காகம் கரைகிறது விருந்து வரப்போகிறது
விருந்தினரை வரவேற்கத் தயாராக நாமிருப்போம்
வருபவரை மகிழ்விக்க அறுசுவை உணவளிப்போம்
கண்டும் உண்டும் மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்.
என்றெல்லாம் எண்ணிநிற்பார் விருந்துவரக் காத்திருப்பார்.
அவர்கள் வந்துசென்றார்கள் நாமொருநாள் செல்லவேண்டும்
இல்லையென்றால் உறவுவிட்டுப் போகுமதைத் தடுக்கவேண்டும்
விருந்தோம்பல் என்னவென்று பிள்ளைகளும் அறியவேண்டும்
உறவுபேணும் வழக்கமதை வாரிசுகள் தொடரவேண்டும்
மனம்மகிழ்ந்து சொல்லிடுவார் சொன்னபடி செய்திடுவார்.
காலங்கள் கடந்துவிட சூழ்நிலைகள் மாறிவிட
பொருளாதார நிலைமையதை உயர்த்துமெண்ணம் பொங்கிவிட
உறவுபேணல் போய்வருதல் நாளுக்குநாள் சுருங்கிவிட
என்னஉறவு என்றுகூடத் தெரியாமல் பிள்ளைகள்
மறந்துவைத்த பொருள்போல மாறிவிட்ட விருந்தோம்பல்,
நினைவுவரக் காத்திருக்கும் நிலையிலின்று விருந்தோம்பல்.
*கிராத்தூரான்