Header Ads Widget

Responsive Advertisement

இனிக்கத் தகுந்த நொடிகள்

கடந்து போய் விட்டது காலங்கள் பல
மறையாமல் நெஞ்சிலின்னும் நினைவுகள் சில
விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
தொண்டையை அடைக்குமே அந்நிலை போல.

எங்குதான் இருக்கிறாள், எப்படி இருக்கிறாள்
எதுவுமே தெரியாமல் நினைவிலே அவள்.
அன்று போல் இருப்பாளா மாறிப்போய் இருப்பாளா 
எண்ணத்தில் சில நேரம் வந்து செல்லும் அவள்.

அவளும் தான் நினைப்பாளா அந்த நாளை மறப்பாளா
நினைக்கையிலே நெஞ்சோரம் சிறியதோர் வலி.
நிச்சயமாய் நினைத்திடுவாள் ஒரு நாள் அதைச் சொல்லிடுவாள் 
என்ற எண்ணம் வருகையிலோ கிடைக்கும் இன்பம் தனி.

யாரோ பார்க்கிறார்கள் என்று மனம் சொல்கிறது 
ஏதோ ஒரு உந்துதல் திரும்பிப் பார்க்க வைக்கிறது
ஓரமாய் நின்று பார்க்கும் பொன்முகத்தைக் காண்கிறது
புன்முறுவல் பூத்து நிற்கும் அதேமுகம் தெரிகிறது.

புள்ளி இளம் மானைப் போல் மனம் துள்ளிக் குதிக்கிறது
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் என்று கேள்வி கேட்கிறது
அருகில் சென்று நின்றுவிட கால்கள் பரபரக்கிறது
நினைக்க நினைக்க அந்நொடிகள் இனிப்பை அள்ளித் தருகிறது,

மீண்டும் நினைக்க வைக்கிறது.

*கிராத்தூரான்*