Header Ads Widget

Responsive Advertisement

காகம்


கறுப்பு தான் நான்.....ஆனால் 


என் உள்ளம் என்றுமே வெள்ளை நிறம் தான்.

எனக்கென்று நான் அதிகம் சேர்ப்பதில்லை

பிறருக்குக் கொடுக்காமல் நான் எதுவும் உண்பதில்லை.


பிறருக்குத் தீங்கெதுவும் நினைத்ததில்லை

உணவுக்கன்றிப் பிறரிடம் நான் சென்றதும் இல்லை

எந்த உணவையும் எந்நாளும் பழித்ததில்லை

அதனால் உணவுக்குப் பஞ்சம் எனக்கு இருந்ததுமில்லை.


கறுப்பு தான் நான்.....


அதற்காகக் கவலை நான் பட்டதில்லை

எந்த சபையிலும் தலைகுனிந்து நடந்ததில்லை

வண்ணத்தில் குறையொன்றும் கண்டதில்லை

அதனால் எண்ணத்தில் குறையேதும் எனக்கு இல்லை.


கறுப்புதான் நான்.....


நான் கறுப்பென்று சொன்னதும் நீங்களேதான்

கறுப்பை வெறுப்பாகப் பார்ப்பதும் நீங்களே தான்

இழிவாகச் சொன்னாலும்

பழிபோட்டு நின்றாலும்

பேதங்கள் பார்க்காமல் இருப்பவன் நான்

ஏன் 

குயில் முட்டையைக் கூட அடை காப்பவன் நான்.


காக்கை குளித்தால் கொக்காகுமா? என்பீர்கள்.

நான் ஏன் கொக்காக மாறவேண்டும்?

என் அடையாளம் தன்னையே தொலைக்க வேண்டும்?

இடம் பார்த்து ஆள்பார்த்து மாற வேண்டும்

மனிதர் நடிப்பதைப் போல் ஏன் நான் நடிக்க வேண்டும்?


என்னை நானாக வாழவிடுங்கள்

என்னைப் பரிகசிப்பதை நீங்கள் விட்டு விடுங்கள்

கறுப்பென்று கேலி எனைச் செய்யாதீர்கள் முடிந்தால்..... என்னில் உள்ள நல்லவற்றைப் பின்பற்றுங்கள்.


*சுலீ. அனில் குமார்.*