Header Ads Widget

Responsive Advertisement

தமிழ்க் காதல்



*மெய்யெழுத்தாய்* அவள்!

*உயிரெழுத்தாய்* அவன்!

விழிகளின் சங்கமத்தில் இருவரும் ஒன்றிட

*உயிர்மெய்* எழுத்தானார்கள்!

அவன் பேச்செல்லாம்

*மெல்லினம்* என

அவன் ரசித்தான்!

*இடையினமாய்* அவன் அவளிடம் எல்லைமீறுகையில்

*வல்லினமாய்* அவள் கடிந்துக் கொண்டாள்!

*பூப்பெயர்முன் மெல்லினம் மிகுதல்* போல

அவளின் பூவிரல்களை அவன்விரல்கள் பிடிக்கையில்  வெட்கம் அவளிடம் மிகுந்தது!

*சொல்பொருள்  பின்வருநிலையணியாய்*

இருவரும் அவரவர் பெயர்களை

மாற்றிமாற்றி திரும்பதிரும்ப

நாமகிழ சொல்லிசொல்லி இன்பங் கொண்டனர்!

*மொழிமாற்றுப் பொருள்கோளாய்*

இதயங்களை மாற்றிக் கொண்டனர்!

கண்களால் தொடங்கி *குறள்வெண்பா* போலிருந்த காதலை

*நிலைமண்டில ஆசிரியப்பாவாய்*

நீண்டு வளர்த்தார்கள்!

*எழுத்தாயிருந்த* இருவரும் *அசை* ந்து மனம்மாற

சீரான *சொல்லாகி*

*யாப்பாகி* *அணியாகி*

ஒருவருக்குள் ஒருவராய் இதயத்தே ஒன்றாகி அவள்அவனாய் அவன்அவளாய்

*திரிதல் புணர்ச்சி* ஆனார்கள்!இதனால் இருவரிடையே காதல் என்ற *பெருங்காப்பியம்* உருவானது! அழியாதது தமிழ்மொழி மட்டுமல்ல தங்கள் காதலும் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*