Header Ads Widget

Responsive Advertisement

பேசத் தொடங்கிய பூக்கள்



பூக்கள் பேசுமோ?என்று அவள் கேட்டாள்.
பேசுமே என்றான் அவன் உடனே.
எப்படி என்றே அதிசயித்து அவள்
ஆவலாய் வினவினாள்.
உன் முகத்தைப் பார்த்தால் போதும் பூக்களெல்லாம் இவள்முகம் நம்மைவிட அழகாக இருக்கிறதே!இவளும் ஒரு பூவா?
இறைவன் எப்போது படைத்தான் இப்பூவை என்றே தங்களுக்குள் பேசத் தொடங்கும் என்றான்.
அவளோ நாணத்தால் முகம் சிவந்தாள்!
ஓ..........அப்படியா
பூக்கள் பேசத் தொடங்கவேண்டுமென்றால்
இந்தப் பூ பார்க்கவேண்டுமோ?
என்றே நகைத்தாள்!
நகைக்காதே பெண்ணே உன் நகைப்போசையைக் கேட்டால் பூக்காத மொட்டுகளும்கூட பேசத்தொடங்கிவிடும்! என்றான்.
சிரித்தபடியே உள்ளே சென்றவள்
தொட்டிலில் தூங்கிய குழந்தையின் சிணுங்கலோசையைக்
கேட்டு அப்படியே அள்ளியெடுத்து தன்மடிமீது கிடத்தி ஒருகையால் அணைத்து மறுகையால் தன்மார்போடணைத்து
அன்புமீதூற தாய்ப்பாலைப் பரிந்தூட்டினாள்!
பாலருந்திய அக்குழந்தை இடைஇடையே நிறுத்தி தன்தாயின் முகங்கண்டு ஏதேதோ மழலையாய்ச் சொல்லி சிரிக்க அதைபார்த்தவள் அடடே பூவொன்று வாய்திறந்து பேசத்தொடங்குகிறதே!
என்னகொடுப்பினை எனக்கு!
பூவாக மழலைச் செல்வமும் பெற்றேன்!பூவாய் அது பேசத்தொடங்குவதையும்
சொல்லமுதாய்ச் செவிமடுத்தே இன்புற்றேன்!
பெண்ணாய்ப் பிறந்ததன் முழுபலனை நான்அடைந்துவிட்டேன்!
என்றே தன்குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொஞ்சினாள்!அதைக் கண்ட அவனோ அடடே பூக்கள் இரண்டும் மாறிமாறி பேசுகின்றனவே!
இடையிலே நானென்ன பேசுவதேன்றே அமைதியாய் நின்று இரசிக்கத் துவங்கினான்.

த.ஏமாவதி
கோளூர்