அணு வெடிப்பா, பெருவெடிப்பா
இல்லை அது அவன் படைப்பா
உயிர்த்துடிப்பும் அதன் பிடிப்பா
தொடருவதும் அப்படிப்பா.
எதை எங்கே வைப்பதென்று
எவர் சொல்லிக் கொடுத்தது
ஒன்றோடொன்று தொடர்பு என்று
யார் தான் அதைப் படைத்தது.
விலகிவிட்டால் ஆபத்தென்று
மனிதன் கண்டு பிடித்தது
விலகி விலகிச் செல்லாமல்
யார் தான் அதைத் தடுப்பது.
பஞ்ச பூதங்களும்
இணைந்ததால் பிரபஞ்சமா
கண்டு கொள்ள இங்கு நடந்த
ஆராய்ச்சிகள் கொஞ்சமா.
ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டு
நிலை பெற்றது பிரபஞ்சமா
ஈர்ப்பு மட்டும் இல்லையென்றால்
ஏதாவது மிஞ்சுமா.
அழகுக்கு அழகு சேர்த்து
வியக்க வைக்கும் பிரபஞ்சம்
அறிவுக்குத் தீனி போட்டு
அசத்தி நிற்கும் பிரபஞ்சம்.
புதுமைகளால் வியக்கவைக்கும்
விஞ்ஞானம் பிரபஞ்சம்
பழமையிலே புதுமை சேரும்
மெய்ஞானம் பிரபஞ்சம்.
*கிராத்தூரான்.