Header Ads Widget

Responsive Advertisement

முத்தக் கவிதைகள்

சத்தம் இல்லா முத்தம்

தினம் தினம்
பகலும் இரவும்
சத்தம் இல்லாமல் முத்தம் இட்டுக் கொள்ளும் நேரமே
மயக்கும் மாலை!


அவள் தந்த முத்தம்

ஒருநாளில் தனக்கு
அவள் தந்த முத்தம்
எத்தனை என்று
எண்ணிப் பார்த்துத் தோற்றுப்போனது கடற்கரை
முத்தமிட்ட அலையிடம் முத்தம் வாங்கிக் கொண்டே!


முத்த வங்கி

திருமணமான மகள்
புகுந்தவீட்டில்!
மகளைப் பிரிந்த
ஏக்கத்தில் தாய்!
சிறிய வயதில் மகள்
விளையாடிய
மரப்பாச்சி பொம்மையைத் தேடி எடுத்து தன்முகத்தோடு அணைத்துக் கொண்டாள்!சிறுமியாய் இருக்கையில் மகள் அந்த பொம்மைக்குக் கொடுத்த முத்தங்களையெல்லாம் இப்போது தாய் சேர்த்து எடுத்துக்கொண்டாள்
வங்கியின் சேமிப்பிலிருந்து வேண்டிய தொகையைப் பெறுவதுபோல!


நீண்ட முத்தம்

விழிப்பில்
எப்போதாவது
முத்தமிட்டுக் கொள்வதும்
துயில்கையில்
இடைவெளியே இல்லாமல் நீண்டமுத்தமிட்டுக்
கொள்வதும்
தினம்தினம் வழக்கமானதொன்றாகி விட்டது இமைகளுக்கு!


முத்தமே முத்தத்திற்கு எதிரி

செடியில் மலர்ந்த
பூவின் இதழ்களுக்கு
பனி இட்ட முத்தங்கள் யாவும்
கதிரவன் முத்தமிட்டதும்
காணாமலொழிந்தன!


எதிர்பாரா முத்தம்

வானிலை அறிக்கை மழைவரும் என்றது!
வராததால் ஏக்கம் கொண்ட வறண்டநிலம்
வானிலை அறிக்கை சொல்லாத நாளில்
மழைவர இன்பத்திலாழ்ந்தது!
எதிர்பாரா முத்தம் பெற்றதால்!


முரட்டு முத்தம்

புயல் அடித்தது!
மரங்கள் சாய்ந்தன!
ஆனாலும்
கடற்கரையை
விடாமல் முத்தமிட்டன முரட்டு அலைகள்!


பரவச முத்தம்

ஒரு பெண்ணுக்கு வாழ்வில் எத்தனை முத்தங்கள்?
குழந்தையாய் இருக்கையில் கண்ணே மணியே எனக் கொஞ்சி அன்னையிட்ட முத்தங்கள்!
அதற்கு போட்டியாக
என்னை ஆளவந்த இராணியே என
பாசத்தில் விஞ்சி
தந்தையிட்ட முத்தங்கள்!
இவர்கள் இருவரையும் ஓரங்கட்டி கையிரண்டில் ஏந்தி
குலந்தழைக்க வந்தவளே!திருமகளே என்று
செல்லமாய் தாத்தனும் பாட்டியும்
தந்த முத்தங்கள்!
உடன்பிறந்தோர் உற்றமும் சுற்றமும்
அன்பான தோழியர்கள் என
அத்தனை பேரும் அன்பின் மிகுதியால் இட்ட முத்தங்கள்!
அத்தையவள் மடிமீதில் கிடத்தி மருமகளே என அன்பாய் விளித்து இட்டமுத்தங்கள்!
தாய்மாமன் தங்கச்சங்கிலியை
கழுத்தில் அணிவித்து பெருமையாய் இட்ட முத்தங்கள்!
நாளும்வளர்ந்து குமரிப்பெண்ணாய்த்
திரண்டு நிற்கையில் பருவத்தின் ஆளுமையில் கட்டுண்டவேளையிலே
இருமனமும் ஒருமனமாய்க் கலந்த காதல்வாழ்விலே
யாருக்கும் தெரியாமல் காதலன் இட்ட முத்தங்கள்!
மனம்போல் மாங்கல்யமாய் அதே காதலனே கணவனாய் வாய்த்தப் பின் உரிமையோடும் அன்போடும் தருகின்ற முத்தங்கள்!
மனைவியாய் ஆனவள் சூலுற்று
ஏழுசோறுண்டு
கைநிறைய வளைபூண்டு
தலைமுழுக்க பூச்சூடி வளைகாப்பில் மனம்நெகிழ்ந்து
பத்தாம்  மாதத்தில்
மறுபிறவி எடுத்து
பெருவலியைத் தாங்கி
குழவியொன்றை ஈன்று
அக்குழவி வளர்ந்து
தத்தி தத்தி நடைபயின்று
கண்ணே மணியே முத்தந் தா!
கற்பகத் தருவே முத்தந் தா!எனவிளிக்கையில்
ஓடிவந்து பிஞ்சுக்கரங்களால்
அன்பாய் அணைத்து
தித்திக்கும் உதடுகளால் தருகின்ற முத்தங்கள்!அம்மாடி!
ஒருபெண்ணுக்குத் தான் வாழ்வில் எத்தனை முத்தங்கள்?ஆனால் அம்முத்தங்கள் அணைத்திலும் அவளைப் பரவசப் படுத்தும் முத்தம் எதுவென்றால்
அவள்பெற்ற குழந்தை முதல்முறையாய்
தந்த முத்தமே ஆகும்!மற்ற முத்தங்களெல்லாம்
சத்தங்களில்லாமல்
இம்முத்தத்தின் முன்னாலே நில்லாமல் ஓடும்!

த.ஹேமாவதி
கோளூர்