குறைகள் நமக்குள் குவிந்து கிடந்தால்
குறையாய்த் தெரியாதே கண்ணில்__குறைவாய்
நிறைகள் இருந்தால் நமது கண்கள்
நிறைவுடன் காண்ப தியல்பு
(1)
பிறர்குற்றம் தேடியே பார்ப்பவர்கள் யாரும்
மறப்பார்தம் குற்றம் முழுதாய்__பிறரின்
தினையளவு குற்றத்தைத் தம்விழியால் காண
பனையளவா யாக்குவார்கள் மகிழ்ந்து!
(2)
நம்குற்றம் என்னவென்று நாமறியா விட்டாலும்
தம்விழியால் மற்றவர்கள் நன்குணர்வர்__மும்மாரிப்
பெய்யும்வான் பொய்த்தால் பழிக்கும் உலகம்தான்
மெய்யா லுணர்ந்தால் நலம்!
(3)
உன்குறையை மற்றவர்கள் கண்டுணர்ந்து சொன்னால்
துன்புற்று நீவருந்த லாகுமோ?__உன்னைத்தான்
நன்குணர உன்குறை நீயகற்ற நல்வழியிது
வென்றே உணர்ந்தால் நலம்
(4)
த.ஏமாவதி
கோளூர்