Header Ads Widget

Responsive Advertisement

பேசாமடந்தை



நல்லதைத் தீயதைப் பகுத்தறியும் பருவம்
தான் யார் என்பதை அறிந்துணரும் பருவம்
யாராக வேண்டும் என முடிவெடுக்கும் பருவம்
யார் யார் வேண்டும் என்றுப்  புரிந்துணரும் பருவம்
பேதையாய், பெதும்பையாய், மங்கையாய்க் கடந்து
நான்காவது பருவமாம் மடந்தைப் பருவம்.

பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து
சொல்ல வேண்டிய பலவற்றைச் சொல்லாமல்  தவிர்த்து
சொல்லவேண்டிய நபரிடம் அனைத்தையும் மறைத்து
சொல்லவொணாத் துயரத்தை நெஞ்சினில் சுமந்து
ஊமையாக இருந்தவள் பேசாமடந்தை
காரணப் பெயராய் மாறிய மடந்தை.

அரிவையாய்த் தெரிவையாய்ப் பேரிளம்பெண்ணாய்
மாறி நின்றாலும்  மறவாள் அவள்
ஏன் பேசவில்லை நினைப்பாள் அவள்
காயத்தின்  தழும்புகளைப் பார்ப்பாள் அவள்
கண்ணீரால் தழும்புகளை நனைப்பாள் அவள்
மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிப்பாள்  அவள்
தனிமையிலே இருக்கையிலே துடிப்பாள் அவள்
பேசும் பேச்செல்லாம் பயனற்றுப் போகையில் 
பேசாமல் இருந்ததை நினைப்பாள் அவள்
பேசாமடந்தையாய் நினைப்பாள் அவள். 

*கிராத்தூரான்*