந்திருப்பார்

அந்தக் கனவு தான் வாழ்க்கையென்றே இருப்பார்.


பலருக்கும் பல நேரம் உதவி நிற்பார் சிலர்

தன் உறவுக்காய் எதுவும் செய் யாதிருப்பார்.


சிலநேரம் சிலமனிதர் சிறந்து நிற்பார் அவர் பலநேரம் தன்னையே மறந்து நிற்பார்.


காலங்கள் பல நூறு நிலைத்திருப்பார் சிலர்

தன் காலத்தில் அறியப் படாதிருப்பார்,

அதற்கென்று கவலைப் படாதிருப்பார்.


*சுலீ. அனில் குமார்.*

Thursday, 4 July 2019

கொன்றை மலர்கள்

மனத்தின்
மூலை முடுக்கெல்லாம்
படர்ந்திருக்கும்
கள்ளி
ஆயினும்
வாசலில் நிறைந்திருக்கின்றன
கொன்றை மலர்கள்
*பொன் .இரவீந்திரன்*


கனவுலகில் கவிதையெழுது!நிலவில் நடைபயில
நித்திரை போதும் ;

சந்த
நயமிக்க  தமிழால்
சித்திரமும் கவிதை ஓதும்;

சிந்தித்தால் வானவில்லும்
கூந்தலைக்கோதும்;

சாத்திரத்தையும் சூத்திரத்தையும்
கூறி தடைசெய்ய நினைத்தால்
தமிழுக்காக அகிலமே
படைதிரண்டு மோதும்;

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

உயிரில் கலந்த தமிழுணர்வே
உருக்குலையாத தித்திக்கும் பேச்சென

வானவீதியில் நடைபயில
வண்ணத்தமிழே
அக்னி வீச்சென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.


கண்ணீர்

மேடு பள்ளங்களாகவும்
கரடு முரடாகவுமுள்ள
நமக்கிடையிலான
கால இடைவெளியை
சமன் செய்து நகர்கிறது
உனக்கான என் கண்ணீரும்
எனக்கான உன்
கண்ணீரும்

*பொன்.இரவீந்திரன்


சுயநலம்

ஒரு தேசத்தில் பற்றும் தீ,

தன் சட்டைப் பையில்

பற்றும் வரை எவரும்

சப்தமிடுவதில்லை...

வைரமுத்து.


உறவுகள்

மனம்விட்டுபேச
வார்த்தைகளில்லை
ஊமையாய்
உறவுகள்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

.


தேடிக் கொண்டிருக்கிறேன்,,, பாலாஎன்ன கொண்டு வந்தேன் நான்,
எனக்கும் தெரியவில்லை,,,

மனிதனாய்
பிறந்து விட்டு
நான் மயக்கம் கொள்கின்றேன்,,,

தென்னை
மரத்தை நம்பி நிழலில் நான் நின்றேன்,,,

இலவமரத்தைக் கண்டு
பழத்தை பார்க்க வந்தேன்,,,

பாலைவனத்தில் நான் விதையை தூவிவிட்டு,,,

பாவி
உள்ளத்திலே மரம் வளரக் கண்டேன்,,,

வேலை கிடைக்கையிலே
போக மனமில்லையே

வேலை தேடுகிறேன்
நாளும் விடவில்லையே,,,

ஆலமரத்தடியில் நான்
என்னைத் தொலைத்து
விட்டேன்,,,,

வீழும்
விழுதுகளில்
நாளும்
தேடிக் கொண்டிருக்கிறேன்,,,,
என்னை,
நானே
தேடிக் கொண்டிருக்கிறேன்,,,

பாலா


பூக்களில் புன்னகை ..பூக்களில்
தவழ்ந்திடும்
புன்னகை உலகில்
மிக மிக
அழகு  ..
பலவித பணிகளில் ..
கவலையில் ...
எதிர்ப்படும் மனிதர்..
யார் காணும் போதும்
பூக்களாய்ச்
சிரிக்கும்....
நாமும் ...அழகு..
புன்னகை செய்வோம்
பூக்களைப்போல்.

மணியோசை உலகில் 
மிக மிக
இனிமை ...
நினைக்கும்
செயல்
எல்லாம்
நிறைவேறும் ..
மணியோசைஒலித்தால்.
விரும்பியது நடக்க..
மனம் பதறித் துடிக்கும்
முகங்களைக் கண்டு ....
வாழ்த்திடும் போது
நம் வார்த்தை இனிமை
மணியோசை போல்...
வாழ்த்துவோம் இனிமையாய்...
மணியோசை போல் .

               தெய்வானை,
                     மீஞ்சூர்.


தேடிக் கொண்டிருக்கிறேன்! - ஹேமாவதிதொடரியில்
செல்லும் போதெல்லாம்
காலதரில்
என்கண்களைச்
சொருகுவேன்!
ஓடிடும் இயற்கையில்
என்மனம்தனை
ஆழப் புதைத்திடுவேன்!
புதைகையில்
ஆவல்மிகுந்தே
விழியாலும்
மனதாலும்
பனைக்கூட்டங்களைத்
தேடுவேன்!
நெட்டையும் குட்டையுமாய் கன்றுகள் சூழ
நின்றிருக்கும் பனைக்கூட்டங்களைத்
தேடுவேன்!
அங்ஙனம் தேடுகையில் வரிசையாய் நின்றிருக்கும் பனைமக்களைக் கண்டால் உள்ளம்
குதூகலிப்பேன்!,
குட்டையோ நெட்டையோ ஒத்தையாய் இருந்தாலும் போதுமே எனபதை பதைப்புடன் தேடுவேன்!
ஒற்றைப் பனைமுகம் கண்டாலும் பெருத்த மகிழ்வில்
கையசைத்துப் புன்னகைப்பேன்!
தலைவெட்டிய பனைகளைக் கண்டால் உள்ளம் பதறுவேன்!
வெட்டப்பட்டுச் சாய்ந்துக் கிடக்கும் பனைகளைக் கண்டாலோ அழுதே விடுவேன்!,
கூட்டமாய்க் கண்டால்
பனைமக்காள்!
நீங்கள் நீடூழி வாழ்க! என மனதார வாழ்த்துவேன்!
பனையன்றோ மண்ணுலகக் கற்பகத் தரு!
பனையிருக்கும் இடமெல்லாம் நீர்வளம் இருக்கும்!
முன்னொரு காலத்தில் நான்பார்த்த பனைக்கூட்டங்கள்
இன்றில்லாமல் போனதற்குக் காரணம் தெரியவில்லை!
காணாமல் போன பனைக்கூட்டங்களைத் தான்
நான் இன்னமும் தேடிக் *கொண்டிருக்கிறேன்!*

த.ஹே
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS