Header Ads Widget

Responsive Advertisement

கல்யாணப் பொண்ணு



கண்டிருந்த கனவுகள் நனவுகள் ஆகும், 
காலமெல்லாம் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடும்,
வாழுகின்ற வாழ்க்கை எல்லாம் வான்மழை போல் மாறும்,
வண்ண வண்ணக் கனவு காணும் கல்யாணப் பொண்ணு.

கணவனே கண்கண்ட தெய்வம் 
இனி என்றும்,
புகுந்த வீடே இனி உனக்குச் 
சொந்த வீடு என்றும்,
அனுசரித்துப் போகவேண்டும்,
அவையடக்கம் பேணவேண்டும்,
அறிவுரைகள் சொல்லி நிற்பார் 
ஒரு சாரார்  ஒரு புறத்தில்.

அடங்காதே அத்து மீறு அடிமையல்ல நீ கூறு,
வீட்டு வேலை செய்வதற்கு வேலைக்காரி அல்ல கூறு,
உரிமைக்காய்  குரல் கொடுக்க உபதேசம் செய்து நிற்பார்,
தன் வீட்டில் அமைதியாக அடங்கி நிற்போர் மறுபுறத்தில். 

யார் என்ன சொன்னாலும் தன் வாழ்க்கை தன் கையில்,
உறவு பேணல் நட்பு காணல் உண்டு தங்கள் சரித்திரத்தில்,
அடிமையென்றும் அல்லாமல் 
அத்துமீறிச் செல்லாமல்,
கடமை அதைப் புரிந்து வாழ்ந்தால்
உரிமை வரும் தானாக.

எதிர்மறையாய் எண்ணாமல்
நேர்மறையாய் சிந்தித்தால், 
எவர் பேச்சும் கேட்காமல்
தன் குறையைச் சந்தித்தால்,
ஆண் இனமே அரக்கர் என்ற 
சிலர் பேச்சை ஒதுக்கி வைத்தால்,
வாழ்வாள் அவள் கண்ணு
புதுக் கல்யாணப் பொண்ணு.

*சுலீ. அனில் குமார்.*