Header Ads Widget

Responsive Advertisement

கடிவாளம்

எரிமலையாய்க் கொதித்து நிற்கும் தணியாத கோபத்தை

பனிமலையாய் உருக்கிவிடும் அன்பு என்ற கடிவாளம்.


ஏக்கமுடன் பொங்கிவரும் மோகத்தை வளராமல்

எதிர்வந்து தணித்துவிடும் கலாச்சாரக் கடிவாளம்.


காட்டாற்றுவெள்ளமென கரை உடைக்கும் ஆசைகளை 

அணைகட்டித் தடுத்துவிடும் அடக்கம் என்ற கடிவாளம்.


மனம்போன போக்கிலே நெறிகெட்டு நடப்பவரை தறி கட்டி நிறுத்திவிடும் சட்டம் என்ற கடிவாளம்.


பலநாள் கொண்ட பகைதனையே பாகாக உருக்கிவிடும் 

பொன்னகையை மிஞ்சிவிடும் புன்னகையாம் கடிவாளம்.


மதம் பிடித்து அலைபவரின் மதிதன்னை உணர்த்திவிடும் 

மகத்துவம் பல புரியும் மனிதம் என்ற கடிவாளம்.


அறியாமை என்கின்ற இருளகற்றி, ஒளிபுகுத்தி

சரியான பாதை காட்டும் கல்வி என்ற கடிவாளம்.


வேற்றுமை பல பேசி ஒற்றுமையை மறப்பவரை

ஒன்றுபட்டு நிற்கவைக்கும் இந்தியன் என்ற கடிவாளம்.


குதிரைக்கு மட்டுமல்ல மனிதருக்கும் ஆங்கே

தவறாமல் தேவை இன்று விதவிதமாய்க் கடிவாளம்.


பண்பாட்டைக் காத்து நிற்கும்....

பண்பாட்டைக் காத்து நிற்கும் பலவிதமாம் கடிவாளம்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*