Header Ads Widget

Responsive Advertisement

மன்னித்துவிடு


உன்வேலை நீ செய்தாய்

ஓயாமல் நீ பெய்தாய்

வெள்ளமாய் நீ பாய்ந்தாய்

கடலிலே நீ சேர்ந்தாய்

சேமிக்கும் எண்ணமில்லை சேமித்துப்பழக்கமில்லை

உனைப் பழித்து நின்றார்கள்

தன் தவறை மறந்தார்கள்

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு மழையே.


நீயின்றி உணவேது

நின் தயவின்றி வாழ்வேது

வெயிலின்றிப் பகலேது

பகலின்றி இரவேது

நின் தாக்கம் இல்லாமல் நீராவி தான் ஏது

நீர் ஆவியாகாமல் மேகமேது மழையேது

தெரிந்தாலும் புரியாமல்

உனைப் பழித்தார், திட்டிநின்றார்

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு வெயிலே.


நீயின்றி அசைவேது அசைவின்றி சுகமேது

நீ வீசவில்லை யென்றால்

உயிர்களுக்கு வாழ்வேது

கடலிலே உருவாகிக் கரையிலே நீ வந்தால்

உன்வழியைத் தடுப்பவர்கள்

உன்னையே தூற்றுவார்கள்

வெப்பத்தைத் தணித்தாலும் மழைகொண்டு வந்தாலும்

பழியெல்லாம் உனக்குத்தான் தப்பெல்லாம் உன்னிடம் தான்.

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு காற்றே.


பழி சுமத்த ஆள்வேண்டும்

தப்பிக்க வழிவேண்டும்

தவறுகளை மூடவேண்டும்

இயலாமையை மறைக்கவேண்டும்

குறை சொல்லிப் பழகிவிட்டோம்

நிறைகாணத் தவறிவிட்டோம்

எங்களின் இயல்பு அது

மன்னித்துவிடு இயற்கையே.

தவறு தான் தெரிகிறது 

தவறு தான் தெரிகிறது

மன்னித்துவிடு இயற்கையே.


*சுலீ. அனில் குமார்.*