இரும்புப் பறியே
இங்கேன் நீயே தனிமையில் வாடுகிறாய்?
உன்னை கட்டிட எந்த கவலையைத் தேடுவேன் நான்!
நீர்நிரம்பிய கிணற்றைத் தேடி எங்குநான் செல்வேன்! கிணறும் கிடைத்து கவலையும் கிடைத்து உன்னைக் கட்டிவிட்டாலும் உனக்கேற்ற பெரிய இரண்டு காளைமாடுகளை எங்குத் தேடி செல்வேன்?
மாட்டின் உழைப்புக்கு மாடுகிடைத்ததும் ஆளின்உழைப்புக்கு அஞ்சாதே!பறியே இதோ நானிருக்கிறேன்!
இரும்புப் பறியே உனக்கொரு தங்கை இருப்பாளே தோல்பறையென்று!
அவளை எங்கே விட்டுவிட்டாய்?
முன்னும்பின்னும்
கவலை அசைகையிலே பறியே நீதான் மேலெழும்புவாய் நிறைந்த நீருடன்!
வால்கயிற்றை இழுத்தால் சலசலவென்றே நீர்கொட்ட
கவலையின் மேலே நின்றிருக்கும் மாமன் ஏத்தப்பாட்டைப் பாடிட வரப்பில் நின்று ரசித்தபடி மாமனைப் பார்க்கும் அத்தைமகள் சலசலத்துக் கொட்டும் நீரிலே கலகலத்துச் சிரித்தபடி முகங்கழுவ அங்கே ஒருகாதல் பிறக்கும்!
பறியே நீதான் சாட்சியாவாய்!
ஏத்தப்பாட்டினிலே பறியே நீ ஏற்றிவிட்ட காதல்சோதியெல்லாம்
நினைவில் வருகிறதா?தனிமை நோகிறதா?
த.ஹேமாவதி
கோளூர்