Now Online

Sunday, 26 July 2020

கார்கில் வெற்றி நாள்உறைகின்ற பனியினிலே உயிர்போக்க வேண்டாமென
நிறையுடைய மனத்துடனே கீழிறங்க அனுமதித்தார்
பனிமலையின் உச்சியிலே படையில்லா நாளினிலே 
இடைபுகுந்த ஈனர்கள் இனியெமதுயென நினைத்தார்.

ஊனமடா உன்நினைப்பு தானமல்ல எம்நினைப்பு 
என்றிவரும் புரியவைத்தார் ஓடிவிடு என்றுரைத்தார்
தாண்டிவந்த தைரியத்தில் தாவளத்தைப் போட்டவரின் 
தாடையை உடைத்துவிட்டு ஓடவைத்துப் பார்த்திருந்தார்.

வீணாகச் சண்டைக்குச் செல்வதல்ல எம்மரபு
வீணர்களின் இடையொடித்துத் துரத்துவது எம்மியல்பு
தவறிக்கூட பிறன்மனையில் எகிறலல்ல எம்மரபு
தவறுசெய்வோர் எவரெனினும் தலையெடுப்ப தெம்மியல்பு.

புரியவைத்த நாள்முடிந்து, முடிவுகண்டு கொடியுயர்ந்து
கொடியவர்கள் அடிபணிந்து, கார்கிலிலே கரமுயர்ந்து 
தேசபக்தி நிலைநிறுத்தி இருபது ஆண்டுகள்
வீரத்தை நிலைநாட்டி இருபது ஆண்டுகள்.

*கிராத்தூரான்

Saturday, 25 July 2020

மணப்போம் மண்ணினிலே!


(கட்டளைக் கலித்துறை)

மனம்போல் விரும்பிய வாழ்வு(ம்) அமைந்தால் மகிழ்ந்திடுவோம்!

கனவுகள் யாவும் நனவாய் நடந்தால் களிப்படைவோம்!

சினந்தனை நாம்தான் தவிர்த்திட வாழ்வில் சிறப்படைவோம்!

மனத்தைத் திருத்தி மலராய் மணப்போம் மண்ணினிலே!

(1)

பெய்யும் மழையால் உலகின் அசுத்தம் பெயர்ந்துவிடும்!

செய்யும் செயலில் கவனம் இருந்திட செம்மையாவோம்!

செய்த தவறினை யெண்ணி வருந்த சிறப்படைவார்!

செய்த தவற்றை மறைப்பவர் வாழ்வில் சுணங்குவாரே!

(2)

தவறு புரிந்து வருந்திடும் மாந்தர் திருந்தவேண்டும்!

தவறு புரிந்திட வாய்ப்பு கிடைத்தால் துறக்கவேண்டும்!

தவறு புரிந்தால் துணிந்து பகன்றிடும் திண்மைவேண்டும்!

தவறு மறுபடி செய்யா தவராய்த் திகழுவோமே!

(3)

த.ஏமாவதி
கோளூர்

Thursday, 23 July 2020

பேசத் தொடங்கிய பூக்கள்பூக்கள் பேசுமோ?என்று அவள் கேட்டாள்.
பேசுமே என்றான் அவன் உடனே.
எப்படி என்றே அதிசயித்து அவள்
ஆவலாய் வினவினாள்.
உன் முகத்தைப் பார்த்தால் போதும் பூக்களெல்லாம் இவள்முகம் நம்மைவிட அழகாக இருக்கிறதே!இவளும் ஒரு பூவா?
இறைவன் எப்போது படைத்தான் இப்பூவை என்றே தங்களுக்குள் பேசத் தொடங்கும் என்றான்.
அவளோ நாணத்தால் முகம் சிவந்தாள்!
ஓ..........அப்படியா
பூக்கள் பேசத் தொடங்கவேண்டுமென்றால்
இந்தப் பூ பார்க்கவேண்டுமோ?
என்றே நகைத்தாள்!
நகைக்காதே பெண்ணே உன் நகைப்போசையைக் கேட்டால் பூக்காத மொட்டுகளும்கூட பேசத்தொடங்கிவிடும்! என்றான்.
சிரித்தபடியே உள்ளே சென்றவள்
தொட்டிலில் தூங்கிய குழந்தையின் சிணுங்கலோசையைக்
கேட்டு அப்படியே அள்ளியெடுத்து தன்மடிமீது கிடத்தி ஒருகையால் அணைத்து மறுகையால் தன்மார்போடணைத்து
அன்புமீதூற தாய்ப்பாலைப் பரிந்தூட்டினாள்!
பாலருந்திய அக்குழந்தை இடைஇடையே நிறுத்தி தன்தாயின் முகங்கண்டு ஏதேதோ மழலையாய்ச் சொல்லி சிரிக்க அதைபார்த்தவள் அடடே பூவொன்று வாய்திறந்து பேசத்தொடங்குகிறதே!
என்னகொடுப்பினை எனக்கு!
பூவாக மழலைச் செல்வமும் பெற்றேன்!பூவாய் அது பேசத்தொடங்குவதையும்
சொல்லமுதாய்ச் செவிமடுத்தே இன்புற்றேன்!
பெண்ணாய்ப் பிறந்ததன் முழுபலனை நான்அடைந்துவிட்டேன்!
என்றே தன்குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சினாள்!அதைக் கண்ட அவனோ அடடே பூக்கள் இரண்டும் மாறிமாறி பேசுகின்றனவே!
இடையிலே நானென்ன பேசுவதேன்றே அமைதியாய் நின்று இரசிக்கத் துவங்கினான்.

த.ஏமாவதி
கோளூர்

கவிஞர்எண்ணத்தில் உதித்ததை உள்ளத்தில் வைக்காமல்
வண்ணங்கள் பலசேர்த்து திண்ணமாய் அளிப்பவர்.

அழகான சொல்லெடுத்து சொல்லுக்கு உயிர்கொடுத்து 
பல்நோக்கு சிந்தைகளைப் பகிர்ந்தளித்து மகிழ்பவர்.

அழகினை இரசிக்கவும் இரசித்ததை வியக்கவும்
வியந்ததில் ஒன்றவும் செய்ய வைப்பவர். 

தவறொன்று காண்கையில் தவறென்று அதைத் திடமாய்
தவறாது சொல்கின்ற திறம் படைத்தவர்.

நிகழ்காலம் என்னென்று வருங்காலம் அறிவதற்கு
கலமெடுத்து கவிபடைத்து நிலைத்து நிற்பவர்.

சிலையொன்று கண்டாலும் மலையொன்று கண்டாலும்
விலைபேச நினைப்பவரைத் தோலுரிப்பவர்.

அழகோடு அறிவையும் பரிவோடு தெளிவையும் 
கருவாக அளித்து அதைப் புரியவைப்பவர்.

மகிழவைப்பவர் என்றும் நினைக்க வைப்பவர்.

     *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*

அச்சிரக்காலம் அழகேபுல்லின் நுனிகளில் மின்னும் துளிகள்
கண்ணின் விழிகளில் மின்னும் ஒளிகள் 
கார்த்திகை மார்கழி மாதக் குளிரின் 
அழகினை உணர்த்தும் அச்சிரக் காலம்.

வெண்மை போர்த்திய மண்ணின் அழகு
இலைகளைப் பொதிந்த பனியின் முருகு
பனியில் நனையும் குழந்தையின் மிடுக்கு
குழந்தையைத் துரத்தும் தாயின் துடிப்பு.

வீடுகள் முன்னே விதவிதக் கோலம்
கோலம் போடும் வளையல் கைகள்
காலையில் கேட்கும் இறைநாமங்கள்
பார்த்தும் கேட்டும் இரசிப்பதும் அழகு.

அதிகாலையிலே எழுந்து குளித்து
ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து
முல்லைப் பூச்சரம் நடுவில் சூடி
கோவில் சென்று தொழுவது அழகு.

கார்த்திகை இரவு பஜனை அழகு
மார்கழி வீதி ஊர்வலம் அழகு
அழகோ அழகு அத்தனை அழகு
அச்சிரக் காலம் அழகோ அழகு.

*கிராத்தூரான்*

தெரிந்திருக்க வாய்ப்பில்லை

மாணவர்கள் சிந்தும்
சோற்றுப் பருக்கைக்காக

நேரம் தவறாமல்
வந்து வந்து செல்லும்
அந்த காகங்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பள்ளி வகுப்புகள்
அத்தனையும்

ஆன்லைனில்
நடக்கிறதென்று...

- பாரதி மணாளன் -

Tuesday, 14 July 2020

மஞ்சள் நாள் நல்வாழ்த்துகள்!
மஞ்சளின் மகத்துவத்தை
மண்ணில் வாழும்
மனிதர்களுக்கு
மறுமலர்ச்சியூட்டும்
மலராக
மலர்ந்தமுகமாக
மறையாக
மகசம்பெறும்விதமாக
மஞ்சளின் குணத்தை பதமாக
மகளிர்க்கு மட்டுமல்ல
மனதை மயக்கும் 
மகாநதியின் அழகாக
 மங்கல நிகழ்ச்சியின்
 மங்கலமொழிபாடும் அனைவருக்கும்
மலிவான பொருளல்ல என்பதை
மலர்ந்த நினைவுகளாக்கும் நாள்!

மகிழ்வுக்கு அச்சாணியாக
மகினத்தையே ஆண்ட
மன்னர் பரம்பரையாகட்டும்
மகேசுவரியமே தேவையென
மக்கினத்தையும் விட்டொளித்து
மரகதத்திலே மாலைதொடுத்தவர்களாகட்டும்
மஞ்சளுக்கு மரியாதை தந்ததை
மனதில்கொண்ட நாளே!

மல்லிகைப்பூவின் மணத்திற்கு
மயங்காதவர் எவருமில்லை
மங்களம் பாடும் நிகழ்விற்கு
மறுப்பு தெரிவிப்பவர் மனிதரி்ல்லை!
மஞ்சட்பூச்சுக்கு மகத்துவமுண்டு
மறுதலிக்க மனமுள்ளவர் மனநோய்படைத்த மலிவான குணமுள்ளவர்!

மணப்பெண்ணுக்கு 
மணவறையின் கதாநாயகர்!
மணவறைத்தோழர் முதல்
மணப்பந்தல் முடிய
மயக்கும் பண்பான வித்தகர்!
மணவாளன் விரல்தொட்டு
மணவாளியின் நெற்றியிலிட்டு
மணவோலையின் மூலையிலும்
மஞ்சள் சிட்டாய் பட்டு!

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

மஞ்சள்வானம் குடைப்பிடிக்க
குடைவரைக்கோயிலில் 
குமிண்சிரிப்பாய் தமிழே
சிற்பமென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1

கல்வி வளர்ச்சி நாள்


அன்பு!அன்புக்கு நீ
அடிமையாக
அகிலமே உன் வசம்

அல்லி மலரைப்போல
அழகுப்பதுமையாவாய்

அழிவுள்ள உடலுக்கு
அன்புதான் 
அடித்தளம் மட்டுமல்ல

அனைவரையும்
அடிமைப்படுத்திடும்
அணிகலனும்கூட

அறிவுள்ள மனிதனுக்கு
அன்றாடம்
அன்னம் தேவைப்படுவதைப்போல
அழிவையும் நோக்கியுள்ள மனிதனுக்கு
அன்பு மட்டுமே
அட்சயப்பாத்திரமாகும்

அவிழ்க்க முடியாத முடிச்சுகள்கூட
அன்பெனும் மந்திரத்தால்
அவிழ்த்திடலாம்

அலைகடலும்
அதில் துள்ளும் மீனும்
அணுவளவும்
அமிழ்ந்து போவதில்லை

அக்னிச்சிறகுகளை விரித்திடு
அமைதிக்கு வித்தாகும்
அமுதமென சத்துமாகும்

அடங்கிப்போகா மனமும்
அமுக்கத்தன குணமும்
அழிவுப்பாதையை நோக்கியே
அதையும்கூட
அடைக்கலம்தந்து
அரவணைக்கும் மாண்பு
அம்மாவின் அன்பைப்போல
அடிமைப்படுத்திவிடும்

அற்புதத்தின் காட்சியாகும்
அனைவருக்கும் சாட்சியாகும்

அருவருப்பென ஒதுக்கி
அலங்கோலமென பதுக்கி
அப்புறப்படுத்த எண்ணினால்
அதாள பாதாளத்திற்கு
அடுத்தக்கட்டத்திற்கு இட்டுச்செல்லும்

அன்பை ஆணிவேராக்கினால்
அடுக்கடுக்கான துன்பமும் விட்டுச்செல்லும்

அடித்தட்டு  மக்களுக்கு
அடிப்படைச் சொத்தே
அன்பென கொள்ளுவர்

அகமும்முகமும் மலர
அதற்கென வரைமுறையுடன்
அகந்தையை மட்டும் தள்ளுவர்

அன்பு அழிவில்லாதது

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

அலையோசையாய் எழும்
அன்புத்தமிழே உயரிய பேச்சென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1

Monday, 13 July 2020

மணியோசை ஒலிக்கட்டும்மணியோசையின் ஒலி நாதம்
மன ஓசையின் எதிரொலியாய்
எண் திசையும் பரவிடவே
எகிறி ஓடும் தீமைகள்.

அதிர்வலையாய் மணியோசை
அமங்கலமாம் வார்த்தைகளை
அமுங்கிவிடச் செய்திடவே
அதிகரிக்கும் மங்கலங்கள்.

சாத்திரங்கள் சொன்னதுவும் 
ஆத்திகர்கள் கண்டதுவும்
சூத்திரமாய் மாறிவிட
ஒலித்ததெங்கும் மணியோசை.

கிருமித் தொற்று அறுந்துவிடக்
கூட்டம் சேரத் தடுத்துவிட
அமைதியானது மணிகூட 
ஆலயங்களில் கூட.

பள்ளிக்கூட மணியோசை
மாணவரை அழைக்கட்டும் 
ஆலயங்கள் மணியோசை
அனைவரையும் உயர்த்தட்டும்.

நேர்மறை சிந்தனைகள்
ஊரெங்கும் பரவட்டும்
தீமைகள் அழியவேண்டும் 
மணியோசை ஒலிக்கட்டும்.

மணியோசையின் ஒலியோசையில்
மானிடமே சிறக்கட்டும்.

*கிராத்தூரான்*

காவலர் தன் மனைவிக்கு எழுதிய கடிதம் ...*மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தவளே....*

*காவலனை கணவனாக்க என்ன பாவம் செய்தாயோ...*

வாரத்தின் 
ஏழு 
நாட்களும்...

மாதத்தின் 
முப்பது
நாட்களும்...

வருடத்தின் முன்னூற்று
அறுபத்தைந்து
நாட்களும் 
தூக்கம்
நிச்சயிக்கப்
பட்டவளே....

உனக்கு என்னை
நிச்சயிக்கப்
படும்போது தெரியாதா..?
எனக்கு
தூக்கம் 
எனபதே
நிச்சயமல்ல என்று...

காவலன் என்றதும்
"காக்க" "காக்க " என கம்பீரமாகவும்...

கஞ்சிபோட்ட 
கதர் சட்டை போலவும் விரைப்பாக நிற்பேனென்று 
நினைத்தாயோ...

அடிபணிந்து
அடிபணிந்தே 
நம் வீட்டு வாசல்
படி கூட மறந்து போகும் எனக்கு...

கஷ்டப்பட்டு கடன்பட்டு
கட்டியது நம் வீடு

இரவுப்பணியிலும்
இரவுப்பனியிலும்
கண்ணயர்ந்தால்
படுக்ககிடைப்பது
ஏதோ ஒரு சாக்கடை மேடு

சிலவேளை சர்க்கார் ரோடு

சிலவேளை 
சவமெரியும் சுடுகாடு...

இதுதான் நான் 
தினம் தினம் படும்பாடு...

சன்னியாசிக்கும்
எனக்கும் சில வேறுபாடு...

அவன் "காவி"
அணிந்திருப்பான்

நான் "காக்கி" அணிந்திருப்பேன்...

அவன் தாடி வச்சிருப்பான்

நான் தடி வச்சிருப்பேன் 
(லத்தி ..பிரம்பு)

அவன் திருவோடு வச்சிருப்பான் 
நான் 
இருகோடு வச்சிருப்பேன்
(கிரேடுஒன்)

அவன் குடுமி
வச்சிருப்பான்
பராமரிக்க
மாட்டான்

நான் குடும்பம் வச்சிருப்பேன் பராமரிக்க முடியாது...

அதிகாரிக்கு 
விஷ் பண்ணி மதித்திடுவேன்...

உன்னையும் பிள்ளையும் கிஸ் பண்ணக்கூட மறந்திடுவேன்...

துப்பாக்கி ஏந்தி நிற்பேன்...

பாசத்திற்கு ஏங்கி
நிற்பேன்...

மரத்தடி நிழலில்
அயர்ந்திடுவேன்...

மரத்தடியை பெஞ்சாக்கி அமர்ந்திடுவேன்...

தீபமேற்ற திருவண்ணாமலை
சென்றதுமே...

நம் வீடு
தீபமேற்றாமல் கிடந்திடுமே...

நானில்லை 
என்றதும்
 நீ 
தாய் 
வீடு
சென்றிடுவாயே...

என்றாவது 
ஒருநாள் 
என்னோடு தூங்கலாம் 
என்று 
கனவுகூட 
காணாதே..!
தூக்கமே கனவாகிப்போனால்
தூங்குவது எப்படி
சாத்தியம்..?

நான் காவலனாய்
தேர்ந்தெடுக்கப்
படவில்லை.!

காவலனாய்
நேர்ந்துவிடப்
பட்டிருக்கிறேன்.

அதனால் நான்
சோர்ந்துவிடப்
போவதுமில்லை
(வேற வழி....?)

ஆவணமின்றி வருபவன்கூட
ஆணவமாய் பேசுவான்

நானோ நாணமேயின்றி பேசவேண்டும்

இல்லையேல்
கோவணம் கூட மிஞ்சாது..?

பசி வந்தால் பத்தும்
பறக்கலாம்

நாங்க போலீஸ் என்கிற
கெத்து மட்டும்
பறக்காது

நண்பர்களே 
படிங்க...!
ரசிங்க ....!
சிரிங்க.....!
ஊரே என்
பொழப்ப பார்த்து சிரிக்கும்போது, உங்களுக்கு அந்த உரிமையில்லையா..?


சின்னச் சின்ன செயல்கள் தான்...

சின்னச் சின்ன
உரசல்கள் தான்....
அழகிய சிலையைத்
தாரை வார்க்கிறது

சின்னச் சின்ன
சேமிப்புகள் தான்...
கட்டுத்தொகையைச் சேர்த்து விடுகிறது

சின்னச் சின்ன
துளிகள் தான்...
பேராழியாக
உருப்பெறுகிறது

சின்னச் சின்ன
வாசிப்புகள்தான்...
அறிவாளியாய்
சித்தரிக்கிறது

சின்னச் சின்ன
யோசனைதான்..
பெரும்தவறையே
தவிர்த்து விடுகிறது

சின்னச் சின்ன
எழுத்துகள் தான்...
கட்டுரையாய்
உருமாறுது

சின்னச் சின்ன
சிந்தனை
செயலாக்கமாய்
நிலைநிறுத்துகிறது

சின்னவனின்
சின்ன யோசனை

நல்லது எதுவாயினும்
சின்னதாய்....
தொடங்குங்கள்:

தவிர்க்காமல்
கைகுலுக்கும்
நமக்கான
மதிப்பீட்டை
சமூகம்:

கரிசல் தங்கம்

ஆறுவது சினம்*.முரண்பாடுகள் சமன்
செய்யப்படாதத்
தருணங்களில் .......
புலன்களின் அடக்குமுறைகளைத்
தகர்த்தெறிந்து வெடிக்கும்
எரிமலையே சினம்!

கண்களை மூடிய வண்ணம்
அறிவின் வேலைநிறுத்ததோடு....!
போர்க்கொடி பிடித்தபடி
புலன்களின் சாலைகளில்
ஊர்வலம் போகும் 
உணர்ச்சிகளின் கொந்தளிப்பு!

எப்போதாவது வந்து போகும்
அல்லது..........
எப்போதும் வந்துவிடும்
உறவுகளைப்போல்
எல்லோருக்குள்ளும் 
மறைந்தே வாழ்ந்திடினும்.....!
வெளிப்படும் வேளை பலர்மனம்
துடித்துப்போவதைத்
தடுக்க இயலாத சாக்காடு!

சந்தர்பங்களின் துணையோடு.....
சந்தோசங்களின் இணைப்பை
துண்டித்துப் பார்க்கும்
வெட்டுக்கத்தியாய் இந்த சினம்....
மழுங்க வேண்டிய தருணத்தில்
அதிமழுங்கியும்......!
வெடிக்கவேண்டிய தருணத்தில்
வெடிக்கவுமாய் இருந்தாலே....
அதற்கென்று உள்ள 
பெருமை நிலைக்கும்!
ஏனெனில்......
*செல்லிடத்துக்காப்பான்
                சினங்காப்பான்
அல்லிடத்து காக்கின் என்?
             காவாக்கால் என்*? 
🌹🌹வத்சலா🌹🌹

தொடர்ந்து காத்திருக்கிறேன் ...

தொலைவில் 
நீ இருந்து தொடர்வது
என்னவோ நம் உறவு 
தொலைபேசியில்  மட்டுமே.....
தொலைக்காத 
உன் நினைவுகளோடு 
தொடர்ந்து காத்திருக்கிறேன் ...
உன் காலடி தடங்கள்
என்னை தேடி ஓடி வரும் வரை....
எப்போதும் 
பாத்துக்கொண்டிருக்கும்
உறவை விட ...
காத்துக்கொடிருக்கும்
உறவுக்குதான் 
நேசமும் பாசமும் அதிகம்...

தேடுகிறேன்...

இன்னுமின்னுமாய்
உன்னை ஏனோ பிடிக்கிறது
ஒன்னுமன்னுமாய்
உன்னோடு வாழ பிடிக்கிறது ..!

எப்போதுமே மனம் சோர்ந்தால் 
உன் மடிதான் தேடுகிறேன் 
எப்போதேனும் மனம் மகிழ்ந்தால் 
உன் முத்தம் தேடுகிறேன் ..!

பொதுநலம்கஞ்சிக்கு வழியின்றிக் களைத்துப் போய் நிற்பவரைக்
கண்டாலே கண்களிலே கண்ணீர் எட்டிப் பார்ப்பதும்,

உண்டுவிட்டு உளம் மகிழ்ந்து புன்சிரிப்பை பூப்பவரை
நெஞ்சோடு அணைத்தவாறே நிம்மதியைக்  காட்டுவதும்,

யாருக்கோ ஆபத்து என்றறிந்த வேளையிலே
எவரையும் எதிர்பாராது முன்நின்று உதவுவதும்,

பேருக்காய்  பெருமைக்காய் எதையுமே செய்யாமல்
யாருக்கும் தெரியாமல் ஊருக்கு உதவுவதும்

எதையும் எதிர் பாராமல் எவருக்கும் அஞ்சாமல்
எது நலம் என்றுணர்ந்து செய்கின்றதும்   பொதுநலம். 

ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு பெருமையாய்ச் சொல்வதும்
ஊரெல்லாம் சுவரொட்டி வைத்துதவி செய்வதும்

பாருக்கே அதைப் பகிர்ந்து பாராட்டைப் பெறுவதும்
பாராட்டுப் பத்திரத்தை, விருதை வாங்கிச் சேர்ப்பதும்

எதிர்காலம் இது உதவும் என்றெண்ணிச் செய்வதும்
சுயநலமே பொது நலத்தின் அடித்தளமாய் அமைவதும் 

வெகுமக்கள் பார்வையிலே இன்றதுதான் பொது நலம்
பொதுவாக மாறிவிட்டப் புதுமையான பொதுநலம்.

கிராத்தூரான்
சுலீ. அனில் குமார்

குறையுணர் நெஞ்சே!


குறைகள் நமக்குள் குவிந்து கிடந்தால்

குறையாய்த் தெரியாதே கண்ணில்__குறைவாய்

நிறைகள் இருந்தால் நமது கண்கள்

நிறைவுடன் காண்ப தியல்பு
(1)
 பிறர்குற்றம் தேடியே பார்ப்பவர்கள் யாரும்

மறப்பார்தம் குற்றம் முழுதாய்__பிறரின்

தினையளவு குற்றத்தைத் தம்விழியால் காண

பனையளவா யாக்குவார்கள் மகிழ்ந்து!
(2)
 நம்குற்றம் என்னவென்று நாமறியா விட்டாலும்

தம்விழியால் மற்றவர்கள் நன்குணர்வர்__மும்மாரிப்

பெய்யும்வான் பொய்த்தால் பழிக்கும் உலகம்தான்

மெய்யா லுணர்ந்தால் நலம்!
(3)
உன்குறையை மற்றவர்கள் கண்டுணர்ந்து சொன்னால்

துன்புற்று நீவருந்த லாகுமோ?__உன்னைத்தான்

நன்குணர உன்குறை நீயகற்ற நல்வழியிது

வென்றே உணர்ந்தால் நலம்
(4)

த.ஏமாவதி
கோளூர்

மாற்றம் கண்டது

மாற்றமா
ஏமாற்றமா
மனித வாழ்கை
சிதையுண்டு
பல்லிழுக்குதே....

திசை எட்டும்
சாவுத் சத்தம்
காது கிழியுதே...

அன்னாடம்
காய்ச்சிக்கு
அடுப்பு கூட எரியல...

சொத்து சேத்த
மவராசன்
நாலு சுவத்துக்குள்ள
முடங்கிக் கிடக்கிறான்...

அடகு வைக்க
ஒன்னுமில்ல
ஆத்தாடி
அடுத்த வீடும்
பூட்டித் தான் கிடக்குது...

அரிசி இலவசந்தான்
ஆனா
கழிப்பறைக்கு
அஞ்சு ரூபா.....

ஆயிரம் கொடுத்தாங்க
அரசு
அப்படியும்
பத்தல
மாசம் மூனாச்சு....

வாழ்க்கை நடத்த
முடியல
அரசு
கரோனாவைத் தடுக்க
முடியல...

பயந்து பயந்து
வாழுறோம்
எத்தன நாளுன்னு
தெரியல....

மாற்றம் கண்டதா
உலகம்
இதுவரை இல்லாதது
ஆம்
மாற்றம் கண்டது:

கரிசல் தங்கம்

Tuesday, 7 July 2020

பிரபஞ்சம்


அணு வெடிப்பா, பெருவெடிப்பா 
இல்லை அது அவன் படைப்பா 
உயிர்த்துடிப்பும் அதன் பிடிப்பா 
தொடருவதும் அப்படிப்பா.

எதை எங்கே வைப்பதென்று 
எவர் சொல்லிக் கொடுத்தது
ஒன்றோடொன்று தொடர்பு என்று
யார் தான் அதைப் படைத்தது.

விலகிவிட்டால் ஆபத்தென்று 
மனிதன் கண்டு பிடித்தது
விலகி விலகிச் செல்லாமல்
யார் தான் அதைத் தடுப்பது.

பஞ்ச பூதங்களும் 
இணைந்ததால் பிரபஞ்சமா
கண்டு கொள்ள இங்கு நடந்த
ஆராய்ச்சிகள் கொஞ்சமா.

ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு
நிலை பெற்றது பிரபஞ்சமா 
ஈர்ப்பு மட்டும் இல்லையென்றால்
ஏதாவது மிஞ்சுமா.

அழகுக்கு அழகு சேர்த்து
வியக்க வைக்கும் பிரபஞ்சம்
அறிவுக்குத் தீனி போட்டு
அசத்தி நிற்கும் பிரபஞ்சம்.

புதுமைகளால் வியக்கவைக்கும் 
விஞ்ஞானம் பிரபஞ்சம்
பழமையிலே புதுமை சேரும்
மெய்ஞானம் பிரபஞ்சம்.

*கிராத்தூரான்.

தாலாட்டுப் பாடவாநாளையென்ன நடக்குமென்றும் நாடு என்ன ஆகுமென்றும்
சிந்தித்துத் தளரவேண்டாம் கவலை ஒன்றும் உனக்கு வேண்டாம்.

நேரலையில் வகுப்பென்றும் கற்பியாது தேர்வென்றும்
நினைத்து நீ குழம்பிப்போய் விழித்தபடி படுக்க வேண்டாம்.
 
ஊரடங்கு தொடர்கதையா கிருமி நாசம் விடுகதையா
என்று எல்லாம் நினைத்தவாறே உன்னை நீ வருத்த வேண்டாம்.

உண்பதற்கு உணவுண்டா குடிப்பதற்குப்  பாலுண்டா
கிருமித் தொற்று அதிலுண்டா என்ற பயம் சிறிதும் வேண்டாம்.

பயமின்றி வாழ்கின்ற வாழ்க்கை இனி இங்குண்டா 
பரவாமல் தடுப்பதற்கு மருந்துண்டா கேள்வி வேண்டாம்.

எத்தனை பேர் இருப்பார்கள் எத்தனை பேர் இறப்பார்கள் 
என்று எண்ணி எண்ணி நீயும் தூங்காமல் இருக்க வேண்டாம்.

அதை நினைத்து கவலையுற கவலையோடு தினம் உழல 
கோடி மக்கள் இருக்கிறார்கள்
நானுமுண்டு வருந்த வேண்டாம்.

எனை மறந்து நான் உறங்க உனை மறந்து நீ உறங்கு
உறங்காமல் விழித்திருந்து எனை வருந்த வைக்க வேண்டாம்
   
தளர்வின்றி நீ உறங்கத் தாலாட்டு நான் பாடவா 
கண்மணியே நீ உறங்கத் தாலாட்டு நான் பாடவா.

*கிராத்தூரான்

விருந்தோம்பல் மறந்தோம்காகம் கரைகிறது விருந்து வரப்போகிறது
விருந்தினரை வரவேற்கத் தயாராக நாமிருப்போம்
வருபவரை மகிழ்விக்க அறுசுவை உணவளிப்போம்
கண்டும் உண்டும்  மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்.
என்றெல்லாம் எண்ணிநிற்பார் விருந்துவரக் காத்திருப்பார்.

அவர்கள் வந்துசென்றார்கள் நாமொருநாள் செல்லவேண்டும்
இல்லையென்றால் உறவுவிட்டுப் போகுமதைத் தடுக்கவேண்டும்
விருந்தோம்பல் என்னவென்று பிள்ளைகளும் அறியவேண்டும்
உறவுபேணும் வழக்கமதை வாரிசுகள் தொடரவேண்டும்
மனம்மகிழ்ந்து சொல்லிடுவார் சொன்னபடி செய்திடுவார். 

காலங்கள் கடந்துவிட சூழ்நிலைகள் மாறிவிட
பொருளாதார நிலைமையதை உயர்த்துமெண்ணம் பொங்கிவிட
உறவுபேணல் போய்வருதல் நாளுக்குநாள் சுருங்கிவிட
என்னஉறவு என்றுகூடத் தெரியாமல் பிள்ளைகள்
மறந்துவைத்த பொருள்போல மாறிவிட்ட விருந்தோம்பல்,

நினைவுவரக் காத்திருக்கும் நிலையிலின்று விருந்தோம்பல்.

*கிராத்தூரான்

பெறுவோம் வலிமை!
அடித்து அடித்துத் துவைக்கும் போது
.......அழுக்கு நீங்கும்
ஆடைதானே

விடியல் நேர வெளிச்சம் போல
.......வனப்பாய்த் தூய்மை பெற்றிடுமே!

கடிதாய் சுத்தி தாக்க தாக்க
.......கனத்த சுவற்றில் இறங்கிடுமே!

கொடியோர் நம்மைத் தாக்க வந்தால்
.......கொவ்வைச் சிரிப்பால் தாங்கிடுவோம்!
(1)

குனிய குனிய குட்டு வைக்கும் 
.......குள்ள நரிகள் குட்டட்டும்!

பனியைக் கரைக்கும் ஆற்றல் இருந்தும்
.......பனியால் மறையும் பகலவனும்!

இனிமை யற்றுப் பேசும் பேச்சும்
......இடியாய் நம்மைத் தாக்கிடுமே!

கனிவாய் அமைதி காத்தால் போதும்!
........கடுஞ்சொல் பலத்தை இழந்திடுமே!
(2)

புயலைத் தாங்கும் நாணல் போல
......பொறுத்தால் தாக்கம் குன்றிடுமே!

வயலும் ஏரின் தாக்கந் தன்னை
......வாகாய் ஏற்று
விளைந்திடுமே!

முயன்றும் இழிவே பெற்றும் கர்ணன்
......முடிவில் சிகரம் கண்டானே!

பயத்தை அகற்றி வைத்தால் போதும்
.......பகையை வீழ்த்தி வென்றிடுவோம்!
(3)

த.ஏமாவதி
கோளூர்

உச்சம்தங்கத்தின் விலையோ கிடுகிடுவென்று உயர்ந்து 
மகள்கள் உள்ள பெற்றோரை நடுநடுங்க வைக்கிறது.

எரிபொருளின் விலையோ நாளுக்கு நாள் குதித்து
என்ன செய்வோம் இனியென்று யோசிக்க வைக்கிறது.

சீன வைரஸ் தாக்கமோ குதி குதியென்று குதித்து
இனி எத்தனை நாளென்றுக் குலை நடுங்க வைக்கிறது.

மரணிப்போர் எண்ணிக்கை மனதுக்குக் கிலி கொடுத்து
அடுத்தது யார் என்றுக் கேள்வி கேட்க வைக்கிறது.

எல்லையிலே எம் தேச வீரர்கள் படுகொலையும்
எப்போதுமில்லாத அளவிலே உச்சத்தில்.

அண்டை நாடாய் இருப்பவர்கள் சண்டைபோடத் துவங்குவதும்
அதை எதிர்க்க வீரர்களைக் குவிப்பதும் உச்சத்தில்.

உச்சத்தில் அது என்றும் உச்சத்தில் இது என்றும்
தினம் தோறும் கேட்போர்கள்  அச்சமும் உச்சத்தில்.

அச்சத்தில் இருப்பவர்கள் அச்சத்தைப் போக்குவது
உச்சத்தில் இருப்பவர்கள் கடமையென்று உணரவேண்டும்.

இல்லையென்றால் மக்களின் வெறுப்பு கூடச் சென்றுவிடும்
இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில்.

*கிராத்தூரான்

இராமன் தேடிய சீதை

என்னை நம்பி வந்தவள்
என்னுடனே வந்தவள்
எனக்காக வந்தவள்
எனக்காக வாழ்ந்தவள் 
மிதிலையின் மைதிலி
அயோத்தியின் சீதை
நினைக்கின்றான் இராமன்
நிலை குலைந்த போது.

பிறந்த வீட்டின் பெருமை தனைப்
புகுந்த வீட்டில் காத்தவள் 
இராமன் இருக்குமிடம்
அயோத்தியாய்க் கண்டவள் 
கணவனுக்காய் இராஜபோகம் 
அனைத்தையும் துறந்தவள்
ஜனகன் மகள் ஜானகியாம் 
இராமன் என் சீதை.

நாடு போற்றும் நாயகியை 
நான் காண வேண்டும்
ஜானகியை ஜனகன் முன்
நான் நிறுத்த வேண்டும்
மிதிலையின் திருமகளைத் 
திருப்பித் தரவேண்டும்
அயோத்தியின் மருமகளை
நான் காக்க வேண்டும்.

கடமையா பாசமா 
இராமனின் தேடல்
உரிமைக்கா பெருமைக்கா 
இராமனின் தேடல்
வீரத்தை நிலை நாட்டவா
தாரத்தைச் சிறை மீட்கவா
மன பாரத்தைக் குறைக்கவா
இராமனின் தேடல்.

மணாளனின் மனைவியா 
மன்னனின் இராணியா 
மிதிலையின் புதல்வியா 
அயோத்தியின் தலைவியா 
மக்களின் உரிமையா
தேசத்தின் பெருமையா
இவையனைத்தும் சேர்ந்ததா
இராமன் தேடிய சீதை.

இராமனின் மனதில் யார்
இராமன் தேடிய சீதை.

*கிராத்தூரான்

செல்லக்குழந்தை

                     

தலைகுனிந்து நிற்கும்
தங்கநிற நெற்பயிர்களை
வருடிக்கொடுத்தவாறே
வயல் வரப்புகளூடே
வழிந்து செல்லும்....!
தலைநிமிர்ந்து  நிற்கும்
தென்னையிளங்கீற்றுகளை
யாழென வருடி ஸ்ருதி சேர்த்து
அதன் மௌனம் கலைத்து
அலையெனச் செல்லும்.....!
கழனியில் உழைத்துக்களைத்த
உழவனின் வியர்வைத்துளிகளை
கதிரவனைக் கண்ட பனித்துளியாய்
கரைத்துவிட்டு 
கலகலவென சிரித்துச்செல்லும்...!
இன்று கனிந்த பழங்களுக்கும்
நாளை மலரும் மொட்டுக்களுக்கும்
வாழ்த்துச்சொல்லி
வணங்கிச்செல்லும்.....!
சாதிமதம் கடந்து சாத்வீக
சாரல் சுமந்து 
இதயங்களைத்திருடிச்செல்ல
இளகியே இயல்பாய் வருகிறது......
இயற்கையின் அன்பால்
வளர்ந்த *செல்லக் குழந்தையாம்*
தென்றல்!

வத்சலா

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS