Header Ads Widget

Responsive Advertisement

செந்நாவே


வாயென்ற கோட்டைக்குள் மகாராணி நீயே!

நோயென்ற

தாக்கத்தைக் காட்டும் கண்ணாடியும் நீயே!

சுழன்றாடி எழுத்துகளை உச்சரித்துச் சொல்லோவியம் தீட்டுவதும் நீயே!

ஆறுவித சுவைகளைப் பக்குவமாய் உணர்வதற்கு 

உகந்த ஆய்வுமேடையும் நீயே!

இனிப்பென்றால் நுனியிலே கொண்டாட்டம் உனக்கு!

கசப்பென்றாலோ அடிப்புறமாய்த் தள்ளுவதில் கில்லாடி நீ!

காரமென்றால் நடுப்பகுதியில் துள்ளாட்டம் போடுவாய்!

புளிப்பென்றாலோ துவர்ப்பென்றாலோ உவர்ப்பென்றாலோ முகஞ்சுளியாது பக்கங்களில் வைத்துக் கொண்டாடும் உனக்கு மெய்யும் பேசத்தெரியும் பொய்யும் பேசத்தெரியும்

பிறரைப் புகழவும் தெரியும் அதேபோல் இகழவும் தெரியும்

செந்நாவே பெருமைகொள்!

நீ செந்நாப்போதாரின் செந்நாவிலும் *நாகாக்க* எனக் குறள்வடிவம் பெற்றாய்!

மொழிகளுக்கெல்லாம்

தொட்டிலும் நீயே!

கட்டிலும் நீயே!,

தொட்டில் தாலாட்டும் கட்டில் காதற்மொழிப் பேச்சும்

தாலே நீயின்றி ஏது?

மொழிவளர்கருவியே

உணர்வை வெளிப்படுத்தும் வழியே!

வாள்முனையைக் காட்டிலும் பேசும் நாமுனைக்கு ஈடேது?

சுவைதனில் நாவே எங்ஙனம் நீ இனிப்பை விரும்புகிறாயோ அங்ஙனமே நீ பேசும்போதும் கசப்புமொழி விடுத்து இனிக்கும்சொல் பேசு!,


த.ஹே

கோளூர்