Now Online

Tuesday, 28 May 2019

வானமே பேசிவிடு

வானமே வாய்திறந்து

பேசாயோ

உன் மௌனத்தினால்

பூமியும் திக்கற்று

விக்கி நின்றது.


உன் வாயிலிருந்து திட்டிதீர்க்கும் வார்த்தைகளில்

துன்பம்தீர்க்கும்

மாத்திரைகளாய்

மாறும்.

பேசிவிடு இல்லையேல் திட்டிவிடு

மௌனத்தால்

ஞாலத்தை 

மரித்துவிடாதே..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


28-05-2019.

நான் எங்கே?

உன் சேலைத்தலைப்பில்

முடிந்து வைத்த

ஒற்றை நாணயமாய்க்கிடக்கிறது

எந்தன் காலம்

*பொன்.இரவீந்திரன்*

நீயற்ற நான்...

காலத்தின்

பக்கங்களில் 

கேள்விக்குறிகளை

எழுதியபடி நகர்கிறது 

நீயற்ற நானும்

நானற்ற நீயும் 

*பொன்.இரவீந்திரன்*


காதலியா? மனைவியா?

வரமாய் வருகிறாள்

காதலி

சாபமாய் நிற்கிறாள்

மனைவி....

காலத்தின் மடியிலோ கிடக்கிறேன் நான்

பாரமாய்...

*பொன்.இரவீந்திரன்*

ஞாபகம்

தொலைதூர

அடர்வனத்தின்

சுனை நீரோடும்

தொடக்கப்

புள்ளியில் எழும்

சல சல ஒலி

ஞாபகப்படுத்தியபடி

நகர்கிறது

உந்தன்கொலுசையும்

சிரிப்பையும்

*பொன்.இரவீந்திரன்*

வெற்றிடமாய் காலம்

கோடிட்ட இடங்களை நிரப்பச்சொல்லித்தான்

வெற்றிடங்களை விட்டிருக்கிறது காலம் 


நிரப்புகிறோம்

நீயும் நானும் 


ஆயினுமென்

பொருத்தமான சொற்களைக்

களவாடி வைத்திருக்கிறான்

சாத்தான்

*பொன்.இரவீந்திரன்*

கிணறுஊருக்கு நடுவே நாட்டாமையைப்போல்

கர்வமாய் இருந்தது அந்தக் கிணறு.


வீட்டுக்கு அருகே இருந்ததனால் அது 

என்றுமே எங்கள் சொந்தக் கிணறு.


கிணறுக்கு நிலமளித்த பெருமையுடன் கர்வமுடன்

நீர் இறைத்து மகிழ்ந்ததோ குடும்பத்தின் பேறு.


கொதிக்கின்ற கோடையிலும் நீர் இருக்கும் என்பதனால் கவலையின்றிப் பொறுத்திருக்கும் கண்ணியமாய் ஊரு.


சாதிமத பேதமின்றி இனம்கடந்து மொழிகடந்து

அனைவருக்கும் அள்ளி நீரை அளித்ததந்தக் கிணறு.


ஊர்மக்கள் நிலை உயர்ந்து வீடுதோறும் கிணறு வந்து

வீட்டு மேலே தொட்டி வந்து மறக்கப் பட்டது கிணறு.


காத்திருந்த ஊர் முழுதும் நன்றி கெட்டுப் போனபின்னும்

தன் நிலையில் மாற்றமின்றி இருக்குதின்றும் கிணறு.


என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணமுடன் தண்ணீருடன் இன்றுமந்தக் கிணறு

கிராத்தூர் பஞ்சாயத்துக் கிணறு.


*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

தமிழ்க் காதல்*மெய்யெழுத்தாய்* அவள்!

*உயிரெழுத்தாய்* அவன்!

விழிகளின் சங்கமத்தில் இருவரும் ஒன்றிட

*உயிர்மெய்* எழுத்தானார்கள்!

அவன் பேச்செல்லாம்

*மெல்லினம்* என

அவன் ரசித்தான்!

*இடையினமாய்* அவன் அவளிடம் எல்லைமீறுகையில்

*வல்லினமாய்* அவள் கடிந்துக் கொண்டாள்!

*பூப்பெயர்முன் மெல்லினம் மிகுதல்* போல

அவளின் பூவிரல்களை அவன்விரல்கள் பிடிக்கையில்  வெட்கம் அவளிடம் மிகுந்தது!

*சொல்பொருள்  பின்வருநிலையணியாய்*

இருவரும் அவரவர் பெயர்களை

மாற்றிமாற்றி திரும்பதிரும்ப

நாமகிழ சொல்லிசொல்லி இன்பங் கொண்டனர்!

*மொழிமாற்றுப் பொருள்கோளாய்*

இதயங்களை மாற்றிக் கொண்டனர்!

கண்களால் தொடங்கி *குறள்வெண்பா* போலிருந்த காதலை

*நிலைமண்டில ஆசிரியப்பாவாய்*

நீண்டு வளர்த்தார்கள்!

*எழுத்தாயிருந்த* இருவரும் *அசை* ந்து மனம்மாற

சீரான *சொல்லாகி*

*யாப்பாகி* *அணியாகி*

ஒருவருக்குள் ஒருவராய் இதயத்தே ஒன்றாகி அவள்அவனாய் அவன்அவளாய்

*திரிதல் புணர்ச்சி* ஆனார்கள்!இதனால் இருவரிடையே காதல் என்ற *பெருங்காப்பியம்* உருவானது! அழியாதது தமிழ்மொழி மட்டுமல்ல தங்கள் காதலும் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*

இன்றைய என்நினைவில்

“இன்றைய என்நினைவில்”

::::::::::::::::;;;;;;;;;;;;;::::::::;

பனிபோர்த்திய மலையெல்லாம் 

பகல் முழுக்க பச்சையாடைப்

உடுத்தி நின்ற விந்தைக்கோலம்!!!!!

சிந்தையில்  போர்த்திய காலத்தை,

நேரம் நகர்த்தியது என்நினைவை!

இருபுறமும் ஓங்கி நின்ற  பசுமைஅரண்களாய் இயற்கையின் வேலிகள் !!!!!!!

மழை வழுக்கிவிட்ட 

மண்ணை இறுகபற்றிப்பிடித்த

விண்ணைத்தொட்ட மரங்களின்

வேர்கள் !!அவை மரத்துக்கும்

மண்ணுக்கும் உள்ள நெருக்கத்தின்

நிரந்தர பந்தத்தின் சாட்சிகள்!

மலைகுடைந்து சிலையமைத்தவரை

மலை குடைந்து சாலையமைத்தோர்

வழிமொழிந்தாரோவென வியக்க

வைத்த சுரங்கங்க வழிப்பாதைகள்!

*ஆறிலிருந்து அறுபது வரை 

அனுபவப்பாடம் போல் ஆறு

மைல் முதல் அறுபது மைல் வரை 

நீண்டன என்விழிகள் விரிய!

இன்றென்னவோ அதிசயமாய் அஸ்தமனமாக அடம் பிடிக்கும்

ஆதவனும்; வெண்ணெயாய்

வழுக்கிச்சென்ற என்

வாகனத்தை விரட்டியபடி பின்தொடர

இயம்ப முடியா கர்வம் என்தலைக்கே

ஏறிசிம்மாசனமிட்டாலும்........,!

என்மனம் சொன்ன மந்திரம்

இயற்கை உன்னையும் காதலிக்கிறது!⛩⛰🌞🌲🌹வத்சலா🌹🌲🌞⛰⛩
விடியலைத்தேடி....

விடியலைத்தேடி விளக்கு ஒருபோதும்

அழுததில்லை

அதற்கு விடியலென்றால்

அழிவென்று 

அதற்கு தெரிந்தும் விளக்கு 

ஔிகொடுக்க மறந்ததில்லை..


மனிதவாழ்வும் அப்படிதான்

விடியலை

அழிவிற்குமுன்

கண்டுவிடு..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.

லட்சியம்

தூங்கிக்கொள்ள கண்கள் 

ஏங்குகிறது.


தூங்கவிடாமல்

கனவுகள்

துரத்துகிறது.


தூங்குவதற்கும் ஏங்குவதற்கும்

இடைப்பட்ட

இடைவெளியே

நம் லட்சியம்.. 


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

ஏக்கம்(ஆண் பேசும் கவிதை)விழியசைவில் என்னைக் கிறங்கடிப்பாள்!

மொழியின்றியே

உரையாடுவாள்!

மீசைமழிக்கையிலே

சரிபார்ப்பாள்!

பார்த்து பார்த்துப் பரிமாறுவாள்!

குளிக்கையிலே முதுகைத் தேய்த்திடுவாள்!

எனக்காக இறைவனை வணங்கிடுவாள்!

பாதங்களில் வீழ்ந்து

என்னையும் வணங்கிடுவாள்!

எத்தனை மாதங்கள் ஆனது இவையெல்லாம் நடந்து!

இதோ கிடைத்துவிட்டது விடுமுறை

இருநாட்கள் இடையிலே

பிறகென்ன அவள் என் மடியினிலே

என்றெல்லாம் ஏங்கியனாய்

எப்படி போனதோ இருதினங்கள்

வந்துவிட்டான் தாயகம்

கண்டுவிட்டான் மனைவியை

சுற்றிலும் உறவுகள்!

பலமாதங்கள் பிரிந்திருந்த ஏக்கம்!

விழிகளால் உணர்வுகளைப் பரிமாற்றிக் கொண்டார்கள்!

உடனடி வடிகாலை அமைத்துக் கொண்டார்கள்.


த.ஹேமாவதி

கோளூர்

சொல்லத் துடிக்குது மனசுஎத்தனை காலம்.....

எத்தனை காலம் காத்திருந்தேன் நான்

உந்தன் வருகையைப் பார்த்திருந்தேன் நான்

வழிமேல் விழிநட்டுப் பூத்திருந்தேன் நான்

உன் வாயால் உன் பதிலை எதிர் பார்த்திருந் தேன்நான்.


ஏக்கத்தில் தூக்கத்தைத் தொலைத்திருந்தேன் நான்

நோக்கத்தில் உன்னையே கொண்டிருந்தேன் நான்

ஊக்கத்தில் உன் நினைவைப் பூண்டிருந்தேன் நான்

அதன் தாக்கத்தில் என்னையே மறந்திருந்தேன் நான்.


சக்கரத்தைப் பாதத்தில் வைத்திருந்தேன் நான்

இறக்கை கட்டி வானிலே பறந்திருந்தேன் நான்

சொர்க்கத்தில் மிதப்பதாய் நினைத்திருந்தேன் நான்

தூக்கத்தில் கூட விழித்திருந்தேன் நான்.


அயல்நாட்டில் இருக்கலாம் அயலூரில் இருக்கலாம்

ஏதோ ஒரு ஊரில் என்றாவது ஒரு நாள்....

என்றாவது ஒரு நாள் உன்னைப் பார்க்கையில்....

உன்னை மட்டும் தனிமையில் பார்க்கையில்

காத்திருந்த சேதியை, பார்த்திருந்த நாட்களை

சொல்லத் துடிக்குது மனசு

சொல்லி விலகிடத் துடிக்குது மனசு

அந்த நாளுக்காய் தவிக்குது மனசு.


*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

Friday, 24 May 2019

சகோதரனே


யார்யாருக்கு அண்ணன் உண்டோ அவர்களுக்கெல்லாம்                        அப்பா இரண்டு!

அண்ணன் நமக்கொரு அப்பாவே!


கருவுற்ற தாயின் வயிற்றுக்குள் நாமிருக்கும்போதே

தொடங்கிவிடும் அண்ணனின் பாசம்!

அம்மா தம்பிதான் வேண்டும் என்றும் தங்கைதான் வேண்டும் என்றும் கேட்பார்கள்!கேட்டதற்கு எதிர்மாறாய்ப் பிறந்தாலும் அன்பைப் பொழிவார்கள்!


நாம் பிறந்ததனால்தானே

தான் அண்ணனானோம் என்பதனால் நம்மீது எல்லையற்ற பிரியம் காட்டுவார்கள்!

தன்விரலை நம்கைக்குள் விட்டுப் பிடிக்கச்சொல்வதும்

நாம் சிரித்தால் தான் சிரிப்பதும் நாம் அழுதால்    தான் அழுவதும்

எப்போது நாமெழுந்து நடப்போம் என தன்தாயை நச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள்!


நடக்கநாம் தேறியதும் செவிலித்தாயாக உருமாறி எப்போதும் உடன்வருவார்கள்!

நம்பிஞ்சு விரலை தன்பெரிய விரலால் தொட்டு தான்செல்லும் இடமெங்கும் கூட்டிச் செல்வார்கள்!


என்ன உண்டாலும் முதல்பங்கு நமக்கென ஊட்டிவிடுவார்கள்!

நமக்கு பிடித்ததென்றால் தன்பங்கையும் சேர்த்து ஊட்டிவிடுவார்கள்!

தாயில்லா வேளையிலே குளிப்பாட்டுவதும் உணவூட்டுவதும் தாலாட்டுப் பாடுதலும்

தலைவாரிப் பின்னிப் பூச்சூடுதலும்

பிறைநெற்றி நடுவே கருஞ்சாந்தால் பொட்டிட்டும் அசத்துவார்கள்!தந்தையில்லா வேளையிலோ எப்போதும் கண்ணிமையாய்

உடனிருந்துக் காப்பார்கள்!

தங்கையுள்ள அண்ணன்மார்கள் திருமணம் தங்கையின் மணத்திற்குப் பின்னரே செய்வதும்

தம்பியுள்ள அண்ணன்மார்கள் தம்பியின் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்டு மணம்புரிவர்!தன் கரம்பிடித்து வந்தவளை தம்பிக்குத் தாயாக்கி மகிழ்வர்!

தந்தையை இழந்துநிற்கும் குடும்பங்களில் மூத்த சகோதரராகப் பிறந்துவிட்ட அண்ணன்மார்களின் 

மகத்துவம் சிறப்புடையதாகும்!

பண்டிகைக் காலங்களில் தான் வறுமையில் உழன்றாலும் பிறந்தவீட்டுச் சீர்செய்ய அண்ணன்கள் தவறுவதில்லை!

தான் படிக்கவில்லையென்றாலும்

தம்பி படிக்கட்டும் கால்மேல்கால் போட்டு குளுகுளுஅறையினுள்ளே

பெரியவேலை பார்க்கட்டும் என்று ஆசைப்படும் அண்ணன்கள் நிறைந்த உலகமிது!

அதற்காக எல்லைமீறிய பாரங்களைச் சுமக்கும் அண்ணன்கள் எத்தனையோ பேர் இப்பூமியிலுண்டு!பூவான தங்கைக்கு முள்போன்ற பாதுகாப்பை வெளியிடங்களில் அண்ணன் தருவதை 

அண்ணன் இல்லாமல் வெளியே போகையிலே தங்கைகள் உணர்வார்கள்!


தனக்காக தன்சுகத்தைப் பாராமல் தான்படிக்க வயலில் ஏர்உழுத அண்ணன் பாதங்களை வணங்கும் தம்பிகளுக்குத் தெரியும்  அண்ணன் ஒரு கோவிலென்று!


முத்துக்குளிக்கையிலே

ஆழ்கடலுள் இறங்கும் வீரர்கள் தன்மனையாளின் சகோதரனின் கைப்பிடித்த கயிற்றினை நம்பியே கடலுக்குள் மூழ்குவார்கள்!

இது சகோதரப் பாசத்தின் உச்சக்கட்ட சான்று!


மாதா பிதா குரு தெய்வம் இது பழமொழி!

மாதா பிதா சகோதரன் குரு தெய்வம் இது புதுமொழி!


(அனைவருக்கும் இனிய சகோதர தின வாழ்த்துகள்)


த.ஹேமாவதி

கோளூர்

பூக்கள்

என் 

இதயமென்னும்

குளத்தில் மலராத

பூக்கள்

வறண்ட நிலத்தில்

வாடி நின்றது..


கரிகாலி.கவி.

பெ.கருணாநிதி..அச்சம்

வேர்கள் அஞ்சுவதில்லை

விளை

நிலத்தைக்கண்டு..


கார்காலம்

அஞ்சுகின்றன

விளைநிலத்தில்

மழை பொய்த்து

போவதால்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி

இனம் இனத்தோடுபூவினைத் தவையி ல்

சூடினாள்!

பூவளந்த மேனியாளின் தலையிலே ஏறியதால் அப்பூ 

அதன்இனத்தோடு தான் சேர்ந்ததாகப் பெருமிதமுற்றது.


முத்துமாலையை கழுத்திலே அணிந்தபோது

அவள்முகத்திலே அதரங்களின் புன்னகையினூடே

தெரிந்த பற்களைக் கண்ட முத்துகளெவ்லாம்

தாங்களும் தங்களினத்தோடுச் சேர்ந்ததாக  மகிழ்வுற்றன!


செம்பவள மோதிரத்தை விரலில் அணிந்தபோது அவள்   கைவிரல்களின் நகங்களைக் கண்ட செம்பவளமும்

தன் இனத்தோடு சேர்ந்ததென்று கர்வமுற்றது.


அவள் நடைபயில்கையில்

அவளைத் தழுவிய

தென்றலும் அவளின் நடையில் தன்னை இழந்து

அதன்இனத்தோடு

இணைந்ததாக மகிழ்வுற்றது!

இவ்வாறே

ஒவ்வொரு இனமும் அவளைத் தம்மினமாய் உரிமை கொண்டாடியபோது

அவளின் பெண்மனதோடு எப்போது இணைவோம் என்று அவள்விழியால் தாக்குண்டு காதலிலே வீழ்ந்த ஆண்மனம் ஏங்கியது!


த.ஹே

கோளூர்

கண்ணீர்த்துளியாய்....

வெட்டுண்ட

மரங்களினால்

வெட்டியவனின்

வியர்வைத்துளி

கண்ணீர்த்துளியாய்

அவனை

அறியாமல் வெளிப்பட்டது..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..Saturday, 18 May 2019

எப்படி புரியவைப்பது?

குளிர்ந்த

எந்தன் கைகளை

யாரோ எடுத்து 

உன் முந்தியில்

*சீதேவி வாங்கிக்கோ* 

 

என்றுனக்கு

இடுகையிலாவது

புரியுமாடி

எந்தன் காதல்

*பொன்.இரவீந்திரன்*

தோற்று போகிறேன்

தொட்டாற்சிணுங்கி

மலரின் மென்மையுடனான

எந்தன் உள்ளத்தைத்

தோற்கடிக்கின்றன

உந்தன்  இதழ்கள் 

*பொன்.இரவீந்திரன்*

நீங்க முடியாமல்.......

நூலாம்படையாய்

என்னை

நீக்க நினைக்கிறாய் நீ....

நானோ

உந்தன் 

மச்சமாயிருக்கிறேன்

*பொன்.இரவீந்திரன்*


எனக்குமா தேர்வு?

உனக்குத்தான் தேர்வுகள் 

ஆனால் நீயோ

பரீட்சை வைத்திருக்கிறாய்

என் காதலுக்கு 

*பொன்.இரவீந்திரன்*

விரட்டுவதை நிறுத்து

தொடர்ந்து

என்னை

அடித்து விரட்டுகிறாய்....

ஆயினும் 

கைக்குழந்தையாய்

உன் காலைச்சுற்றுகிறது

என் காதல்...

*பொன்.இரவீந்திரன்*

நீயுமா இப்படி?

அவமானப்

படுத்தப்படுகிறேன்

எவ்விடத்தும்.... !

அதற்காக 

உன்னிடத்திலுமா

செல்லம்....?

*பொன்.இரவீந்திரன்*

வழிபாடு

தீபமேற்றும்

ஊரில் 

உந்தன் வழிபாடு 

தீபமாய்

நீயே வரவேண்டும் 

என்பதே

எந்தன் வழிபாடு

*பொன்.இரவீந்திரன்*

ஒற்றைச்சொல்

கடந்த உயிரைத்

தப்பிப்பிழைக்க வைக்கிறது 

உந்தன் 

இதழ்களின்

வாசலில் நிற்கும்

*மாமா*

என்ற ஒற்றைச்சொல்

*பொன்.இரவீந்திரன்*

மௌனம் கலையுமா?

எந்தன்

உயிரின் வாசலில்

அரளி விதைச்

சாறாய் இறங்குகிறது 

அர்த்தமற்ற 

உன் மெளனம்

*பொன்.இரவீந்திரன்*

Tuesday, 14 May 2019

வாத்தியார் குரல்வாத்தியாரு வேலதான்
வசதின்னு பேசுறாக...

உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
*வாத்தி* *மனசோ*
*சுக்கு* *நூறாக்கெடக்குது* .

காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.

பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது

பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...

படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...

படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..

கண்டிக்கவும் கூடாது
கட்டளையும் கூடாது

திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது

மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..

ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்

அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கணுமாம்...

சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...

அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...

கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...

பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...

கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..

போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்

*பாவப்பட்ட* *ஜென்மம்* *அது*
*வாத்தியாரு* *பொழப்பிது* ..

நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...

இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..

*துடிக்கிற* *இதயமோ*
*எப்போதான்*
*நிற்குமோ* !?

அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..

சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...

ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?

பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.

சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்

அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...

வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு

வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...

இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை

கண்ணீரால்
துடைக்கிறார்கள்.

சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..

வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

அவங்களிடம்
சொல்லுங்க...

" *வாத்தியார்* *பொழப்பு*
*வாழ்க்கையில்* *இழப்பு* "
என்று....


மனம்

பானப்பரியில்

விழுந்த

அயிரைமீனாய்

உந்தன் நினைவுகளில்

கிடக்கிறது 

என் மனம்

*பொன்.இரவீந்திரன்*

என் காதல்....

ஒரு பந்தைப்போல உதைத்துக்

கொண்டிருக்கிறாய்

உன்னிடத்தில் வந்த 

என் காதலை 

நானோ

கொண்டாடிக்

கொண்டிருக்கிறேன்

உற்சவமூர்த்தியென

உந்தன் காதலை

*பொன்.இரவீந்திரன்*

ஆத்தாளே காத்தருளு!!✍கதிரறுக்க போகயில

களையெடுக்க போகயில

கருவாயிருந்த நா

கறுப்பாயிடுவேன்னு

கருத்த உன்வயித்துக்கு

கந்தலுல பந்தலிட்டு

கருகாம காத்தவளோ..


✍கஞ்சி கெடக்காம

காஞ்சிபோன காலத்துல

எங்கப்பன் செய்யலன்னு

உங்கப்பன

ரேசனரிசி கேட்டு

ரோதன செஞ்சவளோ..


✍ஒண்ணாந்தேதி

வரப்போற

ஓடம்போறப்புக்கு

கடனா வாங்குன

வெதநெல்ல

வேகவைக்க

வேணுமுன்னு

எங்கப்பன் வேண்டுமுன்ன

பதமான வெதநெல்ல

பச்சரிசி சோராக்கி

அயரமீனோட

அய்யனாருக்கு

படயலிட்டு

அடிவயிர தடவி 

அப்பவிட்டாலென்ன

ஆத்தாயிருக்கேன்னு

ஆருதலு சொன்னவளோ..


✍'கைநாட்டா'ன்னு

கணக்கெடுக்க

வந்தவக ஏளனமா

கேட்டாகன்னு

'இங்கிலிசு படிசுபுட்டு

எம்புள்ள 

கவுருமன்டு கலக்டராவான்'னு

சந்திவீரன் சாமி

சாம்பளபூசி

சத்தியசெஞ்சவளே..


✍ஆத்தாளுக்கு ஒருநாளு

*அன்னையர் தின* முன்னு

அகிலம் கொண்டாடுது.

ஒறக்கங்காணாது

ஓருயிரு தீண்டாது

ஓயாம காத்தவளே

ஒருநாளு போதுமா?

ஓராயிரம் சென்மம்

வேணுமே 

உம்பேரு

சோல்ல...


🙏த.தாஸ்🙏

அ.உ.நி. பள்ளி,

அனுப்பம்பட்டு.


அன்னையர் தினம்அம்மா உம்மைப்  பற்றி சொல்ல இந்த ஓர் நாளும் போதுமோ 


பூமி மேலே  வீடொன்று கட்டி அதிலிருந்து சம்பாதிக்க நினைக்கும் மனிதர் மத்தியிலே


கொத்தனாரும் பொறியாளரும் இல்லாமல் கல்லு மண்ணும் ஏதுமின்றி

உம் வயிற்றில் அழகானதோர் வீட்டை இரத்தத்தாலும் சதையாலும் ஆக்கித் தந்து ஈரைந்து திங்கள் என்னைச் சுமந்தவளே


நீர் எனக்கு உணவுத்துறை அமைச்சராயிருந்து ஊட்டமுள்ள சத்தான உணவைத் தந்தாய்


நல்ல இசையமைப்பாளராய் இருந்து இனிய இசையை கேட்க செய்தாய்


நல்லதொரு ஆசிரியராயிருந்து நல்லன அனைத்தையும்  கருவிலேயே கற்றுத் தந்தாய்நல்ல தோழனாய் தோழியாய் இருந்து என்னுடன் நட்பு பாராட்டினாய்


நல்ல சுற்றுலாத்துறை அமைச்சராயிருந்து  இயற்கை காட்சிகளை உம்மூலம் என்னைக் காண வைத்தாய்


நல்ல வெளியுறவுத்துறை அமைச்சராயிருந்து  வெளியுலக நிகழ்ச்சிகளை உம்மூலம் எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தாய்நல்ல ஓர் செவிலியராய் நான் உண்டானது முதல் வெளியுலகைக் காணும் வரை அன்பாக பராமரித்த தாயேநான் கருப்பென்றும் சிவப்பென்றும் 

குட்டையென்றும் நெட்டையென்றும் அறியாத போதினிலே

எப்படியிருந்தாலும் என் மகள் என் மகள் என்று பூரித்த தாயே


காணாத உருவை கண்டு விட்ட சந்தோசத்தில்  வலியெல்லாம் மறந்து வாரியணைத்த தாயே


உம்பேரு சொல்ல நானிருக்க 


என்னோடே நீ இப்ப இல்லையே


நான் பிறந்து வந்த இருட்டறைக்கே 

மீண்டும் சென்றது போலாச்சே என் நிலைமை


எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானுனக்கு மகளாக. பிறக்கின்ற வரமொன்றே போதும் தாயே


தி.பத்மாசினி

தனிமைசுற்றத்தினால் ஆன தனிமையினால் முற்றத்திற்கு வந்தேன் 

ஓர் முகவரியாய்,,,,

முற்றத்திலும் தனிமையா,,,?

இது முடிவில்லா கொடுமைய்யா!

முருகைய்யா,,,!!


எட்டுக்குடி கெட்டதும் தனிமையிலே,,,

அது, 

பட்டுக் கொடி நட்டதும் தனிமையிலே

விட்டுக் கொடு கெட்டாலும் உறவினிலே,

தொட்டு விடு தூரத்தை முடிவினிலே,,,


ஊர் கூடி தேரிழுத்தால் தெருவினிலே,,,

ஒடி வந்து நிற்குமது கோயில் நடையினிலே,,,

ஒருவன் மட்டும் வடம் பிடித்தால் தனிமையிலே

ஊரெல்லாம் சிரிக்குமப்போ

உண்மையிலே,,,


ஒற்றுமையே வலிமையென இருக்கையிலே,,,

எதையும்

உள்வாங்க வேண்டுமா தனிமையிலே,,,

அரசமரம் வேப்பமரம் அருகினிலே,,,

வளர்ந்து, இருந்திடுமா இரண்டிலொன்று தனிமையிலே,,,


நீயின்றி 

நானேது உலகினிலே

நாம்,

உயர்ந்திட வேண்டுமென்று பன்மையிலே,,,

பார் அறிய முன்னோர்கள் உரைக்கையிலே,,,,

இருக்கலாமா நாமிருவர்

தனிமையிலே,,,,!✍🏻


பாலா

அம்மாஐந்து பிள்ளைகளின் அன்பான அம்மா

அன்போடு அறிவையும் பண்போடு பரிவையும் பாசமுடன் ஊட்டி வளர்த்த எங்களது அம்மா.


மேமாத விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும்

பிள்ளைகளின் வருகைக்காய் பிரியமுடன் பார்த்திருக்கும்

பிரியமான எங்கள் அம்மா.


நோய் தந்த வலியெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு

பேரப்பிள்ளைகளை, பிள்ளைகளைப் பார்த்து நிற்கும் 

ஈடு இணை எதுவுமில்லா ஓர் உறவு அம்மா.


அன்னையர் தினமென்று தெரியாமலே இன்று

குடும்பமாக வெளிசெல்ல விரும்பி நின்ற அம்மா

சென்று வந்து மனம் நிறைந்து மகிழ்ந்து நிற்கும் அம்மா.


இன்றுபோல் எந்நாளும் கவலைகள் எதுவுமின்றி

இன்பமோடு வாழவேண்டும் இனி என்றும் அம்மா

ஒற்றுமையைப் பேணவேண்டும் எந்நாளும் அம்மா.

 

உலகத்துப் பிள்ளைகள் எல்லோரும் அன்னையரை

தெய்வமாகக் காணவேண்டுமம்மா

அதற்கு அருள்புரிந்து அருளவேண்டும் அம்மா

உலகம் காக்கும் அன்னையான அம்மா,

ஆதி பரா சக்தியான அம்மா.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

தாய்

தாயைப் பாராட்ட தனியாய்

நாள் வேண்டுமா?

பின் தாயை நினைப்பாரில்லையா?

தவமாய் தவமிருந்தவளுக்கு தனியொருநாள் போதுமா?

தனியாளாய் ஆக்காமல்

தன்மானத்தோடு

பாதுகாப்போம்

தாயை விட

இவ்வுலகில்

எதுவுமில்லையென்று

தரணியெங்கும் பறைசாற்றுவோம்..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..Thursday, 9 May 2019

சும்மாடுஐந்து நாட்கள் பள்ளிசென்று பாடத்தைப் படித்துவிட்டு
இரண்டு நாட்கள் கடைகளிலே வேலையும் செய்து கொண்டு
குடும்பபாரம் பங்குபோடும் குழந்தைகள் சொல்கின்றார்
சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

பொழுது போக்காம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு
பொழுதோடும் வீட்டுவேலை
பலவற்றைப் பகிர்ந்து கொண்டு
பெற்றோரைத் துணைக்கின்ற பிள்ளைகள்
சொல்கின்றார்
சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

நலிந்துபோன நட்பதனின் கலைந்து போன கனவுகளை
சிதைந்துபோக விடாமல் சிறக்க உதவி செய்து விட்டு
மறக்கவே முடியாத மாண்பினனாய் நிற்கின்ற
நட்புவந்து துளிகூடக் கர்வமின்றிச் சொல்கிறது
சுமைதாங்கி அல்லநான் சும்மாடு.

அழிந்து போன வளத்தையெல்லாம் தளர்ந்துபோன மனத்தோடும்
இழந்து விட்ட சொந்தத்தை வழிந்து நிற்கும் கண்ணீரோடும்
நினைத்து நின்ற மனிதருக்கு துணையாக வந்துநின்று
கேட்காமலே உதவி நிற்கும் உள்ளமது
சொல்கிறது சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

சுமக்கின்ற பாரத்தின் கடினமது தெரியாது
வலிவந்து சிரத்தினிலே இறங்காமல் காத்து நின்று
சுமைதாங்கி நிற்பவரின் சுமைக்கு ஒரு கைகொடுத்து
துணை உனக்குத் தேவையெனில் உறுதுணையாய் நானிருப்பேன்
என்று நிற்கும் அனைவருமே சுமை தாங்கும் சும்மாடு.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


அம்மா..


அம்மா...! 

என்ற ஒற்றைசொல்

எவ்வளவு அழகான..

அன்பான...உயர்வான

உயிரான...வார்த்தை !


பிறந்த உடன் சொன்னதும்

உயிரை வலியோடு

முடிக்கும் போது சொல்வதும்

அம்மா ..அம்மா ..அம்மா.


உன் அன்பின் கதகதப்பும்

வலிக்காத தண்டனையும்

இனி  யாராலும் தரமுடியாது.


கட்டெரும்பு கடித்த போதும்

காதல்  போனபோதும்

அம்மா என்று சொல்லிதானே

ஆறுதல் அடைந்தேன்..!


நீ..இங்கே இல்லாமல் 

போனதாய்

ஊர் சொல்கிறது..

சொல்லிவிட்டு போகட்டுமே.

ஆனால்..


இன்னமும் என் 

காலைநேர கனவில் வந்து..

அழகாக்குகிறாய்..அம்மா..என்

நாட்களை அழகாக்குகிறாய்...


கடவுளை நான் 

கான நினைக்கும

போதெல்லாம் 

அன்பாய்.

அழகாய்..

பாசமாய்..

நேசமாய்

கன்முன்னே தோன்றி மறைவது

நீதானே அம்மா...நீதானே...!!

அப்துல் முத்தலிப்

வணங்கத்தக்கவளே!

நெஞ்சில் நிறைந்தவனின்

உயிர்த்துளியை

உள்வாங்கி

சொர்க்கங்கண்டு

சொர்க்கங்காட்டி

சிசுவாய்ச்சுமக்கும் காதலி

வணங்கத்தக்கவளே

காலமெல்லாம் 

குலதெய்வமாய்

*பொன்.இரவீந்திரன்*

வெளியேறும் கதிரவனாய்....

உனக்கென்னைப் பிடிக்கவில்லையென்றால்

எனக்கு நானே 

அந்நியனாகிறேன்

கிழக்கிலிருந்து 

வெளியேறும்

கதிரவனாய்

*பொன்.இரவீந்திரன்*

அலைவட்டங்கள்


அலையில்லா

நீர்த்தேக்கம் என்மனம்!!

அதில்

கல் எறிந்த பெருமை....

இல்லையில்லை

பாவம்......

உன்னையே சேரும்!!!!!

உன்னால் என்னில்

உண்டான அலைவட்டங்கள்

ஒரு அளவுக்குள் இல்லை....

முடிந்ததாய் நினைத்த

ஒவ்வோரு அலைவட்டத்தின்

முடிவிலும் ஜனிக்கும்

அடுத்த அலைவட்டத்துக்கும்

முடிவென்பதும் இல்லை....

நீ வந்து தாங்காமல்

என் நினைவுகளும்

தூங்குவதில்லை!!!


🌹வத்சலா🌹

களிப்புடன் வாழ..

வெறுப்புகளைத்தாண்டி வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன்

விருப்பமுடன் இசையாய் மனது இயல்பானது.


காயம்பட்ட யாக்கைக்குள் கற்பனைக்கு எட்டா கவலைகள்

கடவுளாய் வந்தவர்கள் கவலைகளைக்

கலைந்துசென்றார்கள்.


சலிப்புடன் வாழாத வாழ்க்கை உன்னை சரியான வாழ்க்கைக்கு முன்னெடுத்துச் செல்லும்.


விளிப்புடன் இருப்பாய் காலமுள்ள போதே

களிப்புடன் வாழ்வாய் கவலையில்லாமல்.


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.சூழல்

சற்றே பொறுமை கொள் 

சூழல் போர்வையில் 

சூழ்ந்து கொண்டு

சூழல் ஏற்க மறுக்கிறாய்...


சூழல் ஒரு பொருள்

சூழலில் நீ ஒரு பொருளில்லை ஆதலால் 

சூழலின் பொருளல்ல

 நீ.....

ஆனால்

சூழலில் நீயும் 

ஒரு பொருளா கிறாய்....


சூழல் ஒரு சுற்று 

சூழல் உன்னை சுற்றவில்லை

ஆனால் 

சூழலில் நீ சுற்றுகிறாய்....


சூழல்  ஒரு மாற்றம் 

மாற்றத்தில் மாற்றம் இல்லை

மாற்றத்தில் மாறி நீ சூழலுகிறாய்..


சூழல் ஒரு சிக்கல்

சூழலில் நீ சிக்கவில்லை சூழலின் சூழ்நிலை

சூழலால் நீ  சிக்குண்டாய்சூழல் ஒரு அகஏற்பு

சூழல் அன்பில் 

அகம் நிறைய 

சூழல் சுகத்தில் சுகம் ஏந்துகிறாய்...


சூழல் ஒரு எதிர்பார்ப்பு

சூழல் எதிர்ப்பில்

சூழ்நிலை தவிப்பில்

ஏக்க சூழலில் எதிர்ப்பை

எட்டுகிறாய்....


சூழல் ஒரு மனவெளி

சூன்ய சூழலில் மனம் அலைந்து

சூழ்ந்த வெட்ட வெளியில் வியாபிக்கிறாய்...


*சூழல் ஒரு இருட்டு

சுழலும் சூழலில் 

வெளிச்சப்புள்ளி 

தேடலில் 

தினமும் உன்னை தொலைக்கிறாய்....


*சூழல் ஒரு பரிசம்

தழுவி செல்லும்

சுழிய  வெளியில்

சுகந்த பரிச்சத்தில்

சுயம் காண விளைகிறா ய்...


சூழல் ஒரு  மென்மை

சுற்றி அணைக்கும்

சூத்திர சூழலில்

எத்திறம் நிறைய

ஏற்க மறுக்கிறாய்...


சூழல் ஒரு அககண்

சுற்றி சுற்றி

சூழும் சுழலில்

சூழ்நிலை தவத்தை

தரிசிக்கிறாய்

 வா 

சூழலை  ஏற்றுக்கொள்

சூழலில் சுகமெய்து

சூழல் சுகமானது

சூழல் சுகிர்தமானது

சூழல் மந்திரமானது

சூழல் மாயமானது

சூழல் இனிமையானது

சூழல் புதிரானது

புரிதலை புரிய

சூழலை சூழ்ந்து கொள்...தாமரை ரவி 🌷

கடிவாளம்

எரிமலையாய்க் கொதித்து நிற்கும் தணியாத கோபத்தை

பனிமலையாய் உருக்கிவிடும் அன்பு என்ற கடிவாளம்.


ஏக்கமுடன் பொங்கிவரும் மோகத்தை வளராமல்

எதிர்வந்து தணித்துவிடும் கலாச்சாரக் கடிவாளம்.


காட்டாற்றுவெள்ளமென கரை உடைக்கும் ஆசைகளை 

அணைகட்டித் தடுத்துவிடும் அடக்கம் என்ற கடிவாளம்.


மனம்போன போக்கிலே நெறிகெட்டு நடப்பவரை தறி கட்டி நிறுத்திவிடும் சட்டம் என்ற கடிவாளம்.


பலநாள் கொண்ட பகைதனையே பாகாக உருக்கிவிடும் 

பொன்னகையை மிஞ்சிவிடும் புன்னகையாம் கடிவாளம்.


மதம் பிடித்து அலைபவரின் மதிதன்னை உணர்த்திவிடும் 

மகத்துவம் பல புரியும் மனிதம் என்ற கடிவாளம்.


அறியாமை என்கின்ற இருளகற்றி, ஒளிபுகுத்தி

சரியான பாதை காட்டும் கல்வி என்ற கடிவாளம்.


வேற்றுமை பல பேசி ஒற்றுமையை மறப்பவரை

ஒன்றுபட்டு நிற்கவைக்கும் இந்தியன் என்ற கடிவாளம்.


குதிரைக்கு மட்டுமல்ல மனிதருக்கும் ஆங்கே

தவறாமல் தேவை இன்று விதவிதமாய்க் கடிவாளம்.


பண்பாட்டைக் காத்து நிற்கும்....

பண்பாட்டைக் காத்து நிற்கும் பலவிதமாம் கடிவாளம்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

வியாபாரம்பணமிருந்தால் மதிப்பிருக்கும் உலகத்திலே,,, 

பந்த பாசங்கூட சேர்ந்து வரும் அருகினிலே,,,


பொருளில்லா மனிதரிடம் குறை கண்டு

தினம், மாறி மனம் போகிறதே உறவினிலே,,,,


பொருள் சேர்க்க வியாபாரம் செய்து விடு,,,

அந்த பொருளோடு உன் வாழ்வை இணைத்து விடு,,,,


தனிமையிலே 

நீ வாழ துணை இருக்கும்,,,

அது தலை சிறந்த ஆளாக்கி கை கொடுக்கும்,,,,


பாரமென்று சொன்னவர்கள் யாருமில்லை,,,

உலகில்,

வியாபார 

சுகம் தானே 

மனிதன் 

இன்ப 

எல்லை,,,


இனிமையாக இதை நீயும் செய்திடுவாய் அரசு, வேலையின்றி போனாலும்

உயர்ந்திடுவாய்,,,


கூட்டாக ஒரு போதும் செய்திடாதே,,, வியாபாரம் செய்யாமல் போனாலும்

கவலையில்லை,,,


உன் வழியே உனக்கு என்று எழுதி வைத்த இறைவன்,

நீ, 

எடுத்ததெல்லாம் முடிக்கும் வரை துணையிருப்பான்!


பாலா

போன்ஸாய் மனிதர்கள்


கண்ணைப்பறிக்கும்

விசித்திர வண்ணமலர்கள்

ஆயிரமாயிரமாய் உண்டு

ஆனால் அவைகளில் வாசமென்பது என்றுமே

கேள்விக்குறியே!

மனிதர்களின் புறநிறங்கள்

சந்தன செஞ்சாந்திலிருந்து

தந்தத்தின் வெண்மைவரை ஆயிரமாயிரம் இங்குண்டு

ஆனால் மிதமான மனம்

இருப்பது இங்கே ஆச்சரியக்குறியே!எதைநோக்கிய தேடல் 

என்பதே தெரியாது ஓடிக்கொண்டிருக்கும் 

இவரின் இலக்கோ என்றுமே

புரியாத புதிரே!

தேடிச்சோறு தினம் தின்கின்றனர்

சின்னஞ்சிறு கதையைக்கூட உதடு

தாண்டாது காத்துக்கொள்ளும் திறமை

கண்டவர்கள் இவர்கள்

மன வாடல் மறைத்து 

முகவாடலை ஒப்பனையில்

மறைக்கும் வரம்பெற்றவர்!

தனிமனித சிறுசெயல்களும்

கட்டுப்பாட்டுக் கோட்டைக்குள் வைத்து

பூட்டிவைக்கும் விந்தை

இங்குதான் சாத்தியம்! இயற்கை அழைப்பைக்கூட

வரிசையில் சென்றே

கழிக்கும்அற்புதம் கற்றவர்!

புத்தனின் போதனையை

சத்தியமாய் ஏற்றதாலோ

என்னவோ.............. ஆசைப்படுவதேயில்லை அடுத்தவர்பொருளுக்கும்!

தத்தி நடக்கும் இளம்பிஞ்சு

தடுக்கியே விழுந்தாலும்!

தாயுள்ளம் திடுக்கிட்டு போகாத அதிசயமும் 

இங்கு மட்டுமே சாத்தியம்!

இதனாலேயே *பிஜு*  


எரிமலையும் மௌமானது

ஆட்டுவிப்பவனின் ஆனந்த

*வியாபாரமோ* “தடங்கலுக்கு வருந்தாது

தடபுடலாய் நடக்கின்றது”


*டோக்கியோ நகர் என்மனதில் விதைத்த உண்மை*        


🌹வத்சலா 🌹

காதல்

உயிருக்குள்

சிறகு கட்டி

உயரப் பறக்கும்


புயலுக்குள்

தென்றலனுப்பி

தலை வருடும்


புலி பாய்ந்து

வந்தாலும்

பூ கொடுக்கும்


எரிமலைக்கு

நடுவிலும்

குளிர் தரும்


எப்போதும்

வாழ்வுதனை

நெகிழ்வாக்கும்


தரைதனை

சமயத்தில்

வானம் செய்யும்


தலை தன்னில்

இமயத்தின்

பாரம் செய்யும்


நடுநடுவே

நிலவினுக்கு

அழைத்துப் போகும்


நிச்சயமாய்

நட்சத்திரக்

கவிதைப் பூக்கும்


காதலினை

தவிர்த்துவிட்டு

உயிர் வாழ்தல்


உணர்வுதனை

பிரித்து விட்டு

உடல் வாழ்தல்..!


- வெள்ளத்துரை

வழிகள்ஆலயம் சென்றுதான் இறைவனை அடையலாம் என்பதில்லை! ஆயிரம் வழிகள் பூமியில் இருக்கு

இறைவனை அடைய!

அன்பான மொழி பேசுதல் ஓர்வழி!

பெரியோரைப் பணிதலும் ஓர்வழி!

எளியோர்க்கு இரங்கலும் ஓர்வழி!

இல்லாதோர்க்குதவுதலும் ஓர்வழி!

செடிகொடிகளுக்கு

நீரூற்றுதலும் ஓர்வழி!

விலங்குகளை நேசித்தலும் ஓர்வழி!

இயற்கையைப் பாதுகாத்தலும் ஓர்வழி!

உண்மையைப் பேசுதலும் ஓர்வழி!

விருந்தினரை

உபசரிப்பதும் ஓர்வழி!


த.ஹேமாவதி

கோளூர்

என்ன இல்லை என் தமிழில்

புயலில் சிக்கிய பூக்கள்

Friday, 3 May 2019

காலம்

ஆளற்ற வீடு 

மூடாத ஜன்னல் 

காற்றின் திமிரோடு

உள்ளே

சென்று வருகிறது 

காலம்


சில்லரைகளைத்

தடவும்

விழியற்றவனின்

ஆவலென நகரும் வாழ்க்கை


*பொன்.இரவீந்திரன்*

வீடு

இல்லாதவர்களுக்கு

இது கனவு!

இருக்கிறவர்களுக்கு

இது சொர்க்கம்!

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு

இது தொழில்!

தெருக்களுக்கு இது அரண்!

பிச்சையெடுப்பவர்களுக்கு

இது நிராசை!

செல்வந்தர்களுக்கு

இது ஆடம்பரம்!

அரசாங்கத்துக்கு

இது வரிப்பணம்!

சொந்தவீட்டுக்காரருக்கு

இது மாதவருவாய்!

வாடகைக்கு இருப்போர்க்கு இது மாதநெருக்கடி!

கல்யாண காலத்தில் இது

வண்ணங்களின் கோலம்!

அஞ்சல்கொண்டு வருபவருக்கு இது வெறும் எண்!

தேர்தலில் நிற்பவருக்கு இது ஓட்டுப்போடும் நிலையம்!

அரசு பள்ளிகளுக்கு

இது மாணவர்களை அனுப்பும் கூடம்!


த.ஹேமாவதி

கோளூர்

உழைப்பாளர்தின வணக்கம்


உழவரின் உழைப்பில் உணவு!

நெசவரின்

உழைப்பில் உடை!

குயவரின்

உழைப்பில் பானை!

தச்சரின்

உழைப்பில் மேசை!

கட்டுமானக்கார்கள்

உழைப்பில் வீடு!

 மீனவர்

உழைப்பில் மீன்கள்!

இராணுவவீரரின்

உழைப்பில் காப்பு!

குருவின்

உழைப்பில் புலமை!

அறிவியலாளரின்

உழைப்பில் புதுமை!

மருத்துவரின்

உழைப்பில் நலம்!

தமிழறிஞரின்

உழைப்பில் வளம்!

கலைஞரின்

உழைப்பில் மகிழ்வு!

முடிதிருத்துவோரின்

உழைப்பில் அழகு!

தையற்கலைஞரின்

உழைப்பில் உடை!

தோற்கலைஞரின்

உழைப்பால்காலனி

சட்டவல்லுநர்

உழைப்பால் உதவி!

காவல்துறையின்

உழைப்பால்அமைதி

கூலித்தொழிலாளர்

உழைப்பால் வசதி!

உலகெங்கும்

உழைப்பாளரின்றி

உயர்வேது?

உழைப்பாளரைப்

போற்றுவோம்!

உழைப்பின் சிறப்பை உணர்வோம்!

அனைவருக்கும்

*உழைப்பாளர்தின வணக்கம்*


த.ஹேமாவதி

கோளூர்

தலைமகன்

தங்கைக்கு தகுதியான வாழ்க்கை

அக்காளுக்கு அமைதியான வாழ்க்கை

அப்பா அம்மாவிற்கு

அன்பும் பாசத்தையும்

விட

நிம்மதியான வாழ்க்கை

அமைத்துவிட்டு


தலைமகனாய் பிறந்தவன் எல்லாருடைய வாழ்வையும் அமைத்துக்கொடுத்தும்


 வாழ்பவரின் எண்ணங்களில் வகைதெரியாமல்

வாழ்க்கை 

நடத்தினால்.?


தாய் தந்தைக்கு

தலைமகனாய்

தங்கைக்கு 

அண்ணாய்

அக்காளுக்கு 

தம்பியாய்

இருந்து 

ஏற்றி வைத்த தீபங்கள் அணையாமல்

பாதுகாக்க 

யார் வருவாரென தலைமகன் தவித்து நிற்க..


உறவுகளில் அமைதி நிலவிட

நிலைத்த உறவை 

பலத்த 

பாதுகாப்புடன்

வழிநடத்திட

உறுதியுடன் உறவுகளை கைக்கோத்திட

உறவை வளப்படுத்துவோம்

வாழும் வரை நிம்மதியுடன்

வாழ..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

மீளத்தான் முயல்கின்றேன்


உயிர்த்தெழுந்த உத்தமரின் உயிர்த்தலைக் கொண்டாடுகின்றார்,

உன்னதங்கள் பெறவேண்டி ஒன்று கூடி செபிக்கின்றார்,

செபித்தலின் இடையிலோர் வெடிச்சத்தம் கேட்கின்றார்,

உடனிருந்த பலபேரை பிணமாகப் பார்க்கின்றார்,

உடல் உறுப்பு சிதறிவிட்ட பலபேர்கள் துடிக்கின்றார்,

பார்த்தவர்கள் கேட்டவர்கள் பதறித்தான் நிற்கின்றார்,

அவர்களுள் ஒருவனாக என்னை நான் பார்க்கின்றேன்,

அது தந்த வலிநின்று மீளத்தான் முயல்கின்றேன்.


காலையிலே தொலைக்காட்சியில் காட்சி ஒன்று பார்க்கின்றேன்

பணிசெல்லப் புறப்படும் காவலரைக் காண்கின்றேன்,

அவர் கால்பிடித்து அவர்குழந்தை அழுதவாறே செல்கிறது,

போகாதே, போகாதே என்று சொல்லி அழுகிறது, 

அப்பாவைப் பிரியமுடியா குழந்தையாய் எனை நினைக்கின்றேன்,

ஆறுதல் படுத்தி நிற்கும் அப்பாவாய் நிற்கின்றேன்,

வாழ்க்கையென்ற நிஜம் காட்டும் துயரத்தால் தவிக்கின்றேன்,

துயர்தந்த வலி மறந்து மீளத்தான் முயல்கின்றேன்,

முயன்றால்  முடியாதா? கேள்வியோடு தொடர்கின்றேன்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

ஒப்பற்ற துளி

உழைப்பை உறுதிசெய்யும் 

ஒப்பற்ற துளி

வியர்வை..


உன் 

உயர்வையும்

அதுதான் 

தீர்மானிக்கும்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..உழைப்புஉழைப்பால் உயர்ந்தவர் எத்தனை பேர்

பிறர் உழைப்பில் உயர்ந்தவர் எத்தனை பேர்.


உழைக்கத் தெரிந்தவர் எத்தனைபேர்

அதில் உழைப்பைப் பழிப்பவர் எத்தனை பேர்.


உழைக்காமல் வாழ்பவர் எத்தனை பேர்

மேலும் உழைக்காமல் அழிந்தவர் எத்தனைபேர்.


உழைப்பினை வியப்பவர் எத்தனை பேர்

அந்த வியப்பினால் உழைப்பவர் எத்தனை பேர்.


உழைப்பினால் உயர்பவர் சிகரத்தைத் தொடுகிறார்

உழைக்காமல் உயர்பவர் சறுக்கியே விழுகிறார்.


உழைக்கத் தெரிந்தவர் உரிமையைப் பெறுகிறார்

உழைக்க மறுப்பவர் உறவையே இழக்கிறார்.


உழைப்புக்கு எறும்பினைத் தேனீயைச் சொல்கிறார்

உருவு கண்டெள்ளாமல் உழைப்பினை மதிக்கிறார்.


உழைத்துக் கொண்டிருப்பவர் உயர்ந்து கொண்டிருக்கிறார்

உழைக்காமல் இருப்பவர் பழிக்கப் படுகிறார்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

உழைப்பாளர் தின வாழ்த்துஉழைத்து விடு!
உயர்ந்து விடு!!
இருப்போரும் மறப்போராயிருக்கையிலே,
உன்னை கையிலெடுப் போரும்
யாரென்று தெரிந்து விடும்.
வெளிக் கொணர்ந்து உன் திறமை நீ காட்டு,
நிச்சயம் ஒரு நாள் இவ்வுலகே எதிர் நின்று பாராட்டும்!
உன்னெதிர் நின்று பாராட்டும்!!
உழைத்து விடு!
உயர்ந்து விடு!!

மே தின வாழ்த்துக்கள்,,,,

பாலா


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS