வையகம் உய்வுற, வானவர் மேம்பட
தன்னிகர் எவரெனக் கண்டவர் வியந்திட
உமையவள் தவிப்பதை ஓரமாய் ஒதுக்கியே
ஆலகால விஷமதை அமுது போல் உண்டவா
தன்னலம் மறந்திடப் பிறர்நலம் கண்டிட
நஞ்சுண்டவனே நலமா
உன் வீட்டில் அனைவரும் சுகமா?
அன்னையவள் பிடித்ததனால் கண்டமுடன் நின்றது
கண்டமுடன் நின்றதனால் கண்டமது கடந்தது
கண்ட நிறம் மாறியே நீலகண்ட மானது
விண்ணவர்கள் கண்ட துயர் அண்டாது போனது
உன்னை நம்பி இருப்போர்கள் நலன் பெரிதென்றானது
பெண்டு பிள்ளை எதிர்காலம் கண்டு கொள்ளாது போனது.
கண்டமோடு நின்றாலும் நஞ்சு நஞ்சு தானே
மனிதரைப் போல் உனக்கும் கூட வலிகள் உண்டு தானே
உன் வலியைக் கண்டு நிற்க உமைக்கும் வலிக்கும் தானே
உன்னுடலில் பாதியன்றோ தினமும் வலிக்கும் தானே
உம் வலியில் கலங்குவது பிள்ளைகளும் தானே
உலகையெல்லாம் காத்தருளும் கடமை புரிவோனே.
அதனால் தான் கேட்கிறேன்
ஆவலோடு கேட்கிறேன்....
அதனால் தான் கேட்கிறேன்
ஆவலோடு கேட்கிறேன்...
நஞ்சுண்டவனே நலமா
உன் வீட்டில் அனைவரும் சுகமா?
*கிராத்தூரான்*