Now Online

Sunday, 23 February 2020

எல்லாம் மாறும்...!

மாறும்
மாறும்
எல்லாம் மாறும்...!
அது
இது
அவை
இவை
எல்லாம்  எல்லாமே மாறும்...!
அப்போது
எந்தன் வாசலில் சிரிக்கும்....
நீ போட்ட கோலம்...!
*பொன்.இரவீந்திரன்*


சுமைதாங்கிக்கல்லாய் நான்...!

சதியோ
விதியோ
வெறி நாயெனத் துரத்துகிறது உன்னை
மதியின் திட்டமிடல்களைத்
தவிடு பொடியாக்குகிறது
ஆயினுமென்...
ஊரெல்லையில்
காத்திருக்கிறேன்
சுமைதாங்கிக்கல்லாய் நான்...!


*பொன்.இரவீந்திரன்*


Saturday, 22 February 2020

தாய்மொழியும் தந்தைசொல்லும்பாலூட்டும்போதிலே
தாய்சொல்லும் மொழி தாய்மொழி!
நாவென்ற மனையில் முதலில்குடியேறுவது
தாய்மொழி!
ஆணிவேராக இருந்து சிந்தனையைக் கிளைத்தமரமாக்குவது
தாய்மொழி!
வேற்றுமொழிப் புலமையைப் பெறுவதற்கும் பாலமாக இருப்பது தாய்மொழி!
அந்நியர் தேசத்தில் எதிர்பாராவிதமாய் நம்செவியில் கேட்கையில் பேரின்பம் தருவது தாய்மொழி!
ஈன்றவளுக்கு இணையில்லை!
ஆனால் ஈன்றவள் மட்டுமே தாயல்ல!
தாயால் நாம்பேசும் தாய்மொழியும் நமக்கொரு தாயே!
தாய்ப்பாலோடு தாய்மொழியறிந்தோம்!
தாய்மொழியைத் தந்தை சொல்லிட மறையென உணர்ந்தோம்!
தாய்மொழியிற் சிறந்தமொழி வேறேது?
தந்தைசொல்லினும்
உயர்மறையேது?
தாய்மொழியைத் தாயெனக் கொண்டாடிப் போற்றுவோம்!
தந்தை சொல்லை மீறாது அடிபணிந்து நடப்போம்!

த.ஹேமாவதி
கோளூர்


தாய்மொழி தமிழ்மொழி


எத்தனை அகவை
கண்டவள் இவள்?!?
கணித்தாரில்லையெவரும்!
எத்தனை உயரம்
வளர்ந்தவள் இவள்.....?!?
அளந்தார் இல்லை எவரும்!
எத்தனை ஆழம்
அறிந்தவள்  இவள் ?!?
அகழ்ந்தவர் யாரும் இல்லை!
எத்தனைப் பழமை
பெற்றவள் இவள்?!?
அரிதியிட்டுசொல்வாரில்லை
ஓரிடம் தோன்றியிருப்பினும்
வேறிடம் செல்வாளாகில்.....
வேர்பிடித்து நிற்கும்
இவள் திறனும்,தரமும்
ஆர் தான் அறிவார் நிதம்??
*மேலிடத்தின்* தடையை
மோதிஉடைத்தே
*கீழடி* யை உயர்த்திட்ட
கீழ்வானம் அவள்🙏🌸🙏
செம்மொழியின் சிறப்பை
சீர்பிரித்துக் கூறிட......
எம்மொழியை ஈடாக்குவேன்?
தமிழோடு பிறக்கவில்லை
                               நான்;
தமிழுடன் வளரவில்லை;
                           ஆனால்.....
தமிழெனக்குள் வரப்பெற்றவ
தமிழை தவ வரமாய் உயிராய் பெற்றிட்டவள்🙏
அதுவரை கோழிபோல
ஓரடி உயரம் பறந்தவளை
                               இன்று...
நூறடி பறக்க வைத்த
சந்தனக்காற்று என் தமிழ்🙏🙏🙏🙏🙏🙏
அகழ்ந்தெடுக்க முடியாத
அகண்ட ரூபிணியாமவளை
முகந்தெடுத்து அருந்தினேன்
முக்காலத்துக்கும்
                        போதுமான...
மூச்சுக்காற்றை இலகுவாய்
                       பெற்றேன்🙏
தமிழ் தந்த பெருமையுடன்...
தமிழாய் ,தமிழில் ,தமிழென,
தமிழுடன் ,வாழ்வேன் என்றென்றும் 🙏

🌹🌹வத்சலா🌹🌹


தேர்அன்னை போல் என்னை இங்கு தத்தெடுப்பது யாரு?!
எடுத்து நீயும் அன்னையாய் இங்கு ஏற்றி விடு தேரு,,,
வென்று நான் வரவும் மெல்ல நீயும் வந்து பாரு,,,
உலகமே வியக்கும் சொல்லை நீயும் வந்து கேளு,,,,
அன்னையே நீயும் வந்து கேளு!

யாருக்கு யார் என்று யாரறிவார் உலகிலே,,, தாய்க்கு பிள்ளை தானே நாளெல்லாம் நினைவிலே,,,
நீ மட்டும் என்னை மறந்து போனதெங்கே சொல்லு,,,
ஊர் கூடி வணங்கும் போது ஏறியது ஏனோ தேரு,,,

உன்னையே நம்பித்தானே உலகை காண வந்தேன்,,,
என்னையே மறந்து போக தனியாளா நின்றேன்,,,
கண்ணைத் தான் பார்த்து நீயும் பசி போக்கும் தாயே,,,
விண்னையே பார்க்க வைத்து ஏன் மறைந்தாயே,,,!

உன்னைப்போல் அன்னையர் எல்லாம் உலகில் ஆயிரம் இருக்க,,,
என் மனம் ஏனோ உந்தன் நினைவாலே தடுக்க,,,
கண்களில் வெள்ளம் போல வழிந்தோடும் நீரை,,,,
துடைத்து தான் வணங்குதே அம்மா நீ போன தேரை,,,

ஒற்றுமை வலிமை என்று சொல்லித் தந்த தாயே,,,
தனிமையில் வாழவிட்டு போனதென்ன நியாயம்,,,
நதிக்கரையாய் நீயிருக்க நானும் ஓடி வந்தேன்,,,
இரு கரை மறைந்து போக வழியில் வதியாகி நின்றேன்,,,,

பாலா,,,


தாய் மொழி* (பிப்ரவரி, 21 - உலக தாய்மொழி தினம்)

*

கருவறை துவங்கி கல்லறை வரைக்கும்
உயிராகி, உணர்வாகி உருவாகி, திருவாகி
இணையாக, துணையாக, இதயமாக நிற்கும் மொழி.

எந்நாடு சென்றாலும் எம்மொழியில் பேசினாலும்
எங்குதான் கேட்டாலும் செவிகொடுக்க வைக்கும் மொழி.

தாயை இகழ்ந்தவனை யார் தடுத்தும் விடமாட்டேன்,
தாய்மொழியை இகழ்ந்தவனை தாய் தடுத்தும் விடமாட்டேன்
என்றே உணர்வோடு பலரைப்பேச வைக்கும் மொழி.

உடன் இல்லாத் தாய் அவளின் பிரிவதனை, நினைவதனைப்
பலநேரம் உணராமல் இருப்பதற்கும் நினைப்பதற்கும்
காரணமாய் இருக்கின்ற கனிவான இனிய மொழி.

கல்லாத பலபேர்க்கும், இல்லாத பலபேர்க்கும்
சொல்லாகி, பொருளாகி, உணவாகி, வாழ்வாகி
துணை நிற்கும் அன்பின் மொழி
அது தானே தாய் மொழி.

*கிராத்தூரான்*


நஞ்சுண்டவனே நலமா?


வையகம் உய்வுற, வானவர் மேம்பட
தன்னிகர் எவரெனக் கண்டவர் வியந்திட
உமையவள் தவிப்பதை ஓரமாய் ஒதுக்கியே
ஆலகால விஷமதை அமுது போல் உண்டவா
தன்னலம் மறந்திடப் பிறர்நலம் கண்டிட
நஞ்சுண்டவனே நலமா
உன் வீட்டில் அனைவரும் சுகமா?

அன்னையவள் பிடித்ததனால் கண்டமுடன் நின்றது
கண்டமுடன் நின்றதனால் கண்டமது கடந்தது
கண்ட நிறம் மாறியே நீலகண்ட மானது
விண்ணவர்கள் கண்ட துயர் அண்டாது போனது
உன்னை நம்பி இருப்போர்கள் நலன் பெரிதென்றானது
பெண்டு பிள்ளை எதிர்காலம் கண்டு கொள்ளாது போனது.

கண்டமோடு நின்றாலும் நஞ்சு நஞ்சு தானே
மனிதரைப் போல் உனக்கும் கூட வலிகள் உண்டு தானே
உன் வலியைக் கண்டு நிற்க உமைக்கும் வலிக்கும் தானே
உன்னுடலில் பாதியன்றோ தினமும் வலிக்கும் தானே
உம் வலியில் கலங்குவது பிள்ளைகளும் தானே
உலகையெல்லாம் காத்தருளும் கடமை புரிவோனே.

அதனால் தான் கேட்கிறேன்
ஆவலோடு கேட்கிறேன்....
அதனால் தான் கேட்கிறேன்
ஆவலோடு கேட்கிறேன்...
நஞ்சுண்டவனே நலமா
உன் வீட்டில் அனைவரும் சுகமா?

*கிராத்தூரான்*


Wednesday, 19 February 2020

தனிமையில் என்னசெய்கிறாய்?


பறியே பறியே
இரும்புப் பறியே
இங்கேன் நீயே தனிமையில் வாடுகிறாய்?
உன்னை கட்டிட எந்த கவலையைத் தேடுவேன் நான்!
நீர்நிரம்பிய கிணற்றைத் தேடி எங்குநான் செல்வேன்!     கிணறும் கிடைத்து கவலையும் கிடைத்து உன்னைக் கட்டிவிட்டாலும் உனக்கேற்ற பெரிய இரண்டு காளைமாடுகளை எங்குத் தேடி செல்வேன்?
மாட்டின் உழைப்புக்கு மாடுகிடைத்ததும் ஆளின்உழைப்புக்கு அஞ்சாதே!பறியே இதோ நானிருக்கிறேன்!
இரும்புப் பறியே உனக்கொரு தங்கை இருப்பாளே தோல்பறையென்று!
அவளை எங்கே விட்டுவிட்டாய்?
முன்னும்பின்னும் 
கவலை அசைகையிலே பறியே நீதான் மேலெழும்புவாய் நிறைந்த நீருடன்!
வால்கயிற்றை இழுத்தால் சலசலவென்றே நீர்கொட்ட  
கவலையின் மேலே நின்றிருக்கும் மாமன் ஏத்தப்பாட்டைப் பாடிட வரப்பில் நின்று ரசித்தபடி மாமனைப் பார்க்கும் அத்தைமகள் சலசலத்துக் கொட்டும் நீரிலே கலகலத்துச் சிரித்தபடி முகங்கழுவ அங்கே ஒருகாதல் பிறக்கும்!
பறியே நீதான் சாட்சியாவாய்!
ஏத்தப்பாட்டினிலே பறியே நீ ஏற்றிவிட்ட காதல்சோதியெல்லாம்
நினைவில் வருகிறதா?தனிமை நோகிறதா?

த.ஹேமாவதி
கோளூர்

இனிக்கத் தகுந்த நொடிகள்

கடந்து போய் விட்டது காலங்கள் பல
மறையாமல் நெஞ்சிலின்னும் நினைவுகள் சில
விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
தொண்டையை அடைக்குமே அந்நிலை போல.

எங்குதான் இருக்கிறாள், எப்படி இருக்கிறாள்
எதுவுமே தெரியாமல் நினைவிலே அவள்.
அன்று போல் இருப்பாளா மாறிப்போய் இருப்பாளா 
எண்ணத்தில் சில நேரம் வந்து செல்லும் அவள்.

அவளும் தான் நினைப்பாளா அந்த நாளை மறப்பாளா
நினைக்கையிலே நெஞ்சோரம் சிறியதோர் வலி.
நிச்சயமாய் நினைத்திடுவாள் ஒரு நாள் அதைச் சொல்லிடுவாள் 
என்ற எண்ணம் வருகையிலோ கிடைக்கும் இன்பம் தனி.

யாரோ பார்க்கிறார்கள் என்று மனம் சொல்கிறது 
ஏதோ ஒரு உந்துதல் திரும்பிப் பார்க்க வைக்கிறது
ஓரமாய் நின்று பார்க்கும் பொன்முகத்தைக் காண்கிறது
புன்முறுவல் பூத்து நிற்கும் அதேமுகம் தெரிகிறது.

புள்ளி இளம் மானைப் போல் மனம் துள்ளிக் குதிக்கிறது
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் என்று கேள்வி கேட்கிறது
அருகில் சென்று நின்றுவிட கால்கள் பரபரக்கிறது
நினைக்க நினைக்க அந்நொடிகள் இனிப்பை அள்ளித் தருகிறது,

மீண்டும் நினைக்க வைக்கிறது.

*கிராத்தூரான்*

லஞ்சம்

முத்தத்திற்கு மிட்டாய் அளித்துத் துவக்கி வைக்கிறோம் லஞ்சம்
வளர வளர எதிர்பார்ப்புகள் வளர்கிறது கொஞ்சம் கொஞ்சம்.

கடையிலே பொருள் வாங்கச் செல்வதற்கு லஞ்சம்,
பள்ளிக்குத் தவறாமல் செல்வதற்கும் லஞ்சம்.

மணவிழா காண்பதற்கு வரதட்சணை லஞ்சம்
மணிவிழா காணும் வரைத் தொடரும் அந்த லஞ்சம்.

விரைவாக வேலை முடியக்  கொடுத்தார் அன்று லஞ்சம்,
கடமையைச் செய்வதற்கே வாங்குகிறார் இன்று லஞ்சம்.

ஓட்டு போட மக்களுக்குக் கொடுக்கிறார்கள் லஞ்சம்,
தேர்ந்தெடுத்த பின்னர் அவர் தீர்க்கிறார்கள் வஞ்சம்.

லஞ்சம் கிடைக்கும் வேலை தேடி அலைகிறது நெஞ்சம்,
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி வாங்குகிறார் லஞ்சம்.

கடவுளைக் காண்பதற்கு அரசுக்கு லஞ்சம்,
நேர்த்திக்கடன் என்ற பேரில் கடவுளுக்கே லஞ்சம்.

வேற்றுமைகள் பல இங்கே இருந்தாலும் கூட
ஒற்றுமையாய் ஊரெங்கும் இருக்கிறது லஞ்சம்.

வேற்றுமையில் ஒற்றுமையைப் 
பறைசாற்றுகிறது லஞ்சம். 

*கிராத்தூரான்*

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸா கொலைகார வைரஸா
இரக்கமே இல்லாமல் இப்படிக் கொலை செய்கிறதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்கிறதா? 
உயிரோடு தின்பவரின் உயிரெடுப்பேன் என்கிறதா?

திடீரென்று வந்தநோயால் திகைத்துப் போய் நின்றனராம்
திகைப்பு விலகிப் போகுமுன்னே பல பலிகள் தந்தனராம்
வீடுவீடாய்ச் சென்று பல சோதனைகள் செய்கிறாராம் 
வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிர்துறக்க வைக்கிறாராம்.

கல்வி கற்கச் சென்றவர்கள்  கதறல்கள் கேட்கிறது,
வேலைதேடிச் சென்றவர்கள் வேதனைகள் புரிகிறது, 
என்னே கொடுமையிது புலம்பத்தான் முடிகிறது,
என்று தீரும் இக்கொடுமை கேள்விதான் எழுகிறது.

கதறுகின்ற மருத்துவர்கள் கதறல்கள் என்ன செய்யும்!
கண்டு சொன்ன மருத்துவரின் உயிர்த்தியாகம் என்ன செய்யும்!
உண்மைகளை மறைத்துவிட்டால் உலகம் தான் என்ன செய்யும்!
உயிர்கொடுத்த போதிதர்மன் ஆவி கூட என்ன செய்யும்!

திடீரென்று பரவிவிட்டால் நிர்வாகம் என்ன செய்யும்
நாடு திரும்பும் தன்மக்களை மற்றநாடு என்ன செய்யும்
உலகெங்கும் பரவாமல் இருக்க உலகு என்ன செய்யும்
உடனே கட்டுப்படுத்தினால் தான் இவ்வுலகம் இனி உய்யும்.

இல்லையென்றால் தலைமுறைகள்..
இல்லையென்றால் தலைமுறைகள் சீனாவை வையும்,
பழி மழை பெய்யும்.

*கிராத்தூரான்*

அறிவின் அழகுஅகத்தின் அழகு முகத்தில் என்றால்
அறிவின் அழகு செயலில் அன்றோ 
அறமும் வளர்த்து, திறமும் வளர்த்து
உரமாய் நிற்பது அறிவே அன்றோ.

கண்ணைக் கவர்வது புற அழகென்றால்
கருத்தைக் கவர்வது அறிவழகன்றோ
மண்ணை அளந்து, விண்ணை அளந்து
வியக்க வைப்பது அறிவே அன்றோ.

நாளும் பொழுதும் செல்லச் செல்ல
செல்லாக் காசு புற அழகன்றோ
குறைவும் இன்றி அழிவும் இன்றி 
நாளும் வளர்வது அறிவே அன்றோ.

கற்றது இங்கே கை மண்ணளவு
கல்லாதது தான் இவ்வுலகளவு 
என்றே சொல்ல வைப்பதும் அறிவே
அந்த அடக்கமே அறிவின் அழகு.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் அழகு
கொடுக்கக் கொடுக்கக் குறையா அழகு
தள்ளி வைத்த உறவை நட்பை
வியக்க வைப்பது அறிவின் அழகு

வியப்பே என்றும் அறிவின் அழகு.

*கிராத்தூரான்*

எது எளிது

கல்லாத பலபேர்க்கு பிறர் கற்ற கல்வி
இல்லாத பலபேர்க்கு சிலர் சேர்த்த செல்வம்
செல்லாத பலபேர்க்கு நெடுந்தூரப் பயணம்
நில்லாத பலபேர்க்கு நெடு நேரம் நிற்றல்
மிகவும் எளிது, மிக மிக எளிது.

இயலாத பலபேர்க்கு அயலார் தன் சாதனை
முயலாத பலபேர்க்கு இடைவிடா உழைப்பு
உதவாத பலபேர்க்கு பிறர் செய்யும் உதவி
எழுதாத பலபேர்க்கு எழுதுவோர் தன் எழுத்து
மிகவும் எளிது, மிக மிக எளிது.

பொறாமை பிடித்தவர்க்குப் பிறர் பெறும் பாராட்டு
பொறுமை இன்றிக் குதிப்பவர்க்கு பிறர் காக்கும் பொறுமை
அறியாத பலபேர்க்கு இயல், இசை, நாடகம்
படிக்காத மாணவர்க்குக் கேள்விகள் அனைத்தும்
ஊரிலுள்ள அனைவருக்கும் ஆசிரியர் வேலை
மிகவும் எளிது, மிக மிக எளிது.

*கிராத்தூரான்*

சத்துணவுபஞ்சத்தில் இருந்தபோதும் 
கொஞ்சமாக உண்டபோதும் 
நஞ்சை அன்று உண்ணவில்லை நெஞ்சை அது அடைக்கவில்லை.

சத்தான உணவென்றுப் 
பத்து பேர்கள் சொன்னார்கள்
பத்து பேர்கள் சொன்னதனால் 
சத்தென்று நினைத்தார்கள்.
 
சுத்தமான உணவுதானா 
ஆராய மறந்தார்கள் 
ஆராயாது உண்டவர்கள் 
அல்லல் பட்டு நின்றார்கள்.

இருப்பதை விட்டு விட்டுப்
பறப்பதை விரும்புதல் போல்
இயற்கையை விட்டு விட்டுச்
செயற்கையில் மகிழ்ந்தார்கள்.

கோடீஸ்வரன் பெயர் இருக்கும்
பிச்சை பெற்று வாழ்ந்திடுவார்
பிச்சை என்ற பெயர் கொண்டோர்
லட்சாதிபதி ஆயிருப்பார். 

பெயரில் மட்டும் சத்திருக்கச் 
சக்கையாக உணவிருக்கும் 
சக்கையோடு சர்க்கரையைச்
சேர்த்த சத்து தானிருக்கும்.

தானியங்கள் உண்டவர்கள் தானியங்கி ஆயிருந்தார்
தரமறிய மறந்தவர்கள்
தாங்கி நிற்க மருந்துண்டார்.   

நாவுக்கு ருசியிருக்கும் 
சாவுக்கு வழிவகுக்கும்
இயற்கையான சத்துணவு
உண்பவர்கள் வாழ்வினிக்கும்.

இதை உணர்ந்தவர்கள் வாழ்வினிக்கும்.

*கிராத்தூரான்*

Saturday, 15 February 2020

எதற்காக.....


ஆறடி மண்ணோ ?
அக்னி சாம்பலோ ?
அதுமின்றி
பேரிடர் குழியோ?
பெருமழை நீரோ?
கணித்துச் சொல்லா
மரண வழியை.
தேடி வாழும்
மாந்தர் நாமே.

இறுகப் பிடிக்கிறோம்,
சுயநலப் பற்றை.
காற்றில் எறிகிறோம்,
நாமெனும் முத்தை .


அணிகள் சேர்கிறோம்,
இம்சைகள் செய்ய .
தனியாய் செய்கிறோம்,
நன்மைகள் நாமே .....

குற்றம் தேடிச்செல்வதனால் .
சுற்றம்
நாடிவருதில்லை .
என்னால் எல்லா மென்பவரால்,
எதுவுமிங்கே கூடவில்லை .....

புத்தன் போலேயிருப்பதானால் ,
பித்தாய்ப்போகுது மனங்கலிங்கே,
கேலிசெய்ய முன்னிருக்கை ,
சோலி 
செய்யப்பின்னிருக்கை.....

உங்கள் மெளனப்போர்களில்,
எங்கள்
எதிர்காலங்களை
கொன்று, 
மென்று ,
தின்று 
விடாதிர்கள் .....

எதற்காக ஓடுகிறோம்,
எதற்காக கூடுகிறோம்,
எதிர்காலங்களை மாற்றுங்கள்,
எதிரிகளையும்  மாற்றுங்கள்
நண்பர்களாக.....

*கவிஞர் ராஜா ஆ*
*பண்ணுருட்டி*

Sunday, 9 February 2020

கல்யாணப் பொண்ணுகண்டிருந்த கனவுகள் நனவுகள் ஆகும், 
காலமெல்லாம் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடும்,
வாழுகின்ற வாழ்க்கை எல்லாம் வான்மழை போல் மாறும்,
வண்ண வண்ணக் கனவு காணும் கல்யாணப் பொண்ணு.

கணவனே கண்கண்ட தெய்வம் 
இனி என்றும்,
புகுந்த வீடே இனி உனக்குச் 
சொந்த வீடு என்றும்,
அனுசரித்துப் போகவேண்டும்,
அவையடக்கம் பேணவேண்டும்,
அறிவுரைகள் சொல்லி நிற்பார் 
ஒரு சாரார்  ஒரு புறத்தில்.

அடங்காதே அத்து மீறு அடிமையல்ல நீ கூறு,
வீட்டு வேலை செய்வதற்கு வேலைக்காரி அல்ல கூறு,
உரிமைக்காய்  குரல் கொடுக்க உபதேசம் செய்து நிற்பார்,
தன் வீட்டில் அமைதியாக அடங்கி நிற்போர் மறுபுறத்தில். 

யார் என்ன சொன்னாலும் தன் வாழ்க்கை தன் கையில்,
உறவு பேணல் நட்பு காணல் உண்டு தங்கள் சரித்திரத்தில்,
அடிமையென்றும் அல்லாமல் 
அத்துமீறிச் செல்லாமல்,
கடமை அதைப் புரிந்து வாழ்ந்தால்
உரிமை வரும் தானாக.

எதிர்மறையாய் எண்ணாமல்
நேர்மறையாய் சிந்தித்தால், 
எவர் பேச்சும் கேட்காமல்
தன் குறையைச் சந்தித்தால்,
ஆண் இனமே அரக்கர் என்ற 
சிலர் பேச்சை ஒதுக்கி வைத்தால்,
வாழ்வாள் அவள் கண்ணு
புதுக் கல்யாணப் பொண்ணு.

*சுலீ. அனில் குமார்.*

எது அழகு?புறத்தோலின் செந்நிறமும், பூசப்பட்ட வண்ணங்களும்
கருப்பு நிற ஏழழகும் ஆகுமா அழகு!.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது
உள்ளதை உள்ளதென்று உரைத்தல் அது அழகு.

பிறர் மனம் நோக வைத்து அது கண்டு மகிழாது
பிறர் துன்பம் உணர்கின்ற உள்ளமது அழகு.

கவலைகளை ஒதுக்கி விட்டுத் தடங்கல்களைத் தகர்த்துவிட்டு 
நேரத்தே செய்கின்ற கடமை பேரழகு.

ஊருக்கு உபதேசம் செய்வதோடு நில்லாமல்
சொன்னதைச் செய்துகாட்டும் செயல் என்றும் அழகு. 

பிறர்கண்ணில் கண்ணீரைக் கண்டவுடன் அறியாமல்
நம் கண்ணில் சுரக்கின்ற கண்ணீர் வெகு அழகு.

பெற்றவரைப் போற்றுகின்ற பெரியவரை மதிக்கின்ற
கற்றபடி நடக்கின்ற கல்வி தனி அழகு.

குவித்துப் பார்த்து மகிழாமல் தேவையென்று வருவோர்க்குத்  தேவைக்கு உதவுகின்ற செல்வம் அதி அழகு. 

பெருமைக்காய் பொங்கியெழும் போலிகளின் மத்தியிலே 
சிறுமை கண்டு பொங்குகின்ற வீரமது அழகு. 

வெளியழகைப் பார்க்காமல் உள்ளழகால் உயர்ந்து நின்று
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு மிக அழகு.

அழகுக்கு அழகு சேர்த்தால் அதுவன்றோ அழகு.

*கிராத்தூரான்.*

பேசாமடந்தைநல்லதைத் தீயதைப் பகுத்தறியும் பருவம்
தான் யார் என்பதை அறிந்துணரும் பருவம்
யாராக வேண்டும் என முடிவெடுக்கும் பருவம்
யார் யார் வேண்டும் என்றுப்  புரிந்துணரும் பருவம்
பேதையாய், பெதும்பையாய், மங்கையாய்க் கடந்து
நான்காவது பருவமாம் மடந்தைப் பருவம்.

பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து
சொல்ல வேண்டிய பலவற்றைச் சொல்லாமல்  தவிர்த்து
சொல்லவேண்டிய நபரிடம் அனைத்தையும் மறைத்து
சொல்லவொணாத் துயரத்தை நெஞ்சினில் சுமந்து
ஊமையாக இருந்தவள் பேசாமடந்தை
காரணப் பெயராய் மாறிய மடந்தை.

அரிவையாய்த் தெரிவையாய்ப் பேரிளம்பெண்ணாய்
மாறி நின்றாலும்  மறவாள் அவள்
ஏன் பேசவில்லை நினைப்பாள் அவள்
காயத்தின்  தழும்புகளைப் பார்ப்பாள் அவள்
கண்ணீரால் தழும்புகளை நனைப்பாள் அவள்
மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிப்பாள்  அவள்
தனிமையிலே இருக்கையிலே துடிப்பாள் அவள்
பேசும் பேச்செல்லாம் பயனற்றுப் போகையில் 
பேசாமல் இருந்ததை நினைப்பாள் அவள்
பேசாமடந்தையாய் நினைப்பாள் அவள். 

*கிராத்தூரான்*

வார்த்தை வரம்


நன்றாக இரு மகனே(ளே)என்ற நல்லோர் வாய் வார்த்தை
சென்று வா, வென்று வா என்று வாழ்த்துகின்ற வார்த்தை,

வாழ்க, வளர்க என்ற மனம் நிறைந்த வார்த்தை
யாமிருக்கப் பயமேன் என்ற நம்பிக்கை வார்த்தை,

வீணையடி நீ என்ற பாரதியின் வார்த்தை
எங்கிருந்தாலும் வாழ்க எனும்
காதலர் தன் வார்த்தை,

ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராசர் வார்த்தை
நல்லதென்றும், மகிழ்ச்சியென்றும் சொல்லுகின்ற வார்த்தை

நண்பேன்டா என்று சொல்லும் நண்பர்கள் வார்த்தை
கவலைப்படாதே என்ற கருணைமிகு வார்த்தை,

கண்டேன் சீதையை என்ற ஆஞ்சனேயர் வார்த்தை
இன்று போய் நாளை வரச் சொன்ன இராமர் வார்த்தை,
எத்தனையோ வார்த்தைகள் இருக்கிறது
தரமாக
அனைத்துமே பல நேரம் வாங்கி வந்த வரமாக,

அனைத்துமே பல நேரம் வாங்கி வந்த வரமாக.

*கிராத்தூரான்*

Wednesday, 5 February 2020

துளிர்த்து எழுமா?

வறண்ட பாலையாய்க்கிடக்கிறது
வாழ்க்கை...
எனக்கும்
செல்லம்மாளுக்கும்...!

பன்னீரோ
நன்னீரோ
தண்ணீரோ....

யார் வந்து  தெளித்தாலென்ன
துளிர்த்து எழலாம்
எம் உயிர்...!!

*பொன்.இரவீந்திரன்*


தஞ்சை பெரிய கோவில்கல்லிலே ஓவியம் படைத்தான் இராசராசன்!அதைச்
சொல்லிலே ஓவியமாக்கிட முனைந்தேன் நானே!
கலையாத ஓவியமாய்க் கல்லை மாற்றினான்!
உளியென்ற தூரிகையால் அதை முப்பரிமாணமாக்கினான்!
கலமேறி கடல்கடந்து பலநாடு
வென்றும் மனம்நிறையாத மன்னன் கல்லோவியமாம்
பெரியகோவில்
படைத்ததிலேதான்
மனம்நிறைந்தான்!
அவன் உள்ளத்தின் உயர்வு போலவே விண்முட்டும் கற்கோபுரம்!
அதன் நிழலோ பூமியில் வீழாதென்பதோர் உலக அதிசயம்!
படுத்திருக்கும் காவல்நந்தியைப் பார்க்க பார்க்க பரவசமேற்படும்!
நெல்லால் கொழித்த தஞ்சையை இராசராசன் கல்லால் புனிதமாக்கினான்!
முதல்முறை வந்தவர்கள் பெரியகோவிலைப் பிரியமனதில்லாமல்
தவிப்பார்கள்!
கல்லுக்கும் காந்த ஈர்ப்புண்டு என்பதை உணர்வார்கள்!
கல்கூட மொழிபேசும் என்பதையும் அறிவார்கள்!
அந்த பேசும்கற்சித்திரத்துள்
மெய்மறந்து மனமுருகி கற்சிலையாக நிற்பார்கள்!
பிரமாண்டத்தைச் சோழன் கல்லில் காட்டினான்!
உலகமக்கள்
யாவருடைய மனங்களிலும்  அன்பால் அன்பால் 
நிறைந்தான்.

த.ஹேமாவதி
கோளூர்

செல்லம்மா....

உள்ளங்கை ரேகையாய்க்கிடக்கிறது
செல்லம்மா...!
யாராலோ
எழுதப்பட்ட நமக்கான
காலம்...
இன்னும் நிரப்ப  இயலாத வெற்றிடங்களாய்...!

நீயற்ற நான்
நானற்ற நீ
சாத்தியமில்லையடி
செல்லம்மா....!
ஆயினுமென்
சாத்தியமே
நாமற்ற உலகு...!

எப்போது
எழுதப்போகிறோம்
செல்லம்மா....?
எனக்கான கேள்விகளுக்குப்
பதிலை நீயும்...
உனக்கான
கேள்விகளுக்குப்
பதிலை நானும்...
*பொன்.இரவீந்திரன்*


குதூகலிக்கும் காலம்....!!

எனக்கென்று நீ
உனக்கென்று நான்....!
நமக்கென்று
காதல்...!
நிலம்மாறிப்
பெய்யினும்
பெய்யட்டும் செல்லம்மா....!
சேந்தி நிறைந்தால்
குதூகலிக்கும்
காலம்....!!
*பொன்.இரவீந்திரன்*வீரமாமுனிவர்

மதங்கடந்து வாழ்பவரே
உண்மைத் தமிழர்!
ஆங்கிலத்தின்
தத்துப்பிள்ளையாய்
மொத்தமாய் அனுப்பப்பட்ட
ஒத்தைப்பிள்ளை நான்!
மீண்டுவந்தபோது........
பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியிலேயே
ஆணியடித்ததாய் நின்றிருந்தேன்.....!
அகரம் துவங்கினேன்
சிகரம் நோக்கி பயணம்
தொடர்கிறேன்.....
தமிழ்பாலருந்திய தெம்பால்!
தேன் பாடலை அணியாய்
தேம்பாவணியாய் பூட்டி
தமிழ்கூறும் நல்லுலகில்
தவழ்ந்தேன் மழலையாய்!
சிலுவைக்காட்சியை
சீராக தமிழில் செப்பிய
மா முனி  !அவர்
தமிழ்க்கடலில் மிதக்கும்
தங்கத் தோணி!
தமிழுக்கு மணமுண்டு மதமில்லை என்பதை
காதங்கடந்து வந்து அவர்
கற்றது தமிழ் !அவரால் நாம்
பெற்றது தமிழன்னைக்கு
விலையேறப்பட்ட அணி!
தமிழால் இன்னமும்
வாழ்கிறார் தமிழாகவே!
அவரின் பிறந்த நாளை
தமிழால் கொண்டாடுவோம்!

🌹🌹வத்சலா🌹🌹
இன்று தேம்பாவணி தந்த
கான்ஸ்டான்டி நோபில் எனும் “வீரமாமுனிவர் “ பிறந்தநாள் கவிதை


பொய்யெனும் போர்வை.வஞ்சகம் சூதும் வாழுது நெஞ்சில் வஞ்சகம் சூதும் வாழுது,,,
ஒன்னா? ரெண்டா இருக்குது,,,,?
அதுகள்
ஒன்னா ரெண்டும்
இருக்குது,,,,!

அஞ்சில் வளைய ஆளேது?
நெஞ்சை நிமிர்த்து நிற்கையிலே,,,!
தஞ்சம் புகுந்த நேரத்திலும்
வஞ்சகமாக வரவழைக்கும்
நெஞ்சமெல்லாம்,
என்றும்
வஞ்சகம் சூதும் வாழுது,,,
அதுகள் ரெண்டும் ஒன்னா தானே இருக்குது,,,,

கண்ணில் நிறைய பொய் வைத்து,
வாயில் உமிழும் வார்த்தையெல்லாம்
தாய், சேய் நலம் பார்ப்பது போல் பாவணையில்,
நோய் கொடுத்து தான் நிற்கும்,,,
பொய்யெனும் போர்வையிலே
புறம் பேசி மகிழ்ந்திருக்கும்,,,
மெய்யென நானிருக்க
மேதினியில் எப்போது?

தீயென சுட்டு விட
தீயன
மறைந்தது போல்,,,
மாயனை நான் கண்டேன்
மற்றவை பறந்தோட,,,
சேயென தேற்றி
என்னை,
வாயென வாயில்
நிற்க,,,
பொய்யெனும் போர்வையெல்லாம்
பல தையலால்
ஆனதென்றான்,,,,

மெய்யலை
மேனியிலே
மேவிய மாயனவன்
பொய்யெனும் போர்வை தரித்த
பல போலி தையல்களை
மெல்ல
பிரித்தெடுத்து
மெளனத்தில்
வேலியிட்டான்,,,

வாடா மலரெடுத்து
வாடா என்று சொல்லி
என்னை,
மூடா
போர்வையாலே
யாரும் தேடா
ரகசியமாய்,
உலகில்
பாடாய் படுத்தி
என்னை
கூடா நட்பில் தானே
நீயும், பல
குறைகள்
கண்டாய்
என்றான்!

பாலா,,,


பொறுமைஇருக்கவேண்டும் அனைவருக்கும்,
இல்லாது போனது
இருக்க வேண்டிய நேரத்தில்,
காணாது போனது.

மதம் அனைத்தும் சொன்னது
மதம் பிடித்தோர் மறந்தது.
இதமளித்து நிற்பது
இறைக்கு நிகர் குணமது.

பொறுமையைக் கடைபிடித்தோர்
பெருமை பெற்றார் சரித்திரம்
உணர்ந்தாலும் கடைபிடிக்க
முடியவில்லை விசித்திரம்.

ஓடு மீனை ஓடவிட்டு
உறுமீன் வரும்வரை
காத்திருக்குமாம் கொக்கு
பொறுமைக்கோர் எடுத்துக்காட்டு.

பொறுத்தார் பூமி ஆள்வார்
முன்னோர்கள் சொன்னது
வறுமையிலும் பொறுமை காத்தல்
மனிதருக்கு நல்லது.

பொறுமையோடு இருந்தவரைப்
பொறாமையோடு பார்க்கிறேன்
பொறுமை வேண்டும் நினைக்கிறேன்
முடியாமல் தவிக்கிறேன்.

பொறுமை வேண்டும் நினைக்கிறேன்
முடியாமல் தவிக்கிறேன்.

*கிராத்தூரான்*


லஞ்சம்கொடுத்தால் தானே எதுவும் நடக்குது,,,
கொடுக்காவிட்டால் பைலும் கிடக்குது,,,
மிடுக்கா இருக்கும் காரியதரிசி
அவன் தான் அதிகாரிக்கு கைராசி,,,
லஞ்சம் வாங்க,,, அண்ணே
லஞ்சம் வாங்க,,,

ஒன்னுந் தெரியா உத்தமன் போல
உலகமறிந்த பித்தனைப் போல
சத்திய கீர்த்தி என்பார் தம்மை,,,
அது, சலனமில்லா நேரத்தில் நம்மை
உருகச் செய்து
உண்மையை உணர்த்தும்
பெருமையை பேசி பிதற்றும்
நம்மை
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,

எனக்கும் மேலே ஒருவன் என்பார்
தனக்கு எதுவும் இல்லை என்பார்,,,
உனக்கு மட்டும் சகாயம் என்று
சகாயம் வெறுப்பதை
விரும்பிடுவார்,,,
உள்ளதை சொல்லி உள்ளதை செய்ய
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,,

வாங்குற சம்பளம் தெரியாது,,,
இது வாடிக்கையாச்சு இனி மறக்காது,,,
வேடிக்கையாக விலக நினைக்க
என்னை,
விடுவதில்லை எனக்கும் பெரியாளு,,,,
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,

பாலா,,,


வாழ்த்துகள்வெறும் ஒரு வார்த்தையா
பகிரப்படும் வாழ்த்துகள்?

வேறுபாட்டை மறக்கவைத்து,
மாறுபாட்டைப் புரியவைத்து 
மனவோட்டம் உணர்த்துகின்ற மங்கலமான வார்த்தை.

உள்ளுக்குள் ஊடுருவி
உணர்வுக்குள் உடன் கலந்து
மனதுக்கு இதமளிக்கும்
மகத்தான தேனருவி.

ஆசையில்லை என்பவரும்
ஆசையோடு எதிர்நோக்கும்
அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும்
அற்புதமான வார்த்தை.

தனியொருவன் நீயல்ல
தரணியில் நீ தனியல்ல
பகிர்வதற்கு நானுண்டெனப்
பறைசாற்றும் வார்த்தை.

வாழ்த்த வேண்டுமே என்று வாழ்த்துவதல்ல வாழ்த்து,
வாழ வேண்டும் என்று
வாழ்த்துவது வாழ்த்து.

உயர்த்தவேண்டும் என்று சொல்லுவதல்ல வாழ்த்து,
உயர வேண்டும் என்ற
எண்ணமது வாழ்த்து.

வாழ்த்துகள் நிறையட்டும்,
வாழ்த்துங்கள் வளரட்டும்,
வாழ்வாங்கு வாழ்வதற்கு
வாழ்த்துகள் துணைக்கட்டும்.

வாழ்த்துங்கள் வளரட்டும்.

*கிராத்தூரான்*


பெற்றுவிட்டோமா சுதந்திரத்தைஇம் என்றால் சிறைவாசம்
ஏன் என்றால் வனவாசம்
அனுபவித்தது இல்லை
அடக்குமுறை எதுவும்,
என்றாலும் கேட்போம் அடிக்கடி கேட்போம்
பெற்றுவிட்டோமா சுதந்திரத்தை என்று?

செருப்பை வணங்கி நின்றதுமில்லை
செருப்பால் அடிகள் பட்டதுமில்லை
நெருப்பில் விழுந்து நெளிந்ததுமில்லை
வெறுப்பைச் சொல்லத் தவறியதில்லை
என்றாலும் கேட்போம் எதிர் நின்று கேட்போம்
பெற்றுவிட்டோமா சுதந்திரத்தை என்று?

செக்கிழுத்ததுமில்லை, கல்லுடைத்ததுமில்லை
சவுக்கடி எதுவும் வாங்கியதில்லை
உடுத்திய உடைதனை அவிழ்த்தே எறிந்ததால்
மானம் காக்க ஓடியதில்லை,
என்றாலும் கேட்போம் மேடை போட்டுக் கேட்போம்
பெற்றுவிட்டோமா சுதந்திரத்தை என்று?

சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி
இலவசம் பெறுவோம், இட ஒதுக்கீடு பெறுவோம்
தேர்தலில் கூட சாதி சொல்லி நின்ற பின்
சாதியம் இன்னும் அழியவில்லை என்போம்
நிறை காண மறந்து குறை கண்டு நிற்போம்
பெற்றுவிட்டோமா சுதந்திரம் என்போம்.

முதல்வரை, பிரதமரை, எதிர்கட்சித் தலைவரை
ஏளனம் செய்வோம் எதிர் கேள்வி கேட்போம்
நினைத்ததை எழுதுவோம், பொம்மையைக் கொளுத்துவோம்
பிடிக்காத சட்டத்தைக் கிழித்தே எறிவோம்
அனைத்தையும் செய்தபின் கேள்வியும் கேட்போம்.

அனைத்தையும் செய்தபின் கேள்விகள் கேட்போம்
பெற்றுவிட்டோமா சுதந்திரத்தை என்று.

*கிராத்தூரான்*


பண்ணைவீடுநாற்புறமும் பச்சைப்பசேலென்ற நெல்வயல்கள் சூழ்ந்திருக்க
கமகமக்கும் நெல்வாசம் சுமந்தபடி பூந்தென்றல் நிறைந்துவீச
வடதிசையில் வரிசையாக ஓங்கியதென்னைகள்
அணிவகுத்து நிற்க
தென்னங்கீற்றில் ஊஞ்சலாடியபடி பசுந்தத்தைகளோ
ஆலோலம் பாட
தெற்கினிலே தோப்பாக நின்றிருக்கும் மாமரங்கள் கிளைகள்தோறும்
மாங்கனிகள் கொத்துகொத்தாய்த்
தொங்கிக் குலுங்கிட மாங்கனியைக் கொத்தித்திண்ணும் அணிற்பிள்ளைகளோ
இன்னிசைப் பாட
மேற்கினிலே வீற்றிருக்கும் வாய்திறந்த கிணற்றினிலே சலசலக்கும் நீர்அடங்கியிருக்க நீரினிலே குடியிருக்கும் கயல்களின் துள்ளலால் கிணற்றுநீர் இன்னிசை முழங்கிட
கிழக்கோர களத்துமேட்டில் பொன்மணிக்குவியலென
நெல்மணிகள் மலைபோல குவிந்திருக்க
வீட்டின் கொல்லையிலே தொழுவத்திலே நின்றிருக்கும் பசுக்களின் மடிமுட்டி கன்றினங்கள் பாலைக்குடித்து இடைஇடையே ஆனந்தப்பெருக்கெடுத்து
அம்மாவெனக் கூப்பாடு போட
ஒருபக்கம் நெல்குத்தும் ஓசை இன்னிசையாய் ஒலிக்க இன்னொருபக்கம்
சரசரவென்று நெல்மணிகளைப் பரப்பி உலர்த்தும் ஒலி நாதமென நம்மை மயக்க
வயலோர வரப்பினிலே நெருக்கமாய் குடும்பமாய் கண்ணுக்கு அழகாக பனைமரங்கள் நின்றிருக்க குலைகுலையாய்க் காய்த்திருக்கும் பறங்காய்களெல்ல்லாம்
கனிந்து கணந்தாங்காமல் மண்மீதில் விழுந்து பனவாசம் பரந்திருக்க
கிராமத்துவாசத்துடன்
சாணம்மெழுகிய வீட்டுமுற்றத்தில் பின்கொசுவம்வைத்து சேலைகட்டிய மாதர்கள் மாக்கோலமிட
மொத்தத்தில் கண்களுக்கு ஓரு கவி முற்றமாகத் தோன்றும் ஒரு பண்ணைவீட்டில்
நான்வசிக்கும் நாள் எந்நாளோ?
இறைவா................

த.ஹேமாவதி
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS