Header Ads Widget

Responsive Advertisement

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்


குழந்தைத் தொழிலாளிகளைத் தனியறையில் அடைத்து வைத்து

அரசுக்குத் தெரியாமல் வேலை வாங்கும் முதலாளி

அதிசயமாய் ஒரு நாளவ் வறைக்குள்ளே நுழைந்து விட்டு

காவல் காப்பவனைப் பார்த்து மெல்லச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


மரத்தையெல்லாம் வெட்டிவிட்டு

வெப்பம் தாங்க முடியாமல்

கதவு சன்னல் மூடிவிட்டு

குளிர் அறையில் தூங்கிவிட்டு

தம் மூச்சைத் தமைத் தாமே சுவாசிக்கும் நம் மக்கள்

விடிகாலை விழித்தவுடன் விரைவாகச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


வருவதற்கு யாருமின்றி

யாரோடும் உறவுமின்றி

மூச்சு முட்டக் கதவு பூட்டி உள்ளேயே இருப்பவர்கள்,

தள்ளாத வயதினிலே தனியாக இருப்பவர்கள்,

திருடர்களைப் பயந்தவாறே

காலத்தைக் கழிப்பவர்கள்,

அனைவருமே அலுப்புடனே 

அலறியபடி சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


உள்ளே வரும் வழியாய் கதவு வைத்த காலம் போய்

நம் காற்றை வெளியேற்றும் வழியாகக் கதவு இன்று.

சன்னலதைத் திறப்பதில்லை அதனாலே வைப்பதில்லை

பலருக்கு நகரத்தில் சன்னல் வைக்க இடமுமில்லை

அதனாலும் சொல்கின்றார்

அலுத்துப் போய்ச் சொல்கின்றார்

கதவைத்திற, காற்று வெளியேறட்டும்.


*சுலீ. அனில் குமார்.*